தினமணி கதிர்

திரைக்கதிர்

நரபலிச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "ஒரு நொடியில்.' ஆக்கார் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நல்லூர் சுரேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

ஜி. அசோக்

நரபலிச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "ஒரு நொடியில்.' ஆக்கார் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நல்லூர் சுரேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார். கதாநாயக பாத்திரத்துக்கு முக்கியத்துவம் தராமல் பெண்களை முன்னிலைப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ இருவரும் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர்.  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார் எம்.ஏ.சௌத்ரி. ஹாலிவுட் படவுலகில் பிரபலமான திகில் பாணியில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. பார்வதிபுரம் என்ற ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது ஒரு தீய சக்தி. அந்தக் கிராமத்துக்கு யார் வந்தாலும் அவர்களைப் பலி வாங்கி விடுகிறது. அதற்குத் தீர்வு நரபலிதான் என்று நம்பும் கூட்டத்திடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறார் ஒரு டி.வி.சேனல் நிருபர். அதன் பின் பார்வதிபுர மர்மங்கள் என்ன? என்பதைத் த்ரில்லர் பின்னணியில் சொல்லி முடிப்பதே கதை. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

நடிகை ஷாம்லி தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு "வீர சிவாஜி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. "ரோமியோ ஜூலியட்' படத்தைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் இப்படத்தைத் தயாரிக்கிறார். அருள்நிதி நடிப்பில் வெளிவந்த "தகராறு' படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இப்படத்தை எழுதி இயக்குகிறார். ரோபோ சங்கர், ஜான் விஜய், "நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவில் டி. இமான் இசையமைக்கிறார். லால்குடி இளையராஜாவின் கலை இயக்கத்தில் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டன்ட் பொறுப்பை ஏற்றுள்ளார். தினேஷ் நடனமைக்கிறார். இப்படத்தின் துவக்க விழா கடந்த வாரம் புதுச்சேரியில் நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாலாவின் "தாரை தப்பட்டை' படத்தை ஒப்புக் கொண்ட நாள் முதல் அப்படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் சசிகுமார். இயக்குவதையும், மற்ற படங்களில் நடிப்பதையும் தள்ளி வைத்திருந்தவர், தற்போது புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திட்டமிட்ட நாள்களைத் தாண்டி "தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் அப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது. இதையடுத்து உடனடியாக அடுத்த பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தினார் சசிகுமார். இந்த முறையும் நடிகராகவே களம் இறங்குகிறார். வழக்கம் போல்  புதுமுக இயக்குநருக்கே வாய்ப்பு. சசிகுமார் நடிக்கும் இப்படத்தைப் புதுமுகம் வசந்தமணி இயக்குகிறார். படத்துக்கு "வெற்றிவேல்'

எனப் பெயரிடப்பட்டுள்ளது.   பிரபு, தம்பி ராமையா, ரேணுகா, விஜீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களை ஏற்று நடிக்கின்றனர். சசிகுமார் ஜோடியாக நடிக்கும் கதாநாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. டி இமான் இசையமைப்பில், எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது.

இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார் கமல்ஹாசன். படத்துக்குப் படம் வருடக் கணக்கில் இடைவெளி விடுவதை தன் வழக்கமாக வைத்திருந்தார் கமல். இந்நிலையில் சமீப ஆண்டுகளாக தொடர் படப்பிடிப்புகளில் பங்கேற்கிறார். "உத்தம வில்லன்', "பாபநாசம்' ஆகிய படங்கள் வெளியான நிலையில், உடனடியாகத் "தூங்காவனம்' படத்தில் நடிக்கத் துவங்கினார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் படப்பிடிப்பு முடிந்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. ""தமிழ், தெலுங்கில் "தூங்காவனம்' உருவாகியுள்ளது. இப்படத்தில் நடித்துள்ள எல்லோருமே ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள். ஒரே நேரத்தில் இரு மொழிப் படங்களில் நடிப்பது புதிதல்ல. இதுவரை 24 இரு மொழி படங்களில் நடித்திருக்கிறேன். எந்தவொரு படத்துக்கும் சரியான உழைப்பு இருந்தாலும் பட நிர்வாகம் சரியில்லாமல் போனால் எல்லாம் வீணாகி விடும். அந்த வகையில் ராஜ்கமல் பட நிர்வாகம் திறம்பட செயல்படுகிறது. இப்போது ராஜ்கமல் நிறுவனம் இன்னும் வேகமாக செயல்பட துவங்கியுள்ளது. இன்னும் அடுத்தடுத்த படங்கள் இதன் தயாரிப்பில் உருவாகவுள்ளது. "தூங்காவனம்' படப்பிடிப்பில் இருக்கும் போதே அடுத்த படத்துக்கான கதையையும் நான் முடிவு செய்து விட்டேன்'' என்றார் கமல்ஹாசன்.

தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற "மௌனகுரு', ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹிந்தியில் "அகிரா' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ராய் லெட்சுமி அடுத்து, "ஜூலி 2'  என்ற பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து ஒரு வருடத்துக்கு ஹிந்திப் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் தமிழ் பட வாய்ப்புகளை மறுத்து வருகிறார். இது பற்றி பேசுகையில்.... ""முன்பு இருந்த உடல் எடையைத் தற்போது குறைத்துள்ளேன். ஹிந்தி பட வாய்ப்புகளை தக்க வைப்பதில் பெரிய முயற்சி தேவைப்படுகிறது. அதற்காகப் பல மாதங்களாக தீவிர உடற்பயிற்சியில் இருந்தேன். ஜூலி 2 படத்துக்காக படு கவர்ச்சியாக நடிக்கிறேன். அதற்காகத்தான் உடல் எடையைக் குறைத்துள்ளேன். அக்டோபர் மாதம் மும்பையில் படப்பிடிப்புத் தொடங்குகிறது. அதுவரை உடற்பயிற்சியை விட மாட்டேன். காய்கறி மற்றும் பழ வகைகள்தான் உணவு. தற்போது நடித்து வரும் 2 தமிழ்ப் படங்களை முடித்துக் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறேன். அது முடிந்ததும் மும்பையில்தான் இருப்பேன். அடுத்தடுத்து ஹிந்தி பட வாய்ப்புகளைத் தக்க வைக்க நினைக்கிறேன்'' என்றார் ராய் லெட்சுமி.

மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த "ஸ்ரீமந்த்துடு' தமிழில் "செல்வந்தன்' என்ற பெயரில் வெளியானது. இதையடுத்து அவர் தெலுங்கில் நடிக்கும் "பிரம்மோற்சவம்' அதே பெயரில் தமிழிலும் தயாராகி வருகிறது. குடும்பப் பின்னணியைக் கொண்ட இக்கதையில் சமந்தா, காஜல் அகர்வால், ப்ரனீதா என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், ரேவதி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிவிபி சினிமா தயாரிப்பில் ஸ்ரீகாந்த் லோதா இயக்குகிறார். இப்படத்துக்காக முதலில் சமந்தாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் வேறு படங்களில் கவனம் செலுத்துவதால் இப்படத்தை மறுத்தார். பின்னர் அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சு தொடங்கியது. ஆனால் ஏற்கெனவே இருவரும் ஜோடி சேர்ந்த படம் சரியாகப் போகவில்லை என்பதால், அதை கருத்தில் கொண்டு அனுஷ்காவைப் படக்குழு மறுத்தது. மகேஷ்பாபுவை விட மூத்தவர் போல் அனுஷ்கா உள்ளதாகப் பேச்சு எழுந்தது. இதையடுத்து மீண்டும் சமந்தாவை அணுகினர். இதனால் பிற படங்களின் கால்ஷீட் தேதிகளை ஒதுக்கிக் கொடுத்து இப்படத்தில் ஓய்வில்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சமந்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

SCROLL FOR NEXT