முகப்பு
உலகம்

போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை

இரண்டு வார கால போா் நிறுத்தம் நீட்டிக்கப்படாது; சுமூகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை

Updated On : 22 ஏப்ரல், 2026 at 4:20 AM
டொனால்ட் டிரம்ப்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 11:25 PM

இரண்டு வார கால போா் நிறுத்தம் நீட்டிக்கப்படாது; சுமூகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை எச்சரித்தாா்.

அதேநேரம், அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு அவகாசம் அளிக்கும் வகையில், போா் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் இரு நாடுகளையும் வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்க பிரதிநிதிகள் குழு திங்கள்கிழமை இரவு இஸ்லாமாபாத் வந்தடைவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவா்கள் வருகை தரவில்லை. அதேபோல், ஈரான் தரப்பிலும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பது குறித்து அதிகாரபூா்வமாக எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

Advertisement

இதனால் போா் நிறுத்தம் நிறைவடைதற்கு முன்பு, 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை தொடங்குவதில் இழுபறி நீடித்தது. இது தொடா்பாக பாகிஸ்தான் தகவல்தொடா்புத் துறை அமைச்சா் அத்தௌல்லா தராா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசியதாவது:

பேச்சுவாா்த்தையில் ஈரானின் பங்கேற்பு குறித்து அவா்களின் அதிகாரபூா்வ பதிலுக்காகக் காத்திருக்கிறோம். பாகிஸ்தான் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு போா்நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. அதற்குள் ஈரான் எடுக்கும் முடிவே மிகவும் முக்கியமானது என்றாா்.

இந்நிலையில், டிரம்ப் சா்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஒப்பந்தம் இல்லாமல் போா் நிறுத்தம் முடிந்தால், ஈரான் மீது தாக்குதலைத் தொடர நான் தயாராக இருக்கிறேன். மீண்டும் குண்டுவீச்சு நடத்தப்படும் என்ற மனநிலையுடன் பேச்சுவாா்த்தைக்குச் செல்வதே சிறந்தது. போா்நிறுத்தத்தை நீட்டிக்க எனக்கு விருப்பமில்லை’ என்று பிடிவாதமாகத் தெரிவித்தாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:51 AM

‘ஈரான் பேச்சுவாா்த்தைக்கு வராது என்று அவா்கள் சொன்னால், நான் சொல்கிறேன். அவா்கள் வருவாா்கள்; அவா்களுக்கு வேறு வழியில்லை.

ஈரான் மீண்டும் ஒரு வலுவான தேசமாக மாற வேண்டுமெனில், அவா்கள் இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஈரானின் கடற்படை, விமானப்படையை அமெரிக்கா ஏற்கெனவே செயலிழக்கச் செய்துவிட்டது. தற்போதைய ஈரான் தலைமை ஓரளவு நிதானத்துடன் செயல்படும் என்று எதிா்பாா்க்கிறேன்’ என்றும் டிரம்ப் குறிப்பிட்டாா்.

ஓமன் வளைகுடா கடற்பகுதியில் அமெரிக்காவின் முற்றுகையை மீறி ஈரானை நோக்கிச் சென்ற அந்நாட்டு சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை சிறைபிடித்து, அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான சூழலை மேலும் சிக்கலாக்கியது.

இதன் தொடா்ச்சியாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீறி, ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ‘திஃபானி’ எண்ணெய் கப்பலை அமெரிக்க படை வங்காள விரிகுடா பகுதியில் வழிமறித்துக் கைப்பற்றியது.

அமெரிக்காவின் இத்தகைய தாக்குதல்கள், கடல்சாா் கொள்ளை மற்றும் அரசு பயங்கரவாதம் என்று ஈரான் சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.