முகப்பு
தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 91

தில்லி ஷாஜஹான் ரோடிலுள்ள வி.என். காட்கிலின் வீட்டில் அவரை சந்திப்பதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். பிரதமரை சந்திப்பதற்காக அவர் சென்றிருப்பதாக உதவியாளர் தெரிவித்தார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:46 PM
பகிர்:

தில்லி ஷாஜஹான் ரோடிலுள்ள வி.என். காட்கிலின் வீட்டில் அவரை சந்திப்பதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். பிரதமரை சந்திப்பதற்காக அவர் சென்றிருப்பதாக உதவியாளர் தெரிவித்தார். அதனால் அவர் எப்போது வருவார் என்று சொல்ல முடியாது என்பது அவர் சொல்லாமல் சொன்ன தகவல். எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம் என்று நான் அங்கேயே அமர்ந்து, அன்றைய தினசரிகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.

ஓர் அரசியல் கட்சியின் செய்தித் தொடர்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வி.என். காட்கில்தான் எடுத்துக்காட்டு. 

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் வெளிவரும் தினசரிகளை அவர் தினந்தோறும் படித்து (பார்த்து) விடுவார். இப்போதுபோல, இணைய வசதி இல்லாத அந்தக் காலத்தில், அவரது வீட்டிலேயே பிடிஐ நிறுவனத்தின் டெலிபிரிண்டர் நிறுவப்பட்டிருந்தது.

செய்திகளை மட்டுமல்ல, முக்கியமான புத்தகங்கள் எதுவாக இருந்தாலும் அவை வெளிவந்த சில நாள்களில் அவர் படித்து முடித்திருப்பார். காங்கிரஸில் மட்டுமல்லாமல், எல்லா அரசியல் கட்சிகளிலும் புத்தகப் புழுக்களாக இருந்த தலைவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களுக்குள் கட்சிக்கு அப்பாற்பட்ட ஒருவித நட்புறவும் இருந்தது. இவர்களை இணைக்கும் பொது இடமாக நாடாளுமன்ற நூலகம் திகழ்ந்தது. அதேபோல, இந்தியா இன்டர்நேஷனல் சென்டரும். 

வி.என். காட்கில் வந்தவுடன், என்னை அழைத்துக் கொண்டு அவரது அலுவலக அறைக்குச் சென்று அமர்ந்தார்.

""நீங்கள்தான் பிரணாப் முகர்ஜியின் "காட்' குறித்த கட்டுரையை "யங் இந்தியன்' இதழில் பிரசுரிக்கச் செய்தீர்களாமே? இப்போதுதான் அவரை சந்தித்துவிட்டு வருகிறேன்.''

""நீங்கள் பிரதமரை சந்திக்கச் சென்றிருப்பதாகச் சொன்னார்களே...''

""ஆமாம் ஆமாம்... நாங்கள் இருவரும்தான் சந்திக்கச் சென்றோம்.''

""ஏதாவது முக்கியமான செய்தி உண்டா?''

""உண்டு. சாயங்காலம் அக்பர் ரோடு அலுவலகத்தில் பத்திரிகையாளர் கூட்டம் இருக்கிறது. அதற்கு வாருங்கள். தெரியும்.''

எந்தவொரு நிலையிலும் காட்கிலிடமிருந்து வாய் தவறிக்கூட அவசியமற்ற செய்தி வெளியில் வந்துவிடாது. மாலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கட்சியின் சில முடிவுகளை வெளியிட்டபோது, பிரதமர் கலந்தாலோசித்த அந்த இருவர் யார் யார் என்பது எனக்கு உறுதிப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டை தில்லியில் கூட்டுவது என்பது செயற்குழு எடுத்த முதலாவது முடிவு. மாநில கமிட்டிகளின் தலைவர்கள் நியமனம் குறித்து முடிவெடுக்காமல் இருப்பது என்பது அடுத்த முடிவு. முதலாவது முடிவு பத்திரிகையாளர்களிடம் செயற்குழுக் கூட்டம் முடிந்ததும் தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது முடிவு, பிரதமரும் கட்சித் தலைவருமான பி.வி. நரசிம்ம ராவ் வெளியில் தெரிவிக்காமல் தனக்குள் எடுத்துக் கொண்டது. 

1992-இல் திருப்பதியிலும், 1993-இல் சூரஜ்குண்டிலும் நடந்ததுபோல, 1994-இல் தில்லி தல்கதோரா அரங்கத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டதற்குப் பல காரணங்கள் இருந்தன. பிரதமர் நரசிம்ம ராவின் கட்டுப்பாட்டின்கீழ் கட்சி வந்திருந்தது. அவரது போட்டியாளர்களில் ஒருவரான அர்ஜுன் சிங் அடக்கி வாசிக்கத் தொடங்கி இருந்தார். மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து மகாராஷ்டிர முதல்வராக அனுப்பப்பட்ட சரத் பவார், அடுத்த ஓர் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வர இருந்ததால் அதில் தனது பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

ஜூன் மாதம் 10, 11 தேதிகளில் தல்கதோரா அரங்கத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்கு 900-க்கும் அதிகமான அ.இ.கா. கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், மாநிலப் பொறுப்பாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், கட்சித் தொண்டர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் தில்லியில் குவிந்திருந்தனர். தமிழகத்திலிருந்துதான் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது.

1989 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜி.கே. மூப்பனார் பழைய உற்சாகத்துடன் இல்லாமல் இருந்தது ஒரு காரணம் என்றால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வாழப்பாடி கே. ராமமூர்த்திக்கும் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கும் இடையில் சுமுகமான உறவு இல்லாமல் இருந்ததும் அதற்குக் காரணம்.

மே மாதம் நடந்த இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் பல இடங்களில் தோல்வியைத் தழுவி இருந்தது. அதனால் அடுத்து வர இருக்கும் 10 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது என்று திட்டமிட்டு வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் அது சரத்பவாரின் வெற்றியாக இருக்குமே தவிர, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் வெற்றியாகக் கருதப்படாது.

""உடனடியாக எதிர்கொள்ள இருக்கும் ஏனைய மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்கள் குஜராத், கர்நாடகம், ஆந்திரம். இதில் ஆந்திரா பிரதமரின் சொந்த மாநிலம். அதில் காங்கிரஸ் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகம். மேற்கு வங்கத்திலும், பிகாரிலும் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பதைக் கனவுகூடக் காண முடியாது. இந்த நிலையில், இப்போது நரசிம்ம ராவ் ஏன் ஏ.ஐ.சி.சி. மாநாட்டைக் கூட்டுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. தேவையில்லாமல் அவர் வம்பை விலைக்கு வாங்குகிறார். உறுப்பினர்கள் அவருக்கு எதிராகப் பேசத் தொடங்கினால் அவமானமாகிவிடும்...'' - இப்படிச் சொன்னவர் யார்தெரியுமா? வசந்த் சாதே!

அவர் சொன்னதுபோல எதுவும் நடந்துவிடவில்லை. ஆனால், மாநாட்டின் தொடக்க நாளிலேயே, எதிர்பாராத திருப்பம் ஒன்று நடந்தது. அதுவரை எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்த சோனியா காந்தி, யாருமே எதிர்பார்க்காத விதத்தில் பார்வையாளராக  தல்கதோரா அரங்கத்துக்கு வந்துவிட்டார். அதுதான், ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின்னர் சோனியா காந்தி கலந்துகொண்ட முதலாவது கட்சி நிகழ்வு. முக்கிய விருந்தினர்களுக்கான பகுதியில் அவர் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஷீலா கெளலுடன் அமைதியாக அமர்ந்திருந்தார். 

சோனியா காந்தி அரங்கத்தில் நுழைந்ததும், "சோனியா காந்தி ஜிந்தாபாத்' என்று நேரு குடும்ப விசுவாசிகள் சிலர் கோஷம் எழுப்பினர். கட்சித் தலைவர் பி.வி. நரசிம்ம ராவை சட்டை செய்யாமல் சோனியா தனது இருக்கையில் சென்று அமர்ந்தபோது, பத்திரிகையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நான் பிரதமரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரது முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. 

சோனியாவின் பார்வை மேடையை நோக்கித் திரும்பியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோது, ஒரே நேரத்தில் இருவரும் மற்றவருக்கு வணக்கம் சொல்லிக் கை கூப்பினர். அரங்கம் அதிர்ந்தது. சோனியாவின் முகத்தில் சிறிதாக புன்னகை மலர்ந்தது. அப்போதும், பிரதமர் நரசிம்ம ராவின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. அதற்கான காரணம் அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

சோனியா காந்தியின் வருகையைத் தொடர்ந்து, அவர் கட்சியின் செயல்பாடுகளில் அக்கறை காட்டத் தொடங்கிவிட்டார் என்கிற மறைமுக செய்தி, ராஜீவ் காந்தி ஆதரவாளர்களிடம் பரவியது. இந்திரா காந்தி ஆதரவாளர்கள், ராஜீவ் காந்தி ஆதரவாளர்கள் என்கிற பிரிவு அப்போதுதான் தோன்றியது. 

1969-இல் நேரு ஆதரவாளர்கள், இந்திரா ஆதரவாளர்கள் என்று உருவானதுபோல, இப்போதும் இரண்டு அணிகள் உருவாகத் தொடங்கின. அதன் விளைவாக, சில ராஜீவ் ஆதரவாளர்கள் கட்சியில் அடிப்படை மாற்றம் தேவைப்படுகிறது என்று பேசத் தொடங்கினார்கள்.

மாநாட்டு மேடையில் பிரணாப் முகர்ஜியும், ஜி.கே. மூப்பனாரும் அதிக நேரம் இருக்கவில்லை. அரங்கத்துக்கு வெளியே ஜி.கே. மூப்பனார் அவரது ஆதரவாளர்களுடனும், வெளிமாநிலத் தலைவர்களுடனும் பேசிக் கொண்டிருந்தார். கேரள முதல்வர் கருணாகரன் மேடையில் அமர்ந்திருந்தாலும் அதிக ஈடுபாடு காட்டவில்லை.

ராஜீவ் ஆதரவாளர்களாக அறியப்பட்ட எஸ்.எஸ். அலுவாலியா, பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி உள்ளிட்ட சிலர், ஆட்சியின் மீதான அவநம்பிக்கையை அகற்றும் விதத்திலான மாற்றங்கள் தேவை என்று பேசினார்களே தவிர, நேரடியாக பிரதமர் நரசிம்ம ராவை விமர்சித்துப் பேசவில்லை. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேந்திர குமாரி பாஜ்பாயும், பிகாரைச் சேர்ந்த கிருஷ்ணா சாஹியும் மாநில கட்சித் தலைமைகளை விமர்சித்தனரே தவிர, கட்சியின் மத்தியத் தலைமையைக் குற்றப்படுத்தவில்லை.

பிரதமர் பி.வி. நரசிம்ம ராவைப் போலவே, சோனியா காந்தியும் மேடையில் நடக்கும் நாடகங்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது முகத்திலும் எந்தவிதச் சலனமும் தெரியவில்லை. அவ்வப்போது ஷீலா கெளலும் அவரும் பேசிக் கொண்டார்களே தவிர, வேறு யாரிடமும் பேச்சுக் கொடுக்கவில்லை.

அங்கே வந்திருந்த ஏனைய தலைவர்களும் சரி, சோனியாவிடம் வலியப்போய் வணக்கம் சொல்லவோ, பேச்சுக் கொடுக்கவோ முன்வரவில்லை. மேடையில் இருந்தவர்கள் அவரது பார்வை படும்போது, வணக்கம் செலுத்தினார்கள். சிலருக்கு அவர் வணக்கம் சொன்னார். சிலருக்குப் புன்னகைத்தார். பலரை பார்த்ததாகவே காட்டிக்  கொள்ளவில்லை.

இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. 1994-இல் தல்கதோரா அரங்கத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் எழுப்பப்பட்ட அதே கேள்விக்கு, இன்றுவரை விடை தெரியாமல் சமீபத்தில் உதய்பூரில் நடந்த "சிந்தனை தேடல்' அமர்விலும் அதே கேள்விகள் எழுப்பப்படுகின்றன. காங்கிரஸ் எங்கே நின்றதோ, அங்கேயே நின்று கொண்டிருக்கிறது.

1994 அ.இ. காங்கிரஸ் மாநாட்டில் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி எழுப்பிய கேள்வி இதுதான் - ஜாதியமும் மதவாதமும்தான் அரசியல் என்கிற நிலைமை ஏற்பட்டால், காங்கிரஸூக்கு யார் இனிமேல் வாக்களிப்பார்கள்?'' சிறுபான்மையினரையும், தலித்துகளையும் காங்கிரஸூக்கு மீண்டும் ஈர்ப்பதற்கு நாம் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் அவர் அப்போது முன்வைத்த கோரிக்கை.

""கட்சியிலுள்ள மூத்த தலைவர்களும், மாநிலப் பொறுப்பில் இருப்பவர்களும், எம்.பி., எம்.எல்.ஏ-க்களும் தங்கள் உறவினர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்பதை நிறுத்த வேண்டும். குடும்பத்தில் ஒருவர்தான் பதவி வகிக்க முடியும் என்று திட்டவட்டமாகத் தீர்மானிக்க வேண்டும்'' - இப்படிப் பேசியவர் அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஏ.கே. அந்தோணி. இப்போது 2022-லும் அதே பிரச்னை உதய்பூரில் எழுப்பப்பட்டிருக்கிறது.

நரசிம்ம ராவ் எல்லாவற்றையும் அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். சோனியா காந்தி பெரிய அளவில் ஆதரவைத் திரட்டித் தன்னை முதன்மைப் படுத்திக் கொள்ளவில்லை என்பதில் அவருக்கு உள்ளூர மகிழ்ச்சி இருந்திருக்கும். அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இப்போதைக்குத் தனது தலைமைக்குப் போட்டியோ, ஆபத்தோ கிடையாது என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொண்டார்.

சோனியா காந்தியும், அரசியலில் இறங்கலாமா கூடாதா என்பதை 1994 அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளோட்டம் பார்த்தார் என்றுதான் சொல்ல வேண்டும். "சோனியா காந்தி ஜிந்தாபாத்' கோஷங்கள், அதற்குப் பிறகும் பல நாள்கள் அவரது தூக்கத்தைக் கலைத்து தைரியத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனால், அவர் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடவில்லை.

சோனியா காந்தி உடனடியாக அரசியலில் நுழையவோ, தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளவோ தயங்கியதற்கு அச்சுறுத்தும் சில காரணிகள் இருந்தன. அது அவருக்கு மட்டுமல்ல, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கும் தெரிந்திருந்தன.

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →