தினமணி கதிர்

ஒரு துளி அன்பு...

உமா, பேருந்து நிலையத்தில் முருகன் பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தாள்.

கனகராஜன்

தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி - ஆறுதல் பரிசு - 2016
சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ. 1,250 பெறும் சிறுகதை
 உமா, பேருந்து நிலையத்தில் முருகன் பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தாள். இன்றைக்கு வேகமாக இருட்டிவிட்டதைப் போலத் தோன்றியது. மனதில் படிந்திருந்த குழப்பங்களும் கவலைகளும் அப்படித் தோன்ற வைக்கிறதோ என்று நினைத்தாள்.
 அச்சகத்தைப் பூட்டும்போதே மணி இரவு ஏழுக்கு மேல் ஆகிவிட்டது. எப்படியும் ஏழேகால் மணி பேருந்தைப் பிடித்துவிடலாம் என்று அவசர அவசரமாக வந்தாள். அவள் பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போதே நாற்பத்தியேழாம் நம்பர் பேருந்து வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தது. இனி இருபத்தியேழாம் நம்பர் பேருந்துதான். அரைமணி நேரமோ, முக்கால்மணி நேரமோ ஆகலாம். அவள் கரட்டுப்பாளையம் போக வேண்டும்.
 இன்றைக்கு முகூர்த்தநாள் என்பதால் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் எங்காவது ஏதாவது கொஞ்சம் ஆறுதலோ, ஒரு துளி அன்போ கிடைக்குமா? என்று அவளுக்குத் தேடிப் பார்க்கத் தோன்றியது. அன்பை யாராவது கடைகளில் விற்றால் எப்படி இருக்கும்? ஒரு நூறு கிராம்... வேண்டாம்... ஐம்பது கிராம்... போதும்... ஒரு துளி அன்பு... போதும்... ஒரு துளி அன்பு போதுமே!
 காலையில் அலுவலகத்திற்குப் போனதில் இருந்து எத்தனை பிரச்னைகள்?
 காலையில் வீட்டைவிட்டுப் புறப்படும்போது அலைபேசி அடித்தது. நீலகண்டன் அழைக்கிறான். அவன்தான் அச்சகத்தின் உரிமையாளன்.
 "அண்ணா... சொல்லுங்கண்ணா...'' என்றாள் உமா.
 "உமா... இன்னைக்கு நீதான் பிரஸ்சைப் பார்த்துக்கணும்...''
 "ஏனுங்கண்ணா?''
 ""வேணு திருப்பூர் போறான்... அவங்க சித்தப்பா பொண்ணுக்கு வளைகாப்பாம்... இன்னைக்கு வரமாட்டான். கிருஷ்ணகுமாரண்ணன் பழநியில கல்யாணம்னு சொல்லிப் போயிட்டாரு... நானும் வரமாட்டேன். இடம் ஒண்ணு வாங்கற விஷயமா கோயமுத்தூர் போறேன். ஆபீசை நீதான் பார்த்துக்கணும்...''
 உமாவுக்கு இன்றைக்கு வேலை அதிகம் இருக்கும்போல தோன்றியது. நேற்றைய வேலைகளின் மிச்சம் நினைவுக்கு வந்தது.
 "சரிங்கண்ணா...''
 "ஏதாச்சும் சந்தேகம்னா கூப்பிடு...'' என்று நீலகண்டன் வைத்துவிட்டான்.
 நிலா அச்சகம் பொள்ளாச்சி கரிகாற்சோழன் வீதியில் இருக்கிறது. வேணுகோபால்தான் ஆப்செட் மிஷின் ஆபரேட்டர். கிருஷ்ணகுமார் பைண்டிங் வேலைகளைப் பார்ப்பார். உமா கணினி வடிவமைப்பாளராக வேலை பார்க்கிறாள்.
 வேலைக்குச் சேர்ந்து பதின்மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆறாயிரம் ரூபாய் சம்பளம். ரேவதி அக்காவும் வடிவமைப்பாளர் வேலைதான் பார்க்கிறாள். கர்ப்பமாக இருப்பதால் விடுப்பில் இருக்கிறாள்.
 உமாவுக்கு ஆனி வந்தால் இருபத்தியேழு வயதாகிவிடும். இந்த வருடத்திற்குள் கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் தீவிரமாக முடிவெடுத்திருக்கிறார்கள். போன வாரம் பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து ஒரு மாப்பிள்ளை வீடு வந்தது. அநேகமாக அது முடிந்து விடுகிற நிலையில் இருப்பதாக சித்தி சொன்னாள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு உமாவைப் ரொம்பப் பிடித்துப் போய்விட்டதாக தகவல் வந்ததாகச் சொன்னாள். உமாவுக்கும் மாப்பிள்ளையைப் பிடித்த மாதிரித்தான் தோன்றியது. இதுவரை ஏழெட்டு மாப்பிள்ளைக்கு மேல் பார்த்திருப்பார்கள். அவர்கள் நிறைய நகைகளையும் பணத்தையும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த மாப்பிள்ளை வீட்டில் அப்படியெல்லாம் எதிர்பார்க்கவில்லை. உமாவுக்கும்கூட இந்தக் கல்யாணம் நடந்துவிடும் என்கிற நம்பிக்கை துளிர்த்திருந்தது. ஆனால் இன்று நடந்த சம்பவம் நம்பிக்கையை உடைத்துவிட்டது.
 உமா நினைத்த மாதிரியே இன்றைக்கு நிறைய வேலைகள் இருந்தன. ஒரு விளம்பர வடிவமைப்பு, இரண்டு பில் புக் வேலை, ஒரு துண்டுஅறிக்கை, ஒரு திருமண அழைப்பிதழ் வேலை என்று பரபரப்பாக இருந்தாள்.
 மதியம் மூன்று மணிக்கு மேல்தான் சாப்பிட நேரம் கிடைத்தது. டிபன் பாக்ûஸத் திறந்து இரண்டு வாய் சாப்பிட ஆரம்பித்த நேரத்தில்தான் அவர் வந்தார். நல்ல பசி. குழம்பு கொஞ்சம் சலித்துப்போய் வாசம் வீசியது. வேறுவழியில்லாமல் பிசைந்து சாப்பிட ஆரம்பித்தாள். பசி அவளுக்கு அயர்ச்சியையும் சோர்வையும் தந்திருந்தது.
 அச்சகத்துக்குள் நுழைந்த மனிதருக்கு ஐம்பத்தைந்து வயதுக்குமேல் இருக்கலாம். பளபளவென்று டை அடித்து வழுக்கையை மறைக்க முயன்றிருந்தார். மடிப்புக் கலையாத பேண்ட் சட்டையும் இன் பண்ணியிருந்த விதமும் அவரை ஏதோ அதிகாரியைப் போன்ற தோரணையைக் கொண்டு வந்திருந்தது. அவர் பேச்சிலும் அது தெரிந்தது.
 "எக்ஸ்கியூஸ் மீ...'' அவருடைய அதிர வைக்கும் குரல் திடுக்கிட வைத்தது.
 கம்ப்யூட்டர் மேசைக்கு கீழே உட்கார்ந்திருந்த உமா நிமிர்ந்து பார்த்தாள்.
 "ஓ சாப்பிடறீங்களா? வேற யாரும் இல்லியா?''
 "இல்லீங்க. என்ன வேணும்?''
 "கல்யாணப் பத்திரிக்கை அடிக்கணும்...''
 "ஒரு அஞ்சு நிமிசம்... உட்காருங்க சார்... சாப்பிட்டுட்டு வந்திடறேன்.''
 "இல்ல... எனக்கு டயம் இல்ல. கொஞ்சம் அவசரம்... இன்விடேசன் மாடல் இருந்தா கொடுங்க. நீங்க சாப்பிடறதுக்குள்ள நான் பார்த்து செலக்ட் பண்ணிக்கிறேன்...''
 அது முடியாது. பதினொரு மணிக்கு ஆறு பேர் திருமண அழைப்பிதழ் அடிக்க வேண்டும் என்று வந்தார்கள். ஃபைலில் இருந்த அழைப்பிதழ் மாதிரிகளை "கலை கலை'யென்று கலைத்து வைத்திருக்கிறார்கள். அழைப்பிதழ்களைப் புகைப்படம் எடுத்து யார் யாருக்கோ வாட்ஸ் அப்பில் அனுப்பினார்கள். ஒருவழியாக ஓர் அழைப்பிதழைத் தேர்ந்தெடுத்து முடிப்பதற்குள் மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. தங்கள் நல்வரவை நாடுபவர்களின் பெயர்ப் பட்டியலில் ஓர் ஊரே அடங்கி இருந்தது. பெயர்களை மாற்றி மாற்றிச் சொல்லி வரிசைப்படுத்தி, திருத்தம் பார்த்து, வாட்ஸ் அப் - மின்னஞ்சல் என்று அனுப்பி... பசி அவளுக்கு மிகுந்த சோர்வை உண்டாக்கியிருந்தது.
 உமாவுக்கு பன்னிரண்டரை மணிக்கே பசிக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு மணியிலிருந்து ஒன்றரை மணிக்குள் சாப்பிட்டுவிடுவாள். ஒரு மணியிலிருந்தே கடிகாரத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
 "சரிம்மா... எல்லாம் சரியா இருக்கு... நாங்க போயிட்டு எதுக்கும் இன்னொரு தடவை பார்த்துட்டு போன் பண்றோம். அப்புறம் பத்திரிக்கை அடிச்சிருங்க...''
 நீலகண்டனை அலைபேசியில் அழைத்து, ஐநூறு திருமண அழைப்பிதழ்களுக்கு எவ்வளவு வாங்குவது என்று கேட்டுவிட்டு, முன்பணம் ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டாள்.
 அவர்கள் போனதும் பரபரவென்று எழுந்தாள். முதுகு வலித்தது. மூன்று மணிநேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. முதலில் பாத்ரூம் போக வேண்டும்.
 கை, கால்களை எல்லாம் கழுவிட்டு சாப்பிடலாம் என்று ஓடிவந்தாள்.
 "என்னம்மா யோசிக்கறே? மாடல் எங்க இருக்கு சீக்கிரம்...'' என்று அவர் அவசரப்படுத்தினார்.
 ""சார்... எல்லாம் கலைஞ்சு கிடக்கு... ஒரு அஞ்சு நிமிசம்...'' என்றாள். பசி... அவளால் சரியாகக்கூட பேச முடியவில்லை.
 "இங்க பாரும்மா... எனக்கு நிற்க நேரமில்லை. நீ மாடல் எடுத்துக்கொடு. சும்மாவெல்லாம் என்னால நிற்க முடியாது.''
 உமாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
 "என்ன மனுசன்?'
 சாப்பிடுகிறவேளையில் வருகிறவர்கள், ""பொறுமையா சாப்பிட்டு வாம்மா...'' என்று சொல்வதைப் பார்த்திருக்கிறாள். இப்படி அவசரப்படுகிற ஆளை இப்போதுதான் பார்க்கிறாள்.
 எரிச்சலை அடக்கிக்கொண்டு எழுந்து அழைப்பிதழ்கள் கோர்த்திருந்த ஃபைலை எடுத்துக் கொடுத்தாள். அழைப்பிதழ்கள் கன்னாபின்னாவென்று கலைந்திருந்தன. சாப்பிட்டுவிட்டு அடுக்கலாம் என்று நினைத்திருந்தாள்.
 வாங்கியவர் அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார்.
 "இதுதான் மாடலா? ஏம்மா குப்பை மாதிரி கொண்டுவந்து கொடுக்கறே?'' என்று அதட்டுகிற தொனியில் கேட்டார்.
 அவளுக்குக் கோபமாக வந்தது. அடக்கிக் கொண்டாள்.
 பேசாமல் சாப்பிட உட்கார்ந்தாள்.
 அழைப்பிதழ் மாதிரிகளைப் புரட்டிக்கொண்டே வந்தவர், ""சொல்லிக்கற மாதிரி டிசைன் எதுவும் இல்லையே...'' என்றார்.
 உமா பதில் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
 "ஏம்மா... உன்னைத்தான் கேட்கறேன்...'' என்றார் சத்தமாக.
 "இதுல இருக்கற மாடல்தான் சார்...'' சொல்லிவிட்டு வேகவேகமாகச் சாப்பிட ஆரம்பித்தாள்.
 அவர் ஏதோ முணுமுணுத்தபடி புரட்டிக் கொண்டிருந்தார்.
 உமா சாப்பிட்டு முடித்துவிட்டுப் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டு வந்தபோது, ஃபைலில் கோர்த்திருந்த அழைப்பிதழ்களை அப்படியே பிய்த்து எடுத்திருந்தார். உமா பதறிப் போய்விட்டாள். நீலகண்டன் அண்ணன் திட்டப் போகிறது.
 ""சார்... எதுக்கு சார் இப்படி பிச்சு எடுத்தீங்க... கேட்டிருந்தா பிய்க்காம எடுத்துக் கொடுத்திருப்பனே?''
 உமாவை ஒருமாதிரியாகப் பார்த்தார். எரித்துவிடுகிற மாதிரியான பார்வை.
 "என்னம்மா இப்ப? என்ன பெரிய கொலைக் குத்தமா நடந்துபோச்சு?''
 "இல்ல சார்... பத்திரிகைகளை கிழிக்காம எடுத்திருக்கலாம்னுதான் சொன்னேன்.''
 அவருக்கு ஏதோ அவமானம் நிகழ்ந்துவிட்டதைப்போல தலையை அசைத்துக் கொண்டார்.
 "இப்ப என்ன பத்திரிகையை ரெண்டாவா கிழிச்சுப் போட்டேன். மாடலுக்கு பத்திரிகையை எடுத்தா இப்படிப் பேசறே?''
 ""சார் எதுவும் தப்பா சொல்லலையே''
 "அப்போ நான் தப்புப் பண்ணிட்டேன்னு சொல்றியா? நல்லா இருக்கும்மா உன் பேச்சு. என்ன பேசற நீ?''
 உமாவுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. கோபத்தில் ஏதாவது கத்திவிடலாமா என்று நினைத்தாள்.
 ""நீங்கதான் சார் தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க?'' என்றாள்.
 "ஏம்மா... என்ன சர்வீஸ் பண்றே? கஸ்டமர்கிட்ட எப்படிப் பேசறதுன்னுகூட உங்க ஓனர் சொல்லித் தரலையா? ஓனரோட போன் நெம்பர் கொடு. நான் பேசறேன்.''
 அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.
 ""பேசுங்க'' என்று அலைபேசி எண்ணைக் கொடுத்தாள்.
 அவர் வெளியில்போய் அலைபேசியில் "காச்மூச்'சென்று ஏதோ கத்தினார். இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
 உமா நிதானமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
 "இந்தா... சார் பேசறார்...'' என்று அதிகாரமாய் அலைபேசியை அவளிடம் நீட்டினார்.
 "என்னம்மா பிரச்சினை?'' நீலகண்டன் கேட்டான்.
 அவர் ஏதோ ஆங்கிலத்தில் தனியாக முணுமுணுத்துக் கொண்டிருக்க, உமா நடந்தவற்றைச் சொன்னாள்.
 "சரிம்மா... கண்டுக்காதே... சிலபேரு இப்படித்தான் இருப்பாங்க... பத்திரிகை எல்லாம் அடிக்கமாட்டாங்க. பேசி அனுப்பிடு'' என்று போனைத் துண்டித்தான்.
 உமா அலைபேசியை அவரிடம் நீட்டினாள். அவர் அலைபேசியைத் துண்டித்தது தெரியாமல், "ஹலோ, ஹலோ...'' என்று கத்திக் கொண்டிருந்தார்.
 அந்த நேரம் பார்த்து வெள்ளை வேட்டி - வெள்ளை சட்டை அணிந்திருத்த யாரோ ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
 "கட் ஆயிடுச்சா... என்னம்மா சொன்னாரு?'' என்று அதட்டினார்.
 அவள் பேச விருப்பம் இல்லாமல் புதிதாக வந்தவரிடம், "என்ன வேணுங்க சார்?'' கேட்டாள். புதிதாக வந்தவர் பதில் சொல்வதற்குள் அவர் முந்திக்கொண்டார்.
 "கஸ்டமர்கிட்ட எப்படிப் பேசணும்னு கூடத் தெரியலே உன்னையெல்லாம் எப்படி வேலைக்கு வச்சிருக்கறாங்க? கொஞ்சம்கூட பொறுப்பே கிடையாது. மனுசங்களை மதிக்கத் தெரியாத ஜென்மம். பொண்ணாம்மா நீ. உன்னையும் நம்பி ஆபீசை விட்டுட்டுப் போறாங்களே, அவங்களைச் சொல்லணும். கொஞ்சம்கூட மரியாதை தெரியாத பொண்ணா இருக்கே?''
 என்று ஏதேதோ திட்டிக்கொண்டே வெளியேறினார்.
 அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. அடக்கிக்கொண்டு புதிதாக வந்தவரைப் பார்த்தாள்.
 ""சொல்லுங்க சார்...'' என்றாள்.
 அலுவலகத்தைச் சுற்றும் முற்றும் பார்த்தார்.
 "ஓனர் இல்லையாம்மா?''
 ""வெளியூர் போயிருக்கறார் சார்.''
 ""சும்மா அவரைத்தான் பார்க்க வந்தேன்...'' என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
 ""சார்... ஓனர் வந்தா என்ன சொல்றது?''
 அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் போய்விட்டார்.
 "யாரு... எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?' என்று யோசித்தாள்.
 அதற்குப் பின் அவளால் வேலை செய்ய முடியவில்லை. மனசு அமைதியில்லாமல் தவித்தது. அந்த மனிதர் திட்டிக் கொண்டே போனது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. இப்போதும்கூட அலுவலகத்திற்கு முன்னால் நின்று திட்டிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது.
 வேலையைச் சரியாகச் செய்ய முடியாமல் தவித்தாள். ரேவதி அக்காவுடன் பேசினால் மனசு ஆறும் என்று நினைத்தாள். அலைபேசியில் அழைத்தபோது யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது.
 மணி ஐந்தானபோது அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.
 "ஏம்மா?'' என்றாள்.
 "என்னடி இப்படிப் பண்ணிட்ட?''
 அம்மாவின் குரலில் தெரிந்த பதற்றம், அவளுக்கு ஒருவித பயத்தைத் தந்தது.
 "ஏம்மா என்னாச்சு?''
 ""மாப்பிள்ளையோட தாய்மாமா உன்னைப் பார்க்க ஆபீசுக்கு வந்தாராமா?''
 "என்னைப் பார்க்கவா? இல்லையே?''
 சட்டென்று அவள் நினைவில் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி மனிதர் வந்தார்.
 "அவரு மாப்பிள்ளையோட மாமாவா? அதுதான் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சா ச்சே... அந்தப் பிரச்னையில சரியா கவனிக்காமப் போயிட்டனே'
 "ஏய்... உமா?''
 "ஏம்மா... என்னாச்சு?''
 சட்டென்று மனசுக்குள் ஒரு கலக்கம் தோன்ற, பதற்றமானாள்.
 "என்னன்னு தெரியலையே... மாப்பிள்ளை வீட்டில இருந்து பொண்ணு சரிவராதுன்னு சொல்றாங்க. ஆபீசுல என்ன நடந்துச்சு?''
 உமா உடைந்து போனாள்.
 "ஒண்ணும் நடக்கலைம்மா...''
 "அவரு என்னமோ சொல்றாரு. பொறுப்பில்லாத பொண்ணுன்னு...''
 "அம்மா... நான் வீட்டுக்கு வந்து சொல்றேன்.''
 "என்னடி நடந்துச்சு? அவங்க மனசு கோணற மாதிரி ஏதாச்சும் நடந்திட்டியா?''
 "அப்படியெல்லாம் இல்லம்மா... வந்து சொல்றேன்...''
 "என்னமோ போ... நல்ல இடம் அமைஞ்சது... இப்படிக் கெடுத்திட்டியே...''
 உமா அலைபேசியை அணைத்துவிட்டாள். அவளுக்குக் கலக்கமாக இருந்தது. செய்யாத தவறுக்குத் தண்டனை கிடைக்கிற மாதிரி உள்ளுக்குள் வலித்தது. வேலையில் கவனம் செல்லவில்லை. இருக்கையில் அமர்ந்தபடி கணினித் திரையை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.
 அலைபேசி அழைத்தது. ஒருவித நடுக்கத்தோடு எடுத்துப் பார்த்தாள்.
 ரேவதி அக்கா.
 உமா ரேவதி அக்காவிடம் அழுது கொட்டித் தீர்த்துவிட்டாள்.
 ""விடு புள்ளே... சும்மா இதையே மனசுல நெனைச்சுக்கிட்டு இருக்காதே. ஏதோ நல்லதுக்குன்னு நெனைச்சுக்கோ. அழுகாதே. ரொம்ப கஷ்டமா இருந்தா... நேரத்திலேயே வீட்டுக்குக் கிளம்பிப் போயிடு. அவங்களா ஏதாச்சும் தப்பா கற்பனை பண்ணி முடிவெடுத்தா, நாம என்ன செய்ய முடியும்? நைட் கூப்பிடு'' என்றாள் ரேவதி அக்கா.
 ரேவதி அக்காவிடம் பேசியதில் மனசு பாரம் குறைந்த மாதிரி இருந்தது. ஆனால் வீட்டுக்கு நேரத்திலேயே போக முடியாது. அங்கே பிரச்னை என்ன வடிவத்தில் காத்திருக்கிறதோ?
 மறுபடியும் அலைபேசி அழைத்தது.
 இப்போது நீலகண்டன்...
 "என்னம்மா உமா இப்படிப் பண்ணிட்டே?''
 "அண்ணா... என்னாச்சுங்க?''
 "வந்தவரு பெரிய கஸ்டமரும்மா. இப்பத்தான் என்னோட சொந்தக்காரர் போன் பண்ணிச் சொன்னாரு, அவருதான் அவரை அனுப்பி வச்சாராம். மூவாயிரம் பத்திரிகை. பெரிய ஆர்டர். ரொம்ப சங்கடப்பட்டாரு. என்னம்மா நடந்துச்சு...?''
 "அண்ணா... உங்கள்ட்ட அப்பவே சொன்னனே...''
 "இல்லம்மா... நீ கொஞ்சம் பார்த்துப் பேசியிருக்கலாம். பெரிய ஆர்டர் போச்சே உன்னை நம்பி விட்டு வந்ததுக்கு இப்படிப் பண்ணிட்டியே? எவ்வளவு நஷ்டம்? கெட்ட பேரு வேற?''
 உமா மெüனமாக இருந்தாள்.
 "சரி... வைம்மா'' என்றான் நீலகண்டன்.
 உமா அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.
 இன்றைக்கு ஏன் இப்படி நடக்கிறது?
 நாம் தனியாக இருக்கிறோம். நமக்கு யாருமே இல்லை என்கிற மாதிரி ஏதேதோ எண்ணங்கள் தோன்றி அவள் மனசை அலைக்கழித்தன. நிம்மதியாக வேலைகளைச் செய்ய முடியாமல் தவித்தாள். இருக்கிற வேலைகளை ஒருவழியாக முடித்துவிட்டுக் கிளம்பும்போது மணி ஏழாகிவிட்டது.
 பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கும்போது தன்னை மட்டும் இருள் சூழ்ந்திருக்க, காணாமல் போய்க் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள். இன்றைக்கு வீடு நிம்மதி இழந்து தவிக்கப் போகிறது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எதைச் சொல்லி புரிய வைப்பது?
 பேருந்து நிலையம் வழக்கத்தைவிட இரைச்சலாக இருந்தது. உமா வழக்கமாக நிற்கும் தேநீர்க் கடை பக்கத்தில் நிறையப் பேர் நின்றிருந்தார்கள். கொஞ்சம் தள்ளி சிமெண்ட் பெஞ்சை ஒட்டிய தூண் அருகே நின்றுகொண்டாள். அவளருகே நின்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
 ""புள்ள எத்தனாம் வகுப்பு படிக்கிறா?''
 "ஆறாம் வகுப்பு வந்துட்டா அக்கா...''
 "எப்படியாச்சும் கஷ்டப்பட்டு படிக்க வெச்சுரு. பத்தாம் வகுப்பு வரைக்குமாவது படிக்க வெச்சுரு...?''
 "ஆமாக்கா படிக்க வைக்கோணும்... அவளும் நல்லாப் படிக்கறா அக்கா. பொறுப்பில்லாத புருசனக் கட்டிக்கிட்டு...''
 உமாவின் அலைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தாள்.
 "அம்மா...''
 "என்ன சொல்லப் போகிறாளோ... பேசலாமா? வேண்டாமா?''
 குழப்பத்தோடு அலைபேசியைக் காதில் வைத்தாள்.
 "கண்ணு... எங்க சாமி இருக்குற?''
 அம்மாவின் கனிவான குரல்... உமாவால் நம்ம முடியவில்லை.
 "பஸ்சுக்கு நின்னுட்டு இருக்கறேன்...''
 "சரி சாமி... பார்த்து பங்கா வா... மனசுல ஒண்ணும் வச்சுக்காத தங்கம்... மத்தியானம் ஏதோ அவசரப்பட்டுப் பேசிப் போட்டேன்.''
 "ம்...'' என்றாள் உமா.
 ""பார்த்து வா சாமி... மனசுல ஒண்ணும் நெனைச்சுக்க வேண்டாம். அவங்க என்னமோ சொல்லிட்டுப் போகட்டும். எம்பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியாது. வேலைக்குப் போற இடத்தில ஆயிரம் பிரச்னை இருக்கும். நீ எதையும் நெனைக்க வேண்டாம். என்ன சாமி... போனை வெச்சிடறேன்...''
 உமாவை யாரோ ஆதரவாகப் பற்றிப் பிடிப்பதைப் போல தோன்றியது. கண்கள் கலங்கிவிட்டன.
 மணிக்கட்டில் பொட்டென்று ஒரு துளி கண்ணீர் விழுந்தது. ஒரே ஒரு துளியில் மனசு அன்பால் நிறைந்து துயரங்கள் எல்லாம் கரைந்து கொண்டிருப்பதை அவளால் உணரமுடிந்தது.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா - சிந்து அதிா்ச்சித் தோல்வி

சூப்பா் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கிய முகநூல் நண்பா்

தலைமை காவலரை தாக்கியவா் கைது

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT