முகப்பு
தினமணி கதிர்

பொய்மையும் வாய்மையுடைத்து

ஒரு வழியாக விசா வந்து விட்டது. அம்மாவுக்கும் அண்ணா மன்னிக்கும் பெரிய பாரமாய் வீட்டில் உட்கார்ந்து கொண்டு அவர்களை சிரமப்படுத்திக் கொண்டிருந்த கஷ்ட காலத்துக்கு ஒரு முடிவு வந்து விட்டது

தினமணி கதிர்

பொய்மையும் வாய்மையுடைத்து

ஒரு வழியாக விசா வந்து விட்டது. அம்மாவுக்கும் அண்ணா மன்னிக்கும் பெரிய பாரமாய் வீட்டில் உட்கார்ந்து கொண்டு அவர்களை சிரமப்படுத்திக் கொண்டிருந்த கஷ்ட காலத்துக்கு ஒரு முடிவு வந்து விட்டது

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:13 AM
பகிர்:

ஒரு வழியாக விசா வந்து விட்டது. அம்மாவுக்கும் அண்ணா மன்னிக்கும் பெரிய பாரமாய் வீட்டில் உட்கார்ந்து கொண்டு அவர்களை சிரமப்படுத்திக் கொண்டிருந்த கஷ்ட காலத்துக்கு ஒரு முடிவு வந்து விட்டது என்று விஜி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இந்த ஆறு மாதமாக அவர்கள் மூன்று பேரும் அவளைக் கண்ணில் வைத்துத்தான் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். அவள் மனம் நோகும்படியான சொல்லோ காரியமோ அவர்களிடமிருந்து ஒருநாளும் வந்ததில்லை. பாவம், இந்த சின்னஞ் சிறு வயதில் கணவனைப் பிரிந்து வாழ வேண்டிய நிர்பந்தம் அவளுக்கு ஏற்பட்டு விட்டதே என்று தான் அவர்கள் குமைந்து கொண்டிருந்தார்கள் என்று அவளுக்குத் தெரியும். அவர்கள் மன நிம்மதிக்காகத்தான். அந்த மறுகல்கள் நிற்கத்தான் அவள் தினமும் கங்கம்மா கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். கடைசியில் தேவி கருணை காட்டிவிட்டாள்.
காரை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு, ராமாமிர்தம் உள்ளே வந்தான்.
வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்த விஜியும் சியாமளாவும் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தார்கள்.
"என்ன விஜிக்குட்டி மூஞ்சில இவ்வளவு சிரிப்பு இன்னிக்கி சியாமளா வழக்கத்துக்கு விரோதமா நன்னா சமைச்சிருந்தாளா?'' என்றான்.
"உங்களுக்கு என்னை வம்புக்கு இழுக்காட்டா பொழுது போகாதே'' என்றாள் சியாமளா.
அப்போது உள்ளேயிருந்து வந்த அம்மா, "விஜிக்கு விசா கிடைச்சிடுத்துன்னு இன்னிக்கி சிவா போன் பண்ணினார்'' என்றாள்.
"கங்கிராட்ஸ்'' என்றவன் "அப்போ விஜிக்குட்டி இன்னும் ஒரு வாரம் பத்து நாள்ல துபாய்க்கு போயிடுவே'' என்றான்.
விஜி சகோதரனைப் பரிவுடன் நோக்கினாள். போன வாரம்தான் அவளுக்கு முப்பதாவது பிறந்தநாள். ஆனால் என்னமோ இப்போதுதான் பத்து வயது என்பது போல ராமாமிர்தம் விஜிக்குட்டி விஜிக்குட்டி என்று உயிரை விடுவான்.
ராமாமிர்தம் உடை மாற்றிக் கொள்ள தன்னறைக்குச் சென்றான்.
ஹாலில் இருந்த சோஃபாவில் விஜி உட்கார்ந்தாள். எட்டு மாதங்களுக்கு முன்னால் நடந்தவை நினைவுக்கு வந்தன.

வழக்கம் போல அந்தத் திங்கட்கிழமையும் பரபரப்புடன்தான் விடிந்தது. சிவா இன்னும் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்திருக்கவில்லை. விஜிக்கு எரிச்சலாயிருந்தது. எப்போது பார்த்தாலும் ஷேர் மார்க்கெட் என்று பைத்தியம் பிடித்து விட்டது போல இந்த ஒரு வருஷமாக மூழ்கிக் கிடக்கிறான். மார்க்கெட் மேலே ஏறிக் கொண்டே இருக்கிறது என்றும் அவன் முதலீடு செய்த பங்குகள் எல்லாம் பல மடங்கு லாபத்தில் இருப்பதாகவும் அடிக்கடி பெருமையோடு அவளிடம் சொல்வான். "இன்று காலை பதினோரு மணிக்கு பாக்டரி லோனுக்கு வங்கி அதிகாரிகளுடன் கூட்டம் என்று சொல்லி விட்டு இப்படி கம்ப்யூட்டர் முன் என்ன தவம்'' என்று நாலைந்து தடவை போய் அவள் அவனை விரட்டி விட்டு வந்தாள்.
சிவா குளித்துவிட்டு சாப்பிட வந்தபோது மணி எட்டரை. அவன் சரியாக சாப்பிடவில்லை. "என்ன ஆச்சு உங்களுக்கு?''
"இன்னிக்கு இந்த பாங்க் மீட்டிங்கை கேன்சல் பண்ணலாமான்னு பார்த்தேன். முடியலே''
"ஏன்? வேற பணம் கிடைக்கிறதா?''
"இல்ல. இன்னிக்கு கொஞ்சம் மார்க்கெட்டை பாக்கலாம்னு...''
"நீங்க பண்ணறது எனக்கு பிடிக்கலை. பாக்டரிய விட இப்ப இந்த மார்கெட் சனியனைத்தான் கட்டிண்டு அழறேள்..''
"முட்டாள் மாதிரி பேசாதே. போட்ட பணம் ரெண்டு மூணு மடங்கு ஜாஸ்தியா வர்ற ஒரே இடம் இதுதான். பாக்டரில பத்து வருஷம் சம்பாதிக்கறதை இங்கே ரெண்டு வருஷத்திலே பார்த்துறலாம்''
விஜி பேசாமல் இருந்தாள். இந்த ஆறு மாதத்தில் பணப் புழக்கம் ஜாஸ்திதான். நகைகள், படகு போன்ற கார், ஏர்போர்ட் அருகே காலி இடம், இருக்கும் வீட்டில் புதிதாக மாடி ஒன்று புதிய ஏர்கண்டிஷனர்கள், புதிய ஹோம் தியேட்டர் என்று சேர்ந்து கொண்டே இருந்தன. ஆனாலும் விஜிக்கு மனதில் சற்று இடறலாகத்தான் இருந்தது.
சிவா சாப்பிட்டு விட்டு கிளம்பிவிட்டான்.
மத்தியானம் அவள் வெளியே போய்விட்டு நான்கு மணிக்கு வந்தபோது சிவா வீட்டில் இருந்தான். அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். அது இயல்பான சிரிப்பாக இல்லை என்று அவள் உடனே கண்டு பிடித்து விட்டாள். அவனருகே வந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்துவிட்டு  "உடம்பு சரியில்லையா?'' என்று கவலையுடன் கேட்டாள்.
முதலில் ஒன்றுமில்லை என்றவன் அவள் வற்புறுத்தல் தாங்காமல் உண்மையைச் சொல்லி விட்டான். 
"இன்னிக்கி மார்க்கெட் க்ராஷ் ஆயிடுத்து என்றான். அவளுக்குத் திக்கென்றது.
எவ்ளோ நஷ்டம்'' என்று நேரடியாகக் கேட்டாள்.
அவன் சொல்ல மறுத்தான். "இதெல்லாம் மார்க்கெட்ல சகஜம். ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் கும்முனு மேலே போகும்'' என்றான். 
"அப்படியானால் ஏன்? இப்படி பேயறைந்த மாதிரி இருக்கிறாய்'' என்று அவளுக்குக் கேட்க வேண்டும் போல இருந்தது. அவள் டி.வி. அருகே சென்று சி.என்.பி.சி.யைப் போட்டாள். எங்கு பார்த்தாலும் ரத்த விளாறாக ஒரே சிவப்பு நம்பர்கள். பச்சை வண்ணத்தைத் தேட வேண்டியிருந்தது.
"கவலையுடன் பாங்க் லோன் என்ன ஆச்சு?'' என்று கேட்டாள். 
"அவர்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி சம்மதம் பெறுவதாகச் சொல்லி இருக்கிறார்களாம்''. அன்று சிவா சரியாகச் சாப்பிடவில்லை. இரவு அடிக்கடி கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் தூங்கவில்லை.
மறுநாள் அவன் ஆபிஸ் போகவில்லை. மார்க்கெட் ஆரம்பித்த பத்து நிமிஷத்திலிருந்து ஸ்டாக் எக்சேஞ்ச் சரித்திரத்தில் அன்றைய விலை வீழ்ச்சிதான் மிகப் பெரிது என்று ஓயாமல் டி.வி.யில் கதறிக் கொண்டே இருந்தார்கள்.
சிவாவின் முகத்தைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் அவர்கள் கண்முன் சிவா கட்டியிருந்த கோட்டைகள் இடிக்கப்பட்டன. பாங்கிலிருந்தும் வெளியிலிருந்தும் அவன் பாக்டரிக்காக வாங்கிய கடன்களைப் பங்கு மார்க்கட்டில் முதலீடு செய்யப் போய் அவை வெறும் காகிதக் குப்பையாக மாறிவிட்டன. 
திடீரென்று ஒரு நாள் அவனுடைய காரை எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். இன்ஸ்டால்மென்ட் கடனில் வாங்கிய கார் என்று அவளுக்குத் தெரிய வந்தது. வீடு வங்கிக்காரர்களுக்கும்,  நிலம் கடன்காரர்களுக்கும் சென்றன. பாக்டரியை மூட வேண்டியதாயிற்று. ராமாமிர்தம் தங்கையை மட்டும் பெங்களூருக்குக் கூட்டிச் சென்றான்.
பொருளாதாரச் சிக்கல்களினால் சிவாவினால் ஊரை விட்டு வெளியே வர முடியவில்லை. சிவாவிடமிருந்து கைவிட்டுப் போன பணம் சொத்துகள் போக இன்னும் சில லட்சத்துக்கு கடன்கள் இருப்பது தெரிந்தது. ராமாமிர்தம் பண உதவி செய்தது போக கேரண்டி பத்திரங்களிலும் கையெழுத்துப் போட்டு சிவாவை மீட்டுவர வேண்டியிருந்தது.
 அண்ணாவும் சியாமளா மன்னியும் விஜிக்கு பெரிய ஆதரவாக இருந்தார்கள் ஒரு அக்காவாகவும் அம்மாவாகவும் மன்னி விஜிக்கு உறுதுணையாக இருந்தாள். வயதாகி விட்ட அம்மாவுக்குத் தன்னால் எவ்வளவு மனக்கஷ்டம் என்பதும் விஜியை உறுத்தியது. விடிவு காலம் பிறக்குமா? என்று எல்லோரும் வெளிச்சத்துக்குக் காத்துக் கொண்டிருந்தபோதுதான் ராமாமிர்தத்தின் முயற்சியால் சிவாவுக்கு துபாயில் வேலை கிடைத்தது...
"என்ன ஒரேயடியா துபாய் கனவுகளா?'' என்று கேட்டபடி ராமாமிர்தம் வந்து அவளருகில் உட்கார்ந்து கொண்டான்.
விஜி அண்ணனைப் பார்த்து புன்னகை புரிந்தாள்.
"உன்னைப் பார்த்தா எனக்கு பெருமையா இருக்கு விஜி'' என்றான் ராமாமிர்தம்.
"எதுக்கு அண்ணா?''
"கொஞ்சங்கூட நீ கலங்கவே இல்லையே இவ்வளவு கஷ்டத்திலேயும். நீ ரொம்ப தைரியசாலி விஜி'' என்றான்.
"வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை'' என்று விஜி பாடியபடி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
"சினிமா பாத்து ரொம்பவும் கெட்டுப் போயிட்டே நீ. எதுக்கெடுத்தாலும் ஒரு சினிமா பாட்டு பெரிய கொட்டேஷன் மாதிரி'' என்று சியாமளாவும் சேர்ந்து சிரித்தாள்.
ராமாமிர்தம் தொடர்ந்து "சிவா உன் பிடுங்கல் தாங்காம விசா வாங்கி அனுப்பிச்சுட்டான். நீ என்னமோ எனக்கு பெரிய"பா'ரம் மாதிரி நினைச்சிண்டு அவனைப் படுத்தி எடுத்துட்டே'' என்றான். 
இன்னும் அவள் அவன் கூட ஒரு வருஷம் இருந்தாலும் இதே மாதிரிதான் குறைப்பட்டுக் கொள்வான். அவனை யாரும் திருத்த முடியாது.
"இல்லேண்ணா. அங்கே அவர் சாப்பாடு சரியில்லாம திண்டாடிண்டு இருக்கார். ஒண்டியாதானே இருக்கோம்னு எங்கேயோ தங்கிண்டு கஷ்டப்படறாரேன்னுதான்..'' என்றாள் விஜி.
"ஆனா அதுக்கே மாசம் முப்பதாயிரம் வாடகையாமே'' என்றான் ராமாமிர்தம்.
"மனுஷாளுக்கு உணவு, உடை, வீடு மூணும் முக்கியம்னு துபாய் அரசாங்கத்துக்கு தெரியும் போல. அங்க இருக்கறதிலேயே காஸ்டிலியான சமாச்சாரங்கள் இது மூணு தானாம். அன்னிக்கி சிவா கிண்டல் பண்ணிப் பேசிண்டு இருந்தார்'' என்றாள் சியாமளா.
அப்போது அம்மா அங்கே வந்தாள்.
"இந்த ஏர்கண்டிஷன் சிட்டியை விட்டுட்டு எங்கயோ போறாளேன்னு இருக்கு'' என்றாள் அம்மா.
"அம்மா நீ இன்னும் பழைய காலத்திலேயே இருக்காதே. துபாய்ல இப்ப வீடு,கார்,பஸ் ஏன் அது நிக்கற ஸ்டாப் எல்லாம் கூட ஏர்கண்டிஷன்தான்'' என்றான் ராமாமிர்தம். "நாம அடுத்த வருஷம் துபாய்போய் விஜியோட ஒரு மாசம் ஏஸி பங்களால இருந்துட்டு வரலாம்'' என்றான்.
"பங்களாவா?'' என்றாள் விஜி.
"ஏன் இப்ப சிவாவுக்கு என்ன குறைச்சல் போய் சேர்ந்ததிலேர்ந்து எனக்கு மாசா மாசம் அறுபது, எழுபதுன்னு அனுப்பிண்டு இருக்கானே. இது வரைக்கும் மூணு லட்சம் வந்திருக்கு. இன்னும் ஆறு மாசத்திலே மிச்சம் இருக்கிற கடனையெல்லாம் அடைச்சிடலாம்'' என்றான் ராமாமிர்தம்.
அண்ணா சொல்வது உண்மை. இந்த மாதம்தான் இன்னும் பணம் வரவில்லை. உழைப்புக்கேற்ற நிறைய வருமானம் கொடுக்கிறார்கள்தான்.                                     

"இன்னும் பத்துநிமிஷத்தில் விமானம் துபாய் ஏர்போர்ட்டில் இறங்கி விடும்'' என்று அறிவித்த பெண்மணி பயணிகளை வாழ்த்தி விடை பெற்றாள்...
விஜியை அழைத்துச் செல்ல சிவா வந்திருந்தான்.
"முன்ன விட சிவப்பாயிருக்கேள். ஆனா இளைச்சு போயிட்டேளே'' என்றாள் விஜி.
"முன்னதுக்கு காரணம் ஆபிஸ். பின்னதுக்கு சொந்த சமையல்'' என்று சிரித்தான் சிவா.
வெளியே வந்து ஒரு டாக்ஸி பிடித்தார்கள்.  ஏர்போர்டில் இருந்து வெளியே வந்து பரந்த சாலையில் மிகுந்த வேகத்துடன் கார் சென்றது. என்ன அகலமான ரோடு என்ன சுத்தம் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல ஒரு அழகு போகும் வழியில் கண்ணில்பட்ட பெரிய கட்டிடங்கள் பிரமிப்பைத் தந்தன.
"ஐ லவ் துபாய்'' என்று சிரித்தாள் விஜி.
சிவா அவள் கையைத் தன் கையோடு இறுக்கிக் கொண்டான்..
"நாம இருக்கற இடம் பேர் கராமாதானே'' என்று கேட்டாள் விஜி.
"ஆமா கராமான்னா கண்ணியம்னு அர்த்தமாம்'' என்றான் சிவா.
"கண்ணியமான ஒருவர் வாழும் கண்ணியமான இடத்துக்கு இன்று கண்ணியமான இன்னொருவர் வருகை'' என்று சிரித்தாள் விஜி.
அடுத்த பத்து நிமிஷங்கள் கழித்து சிறிய சாலை ஒன்றின் வழியாக அவர்கள் டாக்ஸி சென்று. ஒரு கட்டடத்தின் முன் நின்றது. விஜியும் சிவாவும் இறங்கி டாக்ஸிக்குப் பணம் கொடுத்த பின் கட்டடத்தின் உள்ளே சென்றார்கள்..
நீண்ட தாழ்வாரம் போல் காணப்பட்ட நடையைக் கடந்து சென்றதும் இடது பக்கம் இருந்த கதவைத் திறந்து கொண்டு சிவா உள்ளே போனான். விஜி அவனைப் பின் தொடர்ந்தாள். கையிலிருந்த சாமான்களைப் படுக்கையில் வைத்துவிட்டு சுற்றிப் பார்த்தாள்.
ஒரு ஹாலும் ஒரு அறையும் சிறிய பாத்ரூமும் இருந்தன.
"இவ்வளவுதானா?'' என்று சிவாவைப் பார்த்துக் கேட்டாள்.
அவன் தலையை அசைத்தான்.
"இதுக்கா முப்பதாயிரம் ரூபாய் வாடகை?
"நீ இப்ப காலி பண்ணினா இதுக்கு நாப்பதாயிரம் தர ரெடியா மனுஷா இருக்கா'' என்று சிவா சிரித்தான்.
"சமையலறை''?
அவன் தயங்கியபடி "வெளில பெரிய கிச்சன் இருக்கு. ரெண்டு கட்டாபிரிச்சு. எல்லோரும் அதை ஷேர் பண்ணிக்கணும்'' என்றான்.
"எல்லாரும்னா?''
"மொத்தம் நாலு ஃபேமிலி இருக்கா''.
"நாலு குடும்பத்துக்கு ரெண்டு சமையல் ரூமா? நாம்ப சமைக்கறப்போ வேற யாரும் யூஸ் பண்ணாம இருக்கணுமா?
அவாள்ளாம் யாரு?''
"ரெண்டு பாகிஸ்தானி. ஒரு இரானி குடும்பம் இருக்கா''.
"அப்போ, நான்வெஜ் சமையல்லாம் அதே சமையல் ரூம்லயேவா?'' அவன் ஆமென்பது போல் தலையை அசைத்தான்.
விஜிக்கு ஒரு நிமிஷம் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இது கனவா அல்லது நிஜம்தானா? என்று சந்தேகம் வந்தது. கோபம், ஏமாற்றம், துக்கம் என்று குறிப்பாகச் சொல்ல முடியாதபடி, பலவித உணர்வுகள் வந்து தொண்டையை அடைக்கிறாற்போல இருந்தது.
"ஆனா இங்கே இருக்கறவா எல்லாம் ரொம்ப நல்ல மனுஷா'' என்றான் சிவா.
அவன் தன்னைச் சமாதானப் படுத்துவதற்காகச் சொல்கிறானோ என்று விஜி அவனை உற்றுப் பார்த்தாள்.
"நாம சுத்த வெஜிடேரியன்னு தினமும் முதல்ல நீ சமைச்சதுக்கு அப்புறமா அவா சமைச்சுக்கறதா சொல்லியிருக்கா.''
அன்று மாலை அவர்கள் வெளியில் சென்றார்கள். கடற்கரையில் உட்கார்ந்திருந்தபோது சிவா தன்னுடைய வேலையைப் பற்றிப் பேசினான்.
"தெனம் ஏழரைக்கு நான் ஆபிசுக்கு கிளம்பிடணும். அதனால நீ அஞ்சு மணிக்கே எழுந்து சமையலை கவனிக்க வேண்டியிருக்கும். அந்த நேரத்திலே மத்தவா தொந்திரவும் இருக்காது. சாயந்திரம் வரப்போ அனேகமா எட்டு ஒன்பது மணி ஆயிடும். வெள்ளி சனி இரண்டு நாள் எனக்கு லீவு. அப்ப உனக்கும் ரொம்ப ரெஸ்ட் இருக்கும்.  நாம வெளியில போய் சுத்திட்டு வரலாம்'' என்றான்.
அவன் முதலில் காயைக் கொடுத்துவிட்டு அப்புறம் கனியைக் கொடுக்கிறான் என்று நினைத்தாள் விஜி.
"நீங்க ஏன் இந்த மாசம் அண்ணாவுக்கு பணம் அனுப்பலே?'' என்று கேட்டாள் விஜி.
அவள் பார்வையைத் தவிர்க்க முயன்று தோல்வியுற்று, மீண்டும் அவளைப் பார்த்தான். அவள் அவன் பதிலுக்காகக் காத்திருப்பவளாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நீ வந்த உடனேயே இதையெல்லாம் சொல்லி உன்னை கலவரப்படுத்த வேண்டாம்னு நினைச்சேன்.''
அவள் பதில் எதுவும் சொல்லவில்லை.
"இந்த மாசம் முதல் என் சம்பளத்தை பாதியா குறைச்சிட்டா. அமெரிக்காலேர்ந்து பெரிய ஆர்டர் குடுத்திண்டிருந்த கம்பனி திவாலாயிடுத்துன்னு முக்கால்வாசி பேரை லேஆஃப்னு வீட்டுக்கு அனுப்பிச்சிருக்கா. நல்ல வேளையா எனக்கு இன்னும் வேலை இருக்கு. போன மாசம் வாங்கின சம்பளத்திலேர்ந்து எதுவும் அனுப்பலே. எமர்ஜென்ஸியா பணம் தேவைப்பட்டா யாரைப் போய் கேக்க முடியும்னுதான்'' என்றான் சிவா. அவள் பேசுவதற்கு முன் மீண்டும் அவனே பேசினான். "இப்ப ஒரு பெரிய ஆர்டர் அடுத்த அஞ்சு  வருஷத்துக்கான கான்ட்ராக்ட் ஒரு வாரத்துலே வரப்போறதுன்னு நேத்திக்கி என்னோட பாஸ் சொன்னார். ஜப்பான் ஆர்டராம். அது ஒண்ணுதான் இப்ப பெரிய நம்பிக்கை நட்சத்திரம்.'' 
அவள் கைகளால் மணலை அளைந்தாள். சிவா அவள் தோளை ஆதரவாகப் பற்றிக் கொண்டான். "இது நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத அடி. நீ வரேன்னு பிடிவாதமா இருந்ததினாலே உன்கிட்டே அங்கே இருக்கும்போது சொல்ல வேண்டாம்னு இருந்துட்டேன். ஆனா எனக்கென்னவோ நம்பிக்கை இருக்கு. இது ஒரு பாஸிங் க்ளவுட் மாதிரின்னுதான் நினைக்கிறேன். கீழே விழவிழத்தான் மேலே ஏறணும்கிற வெறி இன்னும்  ஜாஸ்தியாறது.'' 
உணர்ச்சிவசப்பட்ட அவன் குரலுக்கு ஆதரவாக விஜி அவன் தோள் மீது தலையைச் சாய்த்துக்கொண்டாள்.                                   
 
பார்த்துக் கொண்டிருந்த டி.வி.யை அணைத்து விட்டுப் படுக்கையில் சாய்ந்து கொண்டாள் விஜி. உடம்பு அலுப்பைவிட மனதின் உளைச்சல்தான் தாங்க முடியாதபடி இருந்தது. அவள் துபாய் வந்து இன்று ஏழாவது நாள். தினமும் விடிகாலையில் ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து குளித்து சமையலை ஆரம்பித்து சிவாவுக்கு காலை டிபனும் மத்தியான சாப்பாடும் பண்ணி முடிக்க ஏழு மணி ஆகிவிடுகிறது. அவனும் ஏழரைக்கு ஆபிசுக்குக் கிளம்பி விடுகிறான். அதற்குப்பிறகு அவன் இரவு திரும்பி வரும் வரை "கொட்டாங்' "கொட்டாங்'கென்றுதான் உட்கார்ந்து பொழுதைத் தள்ள வேண்டியிருக்கிறது.
டி.வி. முன்னால் பிடிக்கிறதோ இல்லையோ உட்கார்ந்து பொழுதைத் தள்ள முயன்றாள். சிவா கொடுத்துவிட்டுப் போயிருந்த லேப்டாப்பில் யூ ட்யூபைப்போட்டு எம்.எஸ்.ஸிலும் சஞ்சய் சுப்ரமணியத்திலும் மூழ்கி சில மணி நேரங்கள் தன்னை மறந்து இருந்தாள்.
அன்று காலை வெளியே ஏதோ சத்தம் கேட்கிறதே என்று கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். பக்கத்து வீட்டுப் பெண் முகம் தென்பட்டது. அவள் விஜியைக் கவனிக்கவில்லை. இரண்டு கைகளாலும் உரிக்கப்பட்ட கோழிகளை தூக்கிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். அவள் கையில் இருந்த கத்தியில் லேசான ரத்தக் கறை தெரிந்தது. அவள் என்ன செய்யப் போகிறாள் என்று நினைத்ததும் விஜிக்கு குமட்டல் வரும் போல் இருந்தது...
திரும்பவும் வீட்டுக்குள் வந்த விஜிக்கு படபடப்பாக இருந்தது.
தனக்கு யார் மீதும் எந்தப் பொருள் மீதும் அடுத்தவரின் பழக்கவழக்கங்களின் மீதும் துவேஷம் இல்லை என்று தனக்குள் கூறிக் கொண்டாள். ஆனால் பிறந்ததிலிருந்து வளர்ந்த முறையில் உடலும் மனதும் ஏற்றுக்கொண்ட தனக்கான மணம் சுவை விருப்பங்கள் ஆகிய வற்றுக்கான எதிர்மறைகளை ஏற்கவேண்டிய நிர்பந்தங்களை அவள் வெறுத்தாள். ஆனால் இப்போது உள்ள நிலைமையில் என்னதான் செய்ய முடியும் என்று மனது கேட்டது. சிவாவுக்கு முன்பு போல் சம்பளம் கிடைக்கும் வரையில் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை. அதற்குப் பிறகு என்ன செலவானாலும் தனி வீடு பார்த்துக்கொண்டு போய் விடலாம்.
அவளுக்கு அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. மன்னியின் கையை இறுகப் பற்றிக் கொண்டு அந்த அணைப்பு தரும் கனிவில் இளைப்பாற வேண்டும் போலிருந்தது. அண்ணா இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? அவனுடைய ஆபிஸ் நேரத்திலும் தினமும் இரண்டு தடவை போன் பண்ணி அவளை வம்புக்கு இழுக்கும் பாசம் நினைவுக்கு வந்தது. இப்போது எல்லோரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? அவளைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு...
அவள் எழுந்து உட்கார்ந்து கொண்டு லேப்டாப்பை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு எழுதினாள்.
அன்புள்ள மன்னிக்கு,
"நமஸ்காரம். எப்படி இருக்கிறீர்கள்? அம்மா? உங்களிடம் என்னைப் பற்றி போன் பண்ணிப் பேசி உங்களை வேலை செய்யவிடாமல் அடிக்கிறாளா? எனக்கு உங்கள் மூவரின் ஞாபகமாகவே இருக்கிறது. இங்கும்நான் செüக்கியமாக இருக்கிறேன். எனக்கு துபாயை மிகவும் பிடித்திருக்கிறது. வீடு அழகாக வசதியாக இருக்கிறது. பெங்களூரில் அட்டகாசமாகப் படுத்துக் கொண்டு அம்மாவின் திட்டுக்களை வாங்கிய பிறகு எட்டு மணிக்கு படுக்கையை விட்டு எழுந்திருக்கும் விஜி இல்லை இப்போ நான். அலாரம் வைத்து ஐந்து மணிக்கே எழுந்து சமையல் எல்லாம் செய்து முடிக்கிறேன். சமைக்க எல்லா வசதியும் இருக்கிறது. இவருக்கு ஆபிசில் எட்டு மணிக்கெல்லாம் இருக்க வேண்டும். ஆபிசில் இவருக்கு நல்ல பெயர். இந்த மாசம் நான் வந்து குடும்பம் செட்டில் பண்ண வேண்டும் என்பதால் பணம் அனுப்பவில்லை என்று அண்ணாவிடம் சொல்லச் சொன்னார். இவர் ஆபிஸ் போனதுக்கு அப்புறம் நாள் பூராவும் எனக்கு சொந்தம்தான். சினிமா, டி.வி. பாட்டு என்று பொழுது ஜாலியாக ஓடுகிறது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் நல்ல ஜனம். இங்கு கிடைக்காதது எதுவும் இல்லை. ஆனால் விலை எல்லாம் ஜாஸ்திதான்.
 கராமாவில் சரவணபவன் இருக்கிறது. போய் ஒரு நாள் டின்னர் சாப்பிட்டோம். இரண்டு பேருக்கு ஆயிரம் ரூபாய்! ஊர் படு சுத்தமாக இருக்கிறது. அண்ணா சொன்னதுபோல் எங்கு பார்த்தாலும் ஏ.ஸி. அநேகமாக நீங்கள் வரும்போது இவர் ஒரு ஏ.ஸி. பங்களா வாங்கி விடுவார்'' என்று நினைக்கிறேன்.
உங்கள்,
விஜி.

 

முழு கட்டுரையைப் படிக்க →