முகப்பு
தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 48

எனக்குப் பேட்டி தர மறுத்தவர் வேறு யாருமல்ல, பின்னாளில் குடியரசுத் தலைவரான ஆர். வெங்கட்ராமன்தான்.

Dinamani
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:44 PM
பகிர்:

எனக்குப் பேட்டி தர மறுத்தவர் வேறு யாருமல்ல, பின்னாளில் குடியரசுத் தலைவரான ஆர். வெங்கட்ராமன்தான். நான் சொல்வது சுமார் 42 ஆண்டுகளுக்கு முற்பட்ட செய்தி. அப்போது ஆர். வெங்கட்ராமன் தென்சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினராக இருந்த நேரம்.
தமிழக அரசியலிலும், தேசிய அளவிலும் மிகப் பெரிய ஆளுமையாகப் பல பங்களிப்புகளைச் செய்திருக்கும் ஆர். வெங்கட்ராமன் போதிய முக்கியத்துவம் பெறாமல் போனது மிகப் பெரிய துரதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.
காங்கிரஸ்காரரான ஆர். வெங்கட் ராமனின் தொடக்கம் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையது. காமராஜரைப் போலவே, ஆர். வெங்கட்ராமனுக்கும் அரசியல் குரு தியாகி சத்தியமூர்த்திதான். அதனால்தான் காமராஜரும், ஆர்.வி.யும் கடைசிவரை இணைபிரியாதவர்களாக இருந்தனர். காமராஜரின் முழு நம்பிக்கையையும் பெற்றவர் என்பது மட்டுமல்ல, பல சந்தர்ப்பங்களிலும் காமராஜரின் அரசியல் தூதுவராகவும் செயல்பட்டிருக்கிறார் ஆர்.வி.
1954-இல் காமராஜர் முதல்வரானபோது, அவருக்கு அரசு நிர்வாகத்தில் முன் அனுபவம் கிடையாது. முதல்வருக்கான தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியத்தைப்
பிரதமர் நேருவின் விருப்பத்தின் காரணமாக அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வேறு இருந்தது. சற்றும் கெளரவம் பார்க்காமல், நிர்வாக அனுபவமும், முதல்வர் பதவித் தகுதியும் பெற்றிருந்த சி. சுப்பிரமணியத்தையும், எம். பக்தவத்சலத்தையும் அவர் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் என்பது காமராஜரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
உள்கட்சி அரசியலில் தனது போட்டியாளர்களான சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்
சலம் இருவரின் திறமைகளையும் பயன்படுத்திக் கொள்ளும் அதேநேரத்தில், அவர்களுக்கு நிகரான நிர்வாகத் திறமை உள்ள நம்பிக்கைக்குரியவர் ஒருவர் காமராஜருக்குத் தனது அமைச்சரவையில் தேவைப்பட்டது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நபர்தான் ஆர். வெங்கட்ராமன்.
அரசியல் நிர்ணயசபையில் உறுப்பினராக இருந்த ஆர். வெங்கட்ராமன், 1952-இலும், 1957-இலும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1957-இல் மக்களவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். வெங்கட்ராமனை ராஜிநாமா செய்யச் சொல்லி, தனது அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இணைத்துக் கொண்டார் முதல்வர் காமராஜர். தமிழக மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். வெங்கட்ராமன் அடுத்த பத்தாண்டுகள் அந்தப் பதவியில் தொடர்ந்தார்.
தமிழகத்தின் கல்வித்துறை மேம்பாட்டுக்கு சி. சுப்பிரமணியமும், தொழில்துறை வளர்ச்சிக்கு ஆர். வெங்கட்ராமனும், காவல்துறை உள்ளிட்ட பொது நிர்வாகக் கட்டமைப்புக்கு எம். பக்தவத்சலமும் தான் காரணம். "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்கிற குறளைத் தனது நிர்வாக உத்தியாக மாற்றி வெற்றிக் கொடி நாட்டியவர் காமராஜர்.
காங்கிரஸின் 1967 சட்டப்பேரவைத் தோல்வியைத் தொடர்ந்து, மத்திய திட்டக் கமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஆர். வெங்கட்ராமன், 1971 வரை அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார். அவசரநிலைக்குப் பிறகு 1977-இல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அவரை இந்திரா காந்தி அறிவித்தபோது, பலரும் அதை எதிர்பார்க்கவில்லை. அவசரநிலையின்போது தன்னுடன் கருத்துவேறுபாடு கொண்ட சி. சுப்பிரமணியத்துக்குப் பதிலாக இந்திரா காந்தியால் அடையாளம் காணப்பட்டிருக்கிறார் "ஆர்.வி.' என்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் புரிந்துகொண்டது.
1980-இல் காங்கிரஸ் மீண்டும் மத்திய ஆட்சிக்கு வந்தபோது, நிதியமைச்சராக ஆர். வெங்கட்ராமனை நியமித்தார் பிரதமர் இந்திரா காந்தி. இரண்டாண்டுகள் அவர் நிதியமைச்சராக இருந்த காலகட்டம் மிகவும் நெருக்கடியானது. 1991-இல் சந்திரசேகர் அரசு எதிர்கொண்ட அதே சூழலை 1980-இல் இந்திரா காந்தி அரசு எதிர்கொண்டது.
நிதியமைச்சராக ஆர்.வி. இருக்கும்போதுதான், முதன்முறையாக உலக வங்கியிடமும், சர்வதேச நிதியத்திடமும் உதவி பெற்று இந்தியா தனது கடன் வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைந்தது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் ஒரு வகையில் ஆர். வெங்கட்ராமன்தான். நிதியமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமன் திடீரென்று ஒருநாள் பாதுகாப்பு அமைச்சராக பிரதமர் இந்திரா காந்தியால் மாற்றப்பட்டார். அவரது இடத்தில் நிதியமைச்சராகப் பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டார்.
ஆர். வெங்கட்ராமன் பாதுகாப்பு அமைச்சராக பிரதமர் இந்திரா காந்தியால் ஏன் நியமிக்கப்பட்டார் என்பதற்கான காரணம் எதுவும் விளங்கவில்லை. பாதுகாப்பு அமைச்சரான ஆர். வெங்கட்ராமனால் அடையாளம் காணப்பட்டவர்தான் பின்னாளில் குடியரசுத் தலைவரான ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தலாம். ஆனால் அதுதான் உண்மை. இன்று இந்தியா மிகப் பெரிய விண்வெளி சாதனைகளைப் படைத்து வருகிறது என்றால் அதன் பின்னணியில் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஆர். வெங்கட்ராமனின் தொலைநோக்குப் பார்வை இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
அதுவரை விண்கோள் திட்டத்தில் இருந்த விஞ்ஞானி ஆ.ப.ஜெ. அப்துல் கலாமை ஏவுகணைத் திட்டத்துக்கு மாற்றி, ஒருங்கிணைந்த ஏவுகணை வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கியதன் பின்னணியில் இருந்தவர் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஆர். வெங்கட்ராமன். தனது சுயசரிதமான "அக்னிச் சிறகுகள்' புத்தகத்தில் இது குறித்து ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் பதிவு செய்திருக்கிறார்:
"அன்று மாலை பாதுகாப்பு அமைச்சர் ஆர். வெங்கட்ராமனைச் சந்திக்கும்படி எங்களிடம் சொல்லப்பட்டது. ஒவ்வொரு கட்டமாக ஏவுகணைகளைத் தயாரிப்பதற்குப் பதிலாக ஒருங்கிணைந்த ஏவுகணை வளர்ச்சித் திட்டத்தில் நாம் இறங்கினால் என்ன என்று அமைச்சர் ஆலோசனை சொன்னபோது, எங்கள் காதுகளை எங்களாலேயே நம்ப முடியவில்லை. நாங்கள் வாயடைத்துப் போனோம். அவர் ஒட்டுமொத்த திட்டத்திற்கும் அனுமதி அளித்தார்.
சந்திப்பு முடிந்துவிட்டது என்பதை உணர்த்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சர் எழுந்து நின்றார். என் பக்கம் திரும்பி, ""உங்களை நான் இங்கு கொண்டு வந்ததில் இருந்து, இப்படிப்பட்ட ஒரு திட்டத்துடன் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்'' என்றார் அவர்.
சடாரென்று பனிமூட்டம் கலைந்தது. 1982-இல் ஆய்வுக்கூட இயக்குநராக என்னை நியமித்த உத்தரவு எப்படி வந்தது என்ற புரியாத புதிர் இப்போது தெளி
வானது. பாதுகாப்பு அமைச்சர் வெங்கட்ராமன்தான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறார். தலை தாழ்த்தி நன்றி தெரிவித்தேன்.'
விண்கோள் வல்லுநராக இருந்த ஆ.ப.ஜெ. அப்துல் கலாமை அடையாளம் கண்டது மட்டுமல்ல, அவரது வளர்ச்சிக்குப் பெருமளவில் பின்பலமாக இருந்தவரும் ஆர்.வி.தான் என்பதை கலாம் சாரே பல தடவை என்னிடம் நேரில் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து ஆர். வெங்கட்ராமனிடம் சொன்னபோது அவர் சிரித்துக் கொண்டே சொன்ன பதில் இதுதான்: ""கலாமை அடையாளம் காண முடிந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். கலாம் பிரெசிடெண்டான போது மிக அதிகமாக சந்தோஷப்பட்டவன் நான்தான்!''
அப்துல் கலாம் மட்டுமல்ல, இன்னொரு மிகப் பெரிய ஆளுமையின் பின்னணியிலும்கூட ஆர். வெங்கட்ராமனுக்குப் பங்களிப்பு இருந்திருக்கிறது. ஆனால் அது வெளியில் தெரியவே இல்லை.

பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பிரணாப் முகர்ஜியைத்தான் தனது நிதியமைச்சராக்க நினைத்திருந்தார் அவர். ஆனால், பிரணாப் முகர்ஜியை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்கிற அழுத்தம் அவருக்குத் தரப்பட்டது. அந்த சூழ்நிலையில், யாரை நிதியமைச்சராக்குவது என்கிற குழப்பத்தில் இருந்தபோது, டாக்டர் மன்மோகன் சிங்கின் பெயரை அவருக்குப் பரிந்துரைத்தது, அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் என்றொரு தகவல் உண்டு. அதை ஆர். வெங்கட்ராமனோ, பி.வி. நரசிம்ம ராவோ தெளிவுபடுத்தவில்லை. ஒருமுறை பிரணாப் முகர்ஜியிடம், ""இப்படியொரு பேச்சு நிலவுகிறதே, உண்மைதானா?'' என்று கேட்டபோது, தனக்கு அது குறித்துத் தெரியாது என்று கூறிவிட்டார். நரசிம்ம ராவுக்கு நெருக்கமாக இருந்த வி.என். காட்கில், புவனேஷ் சதுர்வேதி உள்ளிட்ட பலரிடமும் கேட்டபோது, அவர்களும் அப்படியொரு செய்தியைக் கேள்விபட்டதாகச் சொன்னார்களே தவிர, உறுதிப்படுத்தவில்லை.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் ஆர். வெங்கட்ராமனுடன் எனக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டது எனலாம். அவர் குடியரசு துணைத் தலைவராக இருந்தபோதும், குடியரசுத் தலைவரானபோதும் சந்தித்திருக்கிறேன் என்றாலும் எனது சந்திப்பு மரியாதை நிமித்தமானதாக மட்டுமே இருந்தது.
சங்கர்தயாள் சர்மா குடியரசுத் துணைத் தலைவரானபோது, பதவியேற்பு விழாவுக்கு ராஷ்டிரபதி பவன் செயலாளர் முராரியிடம் சொல்லி எனக்கு சிறப்பு அழைப்புத் தரச் சொன்னதை என்னால் மறக்க முடியாது. ஆனால், கலாம் சாருடனும், பிரணாப்தாவுடனும் இருந்ததுபோன்ற நெருக்கம் குடியரசுத் தலைவராக அவர் இருந்தபோது எனக்கு இருந்ததில்லை.
பதவி ஓய்வுபெற்ற பிறகு, நான் தில்லிக்குச் செல்லும்போதெல்லாம் ஆர்.வி.யை சந்திப்பதை வழக்கமாகவே வைத்திருந்தேன். நிறையத் தகவல்கள், விளக்கங்கள், பிரச்னைகள் குறித்த கருத்துகள் அவரிடமிருந்து பெற்றிருக்கிறேன், ஒரு நிபந்தனையுடன் - எதையும் குறித்துக் கொள்ளவோ, பதிவு செய்யவோ அவர் அனுமதித்ததில்லை. தனது பதிவாக மட்டுமே அவை இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தாரோ என்னவோ, எனக்குத் தெரியாது.
திட்டமிட்ட வாழ்க்கை, தீர்க்கமான சிந்தனை, தெளிவான கருத்துகள் என்று என்னை மலைக்க வைத்த ஆளுமை ஆர். வெங்கட்ராமன். சந்தைப் பொருளாதாரம் இந்தியாவில் வெற்றி பெறாது என்று ஆணித்தரமாக நம்பியவர் அவர். அதற்கான காரணங்களையும், விளக்கங்களையும் மாணவனுக்கு ஆசிரியர் எடுத்துரைப்பதுபோல எனக்குச் சொல்லித் தந்ததை மறக்கவா முடியும்?

""நான் விதிகளை அப்படியே கடைப்பிடிக்கும் குடியரசுத் தலைவர்'' (ஐயாம் எ ரூல் புக் பிரசிடெண்ட்) என்கிற அவரது கூற்றுக்கு ஏற்ப வாழ்ந்தவர் ஆர். வெங்கட்ராமன். அவருடன் இந்திரா காந்தி அமைச்சரவையில் இருந்தவர் பிரணாப் முகர்ஜி. ஜெயில் சிங் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் பதவி விலகியபோது ஆர். வெங்கட்ராமன் பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்டார். பிரணாப் முகர்ஜி நிதியமைச்சரானார்.

ஆர். வெங்கட்ராமனிடம் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தாலும், பிரணாப் முகர்ஜிக்கு அவரிடம் அதிக நெருக்கம் இருந்ததாகக் கூற முடியாது. பி.வி. நரசிம்ம ராவ், ஜி.கே. மூப்பனாரிடம் பிரணாப் முகர்ஜிக்கு இருந்த நெருக்கம், ஆர். வெங்கட்ராமனிடம் இருக்கவில்லை.
ஆர். வெங்கட்ராமன் என்னிடம் பிரணாப் முகர்ஜி குறித்து எந்தவிதக் கருத்தும் தெரிவித்ததில்லை. அப்படித் தெரிவிப்பது அவர் வழக்கமுமில்லை. ராஜீவ் காந்தியைப் பிரதமராகப் பதவி ஏற்க வைத்ததில் பிரணாப் முகர்ஜி முக்கியமான பங்கு வகித்தார் என்பதை மட்டும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், பிரணாப் முகர்ஜியிடம் ஒருமுறை ஆர். வெங்கட்ராமன் குறித்து நான் கேட்டேன்.
""ஆமாம், எனக்கு அவரிடம் நெருக்கம் இருந்ததில்லை. நான் நெருங்கவும் இல்லை!''
""ஏன் அப்படி? தனிப்பட்ட காரணமா, இல்லை வேறு ஏதாவதா?''
பிரணாப்தா புன்னகைத்தார். அவர் பதில் சொல்ல விரும்பவில்லை என்று நினைத்தேன். ஆனால், அவர் பேசத் தொடங்கினார்.
ஆர்.வி.க்கும் தனக்கும் நெருக்கம் ஏற்படாமல் போனதற்கு அவர் சொன்ன
காரணம், நான் சற்றும் எதிர்பார்க்காதது. அந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →