எனக்கு வயது 66. வெயில் காலம் தொடங்கி விட்டால் சோரியாசிஸ் எனும் தோல் உபாதையால் கடந்த 20 ஆண்டுகளாக அவதிப்படுகிறேன். எப்படிக் குணப்படுத்துவது?
பொ.பழனிவேல்,
கள்ளக்குறிச்சி.
வெயில்காலத்தில் ஏற்படும் நீர் வறட்சியால் தோல் பகுதிக்குத் தேவையான சத்து வந்து சேராமையால், தோல் வறண்டு போவதால், அரிப்பும், சினப்பும் ஏற்படும். புதிய அணுக்களின் உற்பத்திக் குறைபாடும் வயோதிகத்தில் பொதுவாகவே ஏற்படுவதாலும், உணவின் சத்தான பகுதிகள் தோலுக்குத் தர வேண்டிய ஊட்டத்தைத் தராமலிருப்பதாலும் சோரியாசிஸ் உபாதையானது தொடர்ந்து கொண்டே இருப்பதாகத் தெரிகிறது.
நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் கடும் உபாதைக்கு, கடுகு எண்ணெய்யை நீங்கள் சில நாள்கள் சாப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது. தோல் உபாதையைத் தோற்றுவிக்கும் கிருமிகளை அழிக்கக் கூடியதாகவும், எண்ணெய்யின் தன்மையால் பலமிழந்துள்ள நாடிகளை வலுப்படுத்துவதாகவும் இரு செயல்களை கடுகு எண்ணெய் ஒருங்கே செய்வதால், தங்களுக்கு நன்மையே ஏற்படும். கிருமிகள் அழிவதால், நாடி நரம்புகள் வலுப்பெறும். நாடி நரம்புகள் வலுப்பெறுவதால் கிருமிகள் அழியக் கூடும்.
சில நாள்களுக்குப் பிறகு, இந்த கடுகு எண்ணெய்யைக் குடிப்பதிலுள்ள ஆர்வம் குறையும். அதன் பிறகு, அதை நிறுத்திவிட்டு, வஜ்ரகம் அல்லது மஹா வஜ்ரகம் எனும் பெயரிலுள்ள மூலிகை நெய் மருந்தை நெற்றி, கை, கால்களிலுள்ள காரி ரத்தக் குழாய்களை சிறிய அளவில் கீறி, கெட்ட ரத்தத்தைக் களையச் செய்து கொண்டே இந்த நெய் மருந்தையும் சாப்பிட்டுக் கொண்டே வர வேண்டும். இது உங்களுக்கு வீட்டிலேயே செய்யப்படும் சிகிச்சை அல்ல. ஆயுர்வேத மருத்துவமனைகளில் நல்ல அனுபவமுள்ள மருத்துவர்கள் மட்டுமே செய்யக் கூடிய சிகிச்சைமுறையாகும். சற்றே கடினமான சிகிச்சையாக இருந்தாலும், மிகவும் பழமையான வைத்திய முறைகளில் இதுவே கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை ஆயுர்வேத நூல்களின் மூலம் அறிய முடிகிறது.
பதினைந்து கிராம் கருங்காலிக் கட்டையை சிராத்தூள் போல சீவி எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்துக் காய்ச்சி, அரை லிட்டராகக் குறுகியதும் வடிகட்டி, இந்த நெய் மருந்தைச் சாப்பிடும்போதெல்லாம் சிறுகச் சிறுகப் பருகுவதும் வழக்கத்திலிருந்தது.
கந்தகம் எனும் பஸ்மத்தைக் கடும் உணவுக் கட்டுபாடுகளுடன் இந்த மூலிகைத் தண்ணீருடன் சாப்பிடுவதும் மிக உகந்தது.
சிவப்பு நிறத்திலுள்ள கைக்குத்தல் அரிசி, பார்லி, கோதுமை, வரகு, திணை, பச்சைப்பயிறு, கொண்டைக் கடலை, துவரை, கசப்பான கீரைகள், திரிபலை, புடலை, கருங்காலி, வேப்பிலை ஆகியவை சேர்த்து வேக வைக்கப்பட்ட ஆட்டிறைச்சி, சரக்கொன்றைப் பட்டை ஆரக்வதாரிஷ்டம், கார்போக அரிசியைப் பொடித்து மோருடன் கலந்து சாப்பிடுதல் போன்றவை எந்த வகையான தோல் உபாதைக்கும் சிறந்த உணவும் பானமுமாகும். புளிப்பும் உப்பும் நல்லதல்ல. தவிர்க்கப்பட வேண்டியவை. தயிர், பால், சர்க்கரை, நீர் வாழ் உயிரினங்கள், எள், உளுந்து ஆகியவை தோல் உபாதை உள்ளவர்கள் முழுவதுமாகத் தவிர்க்க வேண்டியவையாகும்.
குறிப்பிட்ட சிலநாள்கள் சாப்பிட்ட பிறகு, படோல மூலாதி எனும் கஷாயத்தை, நெய் மருந்தை ஆறு நாள்களுக்கு குடல் சுத்தத்திற்காகச் சாப்பிட வேண்டும். அதன் பிறகு சிலாசத்து பற்பம் சாப்பிடுவதும், வெளிப்புறமாக தேய்த்துக் குளிக்க நிம்பாதி தைலம், தூர்வாதி தைலம் போன்றவற்றைப் பயன்
படுத்தலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.