முகப்பு
தினமணி கதிர்

யூ ட்யூப்பில் கற்றுக் கொண்டேன்!

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் ஒரு சிறு கிராமம். அங்கே பிறந்தவர்தான் அக்மாட் ஜூல்கார்னைன்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் ஒரு சிறு கிராமம். அங்கே பிறந்தவர்தான் அக்மாட் ஜூல்கார்னைன். பிறக்கும்போதே இரு கைகளும், கால்களும் குறைபாடாகப் பிறந்த - 26 வயதான - அவரை, அல்ஜஸீரா டிவி நேர்காணல் செய்தது. அது உலகம் முழுவதும் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. 
அக்மாட் ஜூல்கார்னைன் ஒரு புகைப்படக் கலைஞர். அவர் எடுத்த ஃபேஷன் போட்டோகிராபி படங்கள் இணையத்தில் வெளிவந்து உலகப் புகழ் பெற்றவை. அதற்காகத்தான் அல்ஜஸீரா டிவி அவரை நேர்காணல் செய்தது. 
அக்மாட் ஜூல்கார்னைன் படித்தது சட்டம். ஆனால் அது தொடர்பான வேலையை அவர் செய்யவில்லை. 
""என்னால் ஆபிஸ் வேலை எல்லாம் செய்ய முடியாது. எனக்குப் பிடித்தமானது புகைப்படக் கலை. அதுவும் ஃபேஷன் போட்டோகிராபியில் புகைப்படம் எடுக்கப்பட வேண்டிய மாடல்களை "அப்படி இருங்கள்... இப்படிச் செய்யுங்கள்' என்று அதட்டி டைரக்ட் செய்வது எனக்குப் பிடித்தமானது'' என்கிறார். 
படித்தவுடன் அக்மாட் வேலை செய்தது, அவருடைய நண்பர் நடத்திய ஓர் இண்டர்நெட் கேஃப் - இல். அங்கே போட்டோ எடுத்துக் கொடுப்பார்கள். அக்மாட் அங்கே சாதாரண உதவியாளராகச் சேர்ந்தார் . இடையிடையே அவருடைய நண்பர் எங்காவது சென்றுவிடும்போது, வரும் வாடிக்கையாளர்களை அவ்வப்போது புகைப்படம் எடுத்ததுதான் அக்மாட் எடுத்த முதல் புகைப்படங்கள்.
அப்போதுதான் புகைப்படக்கலையின் மீது அடங்காத காதல் பிறந்திருக்கிறது அவருக்கு. இஅசஞச உஞந 1100ஈ கேமராவை வாங்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளுக்குள் நெருப்பாய் கொழுந்துவிட்டு எரிய, கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து 2 ஆண்டுகளில் கேமராவை வாங்கியிருக்கிறார். 
தொடக்கத்தில் இயற்கைக் காட்சிகளை எடுப்பதில்தான் ஆர்வம். இரு கால்களும், கைகளும் இல்லாத அவர், தான் ஓட்டுவதற்கேற்ற வாகனத்தைத் தயார் செய்தார். இதனால் தொலைவில் உள்ள இடங்களுக்குக் கூட, பிறர்துணையில்லாமல் சென்று அவரால் புகைப்படம் எடுக்க முடிந்தது. 
""ஒருமுறை ஒரு சிறு குன்றின் மீதேறி போட்டோ எடுக்கும்போது விழுந்துவிட்டேன். அதிலிருந்து லேண்ட்ஸ்கேப் புகைப்படங்கள் எடுப்பதை விட்டுவிட்டேன். மாடல்களை வைத்து புகைப்படம் எடுப்பதில் அதற்குப் பின் எனக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. பல்வேறு தயாரிப்பு பொருள்களுக்கான புகைப்படங்களை எடுத்துக் கொடுப்பதிலும் ஆர்வம் தோன்றியது'' என்கிறார் அக்மாட். 
அவர் எடுத்த புகைப்படங்களிலேயே அவருக்கு மிகவும் பிடித்தமான புகைப்படம் எது என்று கேட்டால், ""150 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பழைமையான உடைகளைப் போன்ற உடையணிந்த ஒரு பெண், நெல் வயல்களின் நடுவே நின்று போஸ் கொடுப்பதை எடுத்த புகைப்படம்தான் அது'' என்கிறார். 
இத்தனைக்கும் அவருக்கு விரல்கள் இல்லை. 
""முதலில் அதிக நீளமுள்ள லென்ஸ்கள் பொருத்திய பெரிய கேமராக்களை தூக்குவதற்கே என்னால் முடியவில்லை. விரல்கள் இல்லாமல் புகைப்படம் எடுக்க, கைகளின் தசைப்பகுதிகளை வைத்து முகத்தை நோக்கி கேமராவைக் கொண்டு சென்று கேமரா பட்டனை அழுத்திப் பழகினேன். படம் எடுக்கும்போது உடலில் அசைவு இருந்தால் படம் ஒழுங்காக வராது. அதனால் உடல் நடுங்காமல் புகைப்படம் எடுக்க பயிற்சி எடுக்கவே நிறைய நாட்களாகிவிட்டன. ஆனால் இப்போது பழகிவிட்டது. மிக நீண்ட லென்சுகள் பொருத்தப்பட்ட கேமராக்களையும் என்னால் தூக்க முடியும். அவற்றை வைத்து புகைப்படங்களை எடுக்கவும் முடியும்'' என்கிறார் அக்மாட்.
அக்மாட் புகைப்படக் கலையைத் தானாகவே கற்றுக் கொண்டிருக்கிறார். யூ ட்யூப்பில் உள்ள வீடியோ டுட்டோரியல் பகுதியைப் பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார். 
""நான் மிகவும் ஆர்வமாக யூ ட்யூப்பில் பார்த்து நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அதோடு அதில் சொல்லப்பட்டிருந்ததை உடனே செய்து பார்த்துவிடுவேன். திரும்பவும் சந்தேகம் வரும். மீண்டும் யூ ட்யூப்பை பார்ப்பேன். தெரிந்து கொள்வேன். 
புகைப்படங்களை எடுக்க நான் இவ்வாறு கற்றுக் கொண்டு, நல்ல புகைப்படங்களை எடுக்கத் தொடங்கியதும், இந்தோனேஷியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் டார்விஸ் ட்ரெய்டி அவருடைய புகைப்படப் பள்ளியில் என்னைச் சேரும்படி கேட்டுக் கொண்டார். நான் அங்கே கற்றுக் கொண்டது புகைப்படக் கலையை அல்ல. புகைப்படத் தொழிலை எப்படி நடத்துவது? தொழில்ரீதியான அதன் நியதிகள் எவை? என்பதைத்தான் அதிகம் கற்றுக் கொண்டேன். எனக்கு வாய்ப்புக் கொடுக்கும் நிறுவனங்களின் இயக்குநர்கள் என்னுடைய புகைப்படக் கலைத் திறமைக்காகவே வாய்ப்புக் கொடுக்கிறார்கள். எனவே நான் என் வேலையை மிகவும் உண்மையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் செய்ய வேண்டும் என்பதையே டார்விஸ் ட்ரெய்டியின் புகைப்படப் பள்ளியில் நான் கற்றுக் கொண்டேன்'' என்கிறார் அவர்.
கத்தார் நாட்டில் செயல்படும் 
அல்ஜஸீரா டிவி, கத்தாருக்கு வெளியே நடைபெறும் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய நிகழ்வுகளைப் படம் பிடிக்க நினைத்தபோதுதான் அக்மாட்டை நேர்காணல் செய்திருக்கிறது. 
""டிவியில் அந்த நேர்காணல் ஒளிபரப்பப்பட்ட உடனேயே நான் சமூக வலைதளங்களின் மூலம் உலகம் முழுவதும் தெரிந்த பிரபலமாகிவிட்டேன். அந்த நேர்காணலைப் பார்த்தவர்கள் எல்லாரும் தங்களுடைய இயலாமையை வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்கிறார். 
மலையேறுவது அக்மாட் ஜூல்கார்னைன்னுக்குப் பிடித்தமான ஒன்று. அவரின் உடல் இயலாமை பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதே இல்லை. 
""உயரமான இடத்துக்குப் போகவே எல்லாருக்கும் ஆசை. உயரப் போக போக இன்னும் உயரத்துக்குப் போக வேண்டும் என்றே எல்லாரும் விரும்புவார்கள். என்னைப் பொருத்த அளவில் எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் கீழே என்ன இருக்கிறது என்பதைப் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நினைவில் வைத்திருக்க வேண்டும்'' என்கிறார் அக்மாட்.

முழு கட்டுரையைப் படிக்க →