உயிர் காத்த கீரை
இலக்கியக் கூட்டம் முடிந்து பெரும் கைதட்டல்களுக்கிடையில் பிரகாஷ் மேடையை விட்டு இறங்கினார். பார்வையாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
இலக்கியக் கூட்டம் முடிந்து பெரும் கைதட்டல்களுக்கிடையில் பிரகாஷ் மேடையை விட்டு இறங்கினார். பார்வையாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
அவர்களிடம் பேசி முடித்துவிட்டு வந்தார். வெளியே வந்தோம். அரங்கச் சுவரில் தெருவிலுள்ள அசோக மரங்களின் பழங்களைத் தின்றுவிட்டு வெளவால்கள் எச்சங்களை சுவரெல்லாம் தெளித்திருந்தன. பார்ப்பதற்கு அசுத்தமாகவும் தெரிந்தது. ஒரு பார்வையில் மார்டன் ஓவியமாகவும் தெரிந்தது.
""சரி லாட்ஜ்லயும் சொல்லியிருந்தேன் அங்கே போயி சாப்பிட்டு பேசிக்கிட்டு இருக்கலாம் அல்லது சாப்புட எங்க வீட்டுக்கு வாரீங்களா? நீங்க இயற்கை உணவாளர். வீட்ல தேங்காய் இருக்கும். வாழைப்பழம் வேணா கடையில வாங்கிட்டு வந்திடறேன்'' என்று கூறினேன்.
""மொதல்ல உங்க வீட்டுக்கே போகலாம்'' என்றார் அவர். வீட்டை அடைந்தோம்.
""உங்க வீடுகள்ல கீரை சமையல் ரொம்ப சுவையாக இருக்குமாமே, எங்கம்மா சொல்லியிருக்காங்க''
""அது உண்மைதா உங்க அம்மா எங்க ஊர் அரசு மருத்துவமனையில டாக்டரா இருந்தாங்கள்ல, அப்ப தெரிஞ்சிருப்பாங்க''
""எங்கம்மாவ நீங்க பாத்திருக்கீங்களா?''
""என் நண்பன் சின்ன வயசுல மாட்டு வண்டியில இருந்து கீழே விழுந்து கை ஒடிஞ்சி போச்சி. உங்கம்மாகிட்டதான் சிகிச்சைக்கு கூட்டிப் போனேன்''.
""அது எங்கம்மாதான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்''.
""அப்பத் தெரியாது ரெம்ப நா கழிச்சி உங்க "அங்கிள்' நூல் வந்ததும் வாங்கிப் படிச்சிட்டிருந்தேன். "வேண்டாங்கிள் வேண்டாங்கிள்'ங்குற அந்த சிறுமியின் ஓலம் எந்தக் காலமும் மறக்காதே. அப்ப பாத்த ஒரு நண்பர் சொன்னாரு, பிரகாஷோட அம்மாதான் அந்த டாக்டருன்னு''
""அட எனக்கு ரொம்ப நெருக்கமாயிட்டீங்க. சரி இன்னக்கி உங்க வீட்ல கீரை இருக்கா''
""இருக்குங்க''
""அப்ப என் இயற்கை உணவு விரதத்தை ஒருவேளை ஒத்தி வச்சிட்டேன். கீரையோட சாப்பாடு வையுங்க''
இருவரும் சாப்பிட்டோம்.
""நன்றிங்க. உண்மையிலேயே. ருசின்னா ருசிதாங்க. எங்கயும் இதுமாதிரி நான் சாப்பிட்டதில்லே, அதென்ன உங்கள்ள விவரம் கேட்டு, மத்தவங்க சமையல் செய்தா இதே ருசி வராதா?''
""அதாவதுங்க பீம பாகம் நளபாகமுன்னு சொல்லுவாங்கள்ல, அது ஒரு கை பக்குவ சுகங்க. எல்லாருக்கும் வாரதா இருந்தா பீமனுக்கும் நளனுக்கும் எதுக்குப் பேரு? எங்களுக்கு கீரைபாகம் கை பக்குவம்.''
""சரி வேற பெரியாளுங்க யாரும் பாராட்டியிருக்காங்களா?''
""சொல்றேன், முன்னால இரவு ஏழு மணியானா வெளியூருக்கு பஸ் இல்லே, கலைமன்றத்துல பேசவாரவங்க, சங்கீத சபாவுல பாட வாரவங்க, இரவுல இங்கதான் தங்கியாகணும். ராஜபாளையத்தில இருந்து சென்னைக்கு மாலையில ஒருக்கா ரயிலு போகும், காலயில ரயில் திரும்பி வரும். அப்படி அவங்க தங்கும்போது இரவுல நானும் அவங்க கூட தங்கிப் பேசிக்கிட்டு இருப்பேன். ஒருக்கா செம்மங்குடி பாட வந்தாங்க. காலயில குளிச்சிட்டு டிபன் முடிச்சிட்டு வந்தாங்க. ""தம்பி உங்க வீடுகள்ள சமைச்சி கடைஞ்ச கீரை ரெம்ப ருசியா இருக்குமாமில்லே, மதியம் சாப்பாட்டுக்கு கீரை கிடைக்குமா?'' என்று கேட்டார்கள்.
""ஐயா உங்களுக்கு ஓட்டல்ல ஸ்பெசல் அயிட்டங்களோட சாப்பாடு சபா செயலர் ஆர்டர் பண்ணிட்டாருங்க'' என்றேன்.
""இருக்கட்டும் அதோட கீரையும் கிடைக்குமா'' என்றார்கள்.
""கட்டாயம் கொண்டு வாரேன். இப்பவே வீட்ல போயி சொல்லிட்டு வாரேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
குழுவினர் எல்லாருக்கும் மதியம் கீரை கொணர்ந்து தந்தேன். பிரியமாகச் சாப்பிட்டார்கள்.
""தம்பி பத்ராஜல ராமதாசர் பாட்டு ஒன்னு பூர்வ கல்யாணி ராகத்துல நா பாடியிருக்கேன்.
"ஓ ராமா நீ நாமம் என்த ருசிரா
என்த,ருசிரா... அதி ஏமிருசிரா ன்னு'
ராமநாமம் அவ்வளவு ருசியாக இருந்திச்சாம் அவருக்கு. இப்ப எனக்கு இந்தக் கீரை சாப்பிட்டதும் கீரை என்தருசிரா அதி ஏமிருசிரான்னு பாடணுமின்னு தோணுதுப்பா'' என்றார்.
சங்கீத சபா செயலர் என்னை அழைத்தார்.
""என்ன சார்?'' என்றேன்.
""ஹோட்டல்ல ஸ்பெசல் சாப்பாடு நல்ல சிலவுல அரேன்ஜ் பண்ணியிருந்தேன். நீ முக்காத்துட்டு கீரையைக் கொடுத்து பேரை வாங்கிட்டயே... கீரையை எதுக்கு எடுத்தாந்தே?''
கோபமுடன் பேசினார்.
""சார் வந்ததுமே கட்டாயம் கீரை வேணுமுன்னு கேட்டாங்க சார். அதான் கொண்டு வந்தேன்'' என்றேன்.
""போப்பா'' என்று கூறி போய்விட்டார்.
""அப்ப நீங்க சபா கச்சேரிகளயெல்லாம் கேப்பீங்களா'' என்று கேட்டார் பிரகாஷ்.
""பெரும்பாலும் கேட்டுருவேன்'' என்றேன்.
""தியாகராஜர் கீர்த்தனைகள்ள எனக்கு ரெம்ப புடிச்சது ""ராரா மாயிண்டிதாக''ன்னு அஸாவேரி ராகத்துல ஒரு பாட்டு ராமனையே, வாடா ராமா எங்க வீட்டு வரைக்கும் கடவுளை உரிமையோடு வாடான்னு அழைக்கும் அந்த ஸ்டைல் எனக்கு ரெம்பவே புடிக்கும்''
""தஞ்சாவூர்க்காரங்களுக்கு சங்கீதம் கேட்கணுமா''
அப்போது ஏதோ பயங்கர ஓலம் கேட்டது.
""என்னது இப்படி?''
பக்கத்து வீட்டு பொம்புள புருசனோடு சண்டை வந்தா தெருவே கலங்கிப் போகும். அது முடியும் வரை அமைதியாக இருந்தோம். பிரகாஷ் தொடர்ந்தார்:
""ஒரு தமிழ்ப் படத்துல "மறிமறி நின்னே'ன்னு தியாகய்யர் பாட்டு நீங்க படம் பாத்தேகளா''
""ஆமாங்க "சிந்து பைரவி'ங்குற படத்துல "பாட்டறியேன் படிப்பறியேன்'னு அற்புதமான நாட்டுப்புற இலக்கியப் பாடல். அதை பாடறியேன்னு போட்டு சிதைச்சிட்டாங்க அதோடு கலந்து பாடுறதுக்காக இந்த மறிமறி நின்னே காம்போஜி ராகத்தை மாற்றி சாரமதி ராகத்துல பாடினாங்க''
""சினிமான்னா அப்படித்தானே இருக்கும்? விடுங்க. சரி உங்க ஊர் சபா கச்சேரிகள்லே இப்ப தமிழிசைப் பாடல்கள் தாக்கம் எப்படியிருக்கு''
""இப்ப பெரும்பாலும் தமிழிசைப் பாடல்கள்தான். பாரதியார் பாடல்களும்தான் ரசிகர்கள் கேட்குராங்கள்ல. அதோட இந்த கலைமன்றம் தோற்றுவித்த முன்னாள் தமிழக முதலமைச்சர் குமாரசாமிராஜா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துல தமிழிசைச் சங்கம் ஆரம்பிக்க பேருதவிகள் செய்தவராக்கும்.''
""அப்படியா ராஜாவுக்கு நன்றிகள்''
""சரி லாட்ஜ்ல படுக்கப் போலாமா'' கேட்டேன்.
""அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஒரு பாயி, தலயணை தாங்க இந்த திண்ணயிலேயே படுப்போம். இந்த கீரை ருசி உங்க வீட்டை விட்டுப் போக வேண்டாமுன்னு சொல்லுது''
""நல்லது எனக்கும் உங்க கூட பேசுற வாய்ப்பு நிறையவே கிடைக்குமில்லையா?''
""சரி பேசிக்கிட்டே படுக்கலாம். காலையில கீரை ருசியோடதான் இங்க இருந்து போகனும்''
""சரி சரி. இந்த தமிழிசைன்னு சொன்னதும் எனக்கு ஒன்னு நினைவுக்கு வருது. ஐ.நா.சபையில முக்கிய இடத்துல நம்ம சங்க இலக்கியவரிகளான "யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று எழுதிப் போட்டுருக்காங்களாம். இருக்கட்டும். நம்ம எம்.எஸ்.அம்மா அங்க கச்சேரி செய்யும்போது காவடிச் சிந்து பாடலைப் பாடினாங்களாம், அந்த சந்தத்துல கூட்டமே மயங்கி ஏக கைதட்டல்களாம். அப்ப எம்.எஸ்.அம்மா சொன்னாங்களாம் - "இந்த பாட்டு எங்க நாட்டு குக்கிராமமான சென்னிகுளத்துல பிறந்த அண்ணாமலை ரெட்டியார் அப்படிங்குற கவிஞர் பாடுனதுன்னு' இது தமிழ்நாட்டுக்கே பெருமையில்லையா''
""ஆமாமா உங்க கீரையைப் போல சுவையான செய்திதான்''.
""அட கீரையை விட மாட்டீங்க போல. கீரையைப் பத்தி ஒரு தகவல் சொல்றேன். முன்னால தெருக் கடைசியில் இருக்கும் வீட்டுக்காரப் பெண்கள் சேர்ந்து வீட்டுக்கு ஆறு கீரைப் பாத்தி போடுவாங்க. காலயில எல்லாரும் கிணத்துல இருந்து தண்ணி எரச்சி எல்லாப் பாத்திகளுக்கும் தண்ணி ஊத்துவாங்க. அதுல ஒரு பாத்தி நிலத்துக்காரங்களுக்கு வாடகைபோல. அஞ்சி பாத்திகள்ல நாளுக்கு ஒரு பாத்தியில் கீரை அரிச்சி சமையல் செய்வாங்க''.
மெல்லத் தூரல் விழுந்தது.
""மழை பேஞ்சா உள்ள போயிடலாம்'' என்றேன். தூரல் நின்றுவிட்டு குளிர் காற்று வீசியது. ஒருசமயம் ஒரு பகுதியில கோஷ்டி சண்டை. ஒரு கோஷ்டி ஆளுங்க இரவுல மூணு பேரு, அரிவாள் தடிகளுடன் வந்தனர்.
""இன்னக்கி அந்தப் பயகள்ல ரெண்டு பேரையாவது வெட்டாம விடக் கூடாதுடா''ன்னு சத்தம் போட்டுகிட்டே போனாங்க. ஒரு கம்பெனிக்கு முன்னே வாசல்ல வாச்மேன் உட்காந்திருந்தாப்புல.
""டேய் அந்தா உட்காந்திருக்கானே அவனப் பாத்தா எதிரி கோஷ்டிக்காரன் மாதிரியே தெரியுதுடா. வாடா அவனப் போட்டுத் தள்ளலாம்''.
அருகில் வந்துவிட்டனர். புரிந்து கொண்ட வாச்மேன்,
""நான் அவங்க ஆளு கிடையாதுங்க''
""அப்ப நீ யாரு''
நா இந்த மாதிரி...
""நீங்க பேசாமே இருங்கடா நான் பேசிக்கிறேன்''.
""ஏய் அப்ப நீங்க கீரை சமைப்பீங்கள்லே!
""ஆமா கீரை கடைவோம்''
""இன்னக்கி கீரை கொண்டாந்திருக்கயா''
""ஆமா நைட்ல சாப்புட கொண்டாந்திருக்கன்யா''
""கொஞ்சம் எடுத்துக் குடு. ருசி பாக்கலாம். வாட்ச்மேன் தூக்குச் சட்டியைத் திறந்து எடுத்துத் தந்த கீரையை நாக்கில் வைத்து ருசி பார்த்தான்.
""டேய் கீரை ரெம்ப ருசியா இருக்கு. இவன் எதிரி கோஷ்டி ஆளு இல்லே. இவன வெட்ட வேண்டாம்'' என்றவன் வாச்மேனிடம்,
""இந்தாய்யா தூக்குச் சட்டியில இருக்குற மொத்த சாதத்துலயும் கீரையை பெசஞ்சி உருட்டி உருட்டி மூனு பேரு கையிலயும் கொடுய்யா. இன்னக்கி கீரையால உசுரு தப்பிச்சே'' என்றதும் வாட்ச்மேனிடம் மூவரும் கைகளில் சேர்த்து உருண்டைகளை வாங்கி உண்டனர்.
""டேய் ரெண்டு பேரும் கேட்டுக்கோங்க. கீரைக்காக இந்த ஆள விட்டுட்டோம். இப்ப இந்த ருசியை தின்னப் பிறகு எவனயும் வெட்ட வேணாமுன்னு தோணுது. வாங்கடா பேசாமெ வீட்ல போயி படுப்போம்''
கிளம்பிப் போய்விட்டனர்.
உடனே பிரகாஷ், ""அடடா இது கீரை மகத்துவமா? கீரை புராணமா? எவ்வளவு முக்கிய கதையால்லே இருக்கு''
இருவரும் தூங்கத் தொடங்கினோம்.