தேர்தல் நடத்தை விதிமுறைகள்: விளம்பரங்களை அகற்றுவதற்கான கெடு எவ்வளவு?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை சில விதிமுறைகளைப் பின்பற்ற தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் அந்த நிமிடம் முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்து, ஆணையம் அறிவிக்கும் வரை இது நடைமுறையில் இருக்கும்.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், அரசுப் பணியாளர்கள், ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் / சிவில் சமூகம், வாக்காளர்கள், மத்திய அரசு அல்லது மாநில அரசால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிதியளிக்கப்படும் அனைத்து அமைப்புகள் / குழுக்கள், ஆணையங்கள், வாரியங்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பொருந்தும்.
விளம்பரங்களை அகற்றுவதற்கான காலக்கெடு :
அனுமதியற்ற தேர்தல் விளம்பரங்கள், விளம்பர பலகைகள், புகைப்படம் சுவரொட்டிகளை, சுவர் எழுத்துக்கள், சின்னங்கள் மற்றும் கொடிகள் அகற்ற வேண்டிய காலக்கெடு:
அரசு இடங்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும்.
பொது இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில்வே பாலங்கள், சாலைகள், அரசு பேருந்துகள், மின்சாரம் / தொலைபேசி கம்பங்கள் ஆகியவற்றில் உள்ள படங்கள் 48 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும்.
தனியார் இடங்களில் 72 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு வாகனங்கள் கட்டுப்பாடுகள்:
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் (எம்.எல்.ஏ., எம்.பி.) அலுவலகங்களை பூட்டி பொதுப்பணித்துறை வசம் சாவி ஒப்படைக்கப்பட வேண்டும்.
அரசு விருந்தினர் மாளிகைகளில் எந்த ஒரு அரசியல் கட்சியினரும் அனுமதிக்கப்பட கூடாது.
தேர்தல் பிரசாரம் அல்லது தேர்தல் தொடர்பான பயணங்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ அல்லது தேர்தல் தொடர்பான நபர்களோ அரசு வாகனங்களைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரியத் தலைவர்கள் ஆகியோர் உபயோகப்படுத்தும் அரசு வாகனங்களை திரும்ப பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.