தன்னம்பிக்"கை'யே தேவை!
தன்னம்பிக்கை இருந்தால் வானமும் வசப்படும், எதை அடைய நாம் முயற்சி செய்தாலும் நமக்குஹ முதலில் தேவை தன்னம்பிக்கையே, தன்னம்பிக்கை இல்லையெனில், வாழ்க்கை கசந்து நரகமாகி விடும்.
தன்னம்பிக்கை இருந்தால் வானமும் வசப்படும், எதை அடைய நாம் முயற்சி செய்தாலும் நமக்குஹ முதலில் தேவை தன்னம்பிக்கையே, தன்னம்பிக்கை இல்லையெனில், வாழ்க்கை கசந்து நரகமாகி விடும். அத்தகைய தன்னம்பிக்கையை நாம் நாள்தோறும் வளர்த்துக் கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என விபத்தில் தனது இரு கைகளையும் இழந்த சேர்ந்த ஒருவர் நமக்கு, அவரது செயல்பாடுகள் மூலம் அறிவுறுத்தி வருகிறார்.
அவர்தான் சேலம் ஜாகீர் காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த என்.ரமேஷ்.
1995-ஆம் ஆண்டு சேலத்தில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், மணிகட்டுப் பகுதி வரை ரமேஷின் இரண்டு கைகளும் பாதிப்புக்குள்ளானது. மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றபோது, இரண்டு கைகளையும் அகற்றினால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றதால், ரமேஷின் இரண்டு கைகளும் மணிகட்டு வரை அகற்றப்பட்டது.
கைகளை இழந்தும் மனம் தளராத ரமேஷ், சேலம் வீதிகளில் அனாயசமாக சைக்கிள் ஓட்டி வருவதைப் பார்த்த தன்னார்வலர்கள் அவருக்கு செயற்கைக் கைகள் பொருத்த உதவிக்கரம் நீட்டியுள்ளனர். தற்போது செயற்கைக் கைகளின் உதவியுடன் தன்னம்பிக்கையுடன் உழைத்து, பிறருக்கும் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
ரமேஷைச் சந்தித்துப் பேசியபோது...
""எனது குடும்பம் ஏழ்மையானது. 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த நான், எனது தந்தையுடன் பிளம்பிங் வேலைக்குச் சென்றேன். என்னுடைய 16-ஆவது வயதில் பிளம்பிங் வேலை செய்தபோது மின்சாரம் பாய்ந்து கைகளை இழந்தேன். என்னை எனது நெருங்கிய உறவினர்களே உதறிய நிலையில், தன்னார்வ நிறுவனத்தின் வழிகாட்டுதலின்பேரில் கைகளை இழந்தாலும், மனம் தளராமல் உழைத்து வருகிறேன்.
தற்போது எனது வீட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். எனது அன்றாடப் பணிகளை நானே மேற்கொள்கிறேன். காளான் வளர்ப்பு, தெர்மாகோல் மூலம் பல்வேறு கைவினைப் பொருள்கள் செய்து மாதம் ரூ.25 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறேன்.
கடந்த 2009-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் நடந்த 14-ஆவது தேசிய இளைஞர் தின விழாவில் கலந்து கொண்டு மத நல்லிணக்கம், தீவிரவாத எதிர்ப்பு குறித்து தெர்மாகோலால் செய்யப்பட்ட படைப்பைச் சமர்ப்பித்தேன். இதில் கலந்து கொண்ட எனக்கு நற்சான்றிதழ் கிடைத்தது.
எனக்குக் கிடைக்கும் வருமானத்தின் ஒருபகுதியை என்னைப் போல மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி வருகிறேன். மேலும், என்னைப் போல மாற்றுத் திறனாளிகளுக்கும், விதவைகளுக்கும் அரசு உதவிகள் கிடைக்க என்னாலான உதவிகளைச் செய்து வருகிறேன். நான் செய்த உதவிகளைக் கணக்கு வைத்துக் கொள்வதில்லை.
வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலில் வாழ்பவனுக்குக் கைகள் தேவையில்லை, தன்னம்பிக்கையே பெரிதும் தேவை. அந்த தன்னம்பிக்கையுடன் உழைத்து வருகிறேன்'' என்றார் அவர்.
தற்போதுள்ள இளைஞர்கள் சிறிய தோல்வி என்றாலும் மனம் துவண்டு, வாழ்க்கை வெறுத்துபோய் தங்களையே மாய்த்துக் கொள்கின்றனர். கைகள் இழந்தாலும் தன்னம்பிக்கையுடன் பல்வேறு பணிகளை செய்துவரும் ரமேஷின் வாழ்க்கைப் பயணம் அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.