தினமணி கதிர்

அமுதசுரபி

ரயில் புறப்படத் தயாராகும் நீளமான ஹார்ன் ஒலி கேட்டது.

விஜி முருகநாதன்


ரயில் புறப்படத் தயாராகும் நீளமான ஹார்ன் ஒலி கேட்டது.
""ஜானும்மா... பத்திரம்... கவனம்... அக்கா... பை... டேக் கேர்'' கையாட்டலுடன் மெதுவாக நகர ஆரம்பித்திருந்த ரயிலின் ஜன்னலில் தலைசாய்த்து அவர்களிருவரும் புள்ளியாகும் வரை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு , அப்பாவின் " கவனம்... பத்திரம்'  ஞாபகத்திற்கு வந்தது.
மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டாள். ரயிலின் எல்லா ஜன்னல்களும் ஒவ்வொரு பயணத்திலும் எத்தனை தடவைகள் இதே வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
வருத்தமாக, சந்தோஷமாக, காதலாக, தவிப்பாக, இன்னும் எத்தனையெத்தனை  உணர்ச்சிகளுடன்...
அவளுக்கு நினைவு தெரிந்த நாளாக, விளையாட்டுப் பருவத்தில் இருந்து எங்கே சென்றாலும் இதே வார்த்தைகளைத்தான் சொல்லுவார். முதலில் எல்லாம் மென்மையான தொனியில் வந்தது.  பெரிய பெண்ணாகியவுடன் அழுத்தமான தொனியில் வர ஆரம்பித்தது.
அப்பா... எப்பேர்ப்பட்ட அப்பா... அம்மா இந்திரா திடீரென வந்த விஷக்காய்ச்சலில் போன போது அவளுக்குப் பத்து வயது. வித்யாவிற்கு எட்டு வயது. 
அவரின் சென்ட்ரல் கவர்மெண்ட் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு... ""விசு... போனவளையே நினைச்சுகிட்டு எத்தனை நாள் கவலைப்பட்டுகிட்டு இருப்ப... அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் முகத்துக்காவது வேற கல்யாணம் பண்ணிக்கோ''
அப்பா மெளனமாக இருந்தார். அதைச் சம்மதமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்தது...
""என்னோட ஒண்ணு விட்ட மச்சினிச்சி ரதியாட்டம்
இருப்பா.  தன்மையானவ.  நா சொன்னா தட்ட மாட்டாங்க.  என்ன சொல்ற?''
அப்பா தொண்டையைக் கனைத்துக் கொண்டார். ஒரு கை அவள் தலையையும், மற்றொரு கை வித்யாவின் தோளையும் வருடியது.
""எனக்கு கடைசி வரைக்கும் இந்துதான் பொண்டாட்டி.  இதுகதான் குழந்தைங்க. அதுனால இந்தப் பேச்சை எடுத்துகிட்டு இனிமே  வராதீங்க''
அவரின் கடினமான பேச்சுக்கப்புறம், அவரை அசைக்க முடியாது என்று தெரிந்தவுடன் அவ்வப்போது வந்த சொந்தங்களும் நின்று போகவே, இவர்கள் மூவர் மட்டுமே ஒருவருக்கொருவர் என்றானார்கள். 
சும்மா சொல்லவில்லை விஸ்வநாதன்.  அன்றிலிருந்து இன்று வரை தாய்க்குத் தாயாக... தந்தைக்குத் தந்தையாக...
அப்பாவின் நினைவில் கண்கள் பனித்தன. அப்பேர்ப்பட்டவரிடம் எதையும் மறைத்ததில்லை. இப்போதுதான் முதன்முறையாக... அதுவும் காரணத்தோடுதான். 
""எக்ஸ்கியூஸ் மீ... கொஞ்சம் நகர்ந்து கொள்கிறீர்களா?''
குரல் கேட்டுத் திரும்பியவளின் கண்ணில் பட்டான் அந்தக் குறுந்தாடி இளைஞன். இவள் ஒன்றும் பேசாமல்
எழுந்து நின்றாள். அவசரமாக மிடில் பர்த்தைப் போட்டவன் அதே அவசரத்துடன் ஏறிப் படுத்தும் விட்டான்.
"எவ்வளவு அவசரம் இவனுக்கு?'  மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். இந்தக் கால இளைஞர்கள், இளம்பெண்கள் இருவருக்குமே எல்லாவற்றிலும் ஓர் அவசரம் இருக்கிறது.
தன்னால் மட்டும் ஏன் அப்படி இருக்க முடியவில்லை. எல்லா வேலைகளையும், நிதானமாக பொறுமையாகச் செய்ய முடிகிறது. ஒரு வேளை நம் வேலை காரணமோ?
அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியை. விஷுவல் கம்யூனிகேஷன் படித்தாலும், ஓவியத்தின் மேல் இருந்த காதலால் ஓவியக் கல்லூரியிலும் சேர்ந்து பட்டம் பெற்றவளுக்கு கிடைத்த அருமையான வேலை.
அப்பா அவளின் எந்த ஆசைக்கும் குறுக்கே நின்றதில்லை. மணி என்ன? ஒன்பதைக் காட்டியது. இந்நேரம் அப்பாவும், வித்யாவும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?
வழக்கமாக இரவு எட்டரை மணிக்கு சாப்பிட்டு விடுவார்கள். காலையில் ஆற அமர சாப்பிட முடியாது என்பதால் இரவு சாம்பார், ரசம் , பொரியல் என்று முறையாக சமைப்பாள். அப்பா ரசித்துச் சாப்பிட்டு விட்டு இவர்கள் இருவரும்  சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு வரும் வரை டி.வி.பார்ப்பார். அவர்கள் வந்தவுடன் படுக்கப் போய்விடுவார். வித்யாவும், இவளும் அப்புறம் ஒரு மணி நேரம் பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு படுக்கப் போவார்கள்.
இப்போதும் அப்படி அப்பா படுக்கப் போயிருப்பார். வித்யாவிற்குத்தான் போரடிக்கும். பிறந்ததிலிருந்து அவளை அதிகமாகப் பிரிந்ததே இல்லை.  இப்போது கூட உயிர்த்தோழி ரம்யாவின் திருமண வரவேற்பு சென்னையில்...
ஜானுவுக்கு  இருக்கும் ஒரே தோழி அவள்தான். அவளுக்கும் அம்மா இல்லை. படிக்கும் போது ஹாஸ்டலில் இருந்து சனி, ஞாயிறு இவர்கள் வீட்டுக்குத்தான் வந்து விடுவாள். "அப்பா... வித்யா...'என்று உயிராய்த் திரிவாள்.
அப்பா, வித்யா இருவரும் அவள் கூட சென்னை ரிசப்ஷனுக்கு வருவதாக இருந்தது. ஆனால் வித்யாவின் பரீட்சை குறுக்கே வரவே வர முடியாமல் போய் விட்டது.
அதுவும் நல்லதிற்குத்தான் ஒரு முடிவை நோக்கி அல்லவா அவள் பயணம் தொடங்கி உள்ளது?
""கண்ணம்மா'' என்ற சந்தோஷின் குரல் கிசுகிசுப்பாக காதில் விழவே திடுக்கிட்டுச் சுற்றிலும் பார்த்தாள். ரயிலின் நீல விளக்கு ஒளியில் பெரிதான மூச்சுகளுடன் தூக்க முனகல்களே கேட்டன.
வெளியே பார்த்தாள். பட்டுக் கரிய நிறத்தில் பதிந்த நல்வைர நட்சத்திரகளுடன் அடிவானம் வரை தெரிந்தது. அவளுக்குப் பிடித்த பெரிய நட்சத்திரம் கண்ணில்பட்டது. அவளுக்கு மட்டுமா? சந்தோஷிற்கும் தான்...
எத்தனை இரவுகள்... "சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா...  சூரியச் சந்திரரோ... வட்டக் கரியவிழி கண்ணம்மா... வானக் கருமை கொல்லோ' என்று பாடி இருக்கிறான்.
"கண்ணம்மா... கண்ணம்மா...' என்று அவன் ஒவ்வொரு முறையும் உருகும் போதுதான் இவளுக்கே தனக்குள் எவ்வளவு பெரிய ஏக்கம் இருந்திருக்கிறது என்று தோன்றும். 
என்றோ இறந்து போன தாய்மைப் பாசம் அவன் வார்த்தைகளில் வழிவதாகத் தோன்றும்.
அந்த ஏக்கமே அவளையும் அறியாமல்  சந்தோஷ் பக்கம் மனதைச் செலுத்தி விட்டது. சந்தோஷ் பெயரிலேயே சந்தோஷத்தைப் புதைத்து வைத்திருப்பவன். சென்னை கல்லூரி ஒன்றில் புரொபசர். ஓவியம் பயிற்றுவிக்கிறான்.
ஆனால் இவளைப் போல இல்லாமல் அடிக்கடி ஓவியக் கண்காட்சி நடத்துபவன். அதிலும் பல பரிசுகள் வாங்கி இருப்பவன். எப்போதும் அவன் வரையும் ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பும் அதன் மூலம் நல்ல சம்பாத்தியமுமாக பணக்கார அந்தஸ்தில் இருப்பவன்.
முகநூலில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் அறிமுகமானான். இருவரின் ஓவிய ஈடுபாடு முதலில் சாதாரணமாகப் பழக வைத்தாலும் , மெல்ல மெல்ல சந்தோஷ் அவளை ஆகர்ஷித்து விட்டான்.
இத்தனைக்கும் நேரில் பார்த்ததில்லை. ஒரே ஒரு முறை வீடியோ சாட்டில் பார்த்ததுதான்.
"அவளைக் காதலிக்கிறேன்... கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன்...' என்று சொன்னான்.
""சந்தோஷ்... அந்தஸ்திலும் சரி, அழகிலும் சரி, உங்களுக்கு நான் ஈடு இல்லை''
""என்ன கண்ணம்மா... என்னைப் பற்றி இப்படி நினைத்து விட்டாய்?அம்மா என் விருப்பத்திற்கு மாறு சொல்ல மாட்டார்கள். அப்புறம் என்னைப் பொறுத்தவரை உன்னை விட அழகி உலகத்திலேயே கிடையாது''
என்ன சொன்னாலும் அவள் சம்மதம் சொல்லவில்லை. இந்தச் சென்னைப் பயணத்தில் சொல்வதாகச் சொல்லி இருந்தாள்.
நாளை அவனைச் சந்திக்கும் போது எல்லாவற்றையும் சொல்ல வேண்டும்.  ஆம்... எல்லாவற்றையும்...
இரண்டு நாட்களுக்கு முன் ரம்யா அவளிடம்... ""சொல்லிரு ஜானு. நிச்சயமாக சந்தோஷ் புரிந்து கொள்வார். ரிசப்ஷன் பதினொரு மணியில் இருந்து ஆரம்பம். நீ ஒரு மணி வரை இருந்து விட்டு சந்தோஷ் கூட புறப்பட்டுப் போ. இரவு பத்து ஐம்பதுக்கு தான் ட்ரெய்ன்... நிறைய நேரம் இருக்கு. அதுவரை எவ்வளவு பேச முடியுமோ, பேசு. முடிவு செய்''
""ம்... பார்க்கலாம்'' என்று ரம்யாவிடம் சொல்லி விட்டாலும் மனதிற்குள் பெரும் பாரம் சூழ்ந்தது. சொல்லித்தானே ஆக வேண்டும்.  ஆயாசமாக இருந்தது. கண்களை மூடிக் கொண்டாள்.
அப்படியே கண் அயர்ந்தவள் விழிக்கும் போது விடிந்திருந்தது. அப்போதே கசகசத்தது சென்னை வெயில். ரயில் சென்ட்ரல் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது.
சந்தோஷ் வந்து கூட்டிப் போவதாகத்தான் சொல்லி இருந்தான்.
""வேண்டாம் சந்தோஷ். உங்களையும் தானே ரம்யா கூப்பிட்டு இருக்கிறாள். எதுக்கு அலைச்சல்?''
பிளாட்பார்மில் கால் வைத்ததுமே "வேண்டாம்... வேண்டாம்' என்று சொல்லி இருந்தாலும் மனம் சந்தோஷைத்தான் தேடியது.
"வந்து விட்டேன்' என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். உடனே  இதழ் போட்ட சிம்பல் வந்தது. புன்னகைத்துக் கொண்டாள்.
ரம்யா ஸ்டேஷனுக்கே காரை அனுப்பி இருந்தாள். அவ்வளவு பிஸியான நேரத்திலும் அவளைப் பற்றிய கவனம் நெஞ்சை நெகிழ வைத்தது.
அவள் வாழ்க்கையில் அப்பா, வித்யா, ரம்யா மூன்று பேரிடமும் எதையும் மறைத்ததில்லை.
சந்தோஷ் பற்றிய எல்லா விவரங்களையும் அப்பாவிடமும், வித்யாவிடமும் சொல்லி இருந்தாலும் கல்யாணம் பண்ணிக் கொள்வதாகச் சொல்லி இருந்ததைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. எல்லாம் முடிவாகும் முன் ஏன் அவர்களையும் எதிர்பார்க்க வைக்க வேண்டும்?
கார் உள்ளே நுழைந்தும் நுழையாமலும் ஓடி வந்த ரம்யா... "ஜானு' என்று கட்டிக் கொண்டாள்..
ஜானுவுக்கு உடல் சிலிர்த்து, கண்ணில் கண்ணீர் கரையிட்டது. சிறிது நேர உணர்ச்சிப் பெருக்குக்குப் பின் நிமிர்ந்து ரம்யாவைப் பார்த்தவள், வியந்து போனாள். கல்யாணம் ஒரு பெண்ணை இவ்வளவு அழகாக மாற்றி விட முடியுமா?
முழங்கை வரை வைத்திருந்த அரக்குப்பற்றான மெஹந்தியும், அதை மறைத்து சத்தமிட்ட வளையல்களும், மொத்தமாக மஞ்சளில் தடித்துத் தொங்கிய தாலிக்கயிறும், புதிதாக முகமெங்கும் பூத்திருந்த வெட்கச் சிவப்பும்...
""எவ்வளவு அழகாக இருக்கிறாய் ரம்யா''
""ஆமாம்... முகூர்த்தத்திற்கு வாடி  என்றால் நான்கு நாட்கள் கழித்து ரிசப்ஷனுக்கு வந்து விட்டு ஐஸ் வைக்கிறாயா?''
""அதெல்லாம் இல்லை.  நிஜமாகவே'' என்று முடிப்பதற்குள், ""வெல்கம் சிஸ்டர்... என் செல்லப் பொண்டாட்டியின் செல்லத் தோழிக்கு நல்வரவு'' என்று சிரித்தபடி வந்தான் ஷ்யாம்.  புது மாப்பிள்ளை. 
அவனின் கலகலப்பான குரலும், சிரிப்பு வழிந்த முகமும் பார்த்தவுடன் சகோதர வாஞ்சையை மனதில் தோன்றச் செய்ய... ""வணக்கங்க பிரதர்'' என்றாள் ஜானுவும்.  
அப்புறம் நேரம் பறக்க ஆரம்பித்ததில் அவளுக்கும், ரம்யாவுக்கும் பேசக் கிடைத்தது அரை மணி நேரமே. அதிலும் ரம்யா வலியுறுத்திச் சொன்னது: ""இன்று முடிவு பண்ணி விடு ஜானு'' என்றவள் கண்ணில் நீருடன் நெற்றியில் முத்தமிட்டு சொன்னாள். 
""உன் நல்ல மனசுக்கு எல்லாம் நடக்கும்டி''
"ப்பா... எவ்வளவு நகைகள்... அழகான ஸ்டைலான நவீனமான ஆடைகள்... அணிகலன்கள்... ஒவ்வொருவரும் தேவலோகத்தில் இருந்து நேராக அல்லவா இறங்கி வந்தது போல் ஜொலிக்கிறார்கள்.' பிரமிப்பாக இருந்தது ஜானுவுக்கு... ரிசப்ஷனுக்கு வந்தவர்களைப் பார்த்து...
அவளின் அலங்காரம் அதிகபட்சம் பத்து நிமிடம் தான். ஒரு துளி க்ரீம் பூசி புருவங்களுக்கு மத்தியில் சின்னதாக துளி சிகப்புப் பொட்டு... மேலே விபூதிக் கீற்று... தலையை ஒரே வாராக வாரி பின்னாமல் அப்படியே 
ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளுவாள். கழுத்தில் ஒரு மெல்லிய செயின், காதில் முத்துத் தோடு. இவ்வளவு தான்...
திடீரென தான் அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாதவளாய் தோன்றியது. லேசாக போரடித்தது. இரவில் சரியாகத் தூங்காதது சற்றே கண்ணை அசத்தியது.
"டிக்... டிக்...' குறுஞ்செய்தியின் ஒலி வரவே பார்த்தாள். சந்தோஷ் தான்..."வந்துட்டேன்டா' என்ற செய்தியைப் படித்து விட்டு தலை தூக்கவும் ஹாலின் முகப்பில் அவன் வரவும் சரியாக இருந்தது.
அணிந்திருந்த புளூ கலர் ஜீன்ஸூம், கறுப்பும் வெள்ளையும் கலந்த பூக்கள் சிதறிய சட்டையும் அவன் உயரத்திற்கும் நிறத்திற்கும் அப்படிப் பொருந்திப் போனது.
முகத்தின் ரிம்லெஸ் கண்ணாடி அவன் கம்பீரத்தை தனித்துக் காண்பிக்க பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை ஜானுவுக்கு. 
அவளைப் போலவே பல இளம்பெண்களின் கண்கள் அவன் மீது படிந்து மீள்வதைக் குறித்துக் கொண்டது இதயம்...
தேடிய அவன் பார்வையில் இவள் பட்டதும் முகம் மலர புன்னகையுடன் கையாட்டினான்.
வரவேற்கும் முகமாக எழுந்து பக்கத்தில் போனாள். 
""ஜானு... கண்ணம்மா'' திக்கினான். 
வெறுமனே தலையசைக்க முடிந்ததுதான் அவள் செய்ததும்...
பேச்சற்றுப் போனார்கள் இருவரும். மேடையில் ஏறி ரம்யாவிடம் பரிசுப் பொருளைக் கொடுத்து விட்டு விடைபெற்று வரும் வரை ஒரு சொல் கூடப் பேசவில்லை இருவரும். 
வெளியே வந்து சந்தோஷின் வண்டியில் ஏறி சிறிது நேரம் கழித்து மெளனத்தைக் கலைத்தது அவன்தான். 
""எங்கே போகலாம்?''
சிரித்தாள்.
""நான் இங்கே வருவது இது இரண்டாவது தடவை சந்தோஷ்... úஸா... யுவர் சாய்ஸ்''
""ஓ.கே. கண்ணம்மா... எனக்குப் பிடித்த எல்லா இடங்களும் உனக்கும் பிடிக்கும் என்பதால் கூட்டிப் போகிறேன்.  ஆனால் ஒன்றே ஒன்று.  நீ இன்னும் நெருக்கமாக உட்காரணும்.  உன் மூச்சுக்காற்று என் கழுத்தில் சுட வேண்டும்''
தயக்கமாக இருந்தது. ஆனாலும் மனதின் ஒரு மூலை அந்த நெருக்கத்தை விரும்பியது. விட முடியாமல் தவித்தது. கடைசியில், "ஏன்..கூடாது'  இந்த நாளின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்தக் குரலை கொஞ்சலை... அனுபவித்து... அனுபவித்து... மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டு பிறகு சொல்லிக் கொள்ளலாம்.
முடிவு செய்தவள், அவன் சொன்ன மாதிரி நெருங்கி உட்கார்ந்தாள். அதன் பிறகு போன பெசன்ட் நகர் பீச்சோ, அஷ்ட லட்சுமி கோயிலோ, வள்ளுவர் கோட்டமோ எதுவும் மனதில் பதியவில்லை.
அவளுக்குத் தெரிந்ததெல்லாம் கண்ணில் கனிவுடன்... ""கண்ணம்மா... கண்ணம்மா'' என்றழைத்து அவன் கொஞ்சிய கொஞ்சல்கள்தான். 
அது மட்டுமா? வண்டியில் சென்ற நேரங்கள் தவிர்த்து சாப்பிடும் போதும், நடக்கும் போதும், அவன் கை அவள் கையை இறுகக் கோர்த்திருந்தது .
லேசாக வலித்த போது விடுவிக்க அவள் தளர்த்தினாலும், ""ப்ளீஸ்... மா... இன்னும் கொஞ்ச நேரந்தானேடா... ப்ளீஸ்''
அவனின் கெஞ்சல் மனதை அசைக்க அதற்குப் பின் அவளும் கைகளை விடுவித்தாளில்லை. முன்னை விட இறுக்கமாக கோர்த்துக் கொண்டாள்.
அவர்கள் இருவருக்கும் இன்னும் இன்னும் கொஞ்சம் என்று இருந்த போதும் நேரம் நகராமல் இருக்குமா?
ரயில் கிளம்பும் ஒரு மணி நேரம் முன்பாகவே ஸ்டேஷனை அடைந்து விட்டார்கள்.
அங்கேயும் கோர்த்த கையை விடாமலேயே தனித்த இடத்தில் உட்கார்ந்தார்கள்.
""கண்ணம்மா... இப்படியே தாலி கட்டி என் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட மாட்டோமா?'' என்று இருக்கிறது. 
ஜானு அந்தக் குரலில்  வழிந்த உற்சாகத்தில் தவித்துப் போனாள். ஆனால் சொல்ல வேண்டும். சொல்லியே ஆக வேண்டும்.
""சந்..சந்தோஷ்..'குரல் வெளி வந்த போது கலங்கி வந்தது. பேச முடியாமல் தொண்டை அடைத்தது.
அப்போதுதான் அவளின் முகத்தைப் 
பார்த்தவன் பதறிப் போனான்.
""ஜானு... என்னடா... என்ன கண்ணம்மா''
இரண்டு வருடங்களுக்கு முன்பொரு நாள்...
""வித்யா... இங்கே பாரேன். பிரெஸ்ட்டோட அடிப்பாகத்துல கல்லாட்டம் இருக்குடி. அழுத்திப் பாரேன்''
""டிராயிங் டேபிள்ல எங்காச்சும் இடிச்சுருப்பக்கா''  என்றவள் தொட்டுப் பார்த்து, ""ஆமாக்கா... நல்லா கல்லாட்டம் இருக்குது. ஜெண்டு பாம் போடு''
ஒரு மாதம் கழிந்த பின், ""வித்யா அந்தக் கட்டி கரையவே இல்லைடி. பெரிசா வேற இருக்கு... எதுக்கும் சாயந்திரம் நர்ஸ் கனகாகிட்ட காண்பிக்கணும். நாலு மணிக்குத்தான் டியூட்டி முடிஞ்சு வருவா''
""எவ்வளவு நாளா இருக்கு ஜானு?''
""தெரியலக்கா... ஒரு மாசத்திற்கு முன்னாடிதான் பார்த்தேன்''
""சரி... எதுக்கும் நாளைக்கு கிளினிக் வா... டாக்டரம்மா கிட்ட காண்பிச்சிரலாம்''
""அக்கா... ஒண்ணும் பயமில்லையே''
""ச்சே...ச்சே...எதுக்கு பயம்... எதையும் டெஸ்ட் பண்ணிட்டா அப்புறம் ஒண்ணுமில்லைன்னு தூக்கி போட்டுட்டு நிம்மதியா இருக்கலாம்''
ஆனால் அடுத்த நாள் டாக்டர் பார்த்தவுடனேயே பயாப்ஸி டெஸ்ட்டுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள்.
ரிசல்ட் வந்தது.  முடிவு அந்த சிறிய குடும்பத்தின் தலையில் இடியாய் இறங்கியது.
""கட்டி கேன்சர் வகையைச் சேர்ந்ததுன்னு ரிசல்ட் சொல்லுதுங்க. கட்டியை மட்டுமே அகற்ற முடியாது. கொஞ்சம் பெரிதாக இருப்பதால் ஒரு மார்பகத்தையும் சேர்த்து அகற்ற வேண்டும்.''
""ஐயோ... என்ன சொல்கிறீர்கள் டாக்டர்... அவள் இளங்குருத்து. இனிமேல் தான் எல்லாமே''
""டோண்ட் வொர்ரி... விஸ்வநாதன்... ஆபரேஷன் முடிந்து ஆறு கீமோ (தெரபி)கொடுத்தால் போதும். இருப்பதிலேயே உயிரைக் கொல்லாமல் போகும் கேன்சர்  மார்பக  கேன்சர் தான்.  ஜானு எல்லாப் பெண்களையும் போல் கல்யாணம் செய்து கொள்ளலாம். குழந்தை பெற்று தாய்ப்பால் கொடுக்கலாம். அதனால் கலங்காதீர்கள்''
""என்ன செய்யறது... முதல்ல எல்லாம் நாற்பது வயசுக்கு மேல இருக்கற பெண்களைத்தான் தாக்கிட்டு இருந்துச்சு. இப்ப முப்பது வயசுக்குள்ளாரவே வருது. இதனால் தான் வருதுன்னு சொல்றதுக்கில்லாம எல்லோருக்கும் வருது. கட்டி சிறிசா இருக்கறப்பவே வந்திருந்தா மார்பகத்தை எடுக்க வேண்டி வந்திருக்காது. 
சரி... அதற்கும் இப்ப ரெமிடி இருக்கு. மார்பகம் போலவே சிலிக்கான்ல செயற்கையா செய்து விக்கறாங்க. அப்படிப் பொருத்திகறதுதான் மார்பகங்கள் சரியான எடையோட இருக்க உதவி செய்யும்''
கண்கள் கலங்க நீளமாகச் சொல்லி விட்டு அவன் முகத்தைப் பார்த்தாள் ஜானு.
அனிச்சை செயலாக சட்டென்று சந்தோஷின் கண்கள் அவள் மார்புப் பகுதியைத் தொட்டு மீண்டன.
""அப்புறம் வந்த நாட்கள் நரகத்தின் ஒரு பகுதிதான் சந்தோஷ். கீமோதெரபியால் , தொடை தொடும் அத்தனை முடியும் விழுந்து நிறம் கறுத்து... எப்படியோ எல்லாம் முடிந்து இப்போது தான் இயல்பான வாழ்க்கைக்கு வந்துருக்கேன்.  இனி வாழ்க்கையில் கல்யாணம் என்றெல்லாம் ஒன்றில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் அன்பு அடியோடு அதை மாற்றி விட்டது. ஒவ்வொரு தடவையும் இதைச் சொல்லி விடலாம் என்று நினைக்கும் போதெல்லாம்... தெரிந்தால் எங்கே உங்கள் அன்பு அனுதாபமாக மாறி விடுமோ  என்று தவிர்த்து விடுவேன். இனி இதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் விடுவதும் உங்கள் விருப்பம்'' என்றபடி அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு அப்போது தான் ஒன்று உறுத்தியது அதுவரை கோர்த்திருந்த கை இப்போது பிரிந்திருந்தது.
குனிந்திருந்த அவன் முகத்தில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.
அவன் முகத்தையே பார்த்தவளுக்கு பாவமாகக் கூட இருந்தது. எவ்வளவு அதிர்ச்சியான விஷயம் இது... சரி, ஜீரணிக்கட்டும்... முடிவு காலத்தின் கையில்...
சென்னை எம்.ஜி.ஆர்.ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் தடம் ஒன்றில்... அறிவிப்பு மூன்று மொழிகளிலும் மாறி மாறி ஒலிக்கவே தலை நிமிர்ந்தவனின்...
முகம் பிரகாசமாக இருந்தது.  வழக்கமான "பளீச்' என்ற புன்னகையுடன். 
அவள் முகத்தைப் பார்த்தான். கரகரக்கும் குரலில் பேசத் தொடங்கினான். 
""ஏன்... கண்ணம்மா... என்னை அவ்வளவு கேவலமாகவா எண்ணி விட்டாய்? என்னைப் பொறுத்தவரை எனக்கு மனம்தான் முதலில். ஆண்கள் மட்டும் அல்ல. பெண்களும் மார்பகங்கள் அழகின் குறியீடு என்பதிலிருந்து வெளியே வந்து அது உயிரின் பசி தீர்க்கும் அமுதசுரபி என்பதை உணர வேண்டும்  என்பது என் கருத்து. வாழ்ந்து காட்டுவோம் கண்ணம்மா.  இந்த நோய்க்கான தாழ்வுணர்ச்சியிலிருந்து வெளியே வா. தைரியமாக, "நான் கேன்சர் நோயை எதிர்த்து வெற்றி கொண்டவள்' என்று உலகத்திற்கு பறைசாற்று. உன் வழிகாட்டுதலில் இன்னும் பல பெண்கள் தன்னம்பிக்கை பெறட்டும். இந்த வெற்றியில் எனக்கும் பங்கு கொடு. நிச்சயம் ... நிச்சயம் நாம் இருவரும் இந்த உலகில் அற்புதமான தம்பதியாக  வாழ்ந்து காட்டுவோம். என் அம்மா ஒரு சமூக சேவகி... அவர்களும் இதை வரவேற்கத்தான் செய்வார்கள்''
நீளமாகப் பேசியவன் மீண்டும் கையைக் கோர்த்துக் கொண்டு...""வா... போகலாம்'' என்றான்.
பேசிய அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணில் கண்ணீர் வழிந்தது. மனம் முழுவதும் பிரமிப்பில்... "ஹா..ஹா..'என்றது. இப்படிக் கூட ஒரு மனது இருக்க முடியுமா? என்ன அழகாகப் பேசுகிறான்?
""ச்சே... என்ன கண்ணம்மா இது... கண்ணைத் துடை'' என்றவன்
சீட் நம்பர் தேடி உட்கார வைத்தான். எதுவும் பேச வில்லை.  அவன் கை மட்டும் பிரிந்து அவள் தோளை அணைப்பாக சுற்றி தட்டிக் கொடுத்தது. 
மெளனமே நிறைவாக அங்கே ஆட்சி செய்தது. 
 ரயில் புறப்படத் தயாராகும் நீளமான ஹார்ன் ஒலி கேட்டது. 
""ஓ.கே.ஜானு... பத்திரம்... டேக் கேர்... இறங்கினவுடனயே மெசேஜ் பண்ணு... பை... கண்ணம்மா''
விடைபெற்று இறங்கி கையாட்டியபடியே  சென்று கொண்டிருந்த அவனையே... ரயிலின் ஜன்னலில் தலை சாய்த்து புள்ளியாகும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். 
நெஞ்சம் முழுவதும் சந்தோஷமாக... மனம் முழுவதும்  நிம்மதி நிரம்பி வழிந்தது. சில்லென்று குளிர் காற்று மேனியைத் தழுவியது. 
காமம் தேடும் உலகில் காதல் தேடிய அவள் 
சந்தோஷின் "கண்ணம்மா' என்ற  குரல் ஜானுவின் காதில் கிசுகிசுக்க...
ரயில் மெல்ல நகரத் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT