என் பேத்திக்கு வயது 7 ஆகிறது. அவளுக்கு தினசரி மலம் போகும் பழக்கமில்லை. 3-ஆவது நாள், 4-ஆவது நாள் சாப்பாடு குறைகிறது. சிறிது வயிற்று வலி உள்ளது. மலம் வெளியேறியவுடன் வயிற்று வலி சரியாகிவிடும். நாங்கள் அவுரி இலைப்பொடி அவ்வப்போது கொடுத்து வருகிறோம். ஆனால் இப்போது வரை இந்தப் பிரச்னை உள்ளது. இது
எதனால்?
-வி.ஆர். கிருஷ்ணசாமி,
ஒட்டநத்தம்.
பேத்திக்கு மலத்தை வெளிப்படுத்த மருந்து சாப்பிடுவதைவிட, பசியைத் தூண்டிவிட்டு குடலை வழுவழுப்பாக்கி, அங்குள்ள நம் கட்டுப்பாட்டில்லாத குடல் அசைவுகளை மேம்படுத்தும் விதமான சிகிச்சை முறைகளால் மட்டுமே ஏற்பட்டுள்ள பிரச்னைக்கான தீர்வானது நிரந்தரமான வகையில் ஏற்படும்.
வாய் முதல் சிறு குடல் வரை செரிமானத்துக்காக சுரக்கும் சுரப்பிகளின் சுறுசுறுப்பான செயலைப் பெற சிறிது இஞ்சி சாற்றில் தேன், இந்துப்பு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து காலை மதியம் மாலை என மூன்று வேளையாக, உணவிற்கு அரை, முக்கால் மணி நேரம் முன்பாக, சுமார் ஐந்து முதல் பத்து மில்லி லிட்டர் வரை புகட்டிவிட செரிமான கேந்திரங்கள் அனைத்தும் விறுவிறுப்புடன் செயல்படத் தொடங்கும்.
உணவை நன்கு செரிக்க வைத்து, சத்தையும் சக்கையும் பிரித்து உடல் போஷணைக்காக சத்து முழுவதையும் உடலில் சேர்த்தும், சக்கையாக பெருமலமாக பெருங்குடல் வழியாக வெளியேற்றவும் உதவி செய்யும் பாசகபித்தம் எனும் பித்த தோஷத்தை பெருமளவில் பங்காற்ற உதவிடும் இந்த திரவரூப மருந்தினால், பேத்தியின் உடல் நிலையில் நல்லதொரு மாற்றங்கள் ஏற்படலாம்.
பித்த தோஷத்தினுள்ளே பொதிந்திருக்கும் சிறிது நெய்ப்பு எனும் குணத்தில்தான் ஊடுருவும் தன்மை, சூடு, லேசான குணம், நீர்த்த தன்மை போன்ற மற்ற பித்த குணங்கள் அடங்கியிருப்பதால், நீரில் நெருப்பு என்று குறிப்பிடுவதைப் போல, நெய்ப்பில் நெருப்பு என்று பாசக பித்தத்தைக் குறிப்பிடலாம்.
இந்த இரு முக்கிய குணங்களாகிய நெய்ப்பும், நெருப்பும் ஒரு சேர அடங்கியிருக்கும் மூலிகை நெய் மருந்துகள் உள்ளன. ஹோம குண்டத்தில் சிறிது நெய்விட்டவுடன், தீயானது கொழுந்துவிட்டு எரிவதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அந்த வகையில், கல்யாணாக் கிருதம், தாடிமாதி கிருதம், இந்து காந்தம் கிருதம் போன்றவற்றில் ஒன்றை, மருத்துவர் ஆலோசனைப்படி, சிறிய அளவில் ஒருநாளில் மூன்று நான்கு வேளை, உணவேற்பதற்கு முன்கொடுத்து வர, வயிற்றினுள் நெய்ப்பும் நெருப்பும் ஒரே நேரத்தில் வளரும்.
குடலின் உட்புற சவ்வுகளின் இந்த நெய்ப்பின் வரவானது வழுவழுப்பை ற்படுத்தி, அதன்மூலம் நெருப்பின் மற்ற குணங்களைத் தங்க வைத்து, பசியின் ஜூவாலையைப் பெரிதாக்குவதுடன் நிற்காமல், குடலின் தன்னிச்சையான அசைவுகளையும் மேம்படுத்தித் தருவதையும் உறுதி செய்வதால் பேத்தியின் இப்பெரும் பிரச்னையானது நாளடைவில் தானாகவே சரியாகிவிடும்.
வெளிப்புறமாக, உடலெங்கும் மூலிகைத் தைலத்தை வெதுவெதுவாகத் தடவி, அரை முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, வெந்நீரில் குளிப்பதன் மூலம் மலச்சிக்கலை நீக்கவும், பசியின் தன்மை சீராகவும் ஏற்படுத்தக் கூடிய நிலையை மனிதர்கள் பெற முடியும் என்று மற்ற மருத்துவ முறைகள் கண்டறியாத ஒரு அதிசய விஷயத்தை ஆயுர்வேதம் மிகநுட்பமாகக் கண்டறிந்து வெளிப்படுத்துகிறது.
அதனால் உங்கள் பேத்திக்கு, லாக்க்ஷாதிதைலம், தான்வந்திரம் தைலம், பலாஅஸ்வகந்தாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை மருத்துவரின் அனுமதியுடன் பயன்படுத்தி, அவருடைய எதிர்கால சுகத்தை இப்போதே பெரும்படியான முயற்சிகளை நீங்கள் துவக்கலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.