முகப்பு
தினமணி கதிர்

இனி என்ன செய்ய வேண்டும்?

காலையில் எழுந்த உடனேயே சுவாமிநாதன் பதற்றத்துடன் காணப்பட்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

காலையில் எழுந்த உடனேயே சுவாமிநாதன் பதற்றத்துடன் காணப்பட்டார். இன்னும் விடியவில்லை. விடிவதற்கு முன் இந்த நாள் ஏன் விடிய வேண்டும்? என்கிற எண்ணம் அவரைச் சீர்குலைத்தது. அவர் மனைவி கமலாவும், " இவருக்கு ஏன் இத்தனை பதற்றம், எல்லாமும் நடக்கிறதுதானே?' என்று எளிதாக எண்ணிக் கொண்டாள்.

காலைக் கடன்கள் முடித்தவுடன், குளிக்கப் போகையில் சுவாமிநாதனுக்கு "கண்கள் இருட்டுவதுபோல இருக்கிறது' என்று சொல்லிக் கொண்டார். இந்த
உலகமே இருண்டுவிடுவது மாதிரி அவர் நினைப்பு.

வீட்டைச் சுற்றி நோட்டமிட்டார். செடி, கொடிகள்எல்லாம் பச்சை வாடி சோர்ந்து, அவருக்காக வருத்திக் கொள்வது போல காணப்பட்டன. அவர் தண்ணீர் விட்டு வளர்த்தவை. பூக்கும்போது மனசுக்கு இதமாக இருக்கும். ஒரு நாளும் அதை அவர் கவனிக்காமல் இருந்ததில்லை. ஓர் இலை வாடிவிட்டாலும் இன்னொரு தளிர் துளிர்க்கும் வரை பணிவிடைகள் செய்வார்.

இரண்டு பிள்ளைகள்; அவர்களுக்குத் திருமணம் செய்து கரை சேர்த்து விட்டார். பிள்ளைகள் நல்ல வேலையில் இருக்கின்றனர். பேரப் பிள்ளைகள் உண்டு. ஆனால், பிள்ளைகளின் வேலை காரணமாக அவர்கள் ரொம்ப தூரத்தில் பிரிந்து இருக்க வேண்டியதாயிற்று.

சுவாமிநாதனுக்கும், அவர் மனைவி கமலாவுக்கும் அந்த வீடு கதி என்றாகி விட்டது. அவர்களின் தனிமையைப் போக்க ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பிள்ளைகள், மருமகள்கள், பேரப் பிள்ளைகள் எல்லாரும் அந்த நாள் சந்தோஷத்தில் வீடே கொள்ளை கொள்ளும்.

சுவாமிநாதனைப் பார்த்து அவர் மனைவி கமலா, ""நமக்கென்ன குறை'' என்பாள். அப்போது அவருக்குள்சுழிக்கும் புன்னகை. தான் தனிமையில்லை என்று உணர்வார்.

சுவாமிநாதன் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அவர் வீட்டருகிலுள்ள நகராட்சி அலுவலகத்தில் கிளார்க் வேலை. இருபத்து மூன்று வயதில் பணிக்குச் சேர்ந்தவர், முப்பத்தைந்து ஆண்டு காலம் பணி செய்து இன்று ஐம்பத்தெட்டு வயதில் பணி மூப்பு முடிந்து இன்று பணிவிடை பெறும் நாள். அதற்காகத்தான்
இந்தப் பதற்றம். அவருக்குத் துணையாக இருந்த வேலை, விலகிப் போகப் போகிறது என்கிறஉளைச்சல்.

சுவாமிநாதன் ரொம்ப சங்கோஜப் பேர்வழி. ஒதுங்கி ஒதுங்கி யாரிடமும் நெருக்கம் கொள்ளாதவர். தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு அவர் காலம் கழிந்துவிட்டது. அவர் மனைவி கமலாவைத் தவிர, யார் ஒத்தாசையும் இல்லாமலேயே வாழப் பழகிக்கொண்டார். அலுவலக ஊழியர்கள்தான் அவருக்கு நெருக்கமாக இருந்தார்கள். நாளை முதல் அவர்களைச் சந்திக்க முடியாது; சந்தித்தாலும் சக ஊழியராக நடந்து கொள்ளவும் மாட்டார்கள். இதெல்லாம் அவர் மனசில் ஊடாடி ரொம்ப கலவரத்துடன் முகத்தில்காட்டியது.
சுவாமிநாதன் மனைவி கமலாவுக்கு அவர் நிலைமை நினைத்து, ஆறுதல் சொன்னார். இருந்தாலும், அந்த ஆறுதல் அவருக்குத் துணிவு தந்தாலும், அவரால் அவரை நிலைப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

"சுவாமிநாதன் சார்...' அவரை அவருடன் பணிபுரியும் ஊழியர்கள் அழைக்கும்போது, அவர் மனது இளகி இதம் கொள்ளும். அந்தக் குரல் இனிக் கேட்காது; நகராட்சியில் வரி வசூல் செய்வதைக் கணக்குப் பேரேட்டில், பதிவு செய்யும் பணி அவருடையது. அந்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், யார் யாரெல்லாம் வரி கட்டியிருக்கிறார்கள், யார் யாரெல்லாம் பாக்கி வைத்திருக்கிறார்கள் எல்லாமே மனக்கணக்கில் அவருக்குஅத்துப்படி. அதுமாதிரி தன் வீட்டையும் கணக்காக வைத்துக் கொண்டார். பிள்ளைகளுக்குக் காலா காலத்தில் படிப்பு, வேலை, திருமணம் என்று செய்து முடித்தார்; கடமைகள் எல்லாம் முடித்தவர் ஆனாலும், இந்த உலகத்தில் இன்னும் பிறத்தியாருக்கு செய்ய வேண்டிய கடமைகள் செய்யவில்லையே என்பதுதான் அவரின் குறை. ஐம்பத்தெட்டு வயது நிறைவடைந்தாலும், தளர்ந்த உடலில்லை; உழைப்பதற்கான உடலும், ஆரோக்கியமும் நன்றாகவே இருக்கிறது, அவருக்கு.

வேலைக்குக் கிளம்பும் போது, "இனி என்ன செய்ய வேண்டும்?' என்று மனதில் சுவாமிநாதன் சொல்லிக் கொண்டார். அவர் அசைபோடுவதைக் கவனித்த அவர் மனைவி ""எதுக்கும் கவலைப்படாதீங்க''என்றாள்.

சுவாமிநாதன் வீட்டைவிட்டுக் கிளம்பினார். தோளிலே தொங்கும் பையில், மதிய சாப்பாட்டிற்கான டிபன் பாக்ஸில் சாம்பார்சாதத்தைக் கட்டிக் கொண்டார். இன்று அவர் பணி ஓய்வு பெறுபவர். ஆனாலும் இதுவரை அன்றாடம் செய்த பழக்கத்தின் காரணமாக, இன்றும் அவர் அந்த உணவை எடுத்துச் சென்றார். "நாளை இது இருக்காது இல்ல' என்று நினைத்தார்.

அவர் மனைவி கமலா தெருவரைக்கும் போய் அவரை வழியனுப்பி வைத்தாள். ""நல்லபடியா முடிச்சுட்டு வாங்க'' என்றாள். சுவாமிநாதனும் வழக்கம்போல கையசைத்தார். அவ கையும் ஓய்ந்துவிட்ட மாதிரி தோன்றியது. கால்கள் அசையவில்லை. பின்னுக்கு இழுத்து நெட்டித் தள்ளியது. ஒவ்வோர் அடியும் முன் எடுத்து வைக்கையில், "இந்த அடி நாளை இல்லை இன்று மட்டும்' என்று ஒவ்வொரு துடிப்பாக அவரைக் கனக்கச் செய்தது. பெரும்பாலும் பேருந்து பிடித்துப்போவார். அலுவலகத்துக்குச் சரியான நேரத்திற்குப் போவது அவரின் இயல்பில் கரைந்துவிட்டது. இன்று ஏனோ? சரியா நேரத்துக்கு அலுவலகத்துக்கு போக முடியுமா? என்று கூட அவருக்குள் ஓர் எண்ணம். வீட்டுக்கும், அலுவலகத்திற்குமான இடைவெளியில் அதிக தூரம் ஒன்றுமில்லைதான். மனது பின்னுக்கும், முன்னுக்கும் தள்ளி அவரால் சரியாகக் கால்களை நகர்த்த இயலவில்லை.

பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தார் சுவாமிநாதன். அவர் பதற்றத்தில் பேருந்தும் தாமதமாகத்தான் வரும்போல. அந்த பேருந்து நிறுத்தத்தில், அவர் அன்றாடம் சந்திக்கும் நண்பர் இருந்தார். சுவாமிநாதன் அந்த நண்பரைப் பார்த்துக் கேட்டார்:

""சார், கொஞ்ச நாளா உங்களைக் காணோமே''
""ஆம், கம்பெனியில் வெளியூர் வேலையா அனுப்பியிருந்தாங்க சார்...''
""ஓ... அப்படியா? பணியில் இருக்கறவரைதான் நமக்கு மட்டு மரியாதை சார்?''
""நீங்க அரசு ஊழியர். உங்க மதிப்பும் மரியாதையும் வேற, நாங்க தனியார் கம்பெனி, எப்ப டெண்ட் தூக்குவாங்கன்னு தெரியாது?''
""சார்... இன்னிக்கு ஆறு மணியோட என் பணி நிறைவு பெறுகிறது''
""வாழ்த்துகள் சார்... இனிமே உங்கள எங்க
பார்ப்பது?''
""பார்க்கலாம் சார், நீங்களும் நானும் பக்கத்துத் தெருதானே, அடிக்கடி சந்திக்கலாம்''
பேருந்து வரவும், சுவாமிநாதன் ஏறினார். பேருந்தில்
கூட்டம் குறைவாகத்தானிருந்தது. அவர் பேருந்தின் வலது பக்கம் முன்னாலுள்ள அவர் அமரும் இருக்கை காலியாகத்தான் இருந்தது. உட்கார்ந்தார். நடத்துநர் அவரைப் பார்த்தவுடன் எழுந்து போகாமல் உட்கார்ந்தார். சுவாமிநாதன் மாதப் பயண பாஸ் வைத்திருப்பார். அந்தப் பாஸில், நடத்துநரைப் பார்த்து, தானே பஞ்ச் செய்து கொள்வார். அன்றும் அவ்வாறே செய்து கொண்டார்.
சுவாமிநாதன் எழுந்து போய், நடத்துநரிடம், ""இன்றோடு என்னுடைய பாஸ் முடிகிறது'' என்றார்.
""நாளை எடுத்து விடுங்கள்'' என்றார்.
""பணியும் இன்றோடு நிறைவு பெறுகிறது'' என்றார்.
""சார், இனிமே நீங்க சந்தோசமா இருப்பிங்க?''என்றார்.
சுவாமிநாதன், பணி நிறைவு என்றால், சந்தோசமான காரியமாக நடத்துநர் சொன்னது அவர் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. பணியில் இருக்கும்போது, காசு, பணம் வரும், நட்பு கிடைக்கும், அதுவும் நகராட்சி பணி. வரி வசூலைப் பேரேட்டில் நாளும் பதிவு செய்யும் பணி. பொதுமக்கள் எல்லாம் அவர் பேரேட்டில் முகவரியோடு இருக்கையில், நாளை முதல் தான் மட்டும் தனித்துச் சந்தோசமாக எப்படி இருக்கமுடியும் என எண்ணினார்.
""சார், உங்க பேரேட்டின் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை, கடைகள், வீடுகள், தொழிற்கூடங்கள் வரி வசூல் என்று விதவிதமான மனித வாழ்வின் ஓட்டங்களை இவ்வளவு துல்லியமாகப் பதிவு செய்கிறீர்கள்?'' என்று அவரின் மேலாளர் சொல்லும்போது, "ஓ அதுவா?' என அவர் மனம் குளிரும்.
பேருந்து வழித்தடத்தின் நிறுத்தத்தில் நிற்கும்போது ஒருவர் ஏறினார். சுவாமிநாதன் பக்கத்து இருக்கையில் அமர்ந்தார் அவர். அவர் சுவாமிநாதனின் அலுவலகம் தாண்டிப் பயணிக்க வேண்டும். அதனாலே அவரும் இவரும் பேசிக் கொண்டே பயணிப்பது, இருவருக்குமான நட்பாக மாறியது. ஏறியவர் பணி நிறைவு பெறும் நாளை நெருங்கும் வயதில்லை. சுவாமிநாதன் இன்று ஓய்வு பெறுவது அவரும் அறிந்திருந்தார்.
""வாழ்த்துகள் சார்'' என்று சொல்லும்போதுநா தழுதழுத்தது.
மீண்டும், ""ஒரு கால் ஒடிந்தது போலிருக்கும்'' என்றார்.
அவர் பேச்சை ஓட்டுநர் கவனித்தார். அவரும் ஓய்வு பெறும் வயது என்பதால், கொஞ்சம் நடுங்கினார்.
சன்னல் வழியே தெரியும் மனிதர்கள் எல்லாம் தள்ளாடிக் கொண்டுதான் போயினர். எல்லாருக்கும் பிரச்னைதான் வாழ்வாக இருப்பதை உணர்ந்தார்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை எவ்வாறெல்லாம் போகிறது என யோசித்தால், அரசு ஊழியர், தனியார் தொழிற்சாலை தொழிலாளர், கொத்தனார், சித்தாள், தன்ளுவண்டிக்காரன், அன்றாடம் காய்ச்சிகள் எல்லாருக்குமே தள்ளாட்டம்தான். ""நானாவது, இந்த ஐம்பத்தெட்டு வயது வரை, பாதுகாப்புள்ள பணி குடும்பம், பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாகி விட்டது. ஆனால், என்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கை கேள்விக்குறிதானே?'' அப்படி சுவாமிநாதன் நினைக்கையில், அவர் அறியாமல் ஒரு சொட்டுக் கண்ணீர் உருண்டு கன்னத்தை நனைத்தது.
சுவாமிநாதன் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் வந்ததும், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த நண்பருக்கு வணக்கம் சொல்லிவிட்டு இறங்கினார். ஓட்டுநரும், நடத்துநரும் அவருக்கு வழியனுப்புவது மாதிரி அவரைப் பார்த்துத் தலையசைத்து வணக்கமிட்டனர். அவரும் பதிலுக்குக் கைகூப்பி வணங்கினார். பேருந்து தடதடத்துப் போயிற்று. இருக்கையில் உட்கார்ந்து இருப்பவர்களும் அவரவர்களின் யோசனையில் ஆழ்ந்திருந்தனர்.
அவர் அலுவலகத்திற்குள் நுழையும்போது, நகராட்சி ஊழியர்கள் பரபரப்பாக அவரவர் இருக்கையில் உட்கார்ந்து வேலைகள் செய்து கொண்டிருந்தனர். அவர் என்றுமே அலுவலகத்திற்குத் தாமதமாகப் போனதில்லை. இன்று மிகவும் தாமதமாகிவிட்டது. சுவாமிநாதனைக் கண்டதும், எல்லாரும் ஒன்றுபோலவே வணக்கம் கூறி அமர்ந்தனர். சுவாமிநாதன் தன் அலுவலக இருக்கையில் அமர்ந்தார். அவர் அன்றாடம் எழுதும் பைல்கள் எதுவும் கொண்டு வந்து வைக்கவில்லை. கடைநிலை ஊழியர் அவரிடம், ""இன்று உங்கள எந்த வேலையும் செய்ய வேணாம்னு செக்ஷன் ஆபீசர்உத்தரவு சார்'' என்றான்.
" ஓ... காலையிலேயே பணி ஓய்வா?' என நினைத்துக் கொண்டார். நேரத்துக்கு முன்னாலேயே, தேநீரும், பிஸ்கட்டும் கொண்டு வந்து அவர் மேசையில் வைத்தான் கடைநிலை ஊழியன். சக ஊழியரைப் பார்த்தார். அவரவர் வேலையைச் செய்து கொண்டிருந்தனர். தனக்கு மட்டும் வேலை இல்லையென நினைத்து, ஒரு கை ஒடிந்ததாக எண்ணினார். "இந்த நாள் இப்படியா போகும். முப்பத்தைந்து காலப் பணி ஒருநாளில் முற்றுப் பெற்றுவிட்டதே!' ரொம்ப பாவமாக ஒடுங்கினார். அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.
அந்த நகராட்சி ஊழியர் சங்கத்தில், அந்த ஊழியருக்காகச் சுழன்று சுழன்று உழைத்தார். அவர்கள் முன் வைத்த கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றியும் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாதது பெரிய வருத்தம் எதுவும் இல்லை. இப்போதுள்ள அலுவலக நெருக்கடிகள் என்று அவர்
புரிந்திருந்தார்.
தேநீரை மிடறு மிடறாகக் குடித்தார். பிஸ்கட்டைப் பிட்டு வாயில் போட்டார். இனிப்பு குறைவாகத்தான் இருந்தது. ஆனால், இந்த ஒரு நாள்கூடஇந்தப் பணி செய்ய இயலவில்லையே என்று தான் மனம்வருந்தியது.
மதிய உணவு நேரம் வந்தது; சுவாமிநாதனின் சக ஊழியர்கள் எடுத்து வந்த உணவைக் கேண்டினுக்குப் போய் சாப்பிட்டனர். சுவாமிநாதன் தன் இருக்கையிலே உட்கார்ந்து, டிபன் பாக்ûஸத் திறந்து, சாம்பார் சாதத்தைப் பிசைந்து கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கொண்டார். இடை இடையே பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை அருந்தினார். சாப்பிட்டு முடித்ததும், அவரின் சக ஊழியர்கள் அவரவர் இருக்கையில் உட்காரப் போகும்முன், சுவாமிநாதனைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். அவரும் அவர்களுக்கு நன்றியைத்தெரிவித்தார்.
சுவாமிநாதன் இருக்கையில் அமர்த்து அவர் அறையைப் பார்த்தார். அவரின் முப்பத்தைந்து ஆண்டு கால பணியில் இரண்டே அலுவலகத்தில் தான் பணிபுரிந்தார். ஒன்று, முதலில் வேலையில் சேரும்போது, அவர் பிறந்த ஊருக்கு அருகிலுள்ள நகராட்சி அலுவலகம். ஒரு பத்தாண்டு காலம் பணி புரிந்துவிட்டு, இப்போது பணிபுரியும் இந்த நகராட்சி அலுவலகத்தில் இருபத்தைந்து ஆண்டுகள். இந்த அலுவலகத்திலேயே வேலை செய்து, இன்று பணி நிறைவு நாளும் வந்துவிட்டது. அறையில் அலமாரி அடுக்குகளில் அடுக்கி வைக்கப்பட்ட பைல்களில் அவர் எழுதிய பைல்கள்தான். கிளார்க் வேலை எழுத்தர் என்று அவர் பெயருடன் ஒரு பலகையில் எழுதி மேசையில் இருந்ததைப் பின்புறமாகத் திருப்பி வைத்தார். ஒரு பைலை எடுத்தார். அவர் பதிந்த எழுத்துக்கள் அச்சு வார்த்தது மாதிரி இருந்தன.
சுவாமிநாதன் எழுந்து வந்து அலுவலகத்தின் பின்புற வாசலைப் பார்த்தார். அங்கு சிறிய பூங்கா ஒன்று இருக்கிறது. கொஞ்சம் மனசுக்கு அமைதி வேண்டும்போதெல்லாம் அங்குள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்வது வழக்கம். அப்போதும் அமர்ந்தார். எதிரிலுள்ள செடி, கொடி, பூக்கள் பேசின. ""நீங்கள் பணி நிறைவு பெற்றாலும்,
எப்போதும் வாருங்கள்'' என்றன.
""ஆம், வருவேன்'' என்றார். அவர் அவற்றைத் தொட்டுத் தடவி, "நீர் வார்க்க உங்களுக்கொரு மனிதன் கடைசிவரை இருக்க வேண்டும்' என்று நினைத்தபோது கண்ணீர் வந்தது.
மீண்டும் அலுவலகத்துக்குள் சுவாமிநாதன் வந்தார். வரும் வழியில் எதிர்ப்பட்ட கடைநிலை ஊழியன், ""சார் டிப்பார்ட்மெண்ட் ஹெட்
ஆபீசர் அவர் அறைக்கு உங்களை வரச்
சொன்னார்'' என்றான்.
சுவாமிநாதன் அந்த அலுவலர் அறைக்குச் சென்றார்.
""வாங்க, சுவாமிநாதன். உட்காருங்க''
என்றார். கை குலுக்கி, ""வாழ்த்துகள்'' என்றார்.
""பணி ஓய்வு பெற்றாலும், நீங்க எப்போதும் உரிமையோடு வந்து போகலாம்'' என்றார்.
பதிலுக்கு, ""நன்றி சார்'' என்றார். பணி நிறைபெறும், பணி விடுப்பு, மூப்பு, செட்டில்மெண்ட், ஊழியர் வைப்பு நிதி, அவருக்குக் கிடைக்க வேண்டிய பணப் பயன்கள், பென்ஷன் எல்லாமும் அடங்கிய பேப்பர்ûஸ அவரிடம் நீட்டி கையெழுத்து வாங்கினார்.
ஒவ்வொரு பேப்பரிலும் கையெழுத்திடும்போது, அவர் கைகள் நடுங்கின. இடையிடையே சுவாமிநாதன், "யெஸ் சார்' என்று சொல்லிக் கொண்டார். பார்மாலிட்டிஸ் முடிந்தவுடன், அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டதாக அவர் மனம் உறுதிப்படுத்தியது.
சுவாமிநாதன் அவர் அறைக்கு மீண்டும் வந்தார். அப்போது அவர் இருக்கையில் அமரவில்லை. அவருக்கும், அந்த அறைக்குமான பந்தம் அறுந்துவிட்டது மாதிரி தோன்றியது. முப்பத்தைந்து ஆண்டு காலப் பணியின் கடைசி மணித்துணிகள் நெருங்குகின்றன. "எல்லாமும் இவ்வாறா முடிகிறது' என்று அவர் வாய் முணுமுணுக்கையில், அலுவலக ஊழியர்கள் ஒவ்வொருவராக வந்து மாலையும் துண்டுமாக அணைத்துத் தோள் பற்றி, வாழ்த்துச் சொல்லினர்.
"ஓ... இதுக்குள்ளவா என் பணி முடிந்து விட்டது?' என்று தோளில் கனத்த மாலையும் துண்டுகளும் சந்தோசம் கொள்ள வைத்தாலும், வாழ்த்துகள் வலியாகத் தெரிந்தது அவருக்குள்.
அலுவலக ஊழியர்களிடமிருந்து, சுவாமிநாதன் விடை பெற்றார். அலுவலகத்தைத் திரும்பிப் பார்த்தார். முப்பத்தைந்து ஆண்டுகள் இதுக்குள்ளவா முடிந்து விட்டது? என்று தனக்குத் தானே பேசினார். நீண்ட தூரம் சென்று அவர் அலுவலகத்தைப் பார்த்தார். அவருக்கும் அலுவலகத்துக்குமான பந்தம் மிகவும் சிறு துளியாகக் கூடத் தெரியவில்லை.
வீட்டுக்கு வந்தவுடன், சுவாமிநாதனை அவர் மனைவி கமலா வரவேற்றாள், அவர் அப்போது ஒரு குழந்தை மாதிரி துள்ளிக் கொண்டிருந்தார். மனசிலிருந்து பாரத்தை இறக்கிய மனிதராக இருந்தார்.
அப்போது அவர் யோசனையில் - "இனி என்ன செய்ய வேண்டும்?' என்பதே பெரிதாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.