பரோபகாரி!
பி.ஸ்ரீ.ஆச்சார்யா "கம்ப சித்திரம்', "சித்திர ராமாயணம்' என்ற தொடர்களை ஆனந்தவிகடனில் எழுதினார்.
தினமணி கதிர்பரோபகாரி!
பி.ஸ்ரீ.ஆச்சார்யா "கம்ப சித்திரம்', "சித்திர ராமாயணம்' என்ற தொடர்களை ஆனந்தவிகடனில் எழுதினார்.
பி.ஸ்ரீ.ஆச்சார்யா "கம்ப சித்திரம்', "சித்திர ராமாயணம்' என்ற தொடர்களை ஆனந்தவிகடனில் எழுதினார். இந்தத் தொடர் வெளிவந்த சமயத்தில் வாசகர்கள், ராமாயணத் தொடரை சித்திரங்கள் வாயிலாக எழுதப் போகிறார் என்று எண்ணினர். ஆனால், இவர் தொடர் கட்டுரைகளாக எழுதினார். இதற்கு ஏன் இப்படி பெயர் சூட்டப்பட்டது என்பதற்கும் விளக்கமும் தந்தார். "கல்லில் செதுக்கும் ஓவியங்களுக்குக் காவியம் என்று பெயர்; சொல்லில் தீட்டும் காவியங்களுக்கும் ஓவியம் என்று பெயர்' என்றார்.
பி.ஸ்ரீ எழுத்துகளைப் படித்தால், அந்தச் சம்பவத்தை நேரில் காண்பது போன்ற உணர்வு உண்டாகும். அவர்களது சந்ததியினருக்குக் கடவுளால் வழங்கப்பட்ட மிகப் பெரிய வரமாகும் இது. இதைப் போன்றே புத்தகங்களுக்குப் பெயர் கொடுப்பதில் மகா நிபுணர்கள். பி.ஸ்ரீ யிடம் இருந்த இத்தகைய தன்மையைப் பற்றி பலமுறை என் தந்தையார் என்னிடம் சொல்லி வியந்தது உண்டு. இவர்களது பரம்பரையில் என்.ஸ்ரீநிவாசன், சுதாங்கன் ஆகியோரிடம் எனக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருந்தது. என்.ஸ்ரீநிவாசன் இரண்டு நாளைக்கு ஒருமுறை என் அலுவலகத்திற்கு வருவார். ஒவ்வொருமுறை வரும்போதும், ஒவ்வொரு புதிய "ஐடியா' தருவார்.
சுதாங்கனுக்கு பத்திரிகை உலகில் அதிக நாட்டம் இருந்தாலும், அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை குறைவுதான். சுதாங்கன் நிறைய புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்துள்ளார். இவரது மூதாதையர்கள் போலவே இவருக்கும் புதிய புதிய நூல்களைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் கடைசிவரை இருந்தது.
சுதாங்கன் ஆஸ்பத்திரிக்குச் செல்வதற்கு முந்தைய நாள் இரவு எனக்குப் போன் செய்து , தன்னைப் பற்றி இரண்டு நிமிடங்கள் என்னுடைய அபிப்பிராயத்தை ஆடியோ மூலம் அனுப்பச் சொன்னார். நான் மறுநாள் மதியம் அனுப்பினேன். ஆனால் இறக்கும்வரை அவர் என்னுடைய ஆடியோவைக் கேட்கவேயில்லை. பரவாயில்லை. என் ஆடியோவை அவர் ஒருவர் மட்டுமே கேட்பதைவிட, இந்தக் கட்டுரை மூலம் ஆயிரக்கணக்கான வாசகர்கள் அவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறதே!
சுதாங்கன் திடீரென இப்படி இயற்கை எய்திவிடுவார் என்று எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. அவரது திறமை, பிறருக்கு உதவும் பாங்கு எல்லாம் மறக்க முடியாதது.
ரா.கி.ரங்கராஜன், ம.வே.சிவகுமார், பாமா கோபாலன், வேதா கோபாலன் போன்ற திறமையான எழுத்தாளர்களை அல்லயன்ஸூக்குக் கொண்டு வந்த பெருமை அவருக்கு உண்டு. அதேபோல, ஒருவரிடம் உள்ள திறமையை எடை போடுவதில் மகாநிபுணர் சுதாங்கன். ஜூனியர் விகடனில் அவர் பணியாற்றியபோது, நடிகர் சிவகுமாரின் "இது ராஜபாட்டை அல்ல' என்ற தொடரை எழுத வைத்தார். சிவகுமார் தன் கைப்பட அதை எழுதினார். மிகவும் பிரபலமான இத்தொடருக்குப் பின்புதான், சிவகுமாரிடம் உள்ள எழுத்துத் திறமை வெளி உலகிற்குத் தெரிந்தது.
அதேபோல, ஜூனியர் விகடனில் பணியாற்றியபோது, "கழுகார் செய்திகள்' என்ற தலைப்பில், அரசியல் செய்திகளை வெளியிட்டார். அதுவரை எந்தத் தமிழ்ப் பத்திரிகையும் இதுபோன்ற தலைப்பில், இதுபோன்ற தகவல்களை வெளியிட்டதில்லை. ஆனால் இதற்குப் பின்பு பல பத்திரிகைகளில் பல பெயர்களில் இதுபோன்ற செய்திகள் வெளிவர ஆரம்பித்தன.
1985 -இல் சுதாங்கனுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் அவர் தினமணியில் இருந்தார். நான் தினமணி ஆபிசுக்குச் செல்லும்போதெல்லாம் அவரைச் சந்திப்பேன். நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருப்போம். அவருடைய முதல் நூலான "தேதியில்லாத டைரி' நூலை அல்லயன்ஸ் வெளியிட்டது.
"தேதியில்லாத டைரி'யில் அவர் எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் காலக் கண்ணாடிகள். எப்போது படித்தாலும் சுவாரஸ்யமாக இருக்கும்.
2002 - இல் அல்லயன்ஸ் நூற்றாண்டு விழா நடைபெற்றபோது, தானே முன் வந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, பெருமைப்படுத்தினார். அவர் ஒரு பரோபகாரி பிறருக்கு உதவி செய்வதில், தனக்கு என்ன ஆதாயம் வரும் என்று அவர் சிந்திக்கவே மாட்டார். அப்படியொரு அபூர்வ குணம் கொண்டவர்.
நான் 1999 முதல் 2002 வரை "பபாசி' யின் செயலாளராக பணியாற்றியபோதுதான், சென்னைப் புத்தகக் கண்காட்சி புத்தொளி பெற்று பிரபலமாகத் தொடங்கியது. புத்தகக் கண்காட்சியில் தினமும் ஒன்றரை மணி நேரம் அரசியல், சினிமா, எழுத்துலகப் பிரமுகர்களை அழைத்துச் சொற்பொழிவு ஆற்றும் நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த ஏற்பாடுகளைச் செய்ய எனக்கு மிகவும் உதவியவர்கள் அகிலன் கண்ணன், பால இரமணி மற்றும் சுதாங்கன் ஆகியோர்தான்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதாங்கனுக்கு 60 வயது நிறைவடைந்ததையொட்டி, அவர் எழுதிய மூன்று நூல்களை வெளியிட்டு, மிகப் பெரிய விழா ஒன்று ஏற்பாடு செய்தது அல்லயன்ஸ் நிறுவனம். இதனால் உள்ளம் பூரித்து உவகை எய்தினார் சுதாங்கன்.