கொள்கையில்லாத கூட்டணிகள்
'பதவி' என்பது தோள்களில் போட்டுக் கொள்ளும் 'துண்டு' போன்றது. 'கொள்கை' மட்டுமே மானம் காக்கும் இடுப்பு வேஷ்டி போன்றது என்று, அந்தக் காலத்தில தலைவர்கள் முழங்கினர்.
தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டன. ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்; மேலும், உரிய ஆவணங்கள் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டது. வணிகர்களிடம் இந்தத் தேர்தல்கால கெடுபிடிகள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அரசியல் கட்சிகளின் கூட்டணி பேரம் தொடங்கி விட்டது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியல் கட்சிகளின் பேரம் நடைபெற்றது. ஊழல் கட்சிகள் என்று ஒதுக்கப்பட்டவை கூட்டணிக்குள் வந்துவிட்டால் பரிசுத்தமாகி விடுகின்றன.
Advertisement
மன்னர்களின் ஆதிக்கத்தை வெறுத்துதான் மக்களாட்சி உருவானது. அந்த மக்களாட்சியும் அமைச்சர்கள் ஆட்சியாகிவிட்டது. தேர்தல் காலத்தில் மட்டும்தான் இவர்களைத் தெருவில் பார்க்க முடியும். அதன்பிறகு பார்க்க விரும்பினாலும் இயலாது. காவல் படையும், கட்சிப் படையும் தடுத்து விடும்.
'உங்களுக்காக உழைத்திட எங்களுக்கு உத்தரவிடுங்கள்' என்று அழகிய வாக்கியங்களில் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடுவார்கள். எல்லாக் கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி இறைக்கின்றன. இலவச அறிவிப்புகள் மேலும் மேலும் தொடர்கின்றன. ஆசை வார்த்தைகள் அள்ளி வீசப்படுகின்றன. மக்களுக்குத் தொண்டு செய்யவே பிறவி எடுத்து வந்திருப்பதுபோல பேசுவார்கள். வாக்காளர்களையும் மயக்குவார்கள்.
அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டுமானால் அதற்குச் சில வரைமுறைகள் தேவைப்படுகின்றன. அவை இல்லையெனில் நிராகரிக்கப்பட்டுவிடும். அதில் முக்கியமானது கட்சிகளுக்கான நோக்கமும், கொள்கையும். இப்போது கூட்டணி என்று வந்துவிட்டால் கொள்கையைப் பற்றியும், கோட்பாட்டைப் பற்றியும் யாரும் கவலைப்படுவதில்லை. ஒரே நோக்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.
அந்தக் காலங்களில் தேசிய இயக்கம் தோன்றி வளர்ந்த காலங்களில் திலகர், மகாத்மா காந்தி, நேதாஜி போன்றோர் கொள்கைகளுக்காகவே உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்தார்கள். இந்தியா எப்படியாவது விடுதலை பெற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
விடுதலைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றி பரபரப்பாக வளர்ந்தபோது, அவர்களின் கொள்கை முழக்கங்களைக் கேட்டு இளைஞர்கள் பின்பற்றினர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களில் திரையரங்குகளில் தலைவர்களின் பேச்சைக் கேட்பதற்கு பணம் கொடுத்து சீட்டு வாங்கிக் காத்துக் கிடந்தனர். அந்தக் கொள்கை முழக்கங்கள் இப்போதும் செவிகளில் எதிரொலிக்கின்றன.
'பதவி' என்பது தோள்களில் போட்டுக் கொள்ளும் 'துண்டு' போன்றது. 'கொள்கை' மட்டுமே மானம் காக்கும் இடுப்பு வேஷ்டி போன்றது என்று, அந்தக் காலத்தில தலைவர்கள் முழங்கினர். இப்போது 'பதவி' என்னும் துண்டுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் நிலைதான் கூட்டணியாகும். இடதுசாரிகளும் இது குறித்துக் கவலைப்படவில்லை என்பதே நமது கவலையாகும்.
மாநில ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக தமது தேர்தல் அறிக்கையைக் கடந்த மார்ச் 29-ஆம் தேதி வெளியிட்டது. வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000-க்கு கூப்பன் வழங்கப்படும், விவசாயிகளுக்கு இலவச பம்ப் செட், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்; புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை ரூ.1,500- ஆக உயர்த்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், வாரியத் தலைவர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
தேர்தல் அறிக்கையில் 50 தலைப்புகளில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. முதியோருக்கான மாத உதவித் தொகை ரூ.2,000, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை ரூ.2,500-ஆக உயர்த்தப்படும்.
'நலமுடன் தமிழ்நாடு 2030' திட்டத்தின் கீழ் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும். தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு ஓய்வு பெறும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் 50 சதவீத ஊதியம் ஓய்வூதியமாகவும், அத்துடன் இதர ஓய்வூதியப் பலன்களும் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இதேபோல அதிமுகவும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச குளிர்சாதனப் பெட்டி, குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம் உள்பட பல திட்டங்களை அதிமுக தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது.
மொத்தமாக அதில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோல மற்ற அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இவ்வாறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை வாரி இறைத்துள்ளன. எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும்; அதன்பிறகு மக்களே மறந்து விடுவார்கள் என்பது அவர்கள் போட்டு வைத்திருக்கும் கணக்காகும்.
உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவில் தேர்தல் செலவுகளுக்குப் பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால், பிரிட்டனில் நம்மைப் போலவே கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்சிகள் தங்களுடைய செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடு இருக்கிறதே தவிர, மற்றபடி கட்சிகள் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதற்கான எல்லை எதுவும் கிடையாது.
அந்த வகையில், 2024 பொதுத் தேர்தலில் பாஜக அதிகப்படியாக ரூ. 1,737 கோடி செலவு செய்திருக்கிறது. அடுத்தபடியாக, காங்கிரஸ் ரூ.686 கோடி செலவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக ரூ.145 கோடியும், அதிமுக ரூ.23 கோடியும் செலவு செய்திருக்கின்றன. இந்தத் தேர்தலில் இது இன்னும் அதிகமாக இருக்கலாம்.
மக்களுக்கு இலவசங்கள் வழங்கும் நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. இலவசங்களுக்குப் பதிலாக மாநிலங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் இத்தகைய இலவசங்கள் வழங்கும் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்றும் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 19 அன்று கூறியது.
தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் தாக்கல் செய்த ஒரு ரிட் மனு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியது. மின்சார (திருத்தம்) விதிகள் 2024-இன் விதி 23-ஐ எதிர்த்து தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் அந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. விதி 23 தன்னிச்சையானது, நியாயமற்றது, அரசியல் அமைப்புக்கு விரோதமானது மற்றும் மின்சாரச் சட்டம், 2003-ஐ மீறுகிறது என தமிழ்நாடு மின்விநியோகக் கழகம் தம் மனுவில் கூறியுள்ளது. இலவச மின்சாரத் திட்டங்கள் போன்ற மாநில மானியங்களைப் பாதிக்கும் அந்த விதியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்விநியோகக் கழகம் கோரி வருகிறது.
அந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலங்களாக இருந்தாலும், அவை இதுபோன்ற இலவசங்களை வழங்குகின்றன' என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த வகையான பெரிய அளவிலான விநியோகத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது என்றும், அனைவருக்கும் இலவச மின்சாரம், உணவு, மிதிவண்டிகள் வழங்குவதற்குப் பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்க மாநிலங்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். இதைப் பரிசீலனை செய்வது நமக்கும், நாட்டுக்கும் நல்லது. கொள்கையில்லாத கூட்டணிகள் இது குறித்தெல்லாம் கவலைப்படுமா என்பதுதான் கேள்விக்குறிதான்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.