அப்பா
சூரியன் தனது வெளிச்சத்தைக் குறைத்து தனது நண்பனான நிலாவுக்கு வழி விடத் தொடங்கியிருந்த நேரம். பூமியின் வெப்பம் தணிக்க லேசான சாரலை வானம் அனுப்பிய வண்ணம் இருந்தது.
தினமணி கதிர்அப்பா
சூரியன் தனது வெளிச்சத்தைக் குறைத்து தனது நண்பனான நிலாவுக்கு வழி விடத் தொடங்கியிருந்த நேரம். பூமியின் வெப்பம் தணிக்க லேசான சாரலை வானம் அனுப்பிய வண்ணம் இருந்தது.
சூரியன் தனது வெளிச்சத்தைக் குறைத்து தனது நண்பனான நிலாவுக்கு வழி விடத் தொடங்கியிருந்த நேரம். பூமியின் வெப்பம் தணிக்க லேசான சாரலை வானம் அனுப்பிய வண்ணம் இருந்தது.
லேசாய் வீசிய காற்றில் சாலையோர மரங்கள் நடனமாடி, சாரலில் குளித்துக் கொண்டிருந்தன. காரில் இருந்து ரசித்துக் கொண்டிருந்த சரவணனின் காது மடலில் கிள்ளிய பூங்கொடி, ""என்ன அதுக்குள்ள கனவா? பெட்ரோல் போட்டு முடிச்சாச்சு. கிளம்புங்க'' என்றாள்.
அந்த கிராமத்து சாலையில் இருந்த ஒரே பங்க் இதுதான். நாளும் நகர வாழ்க்கையை அனுபவித்து வந்தவனால், கிராமத்து மண்ணின் வாசனையை சடாரென ஒதுக்க முடியவில்லை. காரை சாலையோரத்தில் ஒதுக்கி விட்டு இறங்கியவன், மனைவியையும் அழைத்தான்.
""என்னங்க... நீங்க? பிள்ளைய வீட்டில விட்டுட்டு வந்திருக்கோம். சீக்கிரம் போனாதான் முடியும். இல்லைன்னா பசியால பிள்ளைக வாடிடும்'' என்றவாறே இறங்கினாள். பூங்கொடியும், சரவணனும் இதே கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்தான். பக்கத்து, பக்கத்து தெருக்களில்தான் குடியிருந்து வந்தனர். இரண்டு பேரும் உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில படிக்கும் போதிலிருந்தே ஒன்றாய் படிச்சவக. பத்தாம் கிளாஸ் வரை படிச்சதும் நிறையப் பேர் அதோடு படிப்பை விட்டுட்டு கல்யாணம், காட்சின்னு செட்டிலாயிட்டாங்க. சில பேர் குடும்ப தொழில்ல நுழைஞ்சிட்டாக. நாலஞ்சு பேர்தான் வெளியூருக்கு போய் படிச்சாங்க. அதுல பூங்கொடியும் ஒருத்தி.
10 கிலோ மீட்டர் தூரமுள்ள மேல்நிலைப்பள்ளிக்கு கிராமத்திலிருந்து சென்றவர்கள் 10 பேர்தான். அதிலும், பொம்பளை பிள்ளைங்கள்ல பூங்கொடி மட்டும்தான் வெளியூருக்குப் போய் படிச்சவ. அதுவும், சரவணனோட அப்பா, பூங்கொடியோட அப்பாட்ட தலைபாடா அடிச்சு பேசினதாலதான். இல்லைன்னா அவளும் அப்பவே படிப்பை முடிச்சிட்டு கிடந்திருக்க வேண்டிதுதான். சரவணனோட அப்பாவைப் பார்க்கும் போதெல்லாம் பூங்கொடி இதச் சொல்லி சொல்லியே சந்தோஷப்பட்டுக்கும்.
வெளியூருல படிச்ச கையோட அங்கயே கவர்ன்மென்ட் காலேஜ்ல இரண்டு பேருமே சேர்ந்தாங்க. இப்பவும் சரவணனோட அப்பாதான் பூங்கொடிக்கு சப்போர்ட் பண்ணி சேர்த்து விட்டாக. படிச்சு முடிச்சு இரண்டு பேருக்கும் சென்னையிலே வேற,வேற கம்பெனில வேலை கிடைச்சு வேலைக்கும் போய்ட்டாக.
ஆனாலும், ஒண்ணாம் கிளாஸ்ல இருந்து ஒண்ணாவே இருந்த இரண்டு பேருக்கும் பிரிஞ்சு இருக்க முடியல. பிள்ளைக மனசை படிச்சு வைச்சிருந்த சரவணனோட அப்பாதான், பூங்கொடி அப்பாட்ட பேசி கல்யாணத்தையும் முடிச்சு வைச்சாக. ஒரே ஊரு. பழகின பிள்ளைக. நமக்கு ஒத்தாசையா கடைசி வரை நம்ம கூட இருந்து பார்த்துக்கும்னு சொல்லிச் சொல்லியே பூங்கொடிக்கும், சரவணனுக்கும் கல்யாணத்தை முடிச்சாக.
""சரவணன் பிறந்து 4 வருஷத்திலே அவன் அம்மா இறந்து போய்ட்டா. அவ போன பிறகு, சரவணன்தான் எல்லாமேன்னு வாழ்ந்திட்டேன். அவனுக்கு பிடிச்ச எல்லாத்தையும் செஞ்சேன். இப்ப, அவனுக்குப் பிடிச்ச உன்னையும் கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். சந்தோஷமா இருங்கன்னு'' வாழ்த்தி வழியனுப்பி வச்சாரு சரவணனோட அப்பா.
"என்னங்க.. ரோட்டுல நின்னுகிட்டு பேந்த,பேந்த முழிக்கீங்க. என்னாச்சு உங்களுக்கு?'' என்று தோள் தட்டியதும், நிஜ உலகிற்கு வந்தான் சரவணன்.
""பிள்ளைக வீட்டில இருக்குங்கிற அக்கறை இருக்கா உங்களுக்கு? அதான் சொன்னேன். உங்க அப்பாட்ட போன்ல பேசிக்கலாம்னு. கேட்டாதானே?'' என்று எரிந்து விழுந்தாள் பூங்கொடி.
அப்பா வீட்டுக்குப் பக்கத்தில வந்துட்டு அவரைக் கூட பார்க்காம போன் செய்யவா? என்று மனசுக்குள் கேட்டுக் கொண்டவன், மெளனமாய் காரில் ஏறி ஸ்டார்ட் செய்தான். தனியா இருக்கிற அப்பாவைப் பார்க்க போவதற்கு கூட அவனுக்கு நேரமில்லை என்பதை விட மனைவியின் நச்சரிப்புக்குப் பயந்து போவதை தவிர்த்திருந்தான். கல்யாணம் ஆகி 4 வருஷமாச்சு. வாரத்திற்கு ஒரு நாள் என்று பார்க்க வந்த காலம் மாறி மாதத்திற்கு ஒரு நாளாக குறைந்து. பின்னர் எப்பவாவது என்று சுருங்கி விட்டது. அதுவும் சரவணன் மட்டும்தான் ஊருக்கு வந்து அப்பாவைப் பார்த்து செல்வான்.
அப்பாவைப் பார்க்கப் போகும் போதெல்லாம், ""ஏன்டா நாளெல்லாம் வேலையும் பார்த்துட்டு எதுக்கு இங்கே வந்து அலைஞ்சு உடம்பை கெடுத்துக்கிடுற. போன்ல பேச வேண்டியதுதானப்பா. நீ இங்க வந்திட்டா பூங்கொடியையும், பிள்ளைகளையும் யார் பார்ப்பா?'' என்று சொல்லும் போது சரவணனுக்கு இதயத்திலிருந்து வலி உண்டாகி தொண்டையை அடைக்கும். பேச முடியாமல் வேதனையை மட்டும் பதிலாக்கி விட்டு திரும்புவான்.
அம்மா இல்லாமல் அவர் பட்டபாடுதான் என்ன? காலையில எழுப்பி, குளிக்க வைச்சு, சாப்பாடு தயார் செய்து, சம்படத்தில் மத்தியான சாப்பாட்டை எடுத்து வச்சு, காலையில சாப்பாடு கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு, வயலுக்கு கிளம்பி ஓடும் அப்பா, பல நேரம் இவன் வளர்ச்சிக்காக பல நாள்கள் சாப்பிட்டதேயில்லை.
சாயங்காலமும் அதே நிலைதான். மகனுக்காக தன் சுக,துக்கங்களை ஒதுக்கி வைத்தவரை நாம் ஒதுக்கி வைக்கிறோமோ? என்ற கேளவி பல நேரம் சரவணனுக்குள் கிளம்பும். ஆனாலும், அப்பா சொல்லும் மந்திர வார்த்தைகள் அவனைக் கட்டிப் போட்டுரும்.
""ஏலே. பொண்சாதி இல்லாம நான் படுற பாடு சொல்லி மாளாதுடா. காலம் பூரா அந்த பிள்ளைய கண்கலங்காம வச்சுக்கணும்டா. ரெண்டு பேரும் விரும்பி வேற கல்யாணம் பண்ணியிருக்கீங்க. பார்த்து நடந்துக்கப்பா'' என்று சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், சரவணனின் மனக்கண் முன் ஓடி மனைவியிடம் கோபப்படாமல் அவன் கைகளைக் கட்டிப் போட்டு விடும்.
இன்று பூங்கொடியின் மாமன் மகனுக்கு கல்யாணம். காலையில் வந்தவர்கள். உறவுகளைப் பார்த்து பேசி முடிக்க இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. இவ்வளவு தூரம் வந்துட்டு பக்கத்துல இருக்கிற அப்பாவைப் பார்க்காம போனா எப்படினு சரவணன் சொல்லவும், ""ஏன், போன்ல பேச வேண்டிதான? அதான் போய் பார்த்துட்டுதான இருக்கீங்க. இன்னைக்கு போகலைன்னா என்ன?'' என்று எரிச்சலாய் பேசியவளை சமாதானப்படுத்தி அப்பாவைப் பார்க்க அழைத்துச் சென்றான் சரவணன்.
நீண்ட காலத்துக்கு பின் இருவரையும் பார்த்தவருக்கு சந்தோஷம். அவர் கண்கள் இருவருக்கும் பின்னால் தேடின.
""ஏம்பா பேரப்பிள்ளை வரல. அவனையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல. கண்ணுக்குள்ளே நிக்குப்பா'' என்றவர் தெருக்கோடியிலுள்ள கடைக்கு போய் பூங்கொடிக்கு பிடிச்ச பணியாரத்தையும், டீயையும் வாங்கி வந்தார். பணியாரத்தைப் பார்த்த பூங்கொடி அருவருப்பாய் வாங்கி வைத்துக் கொண்டாள். சாப்பிடவில்லை. ""முன்னால நீ இங்க வரும்போதெல்லாம் இதத்தான இஷ்டப்பட்டு சாப்பிடுவே?'' என்றவரின் முகத்தைக் கூட பார்க்காமல், ""என்னங்க நேரமாச்சு, பிள்ளை தனியா இருப்பான்'' என்றாள்.
""ஆமாப்பா, நீ கிளம்பு . பாவம் பிள்ளை தேடும்'' என்று வாசல் வரை வழியனுப்பினார் அப்பா.
காரில் கொஞ்ச தூரம் சென்றவன் திடீரென்று நிறுத்தி இறங்கினான். ரோட்டை வெறிச்சு பார்த்தபடி நின்றவனிடம், ""பிள்ளை தேடும். சீக்கிரம் போகணும்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா, பதட்டப்படாம காரை நிறுத்திட்டு நிக்கறீங்க. சீக்கிரம் காரை எடுங்க'' என்ற பூங்கொடியின் கையைப் பற்றிய சரவணன், ""வீட்டில இருக்க பிள்ளைய பார்க்காம உன்னால ஒரு நாள் கூட இருக்க முடியல. பதறுத. இத மாதிரிதானே என் அப்பாவும். என்னை பார்க்கணும்னு ஏங்கி கிட்டிருப்பாக. தேடிட்டு இருப்பாக. கடைசி வரை ஒத்தாசையா இருப்பானு சொல்லி,சொல்லித்தான நம்ம கல்யாணத்தை பண்ணி வச்சாக. பிள்ளைக எல்லாருமே ஒண்ணுதான. உனக்கு உன் பிள்ள பெருசின்னா, எங்க அப்பாவுக்கு அவரு பிள்ளை பெருசுதானே?'' ஒரே மூச்சில் முடித்தவன், காரை வேகமாகக் கிளப்பினான்.
வீட்டிற்கு வந்தும் கூட சரவணன் பேசவில்லை. சரவணனின் வார்த்தைகள் பூங்கொடியை என்னவோ செய்தது. "சரி தானே அவரது பிள்ளையைப் பார்க்க அவர் ஆசைப்படத்தானே செய்வாரு?' என்று நினைத்தவள்... ""என்னங்க, நான் 10 நாள் லீவு போடுதேன். நீங்களும் லீவு போட்டிருங்க. நாம மாமாவோட போய் இருப்போம்'' என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தான் சரவணன்.
""ஆமாங்க நிஜமாத்தான், நான் தப்பு பண்ணிட்டேன்'' என்றாள் பூங்கொடி.
""சரி கிளம்புங்க'' என்றவாறே துணிகளை எடுத்து வைக்க தொடங்கினாள். சரவணன் லீவு சொல்லவும், அவனின் கைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது. அப்பாவோட நண்பர்தான் அழைத்தார்.
""பூங்கொடி பாரேன். ஆயுசு நூறுதான் அப்பாவுக்கு'' என்றவாறே செல்பேசியை ஆன் செய்தான்.
""சரவணா , அப்பா நம்மள விட்டுட்டு போய்ட்டாருப்பா. நேத்து நீங்க பாத்துட்டு போனவுடன் லேசான நெஞ்சு வலி வந்திருச்சு. போய்ட்டுதான் இருப்பான் கூப்பிட்டுருவோம்னு சொன்னேன். வேண்டாம்பா, அங்க பேரன் தனியா காத்திட்டிருப்பான்... கூப்பிட வேண்டாம்னுட்டார்'' என்றவுடன் பிள்ளையை கட்டிப் பிடித்து கதறி அழுதான்.
""ஐயோ, நான் இப்பதான் பாசத்தோட வலியை புரிஞ்சி கிளம்பினேனே மாமா'' என்று தலையிலடித்து அழுதாள் பூங்கொடி. அழும் அப்பாவையும், அம்மாவையும் பார்த்து பிள்ளையும் அழுதது.