தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பல் ஈறுகள் வலுப்பட..

பல் சொத்தை ஏற்பட்டு மிகவும் அவதிப்படுகிறேன். ஈறுகளும் வலுவில்லாமலிருப்பதால் பற்கள் ஆட்டம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. இவை குணமாக வழி என்ன?

DIN

பல் சொத்தை ஏற்பட்டு மிகவும் அவதிப்படுகிறேன். ஈறுகளும் வலுவில்லாமலிருப்பதால் பற்கள் ஆட்டம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. இவை குணமாக வழி என்ன?

- தாமு, தாம்பரம்,
சென்னை.

லவங்கம் (இதை சிலர் கிராம்பு என்பர்), ஓமம் இரண்டையும் பொடி செய்து, சில சிட்டிகைகள் எடுத்துக் கொண்டு அத்துடன் சிறிது பச்சைக் கற்பூரத்தையும் கூட்டி சொத்தையுள்ள பல், வீக்கமுள்ள ஈறுகள் இவற்றின் மேல் சில சிட்டிகைகளை வைத்து அழுத்திவிடவும்.

சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெந்நீரினால் வாயைக் கொப்பளிக்கவும். இந்த வெந்நீரில் சிறிது உப்பையும் கரைத்துக் கொள்வது நலம்.

திரிபலை எனும் கடுக்காய், தானிக்காய், நெல்லிமுள்ளிகளின் சூரணத்தின் கஷாயத்தையும் சூடுள்ளபோது மேற்சொன்னவாறு கொப்பளிக்கப் பயன்படுத்தலாம்.

கிச்சிலிக்காய் ஊறுகாயின் தோலையும் உப்பையும் புளியையும் சேர்த்துப் பிசைந்ததில் சிறிய கோலி அளவையும், ஈறுகளின் வீக்கத்தின் மேல் அமர்த்திவைத்துக் கொண்டு வாயில் ஊறும் எச்சிலைத் துப்பிக் கொண்டிருப்பது நலம்.  இவற்றால் கொழுத்துள்ள ஈறுகளின் வீக்கம் உடனே குறையும். 2-3 தரம் தினமும் செய்யலாம்.

சொத்தை விழுந்த பல்லில் மட்டுமே வலியும் கூச்சமிருந்தால் சிறிது லவங்கத்தின் பொடியை அவ்விடத்தில் அமுக்கி வைத்திருந்து வாயைக் கொப்பளிப்பது நல்லது.

லவங்க தைலத்தை ஓரிரு சொட்டுகள் சொத்தைப் பல்லின் மேல் வைப்பதால், பல்லில் ஏற்படும் தெறிப்பு, நோவு, கூச்சம் இவை நீங்கும். தவறுதலாக ஈறுகள், தவடையின் உட்புறத்திலும் இந்தத் தைலம் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்- பட்டால் அங்கெல்லாம் புண்ணாகி விடும்.

லவங்கத்தை வாயினுள் போட்டு மென்று சொத்தைப் பல்லுள்ள விடத்தில் அடைத்து வைப்பது நல்லது.

ஈறுகள் வலுப்பட அரிமேதஸ் எனும் ஆயுர்வேத தைலத்தை சுமார் ஐந்து மில்லி லிட்டர் அளவு வாயில் விட்டுக் கொண்டு கொப்பளிக்கவும். கொப்பளிக்க, கொப்பளிக்க எண்ணெயும் எச்சிலும் வாயில் நிறையும்.

இனி வாயினுள் அடங்காது, இனியும் வைத்துக் கொண்டிருப்பது சாத்தியமில்லை என்று தோணும்போது தைலத்தைத் துப்பிவிட்டு வாயைக் கொப்பளிக்கவும்.

தினந்தோறும் ஒரு முறையாவது இவ்வாறு செய்து வருவது அவசியம். மற்றும், இந்தத் தைலத்தை சிறிது பஞ்சில் எடுத்துக் கொண்டு, அதனால்  ஈறுகளை அமர்த்தித் தடவி- தைலத்தை ஈறுகளின் மேல்பூசி விடவும். சிறிது நேரம் கழித்து வாயைக் கொப்பளித்தால் போதும். இதனால் பையோரியா போன்ற வாய் சார்ந்த உபாதைகள் நன்கு குணமாகும். தரமான ஆயுர்வேத பற்பசைகளும் தற்சமயம் விற்கப்படுகின்றன. அவற்றையும் நீங்கள் இரவில் படுக்கும் முன் பல் தேய்ப்பதற்காகப் பயன்படுத்தலாம்.  எலும்பு
களுக்கும் பற்களுக்கும் நிறைய தொடர்பிருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த உணவுகளை நீங்கள் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT