'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 68
சுதந்திர இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயராக டி.என். சேஷன் நிலைபெற்றுவிட்டது. பதவிக்கான மரியாதை அதை வகிப்பவரைப் பொறுத்தே அமையும் என்பதை நிரூபித்தவர் சேஷன்.
சுதந்திர இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயராக டி.என். சேஷன் நிலைபெற்றுவிட்டது. பதவிக்கான மரியாதை அதை வகிப்பவரைப் பொறுத்தே அமையும் என்பதை நிரூபித்தவர் சேஷன். ""நான் எனது வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு டி.என். சேஷனைத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்தது'' என்று முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பலமுறை என்னிடம் சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார்.
இந்தியா முழுவதும், குறிப்பாக எல்லா அரசியல்வாதிகளும், "சேஷன்' என்கிற பெயரைச் சொன்னாலே நடுங்கிக் கொண்டிருந்த நேரம். ஒருநாள் மாலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். வாசலில் இருந்த புல்வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தோம். சந்திரசேகர் என்னிடம் சொன்னதை நான் அவரிடம் சொன்னேன். அவரும் சிரித்தார்.
""சந்திரசேகர்ஜி சொன்னது இருக்கட்டும். நான் தலைமைத் தேர்தல் ஆணையராக உயர்ந்ததற்கு யார் காரணம் தெரியுமா?'' - சேஷன் கேட்டார்.
""சந்திரசேகர். இல்லையென்றால், ராஜீவ் காந்தி...''
""இரண்டு பேருமே கிடையாது. எம்.ஜி.ஆர்.தான் காரணம்...''
அவர் சொன்னதும் நான் திகைத்தேன். மத்திய அரசுப் பணியில் தில்லியில் அமைச்சரவைச் செயலாளர் பொறுப்பு வகித்த டி.என். சேஷனுக்கும் முன்னாள் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் என்று நான் யோசிப்பதற்குள் அவரே தொடர்ந்தார்:
""நான் தமிழ்நாடு கேடர் ஆட்சிப்பணி அதிகாரியாகத்தான் இருந்தேன். திண்டுக்கல்லில் துணை ஆட்சியராகவும், மதுரை மாவட்ட ஆட்சியராகவும் இருந்திருக்கிறேன். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றுவிட்டு மத்திய விண்வெளித் துறையின் செயலாளராகப் பணியாற்றி வந்த நான், தமிழகத்துக்குத் திரும்பினேன். என்னை உங்கள் மாநிலத்தில் மரியாதையோடு நடத்தி இருந்தால், நான் அமைச்சரவைச் செயலராகவும் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் உயர்ந்திருக்க முடியாது'' என்று சொல்லிச் சிரித்தார் அவர்.
என்ன காரணத்தாலோ, டி.என். சேஷனைக் கண்டாலே முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை. மற்ற அதிகாரிகளைப் போல வளைந்து நெளிந்தும், குழைந்து பேசியும் நடிக்கத் தெரியாததாலோ என்னவோ, எம்.ஜி.ஆரால் அவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. டி.என். சேஷனைத் தொடர்ந்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றிக்கொண்டே இருந்தார். பல அதிகாரிகளுக்கும் சேஷனின் அணுகுமுறைகளும், கண்டிப்பும், கறாரும் பிடிக்கவில்லை. அவர்களும்எம்.ஜி.ஆருக்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் தொந்தரவு சகிக்க முடியாமல், தமிழக அரசிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மத்திய அரசுப் பணிக்குச்சென்றுவிட்டார் சேஷன்.
எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காத டி.என். சேஷனை, இந்திரா காந்திக்கும், ராஜீவ் காந்திக்கும் ரொம்பவே பிடித்தது. அவரை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலராகவும், அமைச்சரவைச் செயலராகவும் நியமித்தவர் ராஜீவ் காந்தி. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு, பிரதமர் சந்திரசேகரிடம் சேஷனின் பெயரைப் பரிந்துரைத்தவரும் ராஜீவ் காந்திதான்.
பிரணாப் முகர்ஜி ராஜிநாமா செய்த 1993 ஜூலை 16-ஆம் தேதிக்கு முந்தைய நாள் நான் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷனை சந்தித்தேன். எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் அழைக்கவும் அவரைச் சென்று சந்திக்கவும் எனக்கு சேஷன் அனுமதி தந்திருந்தார். தனது கடைசி காலத்தில் சென்னையில் தங்கியிருக்கும்போது எங்கள் சந்திப்பும் நெருக்கமும் மேலும் அதிகரித்தன.
""மேற்கு வங்க மாநிலங்களவைத் தேர்தலைத்தள்ளிப் போடுவதால், பிரணாப்தா பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது...''
""அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஜோதிபாசுவும் அவரது ஆட்களும் சொல்வதுபோல என்னால் செயல்பட முடியாது. மாநில முதல்வராக இருந்தால், அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா? எனக்குத் தனிநபர் முக்கியமில்லை. பிரணாப் முகர்ஜி மந்திரியாக இருந்தால் என்ன, ராஜிநாமா செய்தால் என்ன? தேர்தல் ஆணையம் கிள்ளுக்கீரையல்ல என்று ஜோதிபாசு தெரிந்து கொள்ள வேண்டும்'' - பொரிந்து தள்ளினார் சேஷன்.
நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந் தேன்.
""உங்களுக்கும் ஜோதிபாசுவுக்கும் இடையில் நடக்கும் பனிப்போரில், பிரணாப்தா நடுவில் சிக்கித் தவிக்கிறார்...''
""என்னிடம் பேசச் சொல்லி பிரணாப் முகர்ஜி உன்னை அனுப்பி இருக்கிறாரா?''
""ஐயய்யோ, அப்படியெல்லாம் இல்லை. நானாகத்தான் வந்திருக்கிறேன்''
""பிரணாப் முகர்ஜி எனக்கும் நண்பர்தான். அதற்காக நான் தேர்தல் ஆணையத்தின் மரியாதையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை...''
அதற்கு மேல் நான் அவரிடம் அதிகம் எதுவும் பேசவில்லை.
பிரணாப் முகர்ஜி கோபப்பட்டு நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால், அவர் உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததில்லை. அன்றும் அப்படித்தான், பதவியை ராஜிநாமா செய்தாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டதை சற்றும் வருத்தமே இல்லாமல் அவர் எதிர்கொண்டதை இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது.
தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு கொல்கத்தாவுக்குக் கிளம்பி விட்டார் பிரணாப் முகர்ஜி. தொலைபேசியில் பகிர்ந்து கொள்ள முடியாத சில தகவல்கள் இருந்தன. அதை அவரிடம் நேரில்தான் தெரிவித்தாக வேண்டும். அவர் கிளம்பிப் போன அடுத்த நாளே, நான் ரயிலில் கொல்கத்தா கிளம்பினேன்.
கொல்கத்தாவின் ஹெளரா ரயில் நிலையத்தில் உள்ள தங்கும் அறையிலேயே இடம் கிடைத்தது. லேக் ரோட்டிலுள்ள கவி பாரதி சரணியில் அமைந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தது பிரணாப் முகர்ஜியின் வீடு. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, டாக்டர் லால்மோகன் பட்டாசார்ஜி சாலையிலுள்ள கட்சித் தலைமையகமான பிதான் பவனில் அவர் இருப்பதாகத்
தெரிவித்தனர்.
பிதான் பவனில் "ஜேஜே' என்று ஒரே கூட்டம். மாநிலங்களவைத் தேர்தல் தள்ளிப் போட்டிருப்பது குறித்துத்தான் பேச்சு. எல்லோரும் ஜோதி பாசுவையும், டி.என். சேஷனையும் திட்டித் தீர்த்தனர். அதில் இருந்த காங்கிரஸ்காரர்களின் ஒற்றுமை, ஒருங்கிணைந்த செயல்பாடு பிரணாப் முகர்ஜியின் வெற்றியை உறுதிப்படுத்துவதிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
கானிகான் செளத்ரி, மம்தா பானர்ஜி இருவரும் தனித்தனி கோஷ்டிகளாகச் செயல்பட்டாலும், எல்லாப் பிரச்னைகளிலும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். கானிகான் செளத்ரியின் தயாரிப்புதான் மம்தா பானர்ஜி என்பதால் தனது குருநாதரை மீறி அவர் செயல்பட மாட்டார். ஆனால், பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷியும், சோமன் மித்ராவும் அப்படியல்ல. பிரணாப் முகர்ஜி சொன்னால் சோமன் மித்ரா கேட்டாலும் கூட, தாஸ் முன்ஷியை வழிக்குக் கொண்டுவருவது சிரமமான செயல். புலி, ஆடு, புல்லுக்கட்டுக் கதையாக பிதான்பவனில் அமர்ந்துகொண்டு எல்லா கோஷ்டிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் பிரணாப் முகர்ஜி. எல்லா கோஷ்டிகளும் அவருக்கு ஆதரவளித்தாலும் கூட வெற்றி நிச்சயமல்ல என்பதுதான் பெரிய பிரச்னை.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் காங்கிரஸூக்கு 41 உறுப்பினர்கள்தான் இருந்தனர். மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட 42 உறுப்பினர்களின் முதல் சுற்று வாக்குகளைப் பிரணாப் முகர்ஜி பெற்றால்தான் வெற்றி பெற முடியும். அது தொடர்பாகத்தான் பிரணாப் முகர்ஜிக்கு என் மூலம் தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார் சைஃபுதீன் செளத்ரி.
தொடர்ந்து முக்கியத் தலைவர்களுடன் கலந்தாலோசனையில் இருந்த பிரணாப் முகர்ஜியை சந்திக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல; நான் வந்திருப்பதாகக் கூட அவருக்குத் தெரிவிக்க முடியவில்லை. அவர் இருந்த அறைக்குள் நுழையக் கூட முடியவில்லை.
ஒரு நாளுக்கு மேல் ரயில் நிலைய ஓய்வறையில் தங்க முடியாது. கொல்கத்தாவில் எனக்கு நண்பர்கள் என்று சொல்ல யாரும் கிடையாது. தெரிந்தவர்கள் என்று சொல்வதற்கு இருந்த சிலருக்கு கொல்கத்தாவில் வீடு கிடையாது. அவர்கள் மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
பிதான் பவனிலிருந்து வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த பிரியரஞ்சன்தாஸ் முன்ஷியின் பார்வையில் நான் பட்டது, நான் செய்த பூர்வஜென்ம பாக்கியம்.
அருகில் அழைத்தார். சென்று விவரம் சொன்னேன். தொண்டர் ஒருவரை அழைத்து என்னை பிரணாப்தாவிடம் அழைத்துச் செல்லும்படியும், ரயில் நிலைய அறையைக் காலி செய்து கட்சி அலுவலகத்திலேயே தங்க வசதிகள் செய்து கொடுக்கும்படியும் கூறிவிட்டுக் கிளம்பினார்.
ஆட்சியில் இருந்த ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசு, தேர்தலில் கள்ள வாக்குகள் மூலம் முறைகேடு செய்து வெற்றி பெற்றது என்பது மம்தா பானர்ஜியின் வாதம். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த மம்தா பானர்ஜி தேர்தலில் வாக்காளர் அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கோரி மேற்குவங்கத் தலைமைச் செயலகமான ரைட்டர் கட்டடத்துக்கு ஜூலை 21-ஆம் தேதி ஒரு பேரணியை அறிவித்திருந்தார்.
அறையில் பிரணாப்தாவுக்கும், மம்தா பானர்ஜிக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. சோமன் மித்ராவும் ஏதோ உரக்கப் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் வங்க மொழியில் பேசிக் கொண்டிருந்ததால், என்ன பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை. மம்தா பானர்ஜியை, அவரது பேரணியைத் தள்ளிப் போடும்படி கூறுகிறார்கள் என்று ஊகித்துக் கொண்டேன். அவர் பிடிவாதமாக மறுக்கிறார் என்பதும் தெரிந்தது.
அறைக்கு வெளியே அந்தத் தொண்டருடன் நான் பொறுமையாக நின்று கொண்டிருந்தேன். பிரணாப் முகர்ஜியைத் தனிமையில் சந்தித்துத் தகவலைச் சொல்லியாக வேண்டும். அவருக்குத் தேவைப்படும் கூடுதலான ஒரு வாக்கு, அந்தத் தகவலில் இருந்தது.
பிரணாப் முகர்ஜி அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த ஜூலை 16, 1993-க்கும், மேற்குவங்கத்திலிருந்து ஆகஸ்ட் 19, 1993-இல் நடைபெற இருந்த மாநிலங்களவைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில், தில்லியில் மிகப் பெரிய புயல் உருவாகி இருந்தது.
மாநிலக் கட்சிகள் அடங்கிய தேசிய முன்னணியால் நரசிம்ம ராவ் அரசுக்கு எதிராகக் கொண்டுரவரப்பட இருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பது என்று முடிவெடுத்திருந்தது பாரதிய ஜனதா கட்சி. 530 உறுப்பினர்கள் இருந்த மக்களவையில் காங்கிரஸூம் கூட்டணிக் கட்சிகளும் 255 உறுப்பினர்களைப் பெற்றிருந்தன என்றால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 261.
பிரணாப் முகர்ஜி மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதை விட, நரசிம்ம ராவ் அரசால் நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் பிழைக்க முடியுமா என்பதுதான் பெரிய சவாலாக இருந்தது. பிரணாப் முகர்ஜியையும், நரசிம்ம ராவையும் பற்றிய கவலையே இல்லாமல், ஜூலை 21-ஆம் தேதி பிரம்மாண்டமான பேரணியை ஏற்பாடு செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று கொல்கத்தாவில் குவிந்தனர். நகரத்தில் ஐந்து பகுதிகளிலிருந்து தனித்தனியாக கிளம்பிய அணிகள் ஓரிடத்தில் இணைந்து ரைட்டர்ஸ் கட்டடத்தை நோக்கி நகர்ந்த போது, கொல்கத்தாவின் சாலைகள் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்திருந்தன.
காவல் துறையினரால் அவர்கள் தடுக்கப்பட்டபோது, நிலைமை கைமீறியது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அந்த நாளைத் தியாகிகள் தினமாக இப்போதும் திரிணமூல் காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது.
பேரணியை வேடிக்கை பார்க்க பராபோன் சாலையில் ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். பிரணாப் முகர்ஜியை சந்தித்துத் தகவல் தெரிவித்துவிட்டு தில்லிக்குத் திரும்பாமல், ஜூலை 21 பேரணியை வேடிக்கை பார்க்க நினைத்த எனக்கு, சற்றும் எதிர்பாராமல் முதுகில் விழுந்த தடியடியும், பூட்ஸ் காலால் எட்டி ஓர் உதையும் இந்த ஜென்மத்துக்கும் போதுமான பாடம்!
(தொடரும்)