சிறுகதைப் போட்டியில் ரூ.10,000 பரிசு பெறும் சிறுகதை
""சிவம்பெருமாளு சித்துச்ச வயசுக்காரன். அவனோட மக மீனா வேற இப்பமே, "குத்த' வைக்காக்ல திமுதிமுன்னு இருக்கா. ரெண்டு பேருக்கும் பொங்கி ஆக்கிப் போட்டுக்கிட்டு, வீட்டையும் பேணிக்கிட்டு இருந்த ஆவுடையை இந்த எமன் வந்து "சடக்'குன்னு அழைச்சிட்டு போய்ட்டானே! சித்துச்ச வயசுக்காரியைச் சாகக் குடுக்கது பெரிய கொடுமைதான். ஆனாலும் என்ன பண்ண முடியும்? தாங்கிக்கிடத்தான் வேணும். சடார்ன்னு மீனா வயசுக்கு வந்துட்டா, பொம்பளைத் துணை இல்லாம சிவம்பெருமாளு என்ன பண்ண முடியும்? அவன், காடோ செடியோன்னு தோட்டம் துரவுல அலையிற ஆளு. பொட்டப்புள்ளய ஒத்தயில விட்டுட்டு அப்படிப் போக முடியுமா? அதனால, ஆவுடையோட பதினாறாம் நாள் காரியம் ஆன கையோட, ஒரு பொண்ணைப் பாத்துத் தாலி சீலயக் கட்டச் சொல்ல வேண்டியதுதான்''.
பெரிய பாட்டா அழுத்திச் சொல்லிட்டாக.
ஆவுடையைக் காடேற்றிப் பால் ஊற்றிட்டு வந்த கூட்டம், திண்ணை நிறையக் குத்த வச்சிருக்கு.
இந்த ஊருக்கே வழிகாட்டுற பெரிய பாட்டா, இப்படிச் சொன்னதும், ஒக்க அவுகளையே பாக்காக.
நியாயந்தானேன்னும் ஒவ்வொருத்தரும் நினைக்காக.
பாட்டா சொன்னது சரிதான்னு, நாலஞ்சு பெரிசுக சொல்லிச்சுக.
ஒருத்தரும் மறுப்பே சொல்லல.
பதினாறு நாள் காரியம் ஆனதும் பேச்சுக் காலைத் துவக்கிறலாம்ன்னு முடிவு பண்ணிப் போட்டு, அவுகவுக வீட்டைப் பார்க்கக் கௌம்பிட்டாக.
இப்ப ஊருபூராவும் இதான் பேச்சாப் போச்சு.
இதுல கொஞ்சம் பேர், சந்தோசம் கூடப் பட்டுக்கிட்டாங்க.
அவுக வீடுகள்ல சமஞ்ச குமருக இருக்கதால, முடிஞ்சா, ரெண்டாம் தாரமாத் தள்ளி விட்றலாம்னு அவுக பாக்காக.
பொண்ணைப் பாக்க வர்ற முடிவான்களும், பொண்ணை எங்க பாக்கானுக?
ரொக்கம் எம்புட்டு, தடயம் எத்தனை பவுனுக்குப் போடுவியன்னுதான கேக்கானுக.
அதான சமஞ்ச குமருக கரை ஏறாமக் கெடக்காளுக.
சிவம்பெருமாள் ஒண்ணும் அடாதுடி கெடையாது. பதனமா நடக்குற ஞாயமான மனுசன்தான். சொந்தமாய்க் காரைவீடு இருக்கு. காடுகரை, நஞ்சை புஞ்சை, தோப்புன்னு சொத்துக இருக்கு. பாக்கவும் வயசுப் பையன் போலதான் இருப்பான். மீனா சமஞ்சிட்டா, மறுவருசமே எவன்ட்டயாது ஏப்பிச்சிட்டுப் போலாம். பொறகு வீட்ல சள்ளுக் கெடையாது. ஆண்டு அனுபவிக்கலாம்ன்னு பொண்ணப் பெத்தவுகள்லாம் கனாக் காணுதாக.
அதுலயும் இது ரெண்டாந்தாரக் கலியாணம். அதனால மாப்பிள்ளை தலைல மிளகாய் அரைச்சிறலாம்னு நெனைப்பு. அதான், பெரிசாச் செலவெல்லாம் பண்ணிக் கஷ்டப்பட வேணாமேன்னு பாக்காக.
பதினாறாம்நாள் விசேசத்தை முடிச்சுட்டு, ஐயர் சாமான் பைகளோட கௌம்பிட்டார்.
பந்தி வெளம்புதாக.
நாலஞ்சு ஏனங்களைத் தூக்கிக்கிட்டு பண்டுவன் பொஞ்சாதி வந்தா. ஏனங்களையெலாம் பந்தக்கால் ஓரமா வச்சுட்டுப் போனா. பந்தியெல்லாம் முடிச்சிட்டில்லா அவளுக்குச் சோறு போடுவாக.
வடை, பாயாசம்ன்னு போட்சான சாப்பாடுதான்.
தளபதி சமுத்திரம் அண்ணாச்சி சமையல்ன்னாச் சும்மாவா? மணம் ஊரையே தூக்குதே.
சாப்பிட்டு முடிச்சவுக இரை எடுத்த மலைப்பாம்பாட்டம் தெணறிக்கிட்டு வாராக.
விருந்துலயும் சரி, வீட்லயும் சரி ஒருபிடிச் சோறாச்சும் குறைவாத்தான் சாப்பிடணும்.
ஓசில ஆப்ட்டுப் போச்சுன்னு வச்சுத் திணிச்சா?
திண்ணையிலேயும் உள்கூடத்திலேயுமாக் கூடிக் கூடி இருக்காக.
வந்தவுகள்ல பாதிப்பேர் போயாச்சு.
மீதிப்பேர் இருக்காகன்னா காரணம் இருக்கு.
கோயிலுக்குப் போறதுக்காக இருக்கம்ன்னா, அது பெரிய பொய்! பெரியபாட்டா மூலியமாய், சிவன் பெருமாள்ட்டச் சம்மதம் வாங்கிட்டா, அடுத்தாக்ல குமரைக் கரை ஏத்துற சோலியைப் பார்க்கலாமில்ல!
வெத்தலை பாக்குப் போட்டுக்கிட்டும், வாப்பரப்புக் கேட்டுக்கிட்டும் இருந்தாலும்கூட, அவுக பார்வை பூராவும் பெரிய பாட்டா மேலதான் இருக்கு.
கட்ன பொண்டாட்டியக் காலன்ட்டக் குடுத்துட்டு லெக்கு லேவ தெரியாம பரக்கப் பரக்க முழிச்சுக்கிட்டிருக்கான் சிவன்பெருமாள். மொட்டத்தலை பளபளன்னு இருக்கு. பொஞ்சாதிக்காரிக்குக் கொள்ளிவச்சது அவனல்லவா?
ஆம்பிளைப்பிள்ளை இல்லேங்கதால அவன்தான் மொட்டை போட்டான். மீனா மூணாவது பொண்ணு. தலைச்சனும் ஆம்பிளைதான். அடுத்த பிள்ளையும் ஆம்பிளைதான். ஆனாத் தக்கலியே. பொறந்தாக்லயே போயிடுச்சுக. இப்ப மீனா மட்டும்தான் அவனோட வாரிசு.
பொதியப் போட்டுட்டு ஆவுடை போய்ச் சேர்ந்துட்டா. இனிம அவந்தான் சுமக்கணும். மகளும் அப்பனைப் போலவே சூது வாது இல்லாத பொண்ணு. கூறுபாடும் சித்த குறைவுதான்.
ஆவுடையாக் கண்டு கொண்டு செலுத்துனா. படைச்சவனுக்கு இது பொறுக்கலியே. ஆவுடையை அழைச்சிட்டு போயிக் குடும்பத்தைப் பதங்குலைச்சுப் போட்டுட்டானே!
காய்ச்சல்ன்னு அனத்துனா
மூணுநாள்தான் கிடைப்பாடு.
சடார்ன்னு போய்ட்டாளே.
சிவன்பெருமாள், அழுது ஊரைக் கூட்டுகான்.
மீனா அடிச்சடிச்சு அழுகா.
கண்கொண்டு பார்க்க ஏலாத பரிதாபமால்ல போயிருச்சு. ஊர்ச்சனமும் சேர்ந்துல்லா அழுகை!
யார் அழுது என்ன, ஆவுடை திரும்பி வரவா போறா?
எல்லாரும் கூடமாட நின்னு ஆவுடைக்குச் செய்யுங்கட்டுகள் செஞ்சு, அம்பாரக்களத்து மேட்டுக்குத் தூக்கிவிட்டாக.
சிவம் பெருமாள் யாருக்கும் ஓடி ஓடி உதவுவானே! அதான் ஊர்ல ஒரு ஜனம் பாக்கியில்லாம வந்து நின்னு செஞ்சாங்க.
ஆச்சு, எல்லாம் முடிஞ்சு இன்னிக்குப் பதினாறும் நடக்குது.
அசலூர்க்காரங்க சௌகரியமாப் போய்க்கிடட்டும்ன்னு மதியமே நன்மைக்கு இருத்திட்டாக. அப்பனுக்கும் மகளுக்கும் திருநீறு பூசிட்டுப் பாதிச்சனம் போயாச்சு.
இனிமே ஓச்சத்தி வந்து சத்தம் காட்டணும். அந்தாக்ல இங்க இருக்கவுக எல்லாரும் மளார்ன்னு எந்திரிச்சு அம்மன் கோயிலுக்குக் கௌம்பிருவாக. அங்க பூஜை பண்ணி சிவன்பெருமாளுக்குச் சாமி ஆரம் ஒண்ணைப் போட்டுத் திருநீறு குடுத்துட்டா அன்னயக் கட்டுத் தீர்ந்துச்சு. மீதி இருக்கவுகளும் ஓடு ஓட்டம்ன்னு வீட்டைப் பாக்க, ஊரைப் பாக்க ஓடிருவாக.
இப்ப கோயிலுக்குப் போறதுக்கு முன்னாடி சிவன் பெருமாள்ட்ட அபிப்ராயம் கேட்டுறணும்னு எல்லாருமே நினைக்காக.
அதான் இம்புட்டு அக்குசோட குத்த வச்சுட்டு இருக்காக. இல்லேன்னா வேலை கெடக்கு. சோலி கெடக்குன்னு சொல்லிப் போட்டு, நன்மைக்கு இருத்தினதுமே கௌம்பில்லா இருப்பாக.
சிவம்பெருமாள் திண்ணைத் திண்டின் மீது சாஞ்சபடி உக்காந்திருக்கான். அம்புட்டுப் பேரோட பார்வையும் அவன் மேலேயே குவிஞ்சிருக்கு.
எப்படிப் பேச்சுக்காலை ஆரம்பிக்கலாம்ன்னு தோது பார்க்காக.
மத்தவுக முடிவு பண்ணி எதுக்கு? அவன்ல்லா சம்மதம்ன்னு தலையை ஆட்டணும்.
"இதென்ன அநியாயம்? ஆவுடைக்குப் பதினாறே இன்னிக்குத் தானே. அதுக்குள்ள ரெண்டாங்கலியாணப் பேச்சை எடுக்கியளே, நியாயமா?'ன்னு கேட்ருவானோன்னு எல்லார் கிட்டயும் பயம்.
அட அவன் அப்படியேதான் கேட்டாலும்கூட, இவுக என்ன விட்றவா போறாக? சிவம்பெருமாளை மடக்குற தொன்னும் சீமை வித்தை கிடையாது.
பெரியபாட்டா லேசாச் செருமுனாக. பொறகு வெத்தலை எச்சிலைத் துப்புனாக. அது, தானாய் முளைச்சுத் தளதளன்னு நின்னுக்கிட்டிருந்த குட்டத் தக்காளிச் செடிக்கு மேலே ரெத்தத்தைத் தெளிச்சு விட்டாக்ல செவப்பாய்த் தெரிஞ்சுது. தோள்த் துண்டை எடுத்துப் பதனமா வாயத் தொடச்சுக்கிட்டாக. பொறகு, எல்லாரையும் ஜாடையாய் ஒரு பார்வை பார்த்துக்கிட்டாக.
எப்பவும் எங்கியும் அவுகதான முன்னால நிப்பாக.
இந்தா ஆரம்பிச்சிட்டாகல்ல.
""சிவம்பெருமாள், ஆவுடை பொதியத் தூக்கி ஒந்தலை மேல வச்சிட்டுப் போய்ச் சேர்ந்துட்டா. நீயும் பண்டுவம் எல்லாம் பாத்தே. குடுப்பினை இல்லாமப் போயிருச்சே! அவ போனதோட எல்லாமா போய்ரும்? நீ இருக்கே. மீனா இருக்கா. வெளியிலேர்ந்து தவிச்சு வர்றப்ப ஒரு வாய்த் தண்ணிந் தரணும்ன்னா, வீட்ல ஒரு பொம்பளை வேணுமில்லா! இருந்தாக்ல மீனா "குத்த' வைப்பா. ஆம்பளை நீ என்ன பண்ண முடியும். பொம்பளைன்னு ஒருத்தி வீட்ல இருந்தாத்தான் தோதுப்படும். அதான் நாங்க எல்லாம் கூடி ஒன்னை ரெண்டாங்கலியாணம் பண்ணிக்கச் சொல்தம். ஒனக்கு இதுல சம்மதம்தானே சிவம் பெருமாளு?''
பெரிய பாட்டா பக்குவமாக் கேட்டாக.
அவன் அவரை நிமுந்து பாத்துட்டுச் சடக்குன்னு கீழே குனிஞ்சுக்கிட்டான். "இப்பம் இந்த பேச்சு ஏன்'ங்காப்ல பாத்தான்.
எல்லாரும் பெரிய பாட்டாவையும் அவனையும் மாறி மாறிப் பாக்காக.
""ஏல சிவம் பெருமாளு, ஊர்ல பெரிய மனுசன் அவுக. உம்பேர்ல இம்புட்டு அக்குசோட வந்து கேக்காக. வாயத் தொறந்து பதில் சொல்லுல''.
பாஞ்சாலிப் பெரியண்ணி கம்பீரமான குரலில் கேட்டா.
குரல் மட்டுமில்லே, ஆளும்தான்!
பெரியண்ணியோட தோரணையே தனி.
பாம்படம், தண்டட்டி, முடிச்சுன்னு காது நகைக பூராவும் தோள்பட்டையத் தொட்டுக்கிட்டு ஆடுதுக. முகப்பு வச்ச மூணுவடம் சங்கிலியும், கிளிக்கூட்டு அட்டியலும் கழுத்துல கெடந்து மின்னுதுக. கை நிறையக் காப்புகளும் கல்லுவச்ச வளையல்களும் குலுங்குதுக.
சிவம் பெருமாள் பெரியண்ணிய லேசாத் திரும்பிப் பார்த்துக்கிட்டு, குனிஞ்சுக்கிட்டான்.
""அவனொண்ணும் வாய் தொறக்காப்ல தெரியல. நாம்பதான் ஒரு முடிவை எடுக்கணும். கூட மாட நின்னு தாலி சீலையக் கட்ட வைக்கணும். இப்படியா ஒருத்தன் குடுப்பினை இல்லாமப் போவான்? போன வருசம் பெத்தவ போய்ட்டா. இப்ப கட்னவளையும் தூக்கிவிட்டுட்டுத் தட்டழிஞ்சுல்ல நிக்கிறான். எல்லாம் விதி; இவன் காடோ செடியோன்னு வேலைவெட்டிக்குப் போய்ட்டாம்ன்னா, மீனா தனியால்ல இருக்கணும். வயசுக்கு வர்றாப்ல இருக்கா. திடீர்ன்னு "குத்த' வச்சிட்டான்னா? பொம்பளை இல்லாத வீடு, சீண்ட்ரப்பட்டுப் போய்ருமே. அதனால, நாம்ப ஒரு பொண்ணைப் பார்த்துட்டு, கட்றா தாலியைன்னா மாட்டம்ன்னா சொல்லிறப் போறான்''னா, பிரம்மாச்சி.
""இப்ப அவனுக்கு ஒரு நல்லது பண்ணணும்ன்னுதானே கூடி நின்னு சொல்லுகோம். அதைக் காலாகாலத்துல பண்ணிட்டா, அவம்பாடு சீண்ட்ரமில்லாமக் கழியும்ல்லா''.
அழுத்தமாச் சொன்னா பாஞ்சாலிப் பெரியண்ணி.
அதுதான் சரிங்காப்ல எல்லாரும் பார்த்தாக.
சிவம் பெருமாள் மட்டும் ஒண்ணுமே சொல்லாம மண்ணுல செஞ்சுவச்ச சிலையாட்டம் இருந்தான்.
""அவன்தான் வேண்டாம்ங்காப்ல ஒண்ணுஞ் சொல்லலியே! நாம்ப சொல்கதுக்குச் சம்மதம்ங்காப்லதான இருக்கான். இனிமேல் நடக்க வேண்டியதப் பார்க்க வேண்டியதுதான்'' என்ற பிரமாச்சி, அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள்.
""பிரம்மாச்சி சொல்கதும் சரிதானே. அவன்
மௌனமா இருக்கான்னா சம்மதம்ன்னு தானேஅர்த்தம்...''ன்னு சொன்னா பாஞ்சாலிப் பெரியண்ணி.
""பேருதான் ரெண்டாம் கலியாணம்ன்னு. ஆனா ஆளைப் பாருங்க, "கிண்'ணுன்னு இருக்கதை''.
பிரமாச்சி பெருமூச்சு விட்டுக்கிட்டே சொல்லவும், சூழ்ந்து நின்னவங்கல்லாம், "ஓ'ன்னு சிரிச்சிட்டாக.
""தாயே நல்ல மாராசி, கண்ணு கிண்ணு போட்றாதட்டி, வாயவச்சுக்கிட்டு சும்மா இரிதாயே''ன்னு செல்லமா அதட்டுனா பாஞ்சாலிப் பெரியண்ணி.
எழவு நடந்த வீடுன்னு கூடப் பாக்காம ஒக்கக் கெடந்து சிரிக்காக.
""ஏம்பா சிவம்பெருமாளு, இங்க பேசினதையெல்லாம் கேட்டுக்கிட்டயில்ல. அவுகவுக ஆயிரத்தெட்டு வேலை சோலிகளோட இருக்காக. அம்புட்டையும் போட்டுப் புட்டு ஒனக்காக மெனக்கெடுகாக. இப்ப நீ வாய் திறந்து பேசியாகணும். மனசுல கெடக்கதச் சொல்லிறணும். நாங்களே பேசிக்கிட்டிருந்தா, ஆண்டிக கூடி மடம் கட்ன கதையாப் போய்ரும். ரெண்டாங் கலியாணம் பண்ணிக்க நீ ரெடிதானே சிவம்பெருமாளு?''
இப்படிக் கேட்ட பெரியபாட்டாவை அவன் திரும்பிப் பார்த்தான். பொறகு,
""இப்ப அதுக்கென்ன அவசரம்''ன்னு கேட்டான்.
""ஏல இப்ப அதுக்கு அவசரமும் இருக்கு. அவசியமும் இருக்கு. எதையும் சூட்டோட செஞ்சிறணும். ஆறின கஞ்சி பழங்கஞ்சி. இப்ப நீ என்ன சரீர சுகம் வேணும்ன்னா ரெண்டாம் கல்யாணம் பண்ணப் போறே? இல்லேல்ல. சோறு பொங்கிப் போட, சமையாக்ல இருக்க, மகளுக்கு ஒரு பொம்பளைத் துணையாய் இருக்க, வீட்ல விளக்கேத்தி வைக்கன்னு ஒருத்தி தேவைப்படுறதாலதான செய்யப் போற. வெளி வேலைக்கிப் போறவன் நீ. மீனாவை வீட்ல வச்சுட்டு, நீ நிம்மதியா வெளில இருக்க முடியுமா? இப்படி நாலையும் யோசனை செஞ்சுட்டுத்தான், நாங்க இதச் சொல்தம். நீ ஆட்டும்ன்னு சொல்லுல''ன்னா பாஞ்சாலிப் பெரியண்ணி.
கூட இருந்தவுகளும் அண்ணியோட சேந்துக்கிட்டு பக்கப் பாட்டுப் பாடுனாக.
சிவன் பெருமாளோட மனச அசைச்சு, அவனைச் சம்மதிக்கப் பண்ணிறணும்னு முசிஞ்சு நின்னாக.
ரெண்டாங் கலியாணம் பண்ணிக்கிட்டா அவனுக்கு இன்னின்ன சிலாக்கியங்கள்லாம் இருக்குன்னு பட்டியல் போட்டுச் சொன்னாக.
அடிக்க அடிக்க அம்மியும் நகருமில்லா!
இவுக வாய்ஜாலம் பூராத்தியும் காமிக்காக.
அவனை விடுகாப்ல இல்லை.
அவன் சம்மதம்னு சொன்னாத்தான் நகர்வோம்னு நிக்கிறாக.
ஆறுகள்லாம் கடலுக்கே போயிச் சேருறாப்ல, இவுக எல்லாரும் அவனைச் சம்மதிக்கப் பண்ணுகதிலேயே குறியா இருக்காக.
அழுத்தி அழுத்திச் சொல்தாக.
ஊர்கூடித் தேரை இழுக்காப்ல இருக்கு.
அவுக இழுக்கிற பக்கமே போறதை விட்டா வேற வழி இல்லேங்காப்ல சிவன்பெருமாளை நினைக்க வச்சிட்டாக. மறுக்க முடியாமப் பண்ணிட்டாக.
ஊர்ல உள்ள பெரியவங்களும், தாயாதி ஜனங்களும் ஒண்ணுச்சு நின்னு சொல்தப்ப மறுக்க முடியுமா?
போட்சாப் பேசுதாகள்ல!
சிவன் பெருமாள் முடிவு பண்ணிட்டான்.
""பெரியவங்க எல்லாரும் என் குடும்பத்து பேர்ல அக்கறை வச்சு இப்படிச் சொல்தப்ப, நான் மறுக்க ஏலுமா? ஒங்க இஷ்டம் போலச் செய்யுங்க''.
சிவம்பெருமாள் தன்னோட சம்மதத்தைச் சொன்னதும், குற்றால அருவியில குளிச்சாக்ல எல்லாரும் குளுகுளுன்னு ஆய்ட்டாக.
""நல்லதுப்பா. இது போறும். மேற்கொண்டு நடக்க வேண்டியதை நாங்க பாத்துக்கிடுதம்''ன்னார் பெரிய பாட்டா.
எல்லாரும் அப்பமே கௌம்பிப் போய் அவுகவுக வீடுகள்ல இருக்கிற சமஞ்ச குமருகள்கிட்ட விஷயத்தைச் சொல்லி, சிவன்பெருமாளைக் கட்டிக்கிறாப்ல தயார் பண்ணணும்கிற துடிப்புத்தான்.
ஆனா ஒருத்தரும் கௌம்பலே.
கோயிலுக்குப் போற சாங்கியம் பாக்கி இருக்கே.
அப்பம் பாத்து ஓச்சத்தியும் சத்தம் குடுத்துக்கிட்டே வந்தா.
எல்லாரும் மளார்ன்னு எந்திச்சிட்டாக.
கோயிலுக்குப் போணுமில்லா!
""சொன்னாக் கேளம்ட்டி. அப்படி நாங்க என்ன ஒனக்கு வேண்டாததையா பண்ணப் பார்க்கோம். வசமான மாப்ள வீட்டல்ல பார்த்திருக்கோம். பெரிய காரை வீடு, காடு, கரை, நஞ்சை, புஞ்சைன்னு போட்சான எடமில்லா. அங்க நீ ராணிமாதிரி இருக்கலாம்ட்டி. சரின்னு சொல்லுட்டி''.
வேலுமணியை வற்புறுத்துனா பாப்பாத்தி.
வேலுமணியோ பதிலே சொல்லலே. அவ பாட்டுக்குப் பீடி சுத்திக்கிட்டே இருந்தா.
""இந்தப் பீடி சுத்துக எழவைத்தான் கொஞ்ச நேரம் நிப்பாட்டி வச்சுட்டு, எனக்குப் பதில் சொல்லேன்''.
எரிச்சலோட சொன்னா பாப்பாத்தி.
பெற்றவளை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு மறுபடியும் பீடியைச் சுத்த ஆரமிச்சிட்டா வேலுமணி.
பாப்பாத்திக்குக் கோவம் சாடிக்கிட்டு வந்துட்டுது.
""பெத்த மனசு தவிச்சுத் துடிக்குது. மகளுக்கு ஒரு நல்ல எடமாத் தெரியுதே. அங்கே போய்ட்டாள்ன்னச் சோத்துக்கும் துணிக்கும் ஆலாப்பறக்காண்டமே. இந்த நாத்தம் பிடிச்ச பீடியைச் சுத்தி அழுந்தாண்டமேன்னு சொல்தேன், கேக்கமாட்டங்கியே. மொதல்ல பீடிச் சொளகைத் தூக்கித் தூர வை. பெத்தவ பேச்சைக் காது குடுத்துக் கேளு''.
இப்படிக் கத்திக்கிட்டே, பீடித்தூள் இருந்த வட்டச் சுளகைப் பிடுங்கப் போனா பாப்பாத்தி.
சட்டுன்னு விலகிச் சுளகை மடியிலே இருத்திக்கிட்ட வேலுமணி சோளமூடு எரிகிற தணல் தீயைப் போல அம்மையை முறைச்சா. பொறகு,
""ஏம்மா இந்தப்பாடு படுத்துக? அப்படி என்ன ஊர்ல, நாட்ல இல்லாத சீமை மாப்ளயக் கொணாந்துட்டே?''ன்னு வெடுக்குன்னு கேட்டா.
""ஐயோ, ஐயோ, ஐயோ! என்ன பேச்சுட்டி பேசுக? சீமை மாப்ள இல்லியா? அடியே, நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அவன் சீமை மாப்ளதான்டி. சிவம்பெருமாள் ஒண்ணும் நம்மைப்போல வக்கத்தவன் இல்லே. ஓட்டைக் குடிசையே சொந்தமாய் இல்லாதவங்க நாம. அவன் வகை தொகையான ஆளு. அவனை நீ கட்டிக்கிட்டா, இப்படிப் பாசிமணியக் கழுத்துல போட்டுக்கிட்டு பஞ்சம் பரத்தாண்டாம். தங்கச்சங்கிலி பண்ணிப் போடுவான். பட்டுப் பட்டாளியா எடுத்து உடுத்தச் சொல்வான். சரின்னு சொல்லுட்டி வேலுமணி. நான் இப்பமே பெரிய பாட்டா கிட்டச் சொல்லி வச்சுட்டு வர்றேன். அம்சமான எடம்ல்லா. வேற யாராச்சும் போய் முந்திக்கிடதுக்கு முன்னாடி நாம முந்திக்கிடணும் வேலுமணி. சரின்னு சொல்லுட்டி''.
கெஞ்சினா பாப்பாத்தி.
வேலுமணி காதுலயே போட்டுக்கிடலே. எள்ளலாய்ச் சிரிச்சு, அலட்சியமாய் உதடுகளைப் பிதுக்கினா.
மகள் பேர்ல கோவங் கோவமாய் வந்துச்சு பாப்பாத்திக்கு.
"என்ன ஜென்மம் இவ! சொன்னதைக் கேக்க மாட்டேங்காளே! இந்தக் காலத்துல கூலி வேலைக்கிப் போறவன்க கூடப் பத்துப்பவுன் போடு, பத்தாயிரத்தக் கொண்டா, கலியாணத்தை மூச்சுவிடுன்னு கொப்புல ஏறில்லா நிக்கிறானுக. வக்கத்த அறுதலி நான். இதுக்கெல்லாம் எங்கே போவேன்? வேலுமணிக்குப் புரிய மாட்டேங்குதே. வசமான எடம்ன்னு தள்ளிவிடப் பாக்கேன். இவ மூஞ்சியத் தூக்குதாளே! ரெண்டாம்தாரம்கிறதாலே செலவே பண்ண வேணாம். உடுமாத்துச் சேலையோட அனுப்பி வச்சிறலாம். ஆனா கூறு கெட்ட மூதி சம்மதிக்க மாட்டேங்கே. பெரிய எடுப்பு, எடுத்து முதல்தாரமாக் குடுக்க நான் எங்க போறது? தினப்பாடே பெரும்பாடு எனக்கு. தாயே, வடக்குவாசச் செல்லி, கருணை காட்டும்மா. இவ மனசை மாத்தும்மா'.
தன்னுள் புலம்பினாள் பாப்பாத்தி.
மறுபடியும் மறுபடியும் மகள்ட்டக் கெஞ்சிப்பார்த்தா.
வேலுமணி அசங்கலே.
அதனால கோபம் சாடி வந்துட்டுது.
""இப்ப நீ, நான் சொல்கதக் கேப்பியா மாட்டியாட்டி?''
""இதுல கேக்க மாட்டேன். ஆளை விடு''.
""அழும்பு பண்ணாதட்டி. வீணா என்னைப்போட்டு வதை பண்ணாதே. சொல்கதக் கேளுட்டி''.
""நீ சொல்கதக் கேட்டம்ன்னா, பொறவு வாழ்நாள் பூராவுமில்லா எனக்கு உயிர்வாதையாய்ப் போய்டும்''.
""அடப் போட்டி புரியாதவளே! சொகமாய் வாழ வழியக் காட்டுனா, நீ உயிர் வாதையாப் போய்டும்னு புலம்புறியே!''
""ஆமாம்மா, அது அப்படித்தான் ஆய்ரும். சிவம்பெருமாள்கூட ஒரு நாளும் சொக வாழ்க்கை அமையாது''.
""முண்டமே, அவன் கைல பசை உள்ள ஆளுல்லா''.
""பசை இருந்தா மட்டும் போறுமா? வயசு இல்லியே! வயசு போன ஆளால்ல இருக்கார். அவர் வீட்ல வேலைக்காரியாத்தான் தேயணும். பெறாத பிள்ளைக்கு அம்மையாய் இருக்கணுமே, அதுவும் என்னைவிட ஒண்ணு ரெண்டு வயசு குறைஞ்ச குமருக்கு!''
""ஏட்டி, அவ அவ வீட்டுக்கு அவ அவதான் வேலைக்காரி. அவ வீட்டு வேலைகளை அவதானே பார்க்கணும்''.
""அது அப்படித்தான். ஊர்க்காரி வந்து பாக்கமாட்டா. ஆனா, அந்த வீட்ல அவ வேலைக்காரியா இல்லாம வீட்டுக்காரியாய் இருந்து பாப்பா''.
""அவங் கையாலே உன் கழுத்துல தாலி ஏறினதுமே நீ அவனோட பெண்சாதிதானே! உரிமைப்பட்ட வீட்டுக்காரிதானே!''
இதக் கேட்டதும் வேலுமணி சிரிச்சா.
சிரிப்புல எளக்காரம்தான் மின்னுச்சு.
""அதெல்லாம் பேருக்குத்தாம்மா. நெசத்துல அந்த வீட்டோட வேலைக்காரிதான். அந்த ஆளுக்கும், அவரோட மகளுக்கும் பொங்கிப் பொரிச்சுப் போட்டுப் பணிவிடைகள் செய்யுற வெறும் வேலைக்காரி மட்டும் தாம்மா''.
""இதெல்லாம் வேண்டாத கற்பனைகள் வேலுமணி. அங்க நீ மகாராணி போல வாழலாம். இப்படி நீ வம்புவாதமெல்லாம் பண்ணி வீணாப் போய்டாதே. பேசாம அவனுக்குக் கழுத்தை நீட்டுடி..''ன்னு அழுத்தமாச் சொன்னா பாப்பாத்தி.
""முடியாதும்மா, முடியவே முடியாது''.
மகள் இப்படி மறுப்புச் சொன்னதும், கோபம் சாடி வந்தது பாப்பாத்திக்கு.
""ஏண்டி, ஏன் முடியாதுங்கிறே?''ன்னு எரிச்சலோட கேட்டா.
""ஹும், ஆம்பிளைக்கு மட்டும் என்னம்மா தனிச்சட்டம்? வயசானவனா இருந்தாலும் அவனோட பெண்சாதி செத்துப் போய்ட்டாள்னா, மறுபடியும் ஒரு குமரிப் பொண்ணைப் பார்த்துத்தான் கட்டி வைக்கணுமா? ஏன், அவனைப் போலவே புருசனைச் சாகக் குடுத்துட்டு, பிள்ளைகளை வச்சுக் காப்பாத்த முடியாமத் தவிக்கிற ஒரு விதவைப் பெண் ஆகாதாமா? ஆம்பிளை பெண்சாதி இல்லாமத் தவிக்கிற மாதிரிதானே, அவளும் புருசனைச் சாகக்குடுத்துட்டு நின்னு தவிப்பா. அப்படிப்பட்ட ஒரு விதவையைப் பார்த்து அவனுக்குப் பண்ணி வைக்கிறதுதானே நியாயம்? பொறகெதுக்கும்மா என்னைப் போல உள்ள சின்னப் பொண்ணுகளைப் பலி குடுக்க அலையிறீங்க?''
அழுத்தம் திருத்தமாக் கேட்டா வேலுமணி.
திகைச்சுப் போய் நின்னுட்டா பாப்பாத்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.