தினமணி கதிர்

கலைப் பொருளாகும் மரத் துண்டுகள்!

DIN

மரத் துண்டுகளைக் கொண்டு நூதனப் பொம்மைகள், இயந்திரங்களின் மாதிரி, ரோபோக்கள் உள்ளிட்ட பல வித்தியாசமான கலை பொருள்களை தயாரிக்கும் தொழில் நல்ல வருவாயை ஈட்டித் தருகிறது.

வீணாகும் மரத்துண்டுகளை பலரும் அடுப்பு எரிக்கத் தான் பயன்படுத்துவார்கள்.  ஆனால் அதனை கொண்டு பயனளிக்கும் பொருள்களை தயாரிப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார் ஆம்பூரைச் சேர்ந்த எம். கிருஷ்ணன்.

தோல் தொழிற்சாலைகளுக்குத்  தேவையான இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வந்த இவர்,  கலை பொருள்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கூடவே இருந்தது. இதனால்,  அதிக லாபம் ஈட்டும் தோல் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிலை கைவிட்டார். 

கடந்த 15 ஆண்டுகளாக வீணாகும் மரப்பொருள்களில் இருந்து நூதனப் பொம்மைகளையும், பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான இயந்திரங்களின் மாதிரிகளையும், கலைப்  பொருள்களையும் தயாரிக்கும் தொழிலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.

எலியை பிடிக்க முயலும் பூனை, தானியங்கி முறையில் தண்ணீரை இறைக்கும் இயந்திரம், இயந்திர மனிதன், நோயாளியைப் பரிசோதிக்கும் மருத்துவர், கயிற்றில் ஏறும் குரங்கு, நீராவி இரயில் எஞ்ஜீன், கரையும் காகம், கிடார் வாசிக்கும் மனிதன்,  ஆனி அடிக்கும் தொழிலாளி உள்ளிட்ட பல்வேறு நூதனப் பொம்மைகளை செய்து வருகிறார்.  முன்காலத்தில் சிற்பிகள் ஒரே கல்லில் சங்கிலி செய்தது போல ஒரே கட்டையில் சங்கிலியையும் செய்துள்ளார். 

பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு சலுகை விலையில் இயந்திரங்களின் மாதிரிகளை அச்சு அசலாக உருவாக்கி தருகிறார். உண்மையான இயந்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றனவோ அவ்வாறே மரத்தில் உருவாக்கப்படும் மாதிரி இயந்திரங்களும் இயங்குகின்றன.  

இதுகுறித்து எம். கிருஷ்ணன் கூறியதாவது:

வீட்டு அலங்காரப் பொருள்களாக நூதனப் பொம்மைகளை வைக்க பலரும் விரும்புகின்றனர்.  அதே போல கல்லூரிகள், பள்ளிகளில் சமர்ப்பிக்க மாணவர்களுக்கு மாதிரிகள் செய்ய வேண்டிய தேவையம் அதிகமாக உள்ளது.

வீணாகும் மரத்துண்டுகளால் நான் தயாரிக்கும் பொம்மைகள், பொருள்களை நியாயமான குறைந்த விலைக்கு தான் விற்பனை செய்கிறேன்.  ஆனால் கலைப் பொருள்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய ஷோரூம்கள். என்னுடைய பொருள்களுக்கு உடனடியாக பணம் தராமல் பொருள்களை வைத்துவிட்டு செல்லுமாறும், விற்பனை ஆனபிறகு அதற்கான பணத்தை தருவதாகவும் கூறுகின்றனர்.  குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.  அதனால் மாணவர்களும், மக்களும் பயனடையும் வகையில் நேரடியாக நானே குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறேன்.

வீணாகும் மரத்துண்டுகளில் இருந்து நூதனப் பொம்மை, இயந்திரங்களின் மாதிரிகளை உருவாக்கும் பயிற்சியை மாணவர்களுக்கு சலுகை கட்டணத்தில் அளிக்க முயற்சி மேற்கொண்டுள்ளேன்.  விரைவில் அந்தப் பயிற்சியை துவக்க இருக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT