எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும், அந்தக் குழந்தைகள் எந்த மொழியில் கற்க வேண்டும், அயல் கலாசாரத்தை, மொழியைக் கொண்டவரை அண்டை வீட்டாராக ஏற்க வேண்டும் என்பது வரை குடும்பத்திற்குள் மூக்கை நுழைப்பது, வேலை நிறுத்த உரிமையைத் தடை செய்வது, தொழிற்சங்கங்களுக்கு வேறு "வேலை' கொடுத்து அவர்கள் கவனத்தைத் திருப்புவது, அரசியல் "எதிரிகளை' முடக்கி வைப்பது, ஊடகங்கள் மீது கட்டுப்பாடு இவற்றுக்கெல்லாம் சிங்கப்பூரில் எதிர்ப்பே எழவில்லையா?
பருப்பில்லாமல் கல்யாணமா? எதிர்ப்பில்லாமல் அரசியலா? 1987- இல் எதிர்ப்பு ஒன்று மெல்ல மெல்லத் திரண்டது. ஆனால் அது இன்றுவரை அவிழ்க்கப்படாத புதிர் முடிச்சுகள் கொண்ட ஒரு மர்ம நாவலாகவே இருக்கிறது. "மார்க்சிஸ்ட் சதி' என்று வர்ணிக்கப்படும் அது திடீரென்று ஒரு நாள் தலைப்புச் செய்தியாயிற்று.
1987-ஆம் ஆண்டு, மே 21-ஆம் தேதி அதிகாலையில் சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை 16 பேரைக் கைது செய்து விசாரணை இல்லாமல் சிறையில் அடைத்தது. பின்னர் ஓராண்டிற்குப் பிறகு ஜூன் 20-ஆம் தேதி மேலும் ஆறு பேரைக் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட அனைவரும் சீனர்கள். அவர்களில் மிக மூத்தவருக்கு வயது 40. இளையவருக்கு வயது 22. இந்த நடு, இளம் வயதினர் அனைவரும் நன்கு படித்தவர்கள். சிலர் அயல்நாட்டில் படித்த பட்டதாரிகள். வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், நாடகாசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கிறிஸ்துவ மதப் பிரசாரகர்கள் எனத் தொழில் செய்து வந்த அறிவுஜீவிகள். மாணவர் தலைவர்களும் உண்டு. எல்லாரும் இடதுசாரிச் சிந்தனையாளர்கள். மற்றொரு ஒற்றுமை எல்லோரும் கத்தோலிக்க கிறிஸ்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் முக்கியமானவர்கள் டான் வா பியோ, வின்சென்ட் செங் என்ற இருவர். டான், முன்னாள் மாணவர் தலைவர். 1974- இல் அவர் சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்த போது, "துடிப்புமிக்க ஜனநாயகம், சமூக நீதி' ஆகியவை கோரி பெரும் போராட்டங்கள் நடத்தியவர். சட்ட விரோதமாகக் கூடுதல், கலகம் விளைவித்தல் ஆகிய குற்றங்களுக்காக ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். அவரது வழக்கை விசாரித்த நீதிபதி சின்னதுரை, "தன்னைத் தற்காத்துக் கொள்ள பொய்யான சாட்சியங்களைப் புனைந்தவர்' எனக் கடுமையாக அவரை விமர்சிக்கிறார். அவரது பாஸ்போர்ட் புதுப்பிக்கப்படாத நிலையில், அதைப் புதுப்பித்தது போல் ஜோடித்து 1976- இல் சிங்கப்பூரை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் குடி புகுந்தார். இவர்தான் "சதியின் மூளை' என்கிறது குற்றப்பத்திரிகை.
இங்கிலாந்திலிருந்து கொண்டு இவர் இயக்கியதாகச் சொல்லப்படும் வின்சென்ட் செங் ஒரு முழு நேரக் கத்தோலிக்க மத ஊழியர்.
இந்த 22 பேரும் சேர்ந்து செய்யத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் சதி என்ன?
எந்த ஒரு நாட்டின் அரசியலிலும் "அழுத்தம் தரும் குழுக்கள் (Pressure groups)' சில இருக்கும். இந்த அழுத்தம் தரும் குழுக்கள் சிறிய அரசியல் கட்சிகளாகவோ, இயக்கங்களாகவோ, தன்னார்வ அமைப்புகளாகவோ இருக்கும் அவற்றால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. ஆனால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நெருக்கடி கொடுத்து, அன்றாட வாழ்க்கையைத் தடம் புரளச் செய்து, அரசை நிலைகுலையச் செய்ய முடியும். இந்த அழுத்தம் தரும் குழுக்கள் சிறிய அரசியல் கட்சிகளாகவோ, இயக்கங்களாகவோ, தொழிற்சங்கமாகவோ, ஒரு தொழிலை/ மொழியை/இனத்தை/
மதத்தை/ ஜாதியைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சங்கங்களாகவோ, தன்னார்வ அமைப்புகளாகவோ இருக்கும்.
சட்டக் கழகம் (Law Society) என்ற வழக்கறிஞர்கள் அமைப்பு, தொழிலாளர் கட்சி, நீதி சமாதான ஆணையம் என்ற கிறித்துவ மத அமைப்பு, சில மாணவர் அமைப்புகள், அயல் நாட்டுப் பணியாளர்களுக்கான மையம், இளம் கிறித்துவப் பணியாளர்கள் இயக்கம், மூன்றாம் மேடை (Third stage) என்ற நாடகக் குழு என்ற சில "அழுத்தம் தரும் குழு'க்களை ஒருங்கிணைத்து ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்குவது, அதன் மூலம் வேலை நிறுத்தங்கள், கலவரங்கள், குழப்பங்களை ஏற்படுத்தி அரசை நிலைகுலையச் செய்து பின் வீழ்த்தி, மார்க்சிஸ்ட் அரசை உருவாக்குவது - இதுதான் சதி என்கிறது அரசுத் தரப்பு
இதற்காக பிலிப்பைன்சில் இருந்த இடதுசாரிகள், மலேசிய கம்யூனிஸ்ட்கள், விடுதலை இறையியல் ஆர்வலர்கள் (மார்க்சீய சமூக ஆய்வுக் கோட்பாடுகளையும் கிறித்துவ இறையியலையும் இணைத்து உருவாக்கப்பட்ட கருத்தியல்.1970களில் லத்தீன் அமெரிக்க அரசியலில் பங்காற்றிய இந்தக் கருத்தியலை அமெரிக்கா ஆட்சேபித்ததன் காரண்மாக 1984-இல் வாடிகன் மதக் கோட்பாடாக அங்கீகரிக்க மறுத்தது. அதனை ஒட்டி அது உலகின் கவனத்தைப் பெற்றது) இவர்களோடு தொடர்பில் இருந்ததாக அரசு கூறியது.
அதை விட அதிர்ச்சி தரும் விஷயம், இலங்கையில் தனி நாடு கேட்டுப் போராடி வந்த டெலோ அமைப்பிடம் இதன் உறுப்பினர்கள் சிலர் ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அவ்வளவும் கற்பனை, "கட்டுக் கதை' என்று மேரி டேர்ன்புல் போன்ற வரலாற்றாசிரியர்கள் மறுக்கிறார்கள். ஆனால் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அங்கிருந்த ஊடகங்கள் பக்கம் பக்கமாகச் செய்திகள் வெளியிட்டன. தொலைக்காட்சி ஒன்று இரண்டு பகுதிகளாக ஆவணப் படம் ஒன்றை ஒளிபரப்பியது. அதில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் கேமிரா முன்பாக அளித்த பேட்டிகளில் தங்களது "திட்டங்களை' விவரித்தார்கள்.
காவலில் வைக்கப்பட்டிருந்தபோது தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், நிர்பந்திக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அந்தப் பேட்டிகளைக் கொடுத்ததாகவும், அரசின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகவும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சிலர் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தார்கள். அதில் கையெழுத்திட்ட 9 பேரில், எட்டுப் பேர் மீண்டும் கைது செய்யப்பட்டார்கள். (ஒருவர் அயல் நாடு சென்றுவிட்டார்)
விசாரணை இல்லாமல் கைது செய்யப்பட்டது, மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது இவற்றின் காரணமாகவும், கைது செய்யப்பட்டவர்களுக்கு இருந்த தொடர்புகள் காரணமாகவும் விஷயம் சர்வதேசப் பிரச்னையாயிற்று. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சிலர் நேரில் பிரச்னையை எடுத்துரைத்தார்கள். 55 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனக் கடிதம் அனுப்பினார்கள். 15 ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லீக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். கனடாவில் நடந்த தூதரக அதிகாரிகள் கூட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதர்கள் சிங்கப்பூர் தூதரிடம் கேள்விகளை எழுப்பினார்கள். ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல், இண்டர்னேஷனல் கமிஷன் ஃபார் ஜூரிஸ்ட் போன்ற அமைப்புகள் தங்களது உண்மை அறியும் குழுக்களை அனுப்பி விசாரித்தன. அமெரிக்கா, ஐரோப்பா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் மொத்தம் 200 அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததாக அன்றைய மூத்த அமைச்சர் ராஜரத்தினம் தெரிவித்தார் (தி ஸ்ரெயிட் டைம்ஸ் ஜூன் 27, 1987)
இதற்கிடையில் தங்கள் மத அமைப்புகள் குறித்து விமர்சனங்கள் எழுந்ததால், ஜூன் இரண்டாம் தேதி (1987) சிங்கப்பூரின் தலைமைப் பேராயர் (Archbishop) பிரதமர் லீ குவான் யூவை, ஒன்பது கிறிஸ்துவ அமைப்பின் பிரதிநிதிகளுடன் சென்று சந்தித்தார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு அந்த சந்திப்பின் போது அவருடன் இருந்த ஜோசிம்காங் என்பவர் ஒரு வழக்கில் சாட்சியம் அளிக்கும் போது, வின்சென்ட் ஒரு "கற்றுக்குட்டி', "டாம் ஒரு முட்டாள்' என்றும், உண்மையில் வேறு நான்கு பாதிரிமார்கள்தான் அரசியல் விஷயங்களில் தலையிடுவதாகவும், அவர்கள்தான் ஆட்சிக் கவிழ்ப்பார்கள், கம்யூனிஸ்ட்கள், மார்க்சிஸ்ட்கள் என்பது தனக்குத் தெரியும் என்றும் அவசியம் ஏற்பட்டால் அவர்கள் மீது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்றும் லீ சொன்னதாகத் தெரிவித்தார்.
முதலில் கைது செய்யப்பட்ட 16 பேரும் உண்மையிலேயே சதிகாரர்கள்தானா என்பது குறித்து லீயின் கட்சியினரிடையே கூட, குறிப்பாகத் தமிழர்களிடையே, கருத்து வேறுபாடுகள் இருந்தன. லீ குவான் யூக்குப் பின் பிரதமராகப் பதவி ஏற்ற கோ சோக் டாங், அவரது Men in white : The untold stories of PAP என்ற நூலில், 1987 மார்க்சிஸ்ட் சதி சம்பவத்திற்குப் பிறகு பதவியில் நீடிக்க விரும்பாததால் தேசிய வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த தனபாலன், பதவி விலகினார் என்று சொல்லியிருக்கிறார். "எனக்குத் தெரிந்த வரையில் அவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், அமைப்பைக் கவிழ்க்க முனைந்தவர்களாகத் தெரியவில்லை' என மூத்த அமைச்சர் தர்மன் ஷண்முகம் ஒரு பத்திரிகைப் பேட்டியில் (தி ஸ்ரெயிட் டைம்ஸ் டிசம்பர் 14 2001) தெரிவிக்கிறார்.
நிழலைப் பார்த்து பயந்தார்களா அல்லது நிஜம்தான் மிரளச் செய்ததா என்பது இன்றுவரை விளக்க முடியாத மர்மமாகவே இருந்து வருகிறது
இந்தச் "சதி'யைப் பின்னணியாக வைத்து டாக்டர் கோபால் பரதம் A candle or the sun என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். டாக்டர் கோபல் பரதம் ஆங்கிலத்தில் புனைவெழுதும் ஒரு தமிழர். மருத்துவர் உலகப் புகழ் பெற்ற நரம்பியல் வல்லுநர். அந்த நூலை முதலில் சிங்கப்பூரில் யாரும் பதிப்பிக்க முன்வரவில்லை. அது லண்டனில் பிரசுரமாயிற்று. அதிலிருந்து ஒரு பத்தி:
"நீ மகிழ்ச்சியாக இல்லை. அதை யாரிடமும் சொல்லும் துணிவும் உனக்கில்லை. நிச்சயமாக அரசாங்கத்தில் இருக்கும் உன் எஜமானர்களிடம். அவர்களைப் பொருத்தவரை நீ மகிழ்ச்சியற்று இருக்க எந்தக் காரணமும் இல்லை. உன் எஜமானர்கள் உனக்கு நல்ல வீடு, பாதுகாப்பான தெருக்கள், நல்ல மருத்துவமனை, உன் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம், உனக்கு மூன்று வேளை உணவிற்கான வழி, ஏன் ஒரு கலர் டிவி கூடக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் நினைப்பது சரிதான். நீ மகிழ்ச்சியற்று இருப்பது தவறு. உன்னைச் சுற்றியுள்ள நாடுகளைப் பார். நோயுற்று, பட்டினியில், சேரிகளில் மக்கள் வாழ்கிறார்கள். என்றாலும் அவர்கள் எப்படியோ உன்னை விட சந்தோஷமாக இருப்பது போலத்தான் தோன்றுகிறது. ஏன்?
ஏனெனில், நண்பா, நீ மனிதன். நாயல்ல!'
புனைவுகள் சில நேரம் உண்மையைவிடக் கசப்பானவை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.