தினமணி கதிர்

அம்புப் படுக்கை

DIN

(சென்ற இதழ் தொடர்ச்சி)

எனக்குச் சற்று நிம்மதி.
லைட் போட்ட நேரம். அவர் படுக்கை அருகே சென்றேன். என்னுடைய விரல்களை முடிந்தவரையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். கண்கள் பாதி திறந்த நிலையில் சுற்றிலும் பார்த்தவருக்கு என்னைத் தெரியவில்லை. மருந்துகளின் தாக்கமும் சகிக்க முடியாத வேதனையும் இவருடைய பார்வையைப் பாதித்திருக்க வேண்டும். இல்லையானால் என்னைத் தெரியாமல் போகுமா?
 இந்த உடலுக்கு எத்தனை வதைகள்... நிலை
குலைந்து விழப்போனவன் சுதாரித்துக் கட்டிலைப் பிடித்துக் கொண்டேன்.
 "தாத்தா... தாத்தா... அனாதையான என்னைச் சொந்தமாக்கி வாழ்க்கைக்குப் பிடிப்பைத் தந்தீர்கள். மீண்டும் அனாதரவனாக்கி விடாதீர்கள்'. நெஞ்சில் குமுறல்கள் வெடித்துச் சிதறுகின்றன. இது வெளியில் விக்கலாக விம்மல்களாக கண்ணீராக வந்து தாத்தாவின் மீது இன்னொரு ஊசியை ஏற்றிவிடக் கூடாது.
 அதிகாலையில் பூஜையறையில் கமகமக்கும் ஊதுபத்தியைப் பொருத்தி வைத்து கையேந்தி நிற்கையில், என் மனத்தை எங்கெங்கோ கொண்டு செல்லும் மணம், இப்போது மணமில்லாமல் வெறும் புகையாக வருகிறது.
 வாய் பேச முடியாமல் - காது கேட்காமல் வறுமையில் 39 வயது வரை திருமணமாகாமல் இருந்த வாசவியை இரண்டாம் தாரமாகக் கட்டிக்கொண்டான் மணி. திருமணத்திற்குப் பிறகு தான் பெரும் குடிகாரன் - வேலைக்குச் செல்லாமல் மனைவியை அடித்துத் துன்புறுத்துவதும், இதனால் இரண்டு ஆண் பிள்ளைகளுடன் பிறந்து வீட்டிற்குப் போன மூத்தாள், பந்தத்தை முறித்துக்கொண்டு போய்விட்டதும் தெரிந்தது. சுற்றிலும் சுற்றத்தார் கூட்டம். இது பற்றி அவன் கவலைப்படவில்லை.
 வகையற்ற கோபத்தில் பற்களைக் கடித்துக்கொண்டு வாசலோடு போன நாயை ரத்தம் கக்க துடிதுடிக்க அடித்துக் கொன்று கண்மாயில் வீசியெறிந்து விட்டு வந்து விட்டான்.
 கேட்பாரற்ற அந்தப் பிராணியை மனைவியாகப் பார்த்தான் அந்தக் குரூரன்.
 "இந்த வாயில்லா ஜீவன் இவனுக்கு என்ன கேடு செய்தது? கொலைகாரப் பயல். இந்தக் கொலை பாதகத்திற்கு ஒருநாள் பதில் சொல்லியாக வேண்டும்''. சுற்றிலும் நின்றவர்கள் அந்த முரடனுக்கு அஞ்சிப் பதைத்து நின்றார்கள்.
 இவனுடன் குடும்பம் நடத்துகையில் அடியும் மிதியும், மூன்று வேளையும் மாமியார் தரும் சோளக்கூழுமாக வாழ்ந்தவளுக்கு, பிறந்தகத்தில் புகலிடமேது? தஞ்சமடைய இடமில்லாத அந்த அபலையை முழுக்கக் குடித்து வந்து, வீட்டிற்குள்ளிருக்கும் மனைவியை வெளியில் துரத்தியடித்து, உள்ளே தாழிட்டுக்கொண்டு தூங்கிப் போனான்.
 கதவில் சாய்ந்தவாறு பசியுடனிருக்கும் அவளை மாமியார் வீட்டிற்குக் கூட்டி வந்து சாப்பிட வைத்து படுக்க வைப்பாள். வாய் பேச முடியாத - காது கேட்காத தாய் தகப்பன் இல்லாத பிள்ளை. உங்கள் மகளாகப் பார்த்துக் கொள்வீர்களென்றுதான் ஒப்படைக்கிறோம். தஞ்சமடைந்த பெண்ணுக்குத் தாயாக இருக்க வேண்டாமா?
 விடிந்ததும் வீராவேசமாக வந்து இரண்டு பேர்களுக்கும் செமத்தையான அடி விழுந்தது. 
"இவளை எனக்குக் கட்டிக் கொடுத்தாகளா - உனக்குக் கட்டிக் கொடுத்தாகளா? என்ன நெனச்சுக் கூட்டி வந்தே? எவன்கிட்டேயும் விடலாம்னா?''
 பெற்றவளை பிள்ளை கேட்கும் கேள்வியா? மகனல்ல இவன் - மாபாதகன். கணவரற்ற அந்தத் தாய் வாலிப முரட்டுத்தனத்தில் நிற்பவனிடம் என்ன செய்ய முடியும்? விதியும் வருங்காலமும் பூமியில் இருப்பதுபோல், குனிந்த தலை நிமிராமல் அழுவாள். அக்கம்பக்கத்தார் கண்டித்தால் துர்நாற்றமடிக்கும் பேச்சுத்தான் வரும்.
 ஒருநாள் அவன் வீட்டிலிருக்கையில் நான்கு பேர்கள் வந்து, தென்னையிலிருந்து இளநீர் பறித்துப் போட வேண்டும்.  ஒவ்வொரு மரத்திற்கும் தகுந்த கூலி தருவதாக கூட்டிப் போனார்கள். இதில் இவன் கில்லாடி. சற்று தூரம் போனவன்; திரும்பி வந்து, "கதவைத் தாழிட்டுக் கொண்டு படு. நான் வர நேரமாகும்'' போனவன் மீண்டும் வந்து, "தாகமாக இருக்கிறது. தண்ணீர் கொடு.'' வாங்கிக் குடித்தவன், மனைவியை இமைக்காமல் பார்த்துச் சென்றான்.
 தோட்டத்தில் அவனைச் சுற்றி இன்னும் இரண்டு பேர்கள் சேர்ந்து அரிவாளுடன் பாய்ந்து வளைத்தார்கள். நடுவில் ஒற்றை ஆளாக நின்று போராடினான். தரையெல்லாம் அவன் கால்கள் தோண்டி முடிவில் அதே மண்ணில் வீழ்ந்தான். முன் பகை முடிந்தது. கடைசியில் ஒரு வாய் நீருக்காகத் தவித்தான்.
 அதுதான் மனைவி கையில் வாங்கிக் குடித்து விட்டானே.
 வளைகாப்பு அன்று முடிந்து போனான். மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டிருந்த மனைவி, வயிற்றில் அடித்துக்கொண்டு அழுததுதான் வாழ்ந்த வாழ்க்கை. கையுடன் அக்காள் தன் வீட்டிற்குக் கூட்டி வந்தாள். அவளும் விதவை. அப்போதுதான் பக்கத்திலிருந்த சதாசிவம் கைகொடுத்தார். பொது மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்து பாயில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். பார்க்கக் கிளம்பியவரை "நாளை வீட்டிற்குக் கூட்டி வந்து விடுவேன். இங்கேயே பார்க்கலாம். எதற்குச் சிரமம்?'' எனச் சொன்னதைக் கேட்காமல் வந்து பிள்ளையின் இரண்டு கன்னங்களையும் பிடித்துக் கொஞ்சியவரின் கைவிரலை குழந்தை பலமாகப் பிடித்துக் கொண்டது.
 அன்று பிடித்த கைவிரல்கள் இப்பொழுது... அவன் பொங்கினான். இந்நேரம் இவரின் நெருங்கிய நண்பர் 97 வயது வெங்கட்ரத்னம் நாயினா வந்தார். மிகவும் உற்சாகமாக எவ்வளவு தூரமானாலும் நடந்து செல்வார். எந்தப் பதார்த்தத்தையும் கடித்துச் சுவைத்து மென்று சாப்பிடுவார். வெளியூர்களுக்குத் தனியாகச் சென்று உற்சாகமாக வருவார். ஒருநாளும் உடம்புக்கு முடியவில்லை என்று படுக்காதவர்.
 வாங்கி வந்த பழங்களை என் கையில் கொடுத்துவிட்டு, "எப்படி இருக்கிறார்?'' என்றவாறு நண்பரைக் கண்டவர் அதிர்ந்து போனார். "படுக்கையில் படுத்திருக்கிறாரா? அப்படி என்ன செய்தது - இப்படிப் போட்டுப் பார்க்க?'' 
 நாயினா வாடிய முகத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன். பாலீஸ் கல் பதித்த வீட்டில் மனைவி வழுக்கி விழுந்து இடுப்பு  எலும்பு முறிந்து முடிவான படுக்கையில் இப்போது இருப்பது - போய்ப் பார்த்து விசனப்பட்டுக் கேட்கையில்,
 "அழகு ஆபத்தானது. பளபளக்கும் இந்தத் தரை - எதிரியைவிடச் சந்தர்ப்பம் பார்த்து வாரி விடும். யானைக்கும் அடி சறுக்கியிருச்சு. அன்ன நடை நடக்கப் போய் தன் நடையும் போச்சு. ஒரு லட்ச ரூபாய் செலவு செய்தும், அவளைப் படுக்கையில் போட்டுவிட்டது. சும்மாவே சர்க்கரை. பிரஸ்சர் இத்தோட வயசும் எண்பதுக்கு மேலாகி விட்டது. நடப்பது நடக்கட்டும்.''
 பூமி மனிதர்களுக்குப் பிரச்னையோ சிக்கலோ இல்லை. மனிதர்கள் பூமியைச் சிக்கலாக்கி மாட்டிக் கொள்கின்றனர்.
  பிறக்கையில் ஆடையுடனா பிறக்கிறோம்? உடம்பில் ஆடை போட முடியாமல் வெறுமனே படுத்திருக்கும் மனைவியின் மீது போர்வையை மட்டும் போர்த்தி வைத்திருக்கிறார்.
 மனைவியின் நிலையைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டவர், நண்பரின் நிலை கண்டதும், அவர் பார்வையை நீர்போர்வைப் போர்த்தியது. கண்கள் மங்கலாகி துடைத்துக் கொண்டு துலக்கமாகப் பார்க்கையிலும் கண்ணீர்ப் படலம் மறைக்கிறது. எவ்வளவுதான் ஆண்டு அனுபவித்தாலும், துக்கத்தை முழுமையாக அனுபவித்தவர்கள் யாருமில்லைபோலும்.
 நாயினாவின் இப்போதைய நிலை?  நட்பு எவ்வளவு ஆழமானது.  நட்பை எவ்வளவு ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்!
 "எப்படி இருக்கீங்க?'' துக்கத்தை மறைத்துக் கொண்டு வேடச்சிரிப்புடன் கேட்டார் நாயினா.
 மிரள மிரள விழித்த தாத்தாவுக்கு, நாயினாவைத் தெரியவில்லை. ஆவி போன்ற வெண்மையான உருவம் மங்கலாகப் புரிந்து கொள்ள முடியாமல் 
தெரிந்தது.
 இரண்டு கைகளையும் கோத்துக்கொண்டு மௌனமாக நின்று கண்ணீர் விட்டவர் - உயரே இரு கை
களையும் ஏந்திக் கும்பிட்டு - அம்மாவிடம் வந்தவர், "ஐயாவைப் பார்த்தேன். நல்லாயிருக்கார். தைரியமா இருங்க'' இம்மாதிரிச் சமயங்களில் சமாதானம் சொல்வதற்குப் பொய் உண்மையாகித்தான் போக வேண்டும்.
 பகவான் இருக்கிறார் என்பது மாதிரி, உயரே கைகூப்பிக் கும்பிட்ட பாட்டி, வெறுமனே சிரிக்கிறாள். உண்மை அவளுள் உறைத்துவிட்டதோ?...
 "உங்க  வாக்குப் பொன்னாயிருக்கட்டும்'' நாயினா என்னும் மனிதரை நோக்கிக் கடவுளாகக் கும்பிட்டாள். அதிர்ந்து பேசாத இவள் சுபாவம் அவருக்குத் தெரியும். இனி இங்கிருந்தால் தன்னுள் பிரவகிக்கும் சோக அலை உடைத்துக்கொண்டு வரும் என்பதறிந்து, "வர்றேன்'' இருவரையும் பார்க்காமல் தலைகுனிந்து போகிறார் நாயினா.
 இவரைவிட தாத்தா எவ்வளவு இளையவர்? இவர் எப்படியிருக்கிறார்? தாத்தாஏன் இப்படி...
 படீரென்று கன்னத்தில் யாரோ அறைகிறார்கள். உடல் குலுங்கி நிமிர்கையில், "இன்னும் இந்த நல்லவர் பல்லாண்டுகள் வாழ வேண்டும்'' எனத் துதிக்காமல்...
 சில வருடங்களுக்கு முன்னால் படுக்கையில் வீழ்ந்த பாட்டிக்கு மூக்கில் டியூப் செருகி திரவ உணவு செலுத்தினார்கள். அந்த ஊசியைச் செவிலியர் மாற்றுகையில், மனைவியின் கதறலைக் கேட்கச் சகிக்காமல் கதவருகே ஓடிச் சென்று கண்ணீரும் விக்கலுமாய் காதைப் பொத்திக் கொண்டு, "என் பிள்ளை அழுகிறது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே..''
 அந்த வேதனையைவிட இப்பொழுது கணவர் அனுபவிக்கும் வலியை பாட்டி கண்டால்...
 மற்றொரு நாள் காலையில் டயாலிசிஸ் முடிந்ததும், அவர் அருகில் சென்று பார்க்கத் துணிவில்லாமல் இருவரும் வெளியில் காத்திருந்தோம். ஒரு நாளைக்கு இருமுறை ஐந்து நிமிடங்கள் ஒருவர் பார்க்க அனுமதி உண்டு. நான் போக இருந்த தருணத்தில் இவரின் இன்னொரு பெயரனாகத் தொண்டு செய்யும் என் நண்பன் சாரா வந்தான்.
 இவன் போகட்டும்.
 உள்ளே போனவன் உடைந்து போய் வெளியில் வந்து, "வலி தாங்காமல் தாத்தா கத்திக்கொண்டே கடவுளிடம் தன்னைக் கூட்டிக் கொள்ளச் சொல்லி மன்றாடுகிறார். என்னால் சகிக்க முடியலே.''  என்னைக் கட்டிக்கொண்டு கதறினான்.
 பாட்டி சிதறிக் கிடக்கையில் - அவனைத் தேற்றினான். அன்னியம் என்னும் பேதமின்றி அவனுள் இவர் எவ்வளவு ஆழப்பதிந்திருக்கிறார்!
 பாட்டி தட்டுத் தடுமாறி கொண்டவரைப் பார்க்க, பயங்கரத்தை நோக்கிப் போவதுபோல் அஞ்சி அஞ்சி உள்ளே போனாள்.
  "என்னைச் சித்திரவதை செய்யாதீர்கள்''. கெஞ்சுகிறார். அவருடைய சிவந்த உள்ளங்கைகள் நரம்புகள் கிடைக்காமல் ஊசி குத்திக் குத்தி மேலும் சிவப்பாகி ரத்தம் மாதிரியிருக்கின்றன. பாதி மூடிய இமைக்குள் விழிகள் அலை பாய்கின்றன. அவரின் புலம்பல் இதயத்தைக் கசக்குகிறது.
 குனிந்து அவர் முகத்தருகே முகம் கொண்டு போய் - பின் அவர் கைகளைத் தடவிக் கொடுத்து  - கால்களில் முகத்தை வைத்துக்கொண்டு - "இவருக்குப் பதில் என்னை எடுத்துக்கோ ஆண்டவா.''
 பாட்டி வெளியில் வருகையில் இறுகிப்போயிருந்தாள். பேச்சில்லை. மௌனமாகப் பார்வையாளர்கள் இருக்கையில் போய் அமர்ந்தாள்.
 என்ன நடந்தது - ஏன் இப்படி...
 பதற்றத்துடன் உள்ளே போனேன். கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மூடியிருக்கும் தாத்தாவின் கையை என் விரல்களால் திறக்க முயன்றேன். நடுங்கும் என் விரல்களை தன் கைகளால் மூடி அழுத்திக் கொள்கிறார். தாங்கவியலாத வேதனைக்கு நடுவிலும் எனக்கு ஆறுதல் கூற முனைகிறார். விழிக்க முடியாவிட்டாலும் - நான் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக் காட்ட முனைகிறார் என்பது கண்கள் இழுப்பதில் தெரிகிறது.
  "தாத்தா! கவலைப்படாதீர்கள். நாளை உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். அதுவரை பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் உருகிப் பாடுவீர்களே - நோயுற்றுக் கிடவாமல் - நொந்து மனம் வாடாமல் - பாயில் கிடவாமல் - பாவியென்னை... இதற்குமேல் சொல்ல எனக்கு வாயில்லை.
பாடப் பாட உங்களுக்கு வேதனை தெரியாது''  அவர் காதில் சொன்னேன். கேட்டதற்கான சலனமேயில்லை. 
நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வந்த என்னை பாட்டி கேட்டாள் - "அப்படியேதானே இருக்கிறார். சின்ன முன்னேற்றம்கூட இந்த ஒரு வாரத்தில் இல்லையே? அவருடன் பேசக்கூட முடியவில்லை. தனியறையாக இருந்தால், வேதனையைக் குறைக்கும்
வண்ணம் பேசி சாந்தப்படுத்தியிருப்பேன். ஹ்ம்...'' ஆழ்ந்த அவள் நெடுமூச்சில் ஐம்பது ஆண்டுகால வாழ்க்கையில் இல்லாத ஏக்கமும் ஆற்றாமையும் கலந்திருக்கிறது.
என்னால் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல், பாதங்களைப் பார்த்தவாறு குனிந்திருக்கிறேன்.
அவர் நலமாகி வீடு திரும்புவார். 85 வயதுதானே ஆகிறது. ஜாதகத்தில் 95 வயது கணித்திருக்கிறது. அதன்பின்தான் மாரகன்... மனிதன் முதன்முதலாக உச்சரித்த வார்த்தை நம்பிக்கை. அது தொடர்ந்து மனிதர்களை சதா சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் விசையாக இருக்கிறது. பாட்டிக்கு ஜாதக நம்பிக்கை கணவர் பத்தாண்டுகள் வாழ்வார் என்னும்  நம்பிக்கையைத் தந்தது.
 எனக்கு ஏன் இப்படித் தோன்றவில்லை?
பாட்டி உள்ளுக்குள் கலங்கியிருப்பது அவள் களைப்பு முகத்தில் தெரிகிறது. இதற்கு மேல் பேசிக் காயப்படுத்த வேண்டுமா? கண்களில் நீர் திரள்கிறது. பாட்டி எதிரில் அழுவது அவள் தைரியத்தைக் குலைத்துவிடும். அவரையே வாழ்க்கையாக்கிக் கொண்டிருக்கும் இந்த ஆத்மா இப்படியே இருக்கட்டும்.
 ஒன்றும் சொல்லாமல் சற்று தள்ளியிருக்கும் வேப்பமர இருட்டுக்குச் சென்றேன். என்னைக் கடந்து மற்ற பிணியாளர்களைப் பார்க்க பழங்கள் கொடுத்து மகிழ்ந்து பேசி - நலமாகி வர வாழ்த்துக் கூற உறவினர்களும் பழகியவர்களும் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
(தொடரும்)
  கர்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT