தினமணி கதிர்

குறட்டை... மூச்சுத் திணறல்!

இரவு உறக்கத்தின் போது ஏற்படும் குறட்டையும் மூச்சுத் தடையும் நீங்கள் குறிப்பிடும் உபாதையின் முக்கிய அறிகுறிகளாகும். ஆழ்ந்த உறக்கத்தில் தொண்டையைச் சுற்றி இருக்கும் தசைகள் தளர்ந்து

DIN

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
என்னுடைய வயது 46. நான் சமீப காலமாக ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) எனும் நோயால் அவதிப்படுகிறேன். தொண்டைப் பகுதியானது இரவு படுக்கும் போது, அடிக்கடி அடைப்பதால், இரவு தூக்கம் தடைபடுகிறது. தலைவலியும் கழுத்து வலியும் வருகிறது. என்னுடைய உடல் எடை 82 கிலோ. உடற்பயிற்சி செய்து வருகிறேன். தேவையான பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் இந்த பிரச்னையை சரி செய்யுமா? ஆயுர்வேதத்தில் இதற்கு என்ன சிகிச்சை வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன?
-ரவி, சென்னை.
இரவு உறக்கத்தின் போது ஏற்படும் குறட்டையும் மூச்சுத் தடையும் நீங்கள் குறிப்பிடும் உபாதையின் முக்கிய அறிகுறிகளாகும். ஆழ்ந்த உறக்கத்தில் தொண்டையைச் சுற்றி இருக்கும் தசைகள் தளர்ந்து ஓய்வடைவதன் காரணமாகவே, குறட்டையும் மூச்சுத்திணறலும் ஏற்படக்கூடும். உடல் பருமன், தைராய்டு, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை உபாதை, மதுபானம் அருந்துதல் போன்றவற்றால் குறட்டை விடுதலும், தூக்கத்தின் போது மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது.
முக்கியமாக இரு வகையான CENTRAL மற்றும் OBSTRUCTIVE SLEEP APNEA இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பக்கவாதம், இதய இயக்கம் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் CENTRAL SLEEP APNEA வருவதாகக் கூறப்படுகிறது. OBSTRUCTIVE SLEEP APNEA என்பதில் குறட்டை நிச்சயமாக இருக்கும். பெரும்பாலும் ஆண்களுக்கு நடுத்தர வயது உடையவர்களுக்கு அதிகம் காணப்படும். குழந்தைகளுக்கு டான்ஸில், அடினாயிடு, உடல் பருமன், சளியினால் மூக்கு தொண்டை அடைப்பு இருந்தால் குறட்டை சத்தத்துடன் மூச்சுத்திணறலுடன் உறங்குவதைக் காணலாம்.
இந்த உபாதையில் உறக்கமின்மை என்பது இல்லை. உறங்குவார்கள், ஆனால் அடிக்கடி இரவில் எழுந்து கொண்டு கழிப்பறைக்குச் சென்று வருவார்கள். தொண்டை வறட்சியாக இருப்பதையும் உணர்வார்கள். 7-8 மணி நேரம் உறங்கி எழுந்தாலும், காலையில் புத்துணர்ச்சியிருக்காது. சோர்வாக இருக்கும். மூளைக்குத் தேவையான அளவு பிராணவாயு கிடைக்காததால் மறுநாள் பகல் நேரத்தில் அதிக உறக்கம் வரும். 
பிறர் சொன்னால்தான், குறட்டை விடுவது தெரிய வரும். எடுத்துக் கூறுவதற்கு யாரும் இல்லாமற் போய் தனியாக படுத்திருப்பவர்களுக்கு, மறுநாள் ஏற்படும் சோம்பல், வலுவற்ற தன்மை, ஊன்றி செயலாற்ற முடியாமை, ஞாபக மறதி, பகல் தூக்கம் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைக் காண்பது நலம். தூக்கத்தின் தன்மையை நன்கறிந்து, மூளைக்கு எந்த அளவு பிராண வாயு கிடைக்கிறது என்பதைப் பற்றி அறிய நவீன உபகரணங்கள் தற்சமயம் வந்துள்ளன. உடல் உபாதைக்கு ஏற்ற மருந்துகளைக் கொடுத்துக் குறைத்து விட்டாலே, குறட்டையும் மூச்சுத் திணறலும் குறைந்து நன்கு தூங்க முடியும். மேலும் மூச்சுக்குழாயை விரிவடையச் செய்து, பிராணவாயு மூளைக்கும் இதயத்திற்கும் கிடைக்கக் செய்து, குறட்டையைக் குறைக்கும் சிறிய பெட்டி வடிவில் (பேட்டரி பொருத்தப்பட்டது) வந்துள்ள CPAP (Continuous Positive Airway Pressure) உபகரணம் பயன்படுத்த மிகவும் நல்லது. இரவில் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். முகத்தாடையை முன்னிறுத்தி வைக்கும் ORAL APPLIANCES உபகரணங்களும் தற்சமயம் வந்துள்ளன. கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு, ரத்தக்கொதிப்பு, இதய பாதிப்புகள், கணவன் மனைவி தனியே படுத்துறங்குதல் போன்ற பிரச்னைகளைத் தோற்றுவிக்கும். இந்த குறட்டையுடன் கூடிய மூச்சுத்திணறல் தூக்கத்திற்கு, பொது ஒழுக்கமாக- இரவில் பல் தேய்த்தல், இரவில் வெதுவெதுப்பான நீரில் குளித்தல், இரவு உணவை படுப்பதற்கு 2 மணி நேரம் முன்பே சாப்பிடுதல், குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளுதல், காலை வெயில் உடலில் படுமாறு நடைப்பயிற்சி செய்தல், இரவு உறக்கத்திற்கு நான்கு மணி நேரம் முன்பே நரம்பு ஊக்கிகளான-காபி , டீ, மதுபானம் சாப்பிடுவதை நிறுத்திவிடுதல், சரியான நேரத்திற்கு படுத்துறங்கி விழித்தெழுதல், படுத்துறங்கும் அறையின் சுவர் வெளிர் நிறப் பச்சை அல்லது நீல நிறமாக இருத்தல், காற்றோட்ட முள்ள அறையாகவும், தனக்குச் சுகமான அளவில் தலையணை, படுக்கை, படுக்கை விரிப்புகள் பயன்படுத்துதல் போன்றவை நல்லது.
நீங்கள் புதிய நன்கு பழுத்த எலுமிச்சம் பழச்சாறு 25 மி.லி. எடுத்து அதில் தேன் 25 மி.லி. கலந்து 250 மி.லி. கொதித்து ஆறிய இளஞ்சூடான தண்ணீருடன் காலை, இரவு உணவிற்குப் பிறகு 2 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடவும். உடலில் கொழுப்புச் சத்து சேருவது குறைவதுடன், உள்ள கொழுப்புச்சத்தும் குறைந்து உடல் இளைக்கும். ஆனால் தினம் இரவு கோதுமையைத் தவிர அரிசியால் தயார் செய்த உணவோ, நெய், தயிர், எண்ணெய், வெண்ணெய் முதலிய கொழுப்புப் பதார்த்தங்களையோ உட்கொள்ளக் கூடாது. பகலில் அரிசி சாதம் சாப்பிடலாம். 
வரணாதிகஷாயம் 15மி.லி. + 60 மி.லி. சூடு ஆறிய தண்ணீர் + 3 மி.லி. தேன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 2 மாதங்கள் சாப்பிட, தலை வலி, கழுத்து வலி, உடல் பருமன் ஆகியவை நன்கு குறையும்.
(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT