முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக உடல் பருமனைக் குறைக்கலாம்!

என் உயரம் 5.2 அடி. வயது 43. உடல் எடை 92 கிலோ. உடல் பலவீனமாக உள்ளது. வியர்வையில் துர்நாற்றம். ஒரே இடத்திலேயே உட்கார்ந்து வேலை செய்யும் தொழில் செய்கிறேன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

என் உயரம் 5.2 அடி. வயது 43. உடல் எடை 92 கிலோ. உடல் பலவீனமாக உள்ளது. வியர்வையில் துர்நாற்றம். ஒரே இடத்திலேயே உட்கார்ந்து வேலை செய்யும் தொழில் செய்கிறேன். உடல் பருமனைக் குறைக்க என்ன வகையான நாட்டு மருந்துகள் உள்ளன. எப்படிச் சாப்பிடுவது?

சிவகுமார், காஞ்சிபுரம்.

அதிகமாகப் புசித்தல், இனிப்பும் குளுமையும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தினசரி வழக்கமாகச் சாப்பிடுதல், பகலில் உறங்குவதை விரதமாக ஏற்று அதை அளவு மீறியும் செய்தல், உடலுக்குச் சிறிதும் உழைப்பில்லாத வாழ்க்கை, மனக்கவலையே இல்லாமல் ஸமஸ்தானாதிபதியாயிருத்தல் போன்றவை உடல் பருமனாகக் காரணங்களாகக் கூடும்.

யாருடைய உடல் பருக்கக்கூடும்? இளம் வயதில் உடற்பயிற்சிகள் செய்தும், விளையாட்டுகள், பந்தயம், சிலம்பம் முதலிய பயிற்சிகளால் இறுகிய உடல் வளர்ச்சியைப் பெறுவோர், பிற்காலத்தில் அவை ஒன்றுமில்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே உத்யோகம் பார்த்துத் திரும்பும் வாழ்க்கையை ஏற்க நேரிட்டால், அவர்களுக்கு உழைப்பின்மையால் தேகம் பருத்துவிடும். இதற்குச் சிகிச்சை செய்யலாம்.

பிறவி முதலே பருமனாயிருப்பவர், பிறந்த பிறகு உட்கார்ந்த இடத்திலேயே வியாபாரம் முதலிய தொழில்கள் செய்வோர் உடலும் பருமனாகிவிடும். இவர் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். இவர்களுக்கும் சிகிச்சை செய்தாக வேண்டும்.

ஏதோ ஒரு காரணத்தால் கொடியதொரு நோயினால் அவதியுற்று பிழைத்த ஒருவர் தன் பலவீனத்தையும், இளைத்த உடலைப் பருமனாக்க வேண்டியும், ஊட்டமான உணவுகளை ஏற்று, தாதுக்களைப் புஷ்டியாக்கிக் கொள்ள எடுக்கும் கடும் முயற்சிகளால் உடல் பருமனாகி மறுபடியும் இளைக்க பாடுபடுவார்கள். இவர்கள் மூன்றாம் வகையினர்.

மாதவிடாய் நின்ற பிறகு உடல் பருமனால் அவதியுறும் பெண்கள் ஏராளம். இவர்களும் உடல் இளைப்பதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியவர்களே.

1. கடுக்காய்த்தோல், தானிக்காய்த் தோல், நெல்லிமுள்ளி, சுக்கு, திப்பிலி, வறுத்துப் பொடித்த இந்துப்பு ஆகியவற்றின் தனித்தனி சூரணங்களைச் சம எடையில் கலந்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளை சிறிது நல்லெண்ணெய்யில் குழைத்து நக்கிச் சாப்பிட்டால் ஆறு மாதத்தில் பருமன் குறைந்து உடல் மெலியும்.

2.திரிபலா சூரணத்தில் இரண்டு மூன்று சிட்டிகை அளவு எடுத்துத் தேனில் குழைத்து நக்கிச் சாப்பிட்டு, அதன் மேல் பத்து மில்லி லிட்டர் தேன் கலந்து இருநூறு மில்லி லிட்டர் தண்ணீரைக் குடிக்க, மேலும் உடலைப் பருக்கவிடாமல் தடுப்பதோடு, ஏற்கெனவே உண்டான உடல் பருமனையும் ஓரளவு குறைக்கும்.

3.சிலாஜது என்னும் மருந்து ஒன்றிருக்கிறது. வெயில் காலத்தில் மலைகளிலுள்ள பாறைகளின் உள்ளிருக்கும் தாதுப்பொருள்கள் உருகி, பாறையைப் பிளந்து வெளியில் ஒழுகும். செம்மை கலந்து கறுப்பு நிறமாகவும் முகர்ந்தால் பசுவின் சிறுநீர் போன்ற நாற்றமுடையதாகவும் இருக்கும். அதனால் இதற்கு கோமூத்திர சிலாஜது என்று பெயர்.

அது கேப்ஸ்யூல் வடிவத்தில் விற்பனையிலுள்ளது. தினமும் இரண்டு வேளை உணவிற்கு முன் இரண்டு கேப்ஸ்யூல்களை தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட, பருமன்குறைவதுடன், ரத்தம் மற்றும் சிறுநீரில் வெளியாகும் சர்க்கரையின் அளவை நன்றாகக் கட்டுக்குள் அடக்கும். ரத்தக் கொதிப்பு, ரத்த அழுத்த உபாதைகளுக்கு நீண்டகாலம் இந்த சிலாஜதுவை உபயோகித்து வர ஆச்சரியமான குணம் கிடைக்கும்.

4.விற்பனையிலுள்ள ஸ்தெளல்யஹர சூரணம், Capsule OBE30 போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

5.ஆமணக்கின் வேரை நைய இடித்துத் தேன் கூட்டிப் பிசைந்து கொஞ்சம் தண்ணீரில் ஓரிரவு ஊற வைத்திருந்து, மறுநாள் காலையில் கசக்கிப் பிழிந்து சக்கையைக் களைந்து நீரை மட்டும் வடிகட்டிக் குடிப்பதால், வயிறு இடுப்புப் பகுதிகளில் மட்டும் பருமன் அதிகமுள்ளவருக்கு அந்த பருமனும் எடையும் குறையும்.

6.பச்சைப்பயறு, கொள்ளு, நரிப்பயறு, துவரை முதலியவற்றை நெல்லி முள்ளியுடன் கூட்டித் தயாரித்த பொரியலை உணவுடன் உபயோகிப்பது நல்லது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.