தினமணி கதிர்

உலக இசை... உங்கள் விரல்நுனியில்!

தினமணி

உலகம் முழுவதிலுமிருந்து, 2500 இசை அமைப்பாளர்கள் உருவாக்கிய 2 லட்சம் இசை ஆல்பங்கள். மவுசின் ஒரு சொடுக்கிலேயே உங்கள் காதுகளில் அருவியெனப் பாய்ந்து வழியும் உயர் தரமான இசை. பிரமித்துப் போய்விடாதீர்கள்.

இந்த 2 லட்சம் இசை ஆல்பங்களில் நமது தமிழ்நாட்டு இசையும் உண்டு.

இந்த இசை ஆல்பங்களை உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஆப், ஆப்பிள் ஆப் செல்போனிலும் கூட பதிவிறக்கம் செய்து கேட்க முடியும்.

குறும்பட, ஆவணப்பட இயக்குநர்கள் உருவாக்கும் படங்களுக்கு இந்த இசை ஆல்பங்களைப் பயன்படுத்தி பின்னணி இசை அமைத்துக் கொள்ளலாம்.

பிரம்மாண்டமான திரைப்படம் எடுப்பவர்களும் இந்த இசை ஆல்பங்களைப் பயன்படுத்தி தங்களுடைய திரைப்படங்களுக்கு பின்னணி இசையை உருவாக்கிக் கொள்ளலாம். சமீபத்தில் ஆஸ்கர் விருதுபெற்ற
'Manchester by the Sea’ என்ற திரைப்படத்தில் கூட இந்த இசை ஆல்பங்களின் இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

www.sonofind.com என்ற இணையதளத்துக்குச் சென்றால் போதும், உங்களுக்குத் தேவையான இசை ஆல்பங்களை நீங்கள் பார்க்கலாம்... இல்லை... கேட்கலாம்.

இந்த இணையதளத்தை உருவாக்கியிருப்பவர்கள் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சோனட்டான் நிறுவனத்தினர். இந்த நிறுவனத்துக்குத் தேவையான இந்திய - தமிழ் இசை ஆல்பங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் லேகா ரத்னகுமார். அந்த நிறுவனத்துக்கான அதிகாரப்பூர்வமான இந்திய முகவராகவும் அவர் உள்ளார்.
அவரிடம் பேசியதிலிருந்து...

"சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் தொலைக்காட்சித் தொடர்களை எடுத்துக் கொண்டிருந்தேன். அவற்றின் பின்னணி இசையை உருவாக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அதற்காக நேரத்தைச் செலவழித்து, இசைக் குழுவினரை வரவழைத்து, பல தடவை திருப்தி ஏற்படும் வரை இசை அமைத்து... அமைத்து... சலித்து... ரெடிமேடாக பலவிதமான இசை கிடைத்தால், தேவையானவற்றைப் பயன்படுத்தி எளிதில் பின்னணி இசையை அமைத்துக் கொள்ளலாமே என அப்போது நினைத்தேன்.

நியூயார்க்கிலுள்ள HBO ஸ்டுடியோவுக்குப் போகும் வாய்ப்பு அப்போது எனக்குக் கிடைத்தது. ஒரு வாரம் அவர்களின் திரைப்படத் தயாரிப்புப் பணிகளை நேரில் பார்த்தேன். பின்னணி இசை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. நான் என்ன நினைத்தேனோ, அதைப் போலவே அவர்கள் அங்கே பின்னணி இசை அமைத்துக் கொண்டிருந்தார்கள். இசை நூலகத்தில் இருந்து ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த பல்வேறுவிதமான இசைகளைத் தேர்வு செய்து, தேவையான பின்னணி இசையை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அது என்னை மிகவும் கவர்ந்தது.

அதற்குப் பிறகு ஜெர்மனியில் உள்ள சோனட்டான் மியூசிக் நிறுவனத்துக்குச் சென்றேன். அவர்கள் தயாரித்திருந்த இசை ஆல்பங்களைக் கேட்டேன். அந்நிறுவனத்தின் சேர்மன் கெர்ஹார்ட் நார்ஹோல்ஸ், இந்திய இசை ஆல்பங்களை உருவாக்கித் தரும்படி என்னிடம் கேட்டார். முதலில் தயங்கினாலும் பிறகு ஒத்துக் கொண்டேன். முதன்முதலாக Authentic India என்ற இசை ஆல்பத்தைத் தயாரித்துக் கொடுத்தேன். அதன் பிறகு, பாரம்பரிய இசை, மராத்தி நடன இசை, இந்திய கிளாசிக் நடன இசை, மயிலாட்டம், ஒயிலாட்டம் இசை, சினிமாப் பாடல்கள், கிதார் இசை, குழலிசை என நிறைய இசை ஆல்பங்களை உருவாக்கி அவர்களுக்குக் கொடுத்தேன்.

நமது இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து நான் தயாரித்துக் கொடுத்த இந்த இசை ஆல்பங்களை, இன்று உலகின் எந்த மூலையில் இருந்தும் ஒருவர் எடுத்துத் தனது தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

திரில்லர் இசை, காதல் இசை, சோக இசை, மகிழ்ச்சி இசை, அதிர்ச்சி இசை, நடன இசை, விளையாட்டு இசை என ஒரு திரைப்படத்துக்குத் தேவையான பல்வேறு இசை ஆல்பங்கள் இப்போது இந்த sonofind.com இல் கிடைக்கின்றன.

இந்த இணையதளத்தில் ஒருவர் தன்னைப் பதிவு செய்து கொண்டு, இசை ஆல்பங்களைக் கேட்டு ரசித்து, தேவையான இசை ஆல்பங்களை - உலகின் எந்த மூலையில் அவை உருவாக்கப்பட்டிருந்தாலும் - அவற்றைத் தெரிவு செய்து, அதற்குரிய கட்டணத்தை இணையதளம் மூலமாகவே செலுத்தி, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குப் பிறகு திறமையான இசை அமைப்பாளர்களின் துணையுடன் இந்த இசை ஆல்பங்களிலிருந்து தேவையான பகுதிகளை எடுத்து கலந்து பின்னணி இசையை உருவாக்கிக் கொள்ளலாம்.

உலகத் தரமான இசையை ஒருவர் தான் எடுக்கும் படத்தில் பயன்படுத்த இந்த இணையதளம் உதவுகிறது. இதனால் இங்குள்ள இசைக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகரிக்கிறது. எப்படியென்றால் உலகத் திரைப்படங்களுக்குத் தேவையான இசையை அவர்கள் உருவாக்கிக் கொடுக்கிறார்களே? அதனால்தான்'' என்றார்.
-ந.ஜீவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT