தினமணி கதிர்

ராசா வீட்டுக் கன்றுக்குட்டி

DIN

அந்தக் கோட்டைக்கு நாலாபக்கமும் பிரமாண்டமான கதவுகள் இருந்தன. கதவுகள் என்றால் அவற்றை சாதாரணமாகத் திறக்க முடியாது. பல்வேறு வீரர்களைக் கொண்டு மலையைப் புரட்டி எடுப்பதுபோல் திறவுகோல் மூலம் திறக்கப்பட வேண்டும். நான்கு வாயில்களிலும் அதற்காகவே காவலர்கள் பலர் நியமிக்கப்பட்டிருந்தனர். அசோகபுரி கோட்டை அவ்வளவு பிரசித்தி பெற்றது.
வடக்கே மன்னர் மட்டும் தனது சேனைகளுடன் வெளியே சென்று வருவார். தெற்கே மகாராணி தனது உற்ற தோழிகளுடன் விளையாடி ஓய்வெடுத்துத் திரும்புவார். பல்வேறு அதிசய மலர்களால் ஆன வண்ணப் பூங்கா அங்கு இருந்தது. அங்கு மகாராணிக்காக, பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கிழக்கு மேற்கும் கோட்டைக்கு வருகிறவர்கள், கோட்டையில் வேலை செய்பவர்கள், மன்னரிடம் நீதி கேட்டு வருபவர்கள், குறைகளை எடுத்துச் சொல்வர்கள் வந்து போகும் பாதை.
மன்னருக்கு ஒருநாள் ஓலைச்சுவடி மூலமாகத் தகவல் வந்தது. அசோகபுரி எல்லையைத் தாண்டி இருநூற்றுக்கும் மேற்பட்ட கிôôமங்களைக் கடந்து பட்டினதேசம் என்ற ஊர் இருந்தது. அங்கு இமயமலையிலிருந்து ஒரு முனிவர் வந்திருப்பதாகவும், அவரைப் பார்த்தால் நாட்டின் நிலைமை, குடும்பச்சூழல் போன்றவற்றை விலாவரியாகச் சொல்லிவிடுவார் என்றும் சொல்லியிருந்தது அந்தச் செய்தி. உடனே மன்னரின் ஆழ்மனதில், "எத்தனை நாள்கள் ஆனாலும் பரவாயில்லை. அங்கு சென்று முனிவரைப் பார்த்துவர வேண்டும்' என்று பதிந்துவிட்டது.
மூத்த அமைச்சரை மன்னர் அழைத்து விடியற்காலை இரண்டாம் ஜாமத்தில் புறப்பட்டு முனிவரை சந்திக்கப் பயணப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டார். அமைச்சரோ, "இதெல்லாம் வெட்டி வேலை' என்று கூறி முகம் சுளித்தார். இதனால் மன்னருக்கு கோபம் வந்துவிட்டது.
""அதிகாலையில் புறப்பட வேண்டும். இது என் கட்டளை'' என்று மன்னர் கூறிவிட்டார். அமைச்சருக்கு மனம் வாடி வதங்கினாலும், அரச கட்டளையை யாரால் மீற முடியும்?
தகுந்த படைபலத்துடன் மன்னர் மூத்த அமைச்சருடன் இரு பரிகள் கொண்ட சாரட்டில் புறப்பட்டார். வடக்கு வாசல் அபாரமாகத் திறந்தது. உலகமே கோட்டைக்குள் அடங்கியிருந்தவாறு இருந்தது. வெளியே விசாலமாய் இருந்தது.
அசோகபுரியின் எல்லைகள் பரந்துவிரிந்திருந்தது. தூரத்தே நிழலாய்த் தெரியும் மலையும் வனமும் சார்ந்த செழிப்பான பகுதிவரை நீண்டிருந்தது. பத்து கல் தொலைவு கடந்ததும்
மன்னருக்கு ஓய்வு தேவைப்பட்டது. வழியெங்கும் புளியமரம், அரச மரம், ஆல மரம்.... ஆகியவை குடைவிரித்த மாதிரி நிழல் தந்தது. அருகே ஆற்றுவாய்க்கால் ஓடிக் கொண்டிருந்தது. சூரியக் கதிர்கள் ஒளி வீசிக் கொண்டிருக்க, மன்னரின் படைபலம் குதிரையிலிருந்து இறங்கி, ஓய்வு எடுக்கத் தொடங்கியது.
""மன்னா. நீங்கள் போக வேண்டிய இடம் மிகச் சாதாரணமானதல்ல'' என்று மூத்த அமைச்சர் சொன்னார்.
""அப்புறம் எப்படி?''
""நான்கு காட்டாறுகளைக் கடக்க வேண்டும். மூன்று மலைத்தொடர்களைச் சுற்றிப் போக வேண்டும்.''
""சரி. இருக்கட்டுமே!''
""ஆபத்து ஒருபக்கம் இருந்தாலும், தூரம் அதிகம் என்பதால் பல நாள்கள் ஆகும்.''
""ஆகட்டும். அதையும் பார்க்கலாம்!''
மன்னரின் வாதத்துக்கு மருந்து கொடுக்கலாம். பிடிவாதத்துக்கு மருந்து கொடுக்க முடியுமா? அமைச்சருக்கு வேடிக்கையாக மட்டுமல்ல; வேதனையாகவும் இருந்தது.
""மன்னா. அரசியாரிடம் சொல்லியாகிவிட்டதா?''
""எல்லாம் எனக்குத் தெரியும். போக வேண்டிய வழியைப் பார்.''
""முகத்தில் அறைந்த மாதிரி பேசியதும், அமைச்சர் அமைதியானார். மேற்கொண்டு பேசத் துணியவில்லை. ஆங்காங்கே நின்றிருந்த குதிரைகள் கணைக்கவும், எகிறி எகிறி கால்களை உயர்த்தி கீழே இறக்கவுமாக இருந்தன.
மன்னர் விநோதமாய் பார்த்தார். அங்குள்ள நிலத்தில் பசுக்கள் கூட்டமாக வந்தன. அதனால்தான் குதிரைகள் நிற்காமல் அசைந்து கொண்டிருந்தன. மாடுகள் புற்களை மேய்ந்தபடி இருந்தன. ஒவ்வொன்றும் நல்ல வாட்டசாட்டமாக இருந்தன. மன்னருக்கு ஆச்சரியம். தனது கோசாலையில் கூட இப்படிப்பட்ட மாடுகளைப் பார்க்கவில்லை. குறிப்பாய், கடைசியாய் ஈன்ற கன்றுக்குட்டி ஆறுமாதங்கள் ஆகியும் எலும்புகள் குத்திட்டு, கால்கள் பலகீனமாக இருப்பதை நினைத்துகொண்டே, மேய்ந்துகொண்டிருந்த மாடுகளைப் பார்த்தார்.
""அமைச்சரே. அங்கே மேயும் மாடுகளைப் பார்த்தீங்களா?''
""ஆம் மன்னா. நன்றாக வளர்ந்து கொழுகொழுவென்று உள்ளன. பால்கூட அதிகமாகக் கறக்கும்போல் தெரிகிறது.''
""சரியாகச் சொன்னீர்.''
""மன்னா. அவற்றை மொத்தமாக விலை பேசி, கோசாலையில் சேர்த்துவிடலாம்.''
""அதுவல்ல முக்கியம். நமது கோசாலையில் கடைசியாக ஈன்ற கன்றுக்குட்டியைப் பார்த்தீங்களா?''
""ஆம் மன்னா. அதன் மீது தங்களுக்குத் தனிப்பாசம் உண்டே?''
""இங்கே மேயும் மாடுகளைப் போல் நம் கோசாலையில் உள்ளவை ஊட்டமாக இல்லையே?''
அமைச்சருக்கு பதில் சொல்லத் தயக்கம் இருந்தது. இருந்தாலும் மன்னரின் வார்த்தைக்கு பேச வேண்டுமே என்று சற்று நேரம் யோசித்துவிட்டு, பின்னர் பதில் சொன்னார்.
""மன்னா. நம் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு உயர்ந்த ரக உணவுகளைக் கொடுக்கிறோம்.''
""இருந்தும் என்ன? இவற்றைப் போல் இல்லையே?''
""மன்னா. அங்கே மாடு மேய்க்கும் உழவர் இருக்கிறார். கேட்போமே''
""வேண்டாம்''
""வேறு என்ன செய்யலாம். மன்னா''
""அடுத்த வாரம் முதல் நமது கடைசி கன்றுக்குட்டியை அழைத்துவந்து, இவற்றோடு மேய்க்க வேண்டும். அதை நீங்கள்தான் செய்ய வேண்டும்.''
மன்னரின் உத்தரவைக் கேட்ட அமைச்சருக்கு தூக்கிவாரிப்போட்டது.
""மன்னா. இது சாத்தியமா? பல கல் தொலைவு சென்று வர வேண்டுமே?''
""முடியும். அதிகாலை கிளம்பி மாலையில் திரும்ப வேண்டும்.''
""மன்னா. அமைச்சரவையில் நிறைய பணிகள் காத்திருக்கின்றன.''
""எனக்குத் தெரியும். சொல்வதைச் செய்யும். அவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.''
மன்னர் முனிவரைப் பார்த்துத் திரும்பியதும், அன்றிரவே அமைச்சரிடம் சொன்னார். அமைச்சருக்கு நினைவிருக்கிறது என்பது போல் மெல்ல தலையசைத்தார்.
மறுநாள் கன்றுக்குட்டியோடு ஒரு வீரரை அழைத்துக் கொண்டு, அமைச்சர் புறப்பட்டார். கன்றுக்கு வெளியுலகம் புதிதாய்த் தெரிந்தது. மிரட்சியோடு பார்த்தது. கண்கள் பளபளவென்று ஒளிர்ந்தது.
வழக்கம்போல் சூரியன் உதித்த கொஞ்ச நேரத்தில் பட்டியிலிருந்து உழவர், மாடுகளை ஓட்டி வந்தார். அமைச்சர் கயிற்றை அவிழ்த்துவிட, கன்றுக்குட்டி சுதந்திரமாய் மேய ஆரம்பித்தது. வீரரும், அமைச்சரும் மரத்தடியில் அமர்ந்து கன்றுக்குட்டியைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். அது உற்சாகமாய் அங்கும் இங்கும் அலைந்து வெகுதூரம் போய்க் கொண்டிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாய் சேர்ந்துகொண்டது.
களைப்பு மிகுதியில் இருவரும் மரத்தடியில் நன்றாகத் தூங்கிவிட்டனர். பொழுது இருட்டத் தொடங்கியது. விழித்தபோது, இருள் கவ்வி இருந்தது. அமைச்சருக்கு பீதி ஏற்பட்டது.
சுற்றுப்புறப் பகுதியில் சென்றுவருவோரிடம் கன்றுக்குட்டியைப் பற்றி விசாரித்தனர். பதில் கிடைக்கவில்லை. எங்காவது புதரில் பதுங்கி இருக்குமோ ?என்று தீப்பந்தத்துடன் இருவரும் தேட ஆரம்பித்தனர்.
மன்னருக்கு எப்படி பதில் சொல்வதெனத் தெரியாமல் விழித்தனர். வண்டிகள் போகும் சாலையோரம் உட்கார்ந்துவிட்டனர். இரவெல்லாம் தூக்கமில்லை. யார் தலை உருளப் போகிறது எனத் தெரியவில்லை. இரவு கழிந்தது.
அதிகாலையில் சூரிய வெளிச்சம் கண்களைக் கூசி சென்றது. அதே உழவர், மாடுகளைக் கும்பலாக ஓட்டி வந்தார். அமைச்சர் துள்ளிக் குதித்து ஓடினார். பின்னர், வீரரும் கையில் ஈட்டியுடன் பின் சென்றார்.
"" உழவரே நில்..''
உழவர் அச்சத்தோடு திரும்பிப் பார்த்தார். அரசக் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உழவரும் அச்சமுற்றார்.
""அய்யா. நான் ஒரு குற்றமும் செய்யவில்லை.''
""அது இருக்கட்டும். எங்கள் கன்றுக்குட்டியைக் காணவில்லை. பார்த்தாயா?''
""இல்லை. எசமான்''
""நேற்று மாடு மேய்த்தது நீதானே!''
""ஆமாம்!''
"" எங்கள் கன்றுக்குட்டியையும் சேர்த்து ஓட்டிப் போய் விட்டாயா?''
""திருடும் பழக்கம் எனக்கில்லை. எசமான்''
அமைச்சர் அங்கு மேய்ந்த மாடுகளை ஒரு வலம் வந்தார். கண்டுபிடித்துவிட்டார்.
""இதோ இருக்கிறது கன்றுக்குட்டி''
கூட்டத்தை ஒதுக்கிக் காட்டினார். உழவரும் ஆச்சரியப்பட்டார்.
""எப்படி கண்டுபிடித்தீர்கள்.''
""இது அரசாங்க மாடு. காதில் பித்தளை சீல் உள்ளதைப் பார்த்தாயா? யாரும் ஏமாற்ற முடியாது''
உழவர் தலைகுனிந்துவிட்டார்.
""எசமான். அந்தி சாயும்போது கூட்டத்தில் சேர்ந்துவிட்டது. நானும் கவனிக்கவில்லை. பட்டியில் அடைத்துவிட்டேன். மன்னிக்கவும்.''
""உன் பேரென்ன''
""மருதக் கோடான்''
""மன்னிப்பெல்லாம் கிடையாது. எதுவாயிருந்தாலும் மன்னரிடம் வந்து பேசிக்கொள். ம். புறப்படும்..''
கன்றுக்குட்டி வரவில்லை என்று தேட சென்ற மன்னருக்கு மறுநாள் காலை அதிசயமாய் இருந்தது. உழவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, மன்னர் முன்பு நிறுத்தினர்.
""அமைச்சரே. ஏன் இரவே வரவில்லை''
""மன்னா. நான் சற்று அயர்ந்து தூங்கிவிட்டேன். மாலையில் கன்று காணாமல் போய்விட்டது.''
""பொறுப்பற்று பேசுகிறாய். இது சாதாரணமான கன்றுக்குட்டியல்ல. எனது பிரியத்துக்குரிய....''
""தெரியும் மன்னா''
""மாட்டையே காப்பாற்ற முடியவில்லை. உன்னால் இந்த நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்.''
""மன்னா. அதிகாலையில் இந்த உழவரிடம் கன்றுக்குட்டி இருந்ததைக் கண்டுபிடித்துவிட்டேன்.''
""உன் பெயரென்ன..''
""மன்னா. மருதக் கோடன்'' என்று கூறிய உழவர், மன்னரின் முன்பு தலைகுனிந்து பணிந்து நின்றார்.
""என்ன தைரியம் உனக்கு. அரசு சொத்தைத் திருட முயற்சிக்கிறாய்''
""அப்படியெல்லாம் இல்லை மன்னா..''
""அமைச்சரே. இவனுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.''
""சொல்லுங்கள் மன்னா. உடனே நிறைவேற்றுகிறேன்.''
மன்னர் சற்று யோசனைக்குப் பின்னர் நிமிர்ந்து சொன்னார்.
""உனது மாடுகளுக்கு என்ன தீவனம் வைக்கிறாய்?''
""சாதாரண சோளதவிடு, கோதுமை தவிடு, அரிசி தவிடுதான் மன்னா. மற்றபடி வெளியே மேய்ச்சலும் இருக்கும்.''
""அப்படியென்றால் இன்று முதல் இந்தக் கன்றுக்குட்டியை உன்னிடம் ஆறுமாதங்கள் வளரட்டும்.''
""உத்தரவு மன்னா..''
தலைக்கு வந்தது. தலைப்பாகையோடு போய்விட்டதுபோல மருதக்கோடன் சந்தோஷப்பட்டான்.
""அமைச்சரே அடிக்கடி நீயும் போய்ப் பார்த்துவர வேண்டும். ஆறு மாதங்கள் கழித்து கூப்பிட்டு வர வேண்டும்.''
""உத்தரவு மன்னா..''
மருதக்கோடன் கன்றுக்குட்டியை கயிற்றால் கட்டி ஓட்டிக் கொண்டு போனார். கிழக்கு வாசல் திறந்துவைத்து, வீரர்கள் நின்றிருந்தனர்.
ஆறு மாதங்கள் கழித்து உழவர் கன்றுக்குட்டியை அழைத்து அரண்மனைக்கு வந்தார். கன்றுக்குட்டி முன்பு இருந்ததைக் காட்டிலும் புசுபுசுவென்று அழகாக இருந்தது. மன்னருக்கு தனது கன்றுக்குட்டியா என்று ஆச்சரியம் இருந்தது.
""உழவரே. என்ன அதிசயம்! இது எப்படி சாத்தியமாயிற்று?''
""மன்னா. ஆவினங்களோடு சேர்ந்து மேய்ந்து, உற்சாகமாய் அதன் பொழுது கழிந்தது. அதுவே அதற்கு ஏற்ற உணவாக அமைந்தது. கோசாலை எப்போதும் பூட்டியே கிடக்கும். சுந்திரமாகச் செயல்பட முடியாதல்லவா?'' என்று உழவர் விளக்கினார்.
மன்னர் திகைத்தார்.
""அமைச்சரே! கேட்டுக் கொள்ளும். கால்நடைகளை சில காலம் மேய்ச்சலுக்கு விடுவிக்க வேண்டும். என்ன புரிந்ததா?'' என்று உத்தரவிட்டார்.
""அப்படியே மன்னா'' என்று அமைச்சரும் பணிந்து வணங்கினார்.

(அண்மையில் காலமான விழி. பா. இதயவேந்தன் அனுப்பி வைத்த சிறுகதைகளில் தேர்வான ஒன்று)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT