தரிசு நிலத்தில் "சூல்' கொண்ட நாவல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள உருளைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சோ.தர்மன் எழுதிய "சூல்' நாவலுக்கு நிகழாண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள உருளைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சோ.தர்மன் எழுதிய "சூல்' நாவலுக்கு நிகழாண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது.
மண்மணம் மாறாத, எளிமையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான சோ.தர்மனிடம் பேசினோம்:
""ஆங்கிலேயர் நம்மிடம் விட்டுச்சென்ற கண்மாய்களின் இன்றைய நிலை குறித்து சொல்வதுதான் "சூல்' நாவல். 1947- ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தபோது இந்தியாவில் 39, 640 கண்மாய்கள் இருந்தன. இன்று அந்தக் கண்மாய்களின் நிலை வேதனையாக இருக்கிறது. உலகத்தில் மிக முக்கியப் பிரச்னையாக உருவாகி வருவது தண்ணீர் பிரச்னைதான். மற்ற நாடுகள் அது குறித்து விவாதிக்க தொடங்கி விட்டன. நாம்தான் அது பற்றி யோசிப்பதில்லை. கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்கள்தான் உள்ளன. மழைக்காலங்களில் கண்மாய்கள் பெருகி
விவசாயம் நடைபெற்று வந்தது. ஆனால், இன்றோ, கண்மாய்கள் காணாமல் போய்விட்டன.
நானும் ஒரு விவசாயிதான். எனக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை தண்ணீர் இல்லாமல் தரிசாகப் போட்டு விட்டேன். இது போல் நாடு முழுவதும் ஏராளமான விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் விவசாயத்தைக் கைவிட்டு மாற்று வேலைக்குச் செல்கின்றனர். இந்தச் சிந்தனைதான் இந்த நாவலை எழுத எனக்குத் தூண்டுதலாக இருந்தது. கரிசல் மண் சார்ந்த விவசாயிகளின் யதார்த்தமான வாழ்வியல் போராட்டங்களை கூறுவதுதான் இந்த நாவல்.
இந்த நாவலுக்கு "சூல்' என்று பெயர் வைத்துள்ளேன். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நம் பகுதியில் நிறைசூலி என்று கர்ப்பிணிப் பெண்களை அழைப்பார்கள். ஓர் உயிரை உருவாக்க கூடியவள் அவள். அது போல்,கண்மாய்களும் நீர்வாழ் பறவைகள், மீன்கள், தவளை என ஏராளமான உயிர்களை உருவாக்குவதற்கு துணையாக இருக்கக் கூடியது. அதனால்தான் எனது நாவலுக்கு "சூல்' என பெயரிட்டுள்ளேன்.
கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவலைச் சேர்ந்த கி.ரா.வின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டுத்தான் என் எழுத்துப் பணியைத் தொடங்கினேன். ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் குறிப்பிட்ட ஒரு படைப்பு மட்டுமே படைப்பாளிக்கு ஊக்கத்தை கொடுத்ததாகக் கூற முடியாது.கி.ரா.வின் படைப்பு முழுவதுமே எங்களின் கரிசல் காட்டிற்குள்தான் இருக்கும். அது எங்கள் பூமி. அவரின் படைப்புகள் எல்லாம் ஏதோ நான் எழுதியது போன்றே இருக்கும். நிஜ மனிதர்களைப் பற்றி கூறுவதுதான் அவரது படைப்புகள். அவரின் படைப்புகள்தான் என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பின் நான் எனக்கென தனி எழுத்து நடையை உருவாக்கி கொண்டேன்.
விஞ்ஞானத்தையும் தாண்டி பாரம்பரிய விவசாய அறிவைப் பயன்படுத்த அரசு முன்வர வேண்டும். பறவைகள், விலங்குகள் இயற்கையுடன் இணைந்து வாழ்வதால் அவற்றின் செயல்பாடுகள் மூலம் பருவ நிலையை விவசாயிகளால் கணிக்க முடியும். இந்த இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை முற்றாகப் புறக்கணித்து விட்டு பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என்ற பெயரில் புதிய திட்டங்களைக் கொண்டு வந்து நீர்நிலைகளைப் பாதுகாக்காமல் அழித்ததால், விவசாயிகள் தங்களுடைய பாரம்பரிய விதைகளை இழந்து தவிக்கிறார்கள்.
கண்மாயில் கிடக்கும் மண் எங்கள் நிலத்திலிருந்து கண்மாய்க்கு வந்த மண். அதை விவசாயிகள் மீண்டும் எடுத்து விவசாய நிலத்தில் போட்டால்தான் மண் வளம் பெருகும். ஆனால், அதை விவசாயிகள் எடுத்து பயன்படுத்த சில துறைகள் அனுமதிப்பதில்லை. இது குறித்து,
வசாயிகளுக்கும்,கண்மாய்களுக்குமான உறவை அரசு முற்றாக அறுத்து விட்டது என தினமணியில் கட்டுரை எழுதியுள்ளேன். விளக்கி வைத்த வெங்கல கும்பா போல் கண்மாயை வைத்திருக்க வேண்டும் என "சூல்' நாவலின் ஒரு பாத்திரம் பேசும். ஒவ்வொரு மழை துளி விழும் போதும் கும்பிட்டு கையேந்தி வாங்க வேண்டும் என "சூல்' பேசும்.
"நீரின்றி அமையாது உலகு' என சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவன் சொல்லி சென்று விட்டான். அவர் வழி வந்த நாம் நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறி விட்டோம். சுதந்திரத்திற்குப் பின்பு கண்மாய் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தவில்லை. இந்த வேதனையும், கோபமும்தான் இந்த நாவல் எழுதத் தூண்டியது.
பொதுவாக நானும்,என் பகுதி மக்களும் சாதாரணமாக அனுபவிக்கக் கூடிய விஷயங்களையே தொடர்ந்து எழுதி வருகிறேன். நாவல் என்பது பரந்த வெளியில் எழுதக் கூடிய சுதந்திரத்தை எனக்குக் கொடுக்கிறது'' என்றார்.