ஊமை ஜனங்களடி
ஓட்டமும் நடையுமாய் பஸ் ஸ்டாண்டை அடைந்த சரண்யா, தன்னுடைய தோழி ராதாவை பார்த்து ஆச்சரியமுடன் , " அட!
தினமணி கதிர்ஊமை ஜனங்களடி
ஓட்டமும் நடையுமாய் பஸ் ஸ்டாண்டை அடைந்த சரண்யா, தன்னுடைய தோழி ராதாவை பார்த்து ஆச்சரியமுடன் , " அட!
ஓட்டமும் நடையுமாய் பஸ் ஸ்டாண்டை அடைந்த சரண்யா, தன்னுடைய தோழி ராதாவை பார்த்து ஆச்சரியமுடன், " அட! இவ எப்படிடா எனக்கு முன்னாடி வந்தாள்?' என்ற கேள்வியுடன் உற்சாகமாய் கையசைத்தாள்.
ஆனால் ராதாவோ, சரண்யா வந்ததையோ , தன்னைப் பார்த்து கையை அசைத்ததையோ ஏதும் கவனிக்காத ராதா , பஸ் ஸ்டாண்டில் திடீரென முளைத்த அந்தக் குடும்பத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் மட்டுமல்ல! பஸ்ஸூக்காக வருவோர், போவோர், காத்திருப்போர் என அனைவருக்குமே அந்தக் குடும்பம்தான் ஒரு பெரிய பொழுதுபோக்கு. கணவன் ,மனைவி! அப்படியும் அவர்களைஅறிமுகப்படுத்தலாம்.
அவனுக்கு "நெட்டையன்' எனவும் அவளுக்கு "பொட்டுக்காரி' எனவும் பெயர் வைத்திருந்தனர். அவர்களின் இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு குழந்தைகளும் நெட்டையனின் குழந்தைகள் எனவும், சிலர் அக்குழந்தைகள் பொட்டுக்காரியின் குழந்தைகள் எனவும், பலர் அக்குழந்தைகள் அவர்களுடையதே இல்லை எனவும் கூறுவர்.
அபிப்பிராயங்கள் ஆயிரம் என்றாலும் அனைவரின் ஒரே ஆச்சரியம் அந்தத் தம்பதியிடம் இருந்த அன்னியோன்யம்.
அந்தப் பெண் முப்பதிலிருந்து நாற்பது வயதுக்குள் இருக்கலாம், நெட்டையன்
அவளைவிட வயது குறைந்தவனாகவோ, அன்றி சம வயது உடையவனாகவோ இருக்கலாம்.
பொட்டுக்காரி மிகப் பெரிய ரிங் கொண்டையுடன் , கனகாம்பரமோ, மல்லியோ அல்லது டிசம்பர் பூவையையோ ஏதாவதொன்றை அந்தக் கொண்டையைச் சுற்றி வைத்திருப்பாள்.
ஒரு சின்ன செங்கலின் மேல் உட்கார்ந்திருக்கும் அவளின் போஸ் மாறியதே இல்லை. அவனுடன் "குசுகுசு' எனப் பேசிக் கொண்டே இருப்பாள். மெள்ளச் சிரிப்பாள், லேசாய் வெட்கப்படுவாள், அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருப்பதை அறியாதவளாய் அன்றி நீங்களெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போலவோ அவர்கள் உலகம் தனித்திருக்கும்.
காவி ஏறிய சோழிப்பற்கள் ,அவளின் வெற்றிலைப் பாக்கு பழக்கத்தை பறைச்சாற்றும்.
சில சமயம் சற்றே நிமிர்ந்து பார்த்து ,அவனிடம் குனிந்து ஏதோ கூறி "கெக்கெக் "கென சிரிப்பாள். " பொட்டுக்காரி நம்ம பார்த்துதான் கமென்ட் அடிக்குது' எனும் ராதாவை மறுப்பாள் சரண்யா .
""உனக்கு அவர்களிடம் இருக்கும் அன்னியோன்யம் உறுத்துது அதான்'' என்பாள் ராதா.
""தப்பா புரிஞ்சிக்காதே! அவர்களின் அன்னியோன்யம் எனக்கு உறுத்தலை, ஆனால் அவர்கள் பசங்க கிட்ட காட்ற அலட்சியம் உறுத்துது'' என்பாள் சரண்யா.
"ஆமாம்' என ஆமோதிப்பதுபோல் அமைதியாய் இருந்த சரண்யாவின் கண்களில்மெல்லிய சோகம் படர்ந்தது.
அந்த பஸ் ஸ்டாண்ட் குடும்பத்தின் மூத்த மகனுக்கு பன்னிரெண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கலாம். கண்களில் சதா ஒரு மிரட்சியுடன் ஒருமூலையில் பம்மிக் கொண்டிருப்பான்.
சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் அந்தப் பொட்டுக்காரி, திடீரென விசும்புவாள்; முகத்தை மூடிக் கொண்டுஅழுவாள். அப்போதெல்லாம் என்னக் காரணமோ தெரியாது. நெட்டையன் ஓடி வந்து அந்தப் பையனை எட்டி ஒரு உதைவிட்டு அடிக்க ஆரம்பிப்பான்.
அடி என்றால் உடம்பு வீங்கி போகும் வரை, அடி பொறுக்க முடியாமல் ஓடிப் போகும் பையனை , கை நிறைய கருங்கற்களுடன் நெட்டையன் துரத்திக் கொண்டு ஓடுவான். இதையெல்லாம் எந்த சலனமும் இன்றி பார்த்துக் கொண்டிருக்கும் பொட்டுக்காரியை " தாய்' என்பவர்களை என்ன சொல்ல?
அந்த செம்பட்டை முடி, பழுப்பேறிய கண்கள், கோதுமை நிறம் என்ற ஒற்றுமை, அவளின் மகன்தான் அவன் எனச் சொல்ல வைத்தாலும் " அட! வடக்குல எல்லாரும் அப்படி தாங்க இருப்பாங்க! பசங்கள எங்கேயிருந்து தூக்கியாந்துதுங்களோ?' என நொடிப்பவர்களே அதிகம்.
அந்தப் பையன் "ஐயோ பாவம்' என்றால் ,ஒன்பது , பத்து வயதுக்குள் இருக்கும் அடுத்தப் பெண் மிகவும் பரிதாபத்துக்குரியவள். வயதுக்கு மீறிய முதிர்ச்சி, பொறுப்பு, தம்பி, தங்கைகளின் தலையில் எண்ணெய் தடவி செம்பட்டைமுடியை படிய வாரிவிட்டு, சாப்பாடு ஊட்டி , தட்டுகளைக் கழுவி, அந்த இடத்தை ஒரு பருக்கை இல்லாமல் சுத்தம் செய்து, கிழிந்த கந்தைகளைஅழகாகத் தைத்துக்கொண்டிருப்பாள்.
தையல் வேலை முடிந்ததும் ,அவளுக்குத் தெரிந்த ஒரே தமிழ்ப் பாட்டு " ஆயிரம் கண் உண்டென்றாய்! ஒரு கண் எனை பாராதோ' அடுத்த வரி தெரியாத காரணத்தால் அதையே மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருப்பாள். கூடவே அவளின் தம்பி, தங்கைகளின் கைகளையும் இறுக்கப் பற்றிக் கொண்டுவருவாள்.
அவர்களும் தங்கள் பங்குக்கு "தீதி.. தீதி..' எனக் கையேந்திக் கொண்டுவருவார்கள். பாட்டில் இருக்கும் சோகமோ அல்லது அவர்களின் அவலமோ எதோ ஒன்று அனைவரையும் காசைக் கொடுக்க வைக்கும்.
எங்கிருந்து இவர்கள் வந்தார்கள்?, என்ன செய்கிறார்கள்?, எங்கே போகப் போகிறர்கள் ?
என ஒன்றும் தெரியாது. மூன்றாவது பையன் அப்படியே நெட்டையனை உரித்து வைத்திருக்கிறான் என்பதைத் தவிர.
அந்தக் கடைசி பெண்ணைப் பற்றி சொல்லாவிடில் கதைக் கிடையாது.
அப்படியே சானியா மிர்சாவை இரண்டு வயதுக்குள் சுருக்கிவிட்டதுபோல் அப்படி ஒரு கொள்ளைஅழகு. அந்தப் பெண் மீது தான் சரண்யாவுக்கு ஒரு கண்.
""என்ன அழகு பாரு ராதா? எப்படியும் ஒரு குழந்தையை நாங்கள் தத்து எடுக்கணும்தான் இருக்கோம் . அது ஏன் இந்தக் குழந்தையாய் இருக்கக் கூடாது..?''
"" நல்லா யோசிச்சு பாரு! அப்பறம் முடிவு பண்ணு! பின்னாடி ஏதாச்சும் பிரச்னை ஆயிடப் போவுது?''
"" என்னை என்ன உலகம் தெரியாதவனு நினைச்சியா.? போலீûஸ வச்சு, வக்கீல் வழியா பணம் கொடுத்து, எது லீகலோ அப்படித்தான் பண்ணுவேன்''
""ஆனா , அதெல்லாம் கூட ஒரு பிரச்னையாத் தெரியில....என்னுடைய மாமியாருக்கு புரிய வைக்கிறது தான் பிரச்னையா இருக்கு. அவங்கள பொருத்த வரை அவங்கப் பையன் இப்போது தான் இருபது வயதை தொட்டுக் கொண்டிருக்கும் குழந்தை என்ற நினைப்பு. அவர் இந்த வருடம் 38 வயதை தொட்டு விடுவார். எனக்கு இதே மன அழுத்தத்தில் மெனோபாஸ் வந்து விடும் போலிருக்கு!''
சரண்யாவுக்கு, பொது இடம் என்பதை மறந்து முகம் மூடி அழுதாள்.
ராதா ஆறுதலாய் அவள் தோள்களை தட்டிக் கொடுத்தது , சரண்யாவின் துக்கத்தை மேலும் அதிகப்படுத்தியது.
""இதுல இன்னொரு வேதனை என்ன தெரியுயமா? என்னுடைய அண்ணனுக்கும், நாத்தனாருக்கும் இப்பவே பனிப்போர் ஆரம்பித்து விட்டது. பிள்ளையில்லாத சொத்தை யார் பங்கு போட்டுக் கொள்வதென்று!
விரக்தியில் ,இயலாமையில் லேசாக சிரித்தாள் சரண்யா.
ராதா அவளின் கவனத்தை திருப்பும் பொருட்டு "" இது இவங்க குழந்தையாய் இருந்தா பிரச்னை இல்லை. ஸப்போஸ்.. இல்லாட்டி.?''
""ரொம்ப நல்லதா போச்சு .. குழந்தை உரியவங்க கிட்ட போய்ச் சேரும் இல்லையா..?''
" "ம்கும். நினைச்சுகிட்டு இரு! அது திருட்டுக் குழந்தைன்னு வைச்சிக்கோ? நீ கேட்ட உடனே இந்த இடத்தைக் காலி பண்ணி,, முதல் வேலையாய் அந்தக் குழந்தையின் கையையோ, காலையோ உடைத்து ஊனம் பண்ணிடுவாங்க அதுபாட்டுக்கு...' -மேற்கொண்டும் பேச்சை தொடர
முடியாமல்...!
""நை பையா நக்கோநை ..நை.' என்ற அழுகையுடன் குரல் கேட்கத் திரும்பிப் பார்த்த அவர்கள் உறைந்துப் போயினர்.
அங்கே அந்தப் பெரிய பையன் கடைசிப் பெண்ணை கையில் இருக்கப் பற்றிக் கொண்டு, எதிரே மொட்டைத் தலையுடன் உயரமான ஆள் ஒருவனிடம், "நை
சாஹிப் ஏக் ஹசார் கோகம் நஹி'' எனப் பேரம் பேசிக் கொண்டிருந்தான்.
பெரிய பெண் அண்ணனின் காலை இறுக்கப் பற்றிக் கொண்டு "" சோட் தோ பையா முன்னிகோ சோட் தோ' எனக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
அவளை காலாலேயே அந்தப் பையன் எட்டி ஒரு உதைவிட தூரப் போய் தள்ளி விழுந்தாள்.
அதற்கு மேல் போராட வலுவற்றளாய் மிரட்சியுடன் தம்பியை இறுக்கப் பற்றிக் கொண்டு நின்றாள்.
" ஏய்.., லேலோ.. "என இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை அவன் மீது வீசிவிட்டு குட்டி சானியாவை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
பட்டணத்து நாகரிக மக்கள் ஒன்றும் கேட்காது ஸ்தம்பிக்க, சரண்யா மட்டும் வேகமாக முன்னால்ஓடி.. அவனை மறித்து நின்றாள்.
" "ஏய் என்ன செய்யெற நீ.? குழந்தையை முதலில் கீழே இறக்கு! போலீஸூக்கு
ஃபோன் பண்ணட்டுமா.?'' என சூழ்நிலை உணராது அப்பாவியாய் மிரட்டினாள்.
கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாத அவன், ""என்னா அப்ப நீ வரியா..?''
என்றான்.
ஆபத்தை உணர்ந்த சரண்யா கிடுகிடுவென ராதாவை இழுத்துக் கொண்டு நடந்தவாறே, "" நீ நினைக்கிற மாதிரியெல்லாம் கிடையாது..அவங்களுக்கென ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கும்''
அவர்களின் கடைசி ஆயுதமாய் அந்தப் பெற்றோரைத் தேட அவர்களோ , இதைத் தெரிந்தும் தெரியாததுபோல் பேசிக் கொண்டே வெகுதூரத்தில் சென்றுக் கொண்டிருந்தார்கள். பணத்த எடுத்துக் கொண்டபையனோ அவர்களுக்கு எதிர்திசையில் ஓடிக்கொண்டிருந்தான்.
ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும்போதே பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ள காலம் முழுவதும் போரடவேண்டியுள்ளது. ""இனி இந்தக் குழந்தையின்கதி.. அசிங்கம் எது? அவமானம் இது? எனத் தெரியாமல் வளர்க்கப்பட்டு..!
என்ன தான் அவர்களுக்கென நெட்வொர்க் இருந்தாலும் சரண்யா மட்டுமே ஓடோடிச் சென்று தட்டிக் கேட்கும்போது பொதுமக்களும் கூடியிருந்தால், அந்தக் குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே.! என தன்னைஅறியாமல்" ஹொ' வென கத்தி அழ தொடங்கினாள்.