முகப்பு
தினமணி கதிர்

இலவச நடனப் பயிற்சி!

தென்னிந்தியாவின் பெரும்பான்மையான கோயில்கள் நீண்ட நெடுங்காலமாக பாரம்பரிய கலைகளை வளர்க்கும் இடமாகவும், செழித்தோங்கும் இடமாகவும் விளங்கின.

தினமணி கதிர்

இலவச நடனப் பயிற்சி!

தென்னிந்தியாவின் பெரும்பான்மையான கோயில்கள் நீண்ட நெடுங்காலமாக பாரம்பரிய கலைகளை வளர்க்கும் இடமாகவும், செழித்தோங்கும் இடமாகவும் விளங்கின.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:14 AM
பகிர்:

தென்னிந்தியாவின் பெரும்பான்மையான கோயில்கள் நீண்ட நெடுங்காலமாக பாரம்பரிய கலைகளை வளர்க்கும் இடமாகவும், செழித்தோங்கும் இடமாகவும் விளங்கின. தற்போது   ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் உள்ள ஒரு நடன பயிற்சிப் பள்ளி இயங்குகிறது. இந்த நகரில் உள்ள லக்ஷ்மி சரஸ்வதி ஞான மந்திரம் கோயில் வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது, "பெத்த வெங்கடராவ் நடனப் பள்ளி'. இங்கு, பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு பழைமையான நடனக் கலைகளில் ஒன்றான குச்சுப்புடி நடனம் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது.
காக்கிநாடாவைச் சேர்ந்த பெத்த நாகேஸ்வரராவ், அவரது சகோதரர் பெத்த சத்யநாராயணா ஆகியோர் இணைந்து, தங்கள் தந்தையின் பெயரில் இந்த நடனப் பள்ளியை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பெத்த நாகேஸ்வரராவ் கூறுகையில், ""பல குழந்தைகள் பழைமையான கலை வடிவங்களை கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவர்களின் பொருளாதார நிலை, அந்த கனவுகளை முழுமையடையச் செய்வதில்லை. அதேநேரத்தில், குச்சுப்புடி நடனத்தின் மீது எங்களுக்கு உள்ள தீராத காதலால், அதைப் பிறருக்கு குறிப்பாக  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.  
இந்தப் பள்ளியை தொடங்கியபோது, நிறைய மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கேற்ற இடம் எங்களிடம் இல்லை. எனவே, நாங்கள் இந்த கோயில் நிர்வாகத்தை அணுகி, நடனப் பள்ளிக்கு இடம் ஒதுக்கித் தருமாறு கேட்டோம். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு எங்களுக்கு கோயில் வளாகத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்தனர்'' என்கிறார்.
குச்சுப்புடி நடனக் கலைஞரான பெத்த சத்யநாராயணா பயிற்சி அளிக்க, பெத்த நாகேஸ்வரராவ் மேற்பார்வையில் நடைபெறும் இந்த நடனப் பள்ளியில், தற்போது 160 குழந்தைகள் இலவசமாக குச்சுப்புடி நடனம் கற்று வருகின்றனர். பயிற்சி பெற வரும் குழந்தைகளின் பொருளாதாரப் பின்புலம், அவர்களுக்கு நடனத்தின் மீது உள்ள ஆர்வம் ஆகியவற்றை முழுமையாக ஆராய்ந்த பிறகே, அவர்களை இந்தப் பள்ளியில் சேர்த்துக்கொள்கின்றனர்.
""தொடக்கத்தில், இந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று எங்களுடைய யோசனையைத் தெரிவித்து,
மாணவர்களை நடனப் பள்ளியில் சேர ஊக்குவித்தோம். அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆசிரியர்கள், நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக ஒத்துழைத்ததுடன், மேலும் பல பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ள வழிகாட்டினர்'' என்கிறார் நாகேஸ்வரராவ். 
நடனப் பள்ளி தொடங்கிய போது, மாணவர்களைத் தேடி சகோதரர்கள் இருவரும் சென்ற நிலையில், தற்போது இந்தப் பள்ளியின் சிறப்பு அறிந்து மாணவர்களே இங்கு தேடி வருகின்றனர். இன்றைய நிலையில், சுமார் 300 மாணவர்கள் இந்தப் பள்ளியில் நடனம் கற்றுக்கொள்ள காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் பாரம்பரிய நடனத்தை இலவசமாக கற்றுக்கொடுக்கும் மிகப்பெரிய நடனப் பள்ளி இதுவாகவே இருக்கும்.
இந்தப் பள்ளிக்கான அனைத்து செலவுகளையும் நாகேஸ்வரராவே ஏற்றுக் கொள்கிறார். மாணவர்
களுக்கு அடையாள அட்டை, நடன ஒப்பனைப் பொருள்கள், பைகள், குறிப்பேடுகள், குடிநீர் போத்தல்கள் போன்றவை அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகின்றன. 
இதுகுறித்து நாகேஸ்வரராவ் மேலும் கூறுகையில், ""இந்த நடனப் பள்ளி அல்லாமல், காக்கிநாடாவில்  இறால் பண்ணை மற்றும் சீட்டு நிதிநிறுவனம் ஆகியவற்றை நான் நடத்தி வருகிறேன். அதோடு, சத்தீஸ்கரில் காவல் துறைஅதிகாரியாகப் பணியாற்றி வரும் என் மகன், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் எனது மகள், மருமகன் ஆகியோரிடமும் சில உதவிகளைப் பெற்றுக்கொள்கிறேன்.  ஆனால்,  நடனப் பள்ளிக்காக எந்த ஒரு தனிநபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ அன்பளிப்புகள் எதையும் பெறுவதில்லை''  என்கிறார்.
வாரத்தின் இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடன வகுப்புகள் நடைபெறுகின்றன. சனிக்கிழமை மாலை 6.30 முதல் இரவு 9 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 11.30 மணி வரையும் நடைபெறும் இந்த வகுப்புகளில் தியரி மற்றும் செயல்முறை பயிற்சிக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுகிறது.
""எங்கள் மாணவர்களில் யாரேனும் ஒருவர் வருங்காலத்தில் வெற்றிகரமான நடன ஆசிரியராக உருவாகி, இந்த அழகிய நடனக் கலையை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து முன்னெடுத்துச் செல்வார்  என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்கிறார்    பெத்த வெங்கடராவ்.

முழு கட்டுரையைப் படிக்க →