பாம்பு சத்தமில்லாமலும், யாரையும் சட்டை செய்யாமலும் தென்னை மட்டைக்கு அடியில் சுருண்டிருந்த தனது உடலை நிமிர்த்திக் கொண்டு ஊர்ந்து போனது.
பாஞ்சாலி விதிர்விதிர்த்துப் போனாள். கையில் எடுத்த மட்டையைத் தூர எறிந்தாள். அதேசமயம் அதுவரையிலும் சேகரித்து வைத்திருந்த மட்டைகளும் இடுப்பிலிருந்து நழுவிக் கீழே சிதறின... கைகளிரண்டையும் சேர்த்துக்கொண்டு தன் மார்பின்மீது அழுத்திக் கொண்டாள். நெஞ்சுக் கூட்டுக்குள் ஆயிரம் பறவைகள் ஒரே நேரத்தில் சிறகடித்துப் பறக்கும் சப்தத்தை கைகளின் வழியாய் உணர்ந்தாள். உதடுகளின் மேல், கீழ் புறங்களில் வியர்வை அரும்புகள் துளிர்த்து நின்றன. உடம்பும் ஒருபாட்டம் தள்ளாடுவது போலத் தெரியவந்தது. அருகிலிருந்த இளம் தென்னைமரம் ஒன்றில் தன்னை சாய்த்துக் கொண்டாள். அப்போதும்கூட கண்கள் மரத்தின் மேற்புறத்தை நோக்கின.
"என்னாக்கா, காலுல முள்ளு கிள்ளு குத்தீருச்சா?''
பக்கத்துத் தோப்பில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த சபரி, பாஞ்சாலியினருகே வந்து நின்றான். இப்பவும் மேல் சட்டையில்லாமல்தான் வந்தான். பனியன் கூட அணியவில்லை. மினுமினுவென்ற மினுங்களோடு சதைப்பிடிப்பான அவனது மார்பு விண்ணென்றிருந்தது. மீசையற்ற அவனது முகம் அவனது வயசை இன்னமும் குறைத்துக் காண்பித்தது. யாரும் அவனை முப்பது வயசுக்காரன் என்றோ, கலியாணம் முடித்து இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனென்றோ சொல்ல முடியாது.
அவனைப் பார்த்ததில் பயம் நீங்கி ஓர் ஆசுவாசம் வந்தது பாஞ்சாலிக்கு. மூச்சைச் சீராக்கி சுவாசத்தை மேற்கொண்டாள்.
சட்டென தரையில் அமர்ந்து பாஞ்சாலியின் பாதத்தைத் தொட்டான் சபரி. தனது இரு கைகளாலும் அவளது கெண்டைக் காலைப் பற்றினான்.
"எந்த எடத்துலக்கா?'' } அவனது சில்மிஷத்திற்கு இடமளிக்காமல் காலை உதறினாள்.
"கால விடு சவரி, ஒன்னய நாங் கூப்ட்டனா? வெறகு பெறக்கறத விட்டுப் பிட்டு என்னய வேவு பாக்க வாறியா? கௌம்பு. இதெல்லா வேறாள்ட்ட வச்சுக்கணும். இன்னிமே சட்டையில்லாம வார சோலிய விட்றணும். பெரிய மம்மதன்னு மனசில நெனப்பு''
"க்கா, இந்த ஊரு ஒரே வேக்காடுக்கா, தோப்புக்குள்ள இருந்தும் மினிக்காண்டு காத்தக் கூடக் காணம். பாலிஸ்டர் சட்டைக்கு கசகசன்னு இருந்துச்சா...'' விழிகளை உருட்டி சற்றுப் பயந்தவன் போலக் காட்டிக் கொண்டான்.
தன்னையும் தன் மனசையும் தவிர, பாஞ்சாலி யாரையும் நம்பமாட்டாள். அது அவளது கணவன் பாண்டிக்கும் தெரியும். விளையாட்டுப் போலவும் உள்ளுக்குள் சற்று வலியுடனும் மற்றவர்களிடம் இப்படிச் சொல்லிக் கொள்வான்: "யே, எம்பொண்டாட்டி என்னையவே நம்ப மாட்டா. நீ என்னா தொசுக்கு?''
ஆம்பளைகள் பூராமும் சோம்பேறிகள் என்பது பாஞ்சாலியின் கணக்கு. "காசு சம்பாதிச்சாப்ல எல்லாம் ஆச்சா வெளீல போயி என்னா செய்றீங்க? ஒருநா செஞ்சதே மறுநா, அதே வேல வருசம்பூராமும், அதுலயும் ரெஸ்ட்டு, லீவு... பொம்பளைகளுக்கு அப்படியா? கண்ணு முழிச்சதுல இருந்து கண்ணு மூடி ஒறங்கற வரைக்கும் ஒண்ணா? ரெண்டா? ஒருநா ஒருபொழுது எந்தப் பொம்பளையாச்சும் வீட்டு வேலைல லீவு ரெஸ்ட்டு போட்டுருக்காளா?'
சட்டம் படித்தவள் போலத்தான் பேசுவாள். யாரையும் சட்டை பண்ணமாட்டாள். "திண்டுமுண்டுக்காரி' என்றும் "திமுரு ஏறுனவ' எனவும் பாஞ்சாலிக்கு பல பட்டங்கள் உண்டு. பாண்டி அது ஒருவகையில் தனக்கான நல்ல பாதுகாப்பாக ஏற்றுக் கொண்டான்.
அந்த எண்ணம்தான் அவளை மற்ற பெண்களிடமிருந்து தனித்துக் காட்டியது. இல்லையென்றால் சொந்த ஊரிலிருந்து பல மைல் கடந்து தசரா திருவிழாவுக்கு இத்தனை ஆண்களுடன் தனியே வியாபாரம் செய்ய அனுப்ப முடியுமா?
எதுவும் பேசாமல் சபரி, தள்ளிப்போய் தன் வேலையைத் தொடர்ந்தான்.
இரண்டு பேரும் ஒரே ஊர்தான். சொல்லப்போனால் பாஞ்சாலிதான் சபரியை சுக்குமல்லி வியாபாரத்துக்காக தேனியிலிருந்து பஸ் டிக்கட் போட்டு அழைத்து வந்தாள். அவன் மட்டுமல்ல, குட்டி, அவனது மச்சினன், நடராஜ், சீதரன் அவனது மகன் என ஆறுபேரைக் கூப்பிட்டு வந்திருக்கிறாள்...
ஊரில் பலகாரம் பட்சணம் போட்டுக் கொடுப்பது அவர்களது முதன்மைத் தொழில். ஆரம்பத்தில் சிறு ஓட்டல் கடை ஒன்றில் சரக்கு மாஸ்டராக பிழைப்பைத் தொடங்கிய பாண்டி, கடைகள் பல மாறியதில் நானாவிதமான இனிப்பு கார வகைகளைக் கற்றுக்கொண்டான். வீட்டில் அதிரசத்துக்கு பாகு காய்ச்சும் பக்குவம் பாஞ்சாலிக்கு கிடைத்திருந்தது. அது அவள் அம்மத்தா வழிச் சொத்து.
லீவு நாட்களில் வீட்டில் அடுப்புப் போட்டு சரக்குகள் தயார் செய்து கொடுத்துக் கொண்டிருந்தனர். அவற்றை எடுத்துச் செல்ல சில சில்லரை வியாபாரிகள் உருவாகினர். அவர்களுக்கு கமிசனுக்கு போட்டுக் கொடுக்கத் துவங்கியதும் பாண்டி, வெளியில் சம்பளத்துக்குப் போவதை நிறுத்திக் கொண்டான். தெற்குத் தெருவில் காலியிடமொன்றை வாடகைக்குப் பிடித்து அங்கேயே ஒரு ஷெட் போட்டு, கலியாண சீர், மறுவீட்டுப் பட்சணங்கள் என வியாபாரத்தை விரிவுபடுத்தினான். அதிரசமும் முறுக்கும் அவர்கள் சொல்படி வந்து ஜனித்தன. முகூர்த்த நாட்களில் தொடர்ந்து வேலை வந்ததில் மேலும் சிலபேருக்கு பிழைப்புக் கிட்டியது.
முகூர்த்தமில்லாத நாளில் அடுப்பு முணுமுணுத்தது. "ஃபிரீயா இருக்கப்ப சரக்குப் போட்டு கேரளாவுக்கு அனுப்பலாம்ல?'
தேனி மாவட்டத்தில் கேரளா ஒரு நல்ல சந்தையாகவே விளங்கியது. என்ன வேண்டுமானாலும் கொண்டு போகலாம். அத்தனையும் வாங்க ஆள் உண்டு. ஆனால் ஜெயிக்க நிறைய பணமும் பொழுதும் வேண்டும்.
அந்த வகையில் பாஞ்சாலி உசாராய் இருந்தாள். "காலு இருக்குன்னு கண்ட பக்கம் ஆடக்கூடாது மச்சா. கல்லுப் பாக்கணும். முள்ளுப் பாக்கணும். கணுக்காலுத் தண்ணிலயும் ஆழம் பாத்துத்தேன் நடந்து போகணும். சேறுமிருக்கும்... செகதியுமிருக்கும். செல எடத்துல மொதலையும் மொடாப் பள்ளமும் சேந்து கெடக்கும். ஆழந்தெரியாம காலவுட்டுட்டு அப்பறம் கட்டக்காலு மாட்டீட்டுத் திரியக் கூடாது. என்னா?''
ஆனாலும் கேரளா ஏவாரத்தின்மீது பாண்டிக்கு ஒரு காதல் இருந்தது. அது ஒரு கனவு. "ஒருநா ஒருபொழுதாச்சும் மல மேல என்னோட சரக்கு லாரிய ஓட்டாம அடங்க மாட்டேன்'' சொல்லும்போது ஏக்கத்துடன் போடிமெட்டு மலைமுகப்பினை அண்ணாந்து பார்ப்பான். தொப்பி அணிந்த மரக்கா மலை இவனை நோக்கி இருகரம் நீட்டி, "வா மக்கா'' என புன்னகைக்கும் காட்சி கண்ணைவிட்டு மறையாது.
அப்படி முகூர்த்தமில்லா நாட்களில் வெளியூர் திருவிழாக்களில் காப்பி விற்க கிளம்பி விடுவார்கள். தமிழ்நாட்டில் நடக்கிற அத்தனை முக்கிய கோயில் திருவிழாக்களிலும் பாஞ்சாலியையும் பாண்டியையும் நீங்கள் பார்க்க முடியும். ஏதாவது கட்சிகளின் மாநாடுகள் என்றாலும் கிளம்பிவிடுவார்கள்.
வெளியூர் ஏவாரத்துக்குக் கிளம்பினால், எப்பவும் விழா ஆரம்பிக்கும் நாளுக்கு முதல்நாளே சட்டிபொட்டியுடன் வந்து இறங்கி விடுவார்கள். ஏதாவது ஒதுக்குப்புறமாய்ப் பார்த்து பிளாஸ்டிக் பேனரால் குடில் அமைத்து முதல் வேலையாய் குடியேறிவிடுவார்கள். அடுத்து அங்கிருந்தபடியே காப்பி காய்ச்சத் தேவையான விறகுகளைப் பொறுக்கி வந்து சேகரிப்பார்கள். எந்த ஊரிலும் விறகுக்குப் பஞ்சமிருக்காது.
நாளையிலிருந்துதான் திருவிழா தொடங்குகிறது. ஆனாலும் கூட்டம் இன்றைக்கே களைகட்டியிருந்தது.
குட்டி, "இன்னி நைட்டே ஆளுக்கொரு சட்டியக் காச்சிக் குடு தங்கச்சி. ஏவாரத்தத் தொவங்கீருவம்'' என்றான்.
பாஞ்சாலிக்கு நம்பிக்கை இல்லை. "பகல்ல அப்பிடித்தாண்ணே மசமசன்னு ஜனக்காடு தெரியும். ரவைக்கு பந்தல் வேலைக்கு வந்த நாலஞ்சு வேலக்காரவக மட்டும்தே திரிவாக பாத்துக்குருவம் ணே'' .
அவர்களுக்கு சாப்பாடு செய்ய தயாரானாள். அத்தனை பேருக்கும் கடையில் வாங்கிக் கொடுத்தால் கட்டுபடியாகாது. எங்கே போனாலும் காப்பி காய்ச்சிக் கொடுப்பதுடன் எல்லாருக்கும் சாப்பாடும் தானே தயாரித்து விடுவாள்.
நேரம் செல்லச் செல்ல அருகருகே கூடாரங்கள் பெருகலாயின. பாஞ்சாலியைப் போல காப்பி
விற்பவர்கள் மட்டுமல்லாது, பொம்மைக்கடை, பீப்பி விற்பவர்கள், வடைக்கடை என பலர் வந்து இறங்கலாயினர்.
காப்பி விற்க முதலில் பாண்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குத்தான் போய்க் கொண்டிருந்தான். சமையல் மாஸ்டர் பெரியமுருகன்தான் அதற்கும் வழிகாட்டினார். அவர்தான் முதன்முதலில் இங்கிருந்து ஏழெட்டுப்பேரை சம்பளத்துக்கு அழைத்துப் போவார். கார்த்திகை, மார்கழியில் அவ்வளவாய் வேலை இருக்காதென்பதால் நிறையபேர் கழுத்தில் மாலையைப் போட்டு காவிவேட்டி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு குழுவாகக் கிளம்பிவிடுவார்கள். மலையில் போய்ப் பார்த்தால் மாலைபோட்டு வந்த சாமிகள் ஒருபுறமென்றால், காப்பி விற்கவந்த ஆசாமிகள் மறுபுறமென கையில் சட்டியும் கக்கத்தில் பேப்பர் கப்புமாய், "காப்பி... காப்பி, சூடான சுக்காப்பி'' என ராகம் பாடிக்கொண்டிருப்பார்கள்.
பாஞ்சாலி வந்த பிறகு பாண்டியும் ஆள்போட்டு ஏவாரத்தில் இறங்கினான். காப்பி காய்ச்சி சட்டியில் போட்டுக் கொடுத்துவிட்டால். விற்றுக் கொண்டுவரும் பணத்தில் சரிபாதிப் பங்கு தருவான். போலீஸில் அகப்பட்டாலோ, சட்டி தொலைந்தாலோ தண்டம் விற்பவன் பொறுப்பு. எந்த வில்லங்கமும் இல்லாதிருந்தால் ஒருநாளில் ஆயிரம் ரெண்டாயிரம் சம்பாத்தியம் கிடைக்கும். அதனால் ஏவாரத்துக்குப் போகவிருக்கும் கிழமைக்கு ஒருமாதத்திற்கு முன்பிருந்தே அட்வான்ஸ் கேட்டு நச்சரிக்க ஆரம்பிப்பார்கள். அதற்குப் பணம் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். சிலபேர் பணத்தை வாங்கிக் கொண்டு ஏவாரத்திற்குப் புறப்படுகிற நாளில் ஏதாவது காரணம் சொல்லி வர முடியாது என உதட்டைப் பிதுக்குவார்கள். அவர்களைப் பிதுக்கி பணத்தை வசூல் செய்யவும் உடனடியாய் மாற்று ஆள் தயார் செய்யவும் பழக வேண்டும். அந்த விசயத்தில் பாஞ்சாலி தீயாய் நிற்பாள். ஏவாரத்துக்கு வரவில்லை எனும் தகவல் வந்தாலே அவ்வளவுதான். அவனது குடும்பத்தைப் பேசியே நாறடித்து விடுவாள். அதிலும் அட்வான்ஸ் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமல் அதற்கு எதுவும் சல்ஜாப் சொன்னால் போதும்... ரணகாளியாய் மாறி வீட்டை உருட்டி வீதிக்குக் கொண்டுவந்து விடுவாள்.
ஓரளவு விறகு சேர்ந்திருந்தது. கூடாரத்தின் முன்புறம் குவிக்கச் சொன்னாள்.
"பத்தலேன்னா நாளப்பின்ன பாத்துக்குவம். வெங்காயம், பூண்டு எதும் உரிக்கணுமாக்கா?'' சீதரன் கடமைக்குக் கேட்டான். அது பாஞ்சாலிக்கு எட்டவில்லை. புகை வராத பீடியை இதம் கட்டி இழுத்துக் கொண்டிருந்த குட்டி, அவனை வினோதமாகத் திரும்பிப் பார்த்தான்.
"கறிகிறி எடுத்து வந்திருக்கியா? இல்ல மாமியா வீட்டுக்கு விருந்துக்கு வந்திருக்கியா?''
ரேசன் அரிசியை நன்கு கழுவி உலையேற்றிய பாஞ்சாலி, " வீட்லருந்து மாங்கா ஊறுகா கொணாந்திருக்கேன். நாளைக்கி எதுனாச்சும் வத்தல் கெடைக்கிதான்னு பாப்பம்''
கடல்காற்று வீசத் துவங்கியதும் சூரியஒளி பின்வாங்கியது பக்கத்துக் கூடாரங்களில் காப்பிச்சட்டி அடுப்பில் ஏறியது கண்டு பாஞ்சாலியும் ஆளுக்கொரு சட்டி காப்பி காய்ச்சிக் கொடுத்தாள்.
"ரெண்டு சட்டியாச்சும் போகும்க்கா, காத்து ஒரு மாதரியாத்தான அடிக்கிது'' சிவா குளிர்காய்பவன் போல அடுப்பின் ஜ்வாலையை அண்டி அமர்ந்து கொண்டிருந்தான். பாஞ்சாலிக்கு சிவா மேல் ஒரு வாஞ்சை. கொஞ்சமும் கள்ளமில்லாத பயல். ஆத்தா இருந்தால் அமட்டி செஞ்சு பள்ளிக்கூடம் அனுப்பியிருப்பாள்.
"ஓரளவு கூட்டமும் தெரியிதுல்ல'' சபரியின் கண்கள் தொலைதூரத்தில் துழாவின.
"இப்பத் தெரியும்ப்பா, ஒம்பது பத்துமணிக்கு அவெவெ அங்கங்க செட்டில் ஆயிருவானுகள்ல... வீதியில நடந்தாத்தான நமக்கு ஏவாரம்'' குட்டியின் மகன் கொட்டாவி விட்டபடி சொன்னான்.
"இன்னிக்கி கூட்டத்த மட்டும் நம்பக்குடாது. வீடுகளுக்கு உள்ளயும் நொழஞ்சிறணும்'' சிவா தனது திட்டத்தை அனைவருக்கும் பொதுவாக்கினான். அந்த மட்டும் புதுசுபுதுசாய் யோசிப்பதில் கெட்டி சிவாதான்.
"ஆமாடா, நாளைக்கி திருவிழாங்கறதுனால பொம்பளையாள்க அவ்வளோ சீக்கிரம் ஒறங்க மாட்டாங்க. விருந்தாள் வேத்தாள்னு வீடெல்லாம் ஒரே கசகசப்பாத்தே இருக்கும். சவுண்டு விட்ற வேண்டிதேன்''
சபரிமலை அய்யப்பன் கோயிலைப்போல அட்டைக்கடி, கொசுக்கடி , பூரான்கடி போன்ற ஆபத்துகள் இருக்காது. ஏவாரத்து சட்டியைப் பறித்து லாக்கப்பில் தள்ளும் போலீஸ் கெடுபிடியும் தடியடியும் வராது. காய்ச்சிய காப்பி விற்றால் லாபம்... இல்லையா? காய்ச்சியதை கீழே கொட்டிவிட்டு முத்தாரம்மனைக் கும்பிட்டுவிட்டு ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதான்.
ஆளுக்கொரு கையில் சட்டியும் இன்னொரு கையில், பேப்பர் கப்புமாய் ஏந்திக் கொண்டு கிளம்பினார்கள்.
நாளைய திருவிழாவுக்காக ஊர் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தது. தெருமுனையெங்கும் வேப்பிலை தோரணங்கள் இழுத்துக் கட்டியிருந்தனர். முக்கியச் சந்திப்புத் திடல்களில் அம்மன் உருவ மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. நின்றபடி, பீடத்தில், சிங்கத்தில் அமர்ந்தபடி கழுத்தில் எலுமிச்சை மாலையும் கையில், சூலாயுதம் ஏந்தியிருந்தாள். சில இடங்களில் சிவன், சிவலிங்கம். என இன்னும் பல உருவதட்டிகள் கட்டும் வேலையினை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர்.
"ணே காப்பி, சுக்காப்பி, சூடான காப்பி''
போணியானது. வேலைக்காரர்களுக்கு இனிப்பும் சூடுமிருந்தால் போதும், "இன்னுமொண்ணு குடுப்பா'' என கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.
நாளை ஒரு பொழுதுதான் வியாபாரம். மதியத்துக்குமேல் சட்டி தயாராகத் துவங்கும். இரவு எட்டு ஒன்பது மணிக்குமேல் மும்முரமாக நடக்கும். அதும் சூரசம்ஹாரம் முடிந்து வீதியுலா வருகிறபோதுதான் சரியான நெரிசல். மகிஷாசுர சம்ஹாரம் முடித்து அம்மன் அதிகாலை ஒருமணிக்கு கடற்கரை மேடைக்கு வந்துவிட்டால் திருவிழாவின் நிறைவுப்பகுதி துவங்கிவிடும். அப்புறம் தொடர்ந்து அபிசேக ஆராதனைகள்தான். அதற்குள் சங்கடமில்லாமல் ஏவாரம் பார்க்க வேணும்.
சிவா, கோயிலைக் குறிவைத்து நடந்தான். எல்லோரும் வழிநடை ஏவாரத்தை பகிர்ந்து கொண்டு வருவார்கள். கோயிலில் மிதமான கூட்டம் எப்பவும் நிற்கும். சமயத்தில் கூடும்.
கோவில் நிர்வாகிகள் போலீஸ் கூட்டம் தெரிந்தது. மெதுவாகவே நுழைந்தான். முதலில் போலீஸ்தான் கூப்பிட்டார். சபரிமலை என்றால் இந்நேரம் சட்டியைத் தூக்கி எறிந்துவிட்டு சிட்டாய்ப் பறந்திருப்பான். போலீஸ்காரர் காசுகொடுத்துச் சாப்பிட்டார்.
"வேணாம் சார்'' என்றுதான் சொன்னான்.
"பணக்காரனா நீ?'' பிடறியில் தட்டிவிட்டு பணம் கொடுத்தார். எப்படியோ போலீஸ் அடி வாங்கியாகி விட்டது.
கோயிலைச் சுற்றி இருந்த வீடுகள் வெளிச்சமாய் இருந்தன. கலகலவென பெண்களின் சிரிப்புச்சத்தமும் பேச்சுக் கும்மர்ச்சமும் வீதிக்குக் கேட்டன. ஒரு வீட்டின் முன் நின்றான். சிவா.
"காப்பி' எனச் சத்தம் கொடுக்க இடைவெளியே இல்லாமல் உள்ளிருந்து சத்தம் வந்துகொண்டே இருந்தது எட்டிப் பார்த்தான். மாவுக்கோலமிட்டு சிலரும் காய்கறிகளை அரிந்துகொண்டு சிலரும் பேச்சில் திளைத்திருந்தனர். நாலைந்து சிறுபிள்ளைகள் ஓடி விளையாடிக்கொண்டிருந்தன. அவர்களும் பெண்பிள்ளைகளே.
"காப்பி சுக்காப்பி
சுக்காப்பி காப்பி'
பிள்ளைகள் மூலமாய் சிவா உள்ளே நுழைய முடிந்தது.
"என்னாதுப்பா?'' அவர்களில் வயது மூப்பான பெண் விசாரணை செய்தார்.
"சுக்காப்பிங்க''
"வேணாம். சாக்ரின் போட்ருப்பாங்க''
ஆனால் அவரது தடுப்பு முயற்சி பலனளிக்கவில்லை. ஏழெட்டு காப்பிகள் விற்றான் சிவா.
அடுத்த வீட்டில் நாளைய நேர்த்திக்கடனுக்கான மாறுவேடம் போடுவது பற்றிய ஆலோசனையில் ஆண், பெண் கூட்டமாய் இருந்தனர். மெல்ல வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தான் சிவா.
கூடாரத்தில் அடுப்பை அணைத்து விட்டு பக்கத்து கூடாரத்து ஆட்களிடம் கொஞ்சநேரம் பேசியிருந்துவிட்டு வந்தாள் பாஞ்சாலி. இதுபோன்ற இடங்களில் அருகிலிருப்பவருடன் நட்பு அத்தியாவசியம். ஊர்விட்டு உறவுமுறைகளை விட்டு வருகிறபோது ஆபத்து அவசரத்துக்கு வேறு யார் வருவார்?
சட்டி வாங்கி வியாபாரத்திற்குப் போனவர்கள் எவரும் திரும்பவில்லை. உறக்கம் வந்தது.
செடிகள் செதுக்கிய தரை வேர்களுடன் இருந்தது. அதன் மீது பழைய பேனர் ஒன்றை விரித்துப் படுத்தாள். தரையிலிருந்த வேர்கள் அம்புகளாய் குத்தின.
"இந்தத் திருவிழா முடிஞ்சதும் அடுத்து என்ன செய்றது?' என்ற எண்ணம் வந்து, வந்த உறக்கத்தை விரட்டியடித்தது.
ம.காமுத்துரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.