முகப்பு
தினமணி கதிர்

பாரம்பரிய நடனத்துக்கு  உயிரூட்டியவர்!

சுஃபி கதக் நடன கலைஞராகவும், இயக்குநராகவும் விளங்கும் மஞ்சரி சதுர்வேதி கடந்த 20 ஆண்டுகளாக ஆன்மிகமும், மறை பொருளும் கலந்த இந்த நடனத்தை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மேடையில் நிகழ்த்தி வருகிறா

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

சுஃபி கதக் நடன கலைஞராகவும், இயக்குநராகவும் விளங்கும் மஞ்சரி சதுர்வேதி கடந்த 20 ஆண்டுகளாக ஆன்மிகமும், மறை பொருளும் கலந்த இந்த நடனத்தை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மேடையில் நிகழ்த்தி வருகிறார். காலப்போக்கில் அழிந்துவிட்ட இந்த பாரம்பரிய நடனத்தை ஆடும் ஒரே நடன கலைஞர் உலகிலேயே இவர் ஒருவர்தான். பண்டைய நாட்களில் இந்த நடனம் நடனமங்கைகளால் அரசவைகளில் ஆடப்படும் நடனம் என்ற தவறான கருத்துக்கு எதிராக அழிந்துவரும் சுஃபிகதக் எனப்படும் இந்த நடனத்தைப் பயின்று மக்கள் கவனத்தையும், பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார் மஞ்சரி சதுர்வேதி.

லக்னௌ யூனிவர்சிடியில் சுற்றுச்சூழல் அறிவியல் பட்டம் பெற்ற மஞ்சரி சதுர்வேதி, உத்தரப்பிரதேசம் சங்கீத் அகாதெமியின் கதக் கேந்திராவில் கதக் நடனம் கற்றுக் கொண்டார். அப்போதுதான் நவாப்கள் ஆட்சி காலத்தில் அரசவையில் ஆடும் சுஃபி கதக் நடனம் பற்றி கேள்விபட்டார். இந்த நடனம் நாளடைவில் மறைந்து விட்டதாக அறிந்தவர் மீண்டும் அந்த நடனத்தைக் கற்று மக்களிடம் அறிமுகப்படுத்த விரும்பினார்.

இதைப்பற்றி மேலும் தகவல்களை அறிய முயற்சித்தபோது, பிரான் நெவிலி என்பவர் எழுதிய "தி நாச்கேர்ள்ஸ் ஆஃப்' இந்தியா என்ற புத்தகம் இவருக்கு கிடைத்தது. ஆனால் இந்த நடனமாடும் பெண்களை தேவதாசிகள் என குறிப்பிட்டிருந்தது இவருக்குப் பிடிக்கவில்லை. இப்படி குறிப்பிடுவது காரணமாகவே பெண்கள் இந்த நடனத்தைக் கற்க முன்வரவில்லை என்பதும்
தெரிந்தது.

அதிர்ஷ்டவசமாக இந்த நடனத்தை பயிற்சியளிக்கும் புல்லா ஷா, அமீர் குஸ்ரூ, மௌலானா ரூபி ஆகிய நடன கலைஞர்கள் இருப்பதை அறிந்து, சுஃபி ககத் நடனத்தை அவர்கள் மூலம் மஞ்சரி சதுர்வேதி கற்றுக் கொண்டார்.

இதுவரை 24 நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள மஞ்சரி சதுர்வேதி, சில பாலிவுட் படங்களிலும் சுஃபி கதக் நடனத்தை இயக்கிக் கொடுத்துள்ளார். இதுவரை கதக் நடனத்தில் இப்படியொரு பிரிவு இருப்பது எங்களுக்குத் தெரியாது. அழிந்து வந்த கலையை மீட்டெடுத்து அறிமுகப்படுத்தியிருப்பது ஆச்சரியமாக உள்ளது என்று கலை விமர்சகர்களும்,
ரசிகர்களும் பாராட்டியிருப்பது இவருக்கு பெருமையாக உள்ளது. இதனால் பல உறுப்பினர்களைச் சேர்த்து "தி கோர்ட்டிசன்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதற்கு நிதியுதவியும் அளித்து வருகிறார்.

நடனக் கலைஞர் என்ற முறையில் அதற்குரிய கௌரவத்தை நான் எதிர்பார்க்கிறேன். சுஃபி கதக் நடனத்தைப் பற்றி நான் செய்த ஆய்வுகளுக்கும், நடனத்தில் பயிற்சி பெற்று மேடையேற்றிய பின் கிடைத்த பாராட்டுகளை என் முயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். அரசவைகளில் ஆடியதற்காக இந்த நடனத்தை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதோ விமர்சிப்பதோ தவறு.

கலை நயத்துடன் கூடிய நடன அசைவுகளை ரசிப்பது முக்கியம். என்னுடைய முயற்சியைப் பற்றி அறிந்து லக்னௌவில் உள்ள பழம் பெரும் நடனக் கலைஞரும், பாடகியுமான ஜரினாபேகம் என்பவர், என்னுடைய மேடை நிகழ்ச்சிகளில் பாட முன் வந்தது எனக்குப் பெருமையாக இருந்தது. இன்றைய தலைமுறையினரும், பத்திரிகைகளும் பாராட்டுவது, சுஃபி கதக் நடனம் மீண்டும் உயிர் பெற்றுவிட்டதை நிரூபிக்கிறது.

இந்த நடனத்தைக் கற்றுக் கொள்ள பல பெண்கள் முன் வந்துள்ளனர். கோவாவில் நடன பயிற்சி நிலையமொன்றை துவக்கியுள்ளேன்.

கோவாவில் நிறைய வெளிநாட்டினர் வருவதால் இந்த பாரம்பரிய இந்திய நடனத்தைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளையும், கருத்தரங்கங்களையும் நடத்துகிறேன். விரைவில் புதுச்சேரியிலும் பயிற்சி நிலையமொன்றை தொடங்கவுள்ளேன். இந்தியாவில் ஏராளமான பாரம்பரியக் கலைகள் உள்ளன. அவற்றை அழிந்து விடாமல் காப்பது நமது கடமை. ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து ஆய்வு செய்து உயிர் கொடுத்தால் வெற்றி நிச்சயம்'' என்கிறார் மஞ்சரி சதுர்வேதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.