'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 71
புவனேஷ் சதுர்வேதி, ""ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள பிரதமரின் இல்லத்துக்கு நரசிம்ம ராவ் சென்றிருக்கிறார்'' என்று சொல்லி இருந்தால், நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.
புவனேஷ் சதுர்வேதி, ""ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள பிரதமரின் இல்லத்துக்கு நரசிம்ம ராவ் சென்றிருக்கிறார்'' என்று சொல்லி இருந்தால், நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். "அவர் குறித்த ஆவணப் படப்பிடிப்புக்காக, ஒரு மாதத்திற்கு முன்பு திட்டமிட்டிருந்தபடி பிரதமர் நரசிம்ம ராவ் சென்றிருக்கிறார்' என்று சொன்னபோது நான் அதிர்ச்சி அடைந்தேன்.
""நிஜமாகத்தான் சொல்கிறீர்களா?''
""ஆமாம் வைத்தியநாதன். இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஜூலை 28-ஆம் தேதி ஆவணப் படப்பிடிப்புக்காக அவரது நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான நோட்டீஸ் கொடுப்பதற்கு முன்பே, அதற்கு ஒப்புக் கொண்டிருந்தார் பிரதமர். ஜூலை 28-ஆம் தேதி மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டபோது, "ஆவணப் படத்தின் அப்பாயின்மெண்ட்டைத் தள்ளிப் போடுவோமா?' என்று கேட்டோம். பிரதமர், "தேவையில்லை' என்று சொல்லிவிட்டார்.''
""எண்ணிக்கை பலவீனம் தெரிந்திருந்தும், பிரதமர் எப்படிச் சொன்னார்? தீர்மானம் தோல்வி அடையும் என்று அவருக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை இருந்தது ஆச்சரியப்படுத்துகிறது...''
""வைத்தியநாதன், நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நரசிம்ம ராவ்ஜிக்குத் தன்னம்பிக்கை இருக்கிறது என்பதைவிட, அவருக்கு "விதி'யின் மீது அளப்பரிய நம்பிக்கை உண்டு என்பதுதான் உண்மை. எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இயல்பாகவே உண்டு. நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்று அதனால் அரசு கவிழ்ந்தாலும், பிரதமர் சற்றும் கவலைப்படாமல் தனது ராஜிநாமாக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வழக்கம்போலத் தொடர்வார். என்னைப் பொருத்தவரை, நரசிம்மராவ்ஜி ஒருகர்மயோகி''.
புவனேஷ் சதுர்வேதியின் வார்த்தைகள் எனக்கு அப்படியே நினைவில் நிற்கின்றன. அந்த சம்பவம் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவிடம் ஓரளவுக்கு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிரதமர் பதவிக் காலம் முடிந்த பிறகு நரசிம்ம ராவ் வசித்த மோதிலால் நேரு மார்க்கிலிருந்த அவருடைய வீட்டில் அவரைச் சந்தித்த ஒவ்வொரு முறையும், புவனேஷ் சதுர்வேதி சொன்ன "அவர் ஒரு கர்மயோகி' என்கிற கருத்து எனக்கு உறுதிப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஜனதா தளம் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 248 காங்கிரஸ் உறுப்பினர்களும், அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்த்து வாக்களித்தன. ஜனதா தளத்தின் அஜீத்சிங் பிரிவைச் சேர்ந்த ஏழுஎம்.பி.க்களும், ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த நான்கு எம்.பி.க்களும் அணி மாறி நரசிம்ம ராவ் அரசுக்கு ஆதரவாகத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். தீர்மானத்தை ஆதரித்து 251 வாக்குகளும், நரசிம்ம ராவ் அரசுக்கு ஆதரவாக 265 வாக்குகளும் கிடைத்தன. அரசு தப்பிப் பிழைத்தது.
""வெட்கமில்லாத குதிரை பேரமும், பணபலமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. அரசியல்ரீதியாக நரசிம்ம ராவ் அரசு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், தார்மீக ரீதியாகத் தோல்வி அடைந்திருக்கிறார்'' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. எம்.பி.க்கள் விலை பேசப்பட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு நடந்ததும், நரசிம்ம ராவ் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டதும், அந்தத் தீர்ப்பு தில்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதும் இப்போது சுதந்திர இந்திய வரலாற்று நிகழ்வுகள்.
நரசிம்ம ராவ் அரசு தோல்வி அடைந்து, வாஜ்பாயி அரசின் 13 நாள் ஆட்சியும் கவிழ்ந்து, தேவே கெளடா தலைமையில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, எம்.பி.க்கள் விலை பேசப்பட்டதாகக் கூறி நரசிம்ம ராவ், பூட்டா சிங் உள்ளிடவர்கள் மீது கிரிமினல் திட்டமிடல், கையூட்டு கொடுத்தல் பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
அரசியல் சாசனப் பிரிவு 105 (2)இன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எந்த செயல்பாடும் (வாக்களிப்பதற்காகக் கையூட்டு பெறுவது உள்பட) நீதிமன்ற விசாரணைக்கும், தண்டனைக்கும் உட்படுத்தப்பட முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால் வாக்களிக்க கையூட்டு பெற்றவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில், அவர்களுக்குக் கையூட்டு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நரசிம்ம ராவும், பூட்டா சிங்கும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கியது. இரண்டாண்டு மேல் முறையீடு போராட்டத்திற்குப் பிறகு, 2002 மார்ச் 15-ஆம் தேதி தில்லி உயர்நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்து, நரசிம்ம ராவ், பூட்டா சிங் இருவரையும் நிரபராதிகள் என்று கூறி விடுவித்தது.
அந்தத் தீர்ப்பு வந்தபோது, நான் தில்லியில் இருந்தேன். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது, எப்படி எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் இருந்தாரோ, அதேபோலத்தான் அவர் நிரபராதி என்கிற தீர்ப்பு வந்தபோதும், நரசிம்ம ராவ் அமைதியாக இருந்தார். அதைப் பார்த்தபோது, புவனேஷ் சதுர்வேதி சொன்ன "கர்மயோகி' என்கிற வார்த்தை நினைவுக்கு வந்தது.
ஜூலை மாத அரசியல் களேபரங்கள் தில்லியில் நடந்து கொண்டிருந்தபோது, பிரணாப் முகர்ஜி மாநிலங்களவைத் தேர்தலுக்காகக் கொல்கத்தாவில் முகாமிட்டிருந்தார். ஒரு வழியாக மாநிலங்களவைத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடந்தது. மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிரணாப்தா தில்லி திரும்பியதும் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சொன்னது:
""எனது வெற்றியைவிடப் பிரதமர் நரசிம்ம ராவின் வெற்றியைத்தான் நான் வெற்றியாக நினைக்கிறேன். அந்த வெற்றி இல்லாமல் எனது வெற்றிக்கு அர்த்தம் இருந்திருக்காது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்பதை நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில், மாற்று ஏற்பாடு இல்லாமல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியைக் கவிழ்த்து, நிலையற்ற அரசியல் தன்மையை ஏற்படுத்துவது தேசத்துக்கு நல்லதல்ல. இதுபற்றி இந்தியா சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது!''
அவரது பத்திரிகையாளர் சந்திப்பு செய்தியாக வந்ததே தவிர, எந்தப் பத்திரிகையும் அவர் சொன்ன இந்தச் செய்தியை வெளியிடவில்லை. ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பிறகு, மாற்று ஏற்பாட்டுடன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று கூறப்படும் கருத்தை முன்மொழிந்தவர் பிரணாப் முகர்ஜி.
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களிலேயே பிரணாப் முகர்ஜி மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் முன்பு வகித்த அதே வர்த்தகத்துறை அவருக்குத் தரப்பட்டது. அவர் அமைச்சரானதும் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து அவர் புறப்படும்போது, சந்தித்து விடைபெற நினைத்தேன். நெருங்க முடியவில்லை. அடுத்த நாள் காலையில் கிரேட்டர் கைலாஷ் வீட்டிற்குப் போனபோதும் சந்திக்க முடியாமல் போனது. உதவியாளர்களிடம் நான் சென்னை திரும்பும் தகவலை அவருக்குத் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.
நான் சென்னைக்குத் திரும்பிய சில வாரங்களில் "துக்ளக்' அலுவலகத்திலிருந்து ஆசிரியர் சோ சார் அழைப்பதாகத் தகவல் வந்தது. நான் "நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனத்தைத் தொடங்கியபோது, தமிழகத்தில் எனக்கு ஆதரவளித்து அங்கீகாரம் தந்தவர்கள் "துக்ளக்' சோ சாரும், "தினமலர்' முன்னாள் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தியும் என்று நன்றியுடன் இதற்கு முன்பும் நான் பதிவு செய்திருக்கிறேன்.
சோ சார் அழைக்கிறார் என்றதும் உடனடியாக "துக்ளக்' அலுவலகத்துக்கு விரைந்தேன். மாடியிலிருக்கும் ஆசிரியரின் அலுவலகத்துள் நுழையும்போதே அவர் கேட்டார்:
""லாதூர் நிலநடுக்கம் பற்றி நியூஸ்கிரைபில் ஏதாவது செய்தி தரப்போகிறீர்களா?''
""நேற்றுதானே நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் அதுபற்றி யோசிக்கவில்லை. அந்தப் பகுதியிலிருந்து செய்தி தருவதற்கு எனக்குத் தெரிந்த நிருபர்கள் யாரும் கிடையாது.''
""சார், எல்லா பத்திரிகைகளுக்கும் அதைப் பற்றின செய்திகள் தேவைப்படும். நீங்க வித்தியாசமான ஆங்கிள்ல லாதூர் நிலநடுக்கத்தைப் பற்றி நேரடி வர்ணனை எழுதினால், நியூஸ்கிரைபுக்கு முக்கியத்துவம் ஏற்படும். நீங்களே போய் எழுதுங்களேன்.''
நான் எதுவும் பேசவில்லை. லாதூருக்குப் போக வேண்டும், நிலநடுக்கம் எப்படி இருந்தது என்பதை நேரில் பார்க்க வேண்டும், எழுத வேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால், அதற்கான செலவைத் தாங்கும் சக்தி "நியூஸ்கிரைப்' நிறுவனத்துக்குக் கிடையாது. அதுதான் எனது தயக்கத்துக்குக் காரணம்.
சட்டென்று மேசையைத் திறந்தார் சோ சார். உள்ளே அவர் தயாராக வைத்திருந்த கவர் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் திகைத்தேன். அவரது முகத்தைப் பார்த்தேன்.
""இதுல உங்க செலவுக்குப் பணம் இருக்கு. அங்கேபோய் பணம் போதலைன்னா என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உடனடியாக அனுப்பித் தருகிறேன். துக்ளக்குக்கு லாதூர் நிலநடுக்கம் பற்றிய நேரடி வர்ணனைக் கட்டுரை எழுதுங்கள். அதை நீங்கள் உங்களுடைய நியூஸ்கிரைபுடன் தொடர்புடைய எல்லா பத்திரிகைகளுக்கும் அனுப்பிக் கொள்ளுங்கள். எனக்கு அதில் ஆட்சேபணை எதுவும் கிடையாது. உடனடியாக லாதூர் கிளம்பி நிலநடுக்கம் பற்றி "நியூஸ்கிரைப்' தகவல் தந்தால்தான் உங்கள் செய்தி நிறுவனத்துக்கு அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்கும். நன்றாக யோசித்து விட்டுத்தான் உங்களை அழைத்தேன்.''
நன்றிப் பெருக்குடன் நான் எழுந்து நின்று விட்டேன். கலகலவென்று சிரித்தார் சோ சார்.
""என்ன சார், நன்றி சொல்லப் போறேளா? உட்காருங்க சார். "நியூஸ்கிரைப்' நன்றாக வளரும்னு எனக்கு அக்கறை இருக்கு. உங்க உழைப்புக்கு மரியாதை கிடைக்கணும்னு நான் நினைக்கிறேன். அதே நேரத்தில், சிறிய சுயநலம் இருக்கு. துக்ளக்குக்கு ஒரு நல்ல கட்டுரை கிடைக்கும். தைரியமா கிளம்புங்கோ. உங்களால்தான் இந்த அசைன்மெண்டைப் பிரமாதப்படுத்த முடியும்...''
அன்று இரவே, ரயிலில் முன்பதிவு எதுவும் இல்லாமல் பொதுப் பெட்டியில் தொங்கி ஏறிக்கொண்டு லாதூர் நோக்கிக் கிளம்பிவிட்டேன். எனக்கிருந்த ஒரே நம்பிக்கை, அப்போது மக்களவைத் தலைவராக இருந்த சிவராஜ் பாட்டீல். லாதூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி. அவர்தான். சிவராஜ் பாட்டீலைத் தெரியும் என்பதால், எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்கிற அசட்டு தைரியத்துடன் லாதூருக்குக் கிளம்பினேன்.
1993 அக்டோபர் 2 இரவு ரெய்ப்பூர் தாண்டியபோது, ரயிலில் சில நூறு பயணிகள்தான் இருந்தனர். இந்தியா அதுவரை கண்டிராத அளவிலான லாதூர் நிலநடுக்கமும், அது குறித்த செய்திகளும் பலரையும் பயணத்தை ரத்து செய்ய
வைத்திருந்தன.
உஸ்மானாபாத் மாவட்டமும், லாதூரும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட பலரின் மரண ஓலத்தைக் கேட்டு நிலைகுலைந்திருந்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டாவது நாள் என்பதால், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்கிற அச்சம்வேறு காணப்பட்டது. தினசரி பத்திரிகை செய்திகளிலிருந்து, 50 கி.மீ. சுற்றளவில் பிணவாடை அடிக்கிறது என்றும், கடுமையான நோய்த்தொற்றுப் பரவல் ஏற்படக்கூடும் என்றும் தெரிந்தது.
லாதூர் செல்வதற்கு, அருகிலுள்ள ரயில் நிலையம் சோலாப்பூர்தான். மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், ரயில் நிலையம் முடக்கப்பட்டிருந்தது. நான் சென்ற ரயில் மகாராஷ்டிர - கர்நாடக எல்லையிலுள்ள குல்பர்கா (இப்போது அதன் பெயர் கலபுர்கி) ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டது.
நள்ளிரவு கடந்திருந்தது. அடுத்து என்ன செய்வது, எப்படி லாதூர் செல்வது, விரைந்து செய்திகள் சேகரித்து அனுப்ப வேண்டும் என்கிற பல்வேறு சிந்தனை
களுடன் குல்பர்கா ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்தேன்.
(தொடரும்)