தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிமுறைகள்!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், உடனடியாக அமலாகும் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து...
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவிக்காலம், வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. ஆகையால், இந்த 5 மாநிலங்களிலும் பேரவைத் தேர்தல் நடத்தத் திட்டமிட்டு, தேர்தலுக்கான தேதியும் இன்று மாலை அறிவிக்கப்படவிருக்கிறது.
தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன், அந்த நொடியிலிருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில் தேர்தல் நடத்தை விதிகளும் அமல்படுத்தப்படும்.
தேதி அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்து தேர்தல் நடத்தை விதிகளின்படி,
தேர்தல் முடியும்வரையில், அடிக்கல் நாட்டுதல் விழா, புதிய சாலைத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் என எந்தவொரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.
அரசுப் பணியாளர்கள் மற்றும் பொதுத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யக் கூடாது.
பேரிடர் அல்லது அவசர காலங்களைத் தவிர்த்து, அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அரசு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், அரசு அலுவலகங்களைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது.
அரசின் செலவில் சாதனைகளை விளக்கிச் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்படுவதுடன், அனைத்து அரசு கட்டடங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செலவில் அகற்றப்பட வேண்டும்.
பிரசாரத்தின்போது, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைத் தவிர்த்து, தனிப்பட்ட வாழ்க்கை அல்லது குடும்பத்தைப் பற்றிய தனிநபர் விமர்சனம் செய்யக் கூடாது.
கட்சி பாகுபாடின்றி, பொது திடல்கள் உள்ளிட்டவைகளை ஆளுங்கட்சி மட்டுமின்றி, மற்ற கட்சிகளும் பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.
வாக்குகளைப் பெறுவதற்காக, குறிப்பிட்ட சாதியையோ மத உணர்வுகளைத் தூண்டும்வகையில் பேசுவதோ, வழிபாட்டுத் தலங்களைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதோ கடும் நடவடிக்கை அல்லது தகுதி நீக்கத்துக்கு வழிவகுக்கும்.
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகியவை தேர்தல் சட்டத்தின்கீழ் ஊழல் நடைமுறைகளாக கருதப்படும்.
மேலும், வாக்குச் சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்குகள் சேகரித்தல், வாக்குப்பதிவு நேரத்துக்கு 48 மணிநேரத்துக்கு முன்னதாகப் பொதுக் கூட்டங்களை நடத்துதல், வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருதல் போன்றவையும் ஊழல் நடைமுறைகளாகக் கருதப்படும்.
பொதுமக்கள் ரூ. 50,000-க்குமேல் ரொக்கமாக எடுத்துச் செல்வதென்றால், முறையான ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும். (கடந்த தேர்தலின்படி மட்டுமே அதிகபட்சம் ரூ. 50,000; இந்தத் தேர்தலில் மாறுபடலாம்).