ஸ்ரீகாந்த் ஜிச்கர் குறிப்பிட்ட அந்த இன்னொருவர் பத்திரிகையாளர் கல்யாணி சங்கர். ஏறத்தாழ அறுபது ஆண்டு இந்திய அரசியலுக்கு நேரடி சாட்சியாக இருக்கும் சிலரில் கல்யாணி சங்கரும் ஒருவர். இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் வாஷிங்டன் நிருபராகவும், அரசியல் பிரிவு ஆசிரியராகவும் இருந்த கல்யாணி சங்கருக்குத் தெரியாத மூத்த அரசியல் தலைவர்கள் யாரும் இருந்துவிட முடியாது.
இந்திரா காந்தியில் தொடங்கி, இன்றைய நரேந்திர மோடி வரையில், கல்யாணி சங்கரின் விமர்சன வலையில் சிக்காதவர்கள் யாரும் இருக்க வழியில்லை. தலைநகரின் தேசியத் தலைவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் கருணாநிதி,
ஜெயலலிதா வரை பெரும்பாலான மாநிலத் தலைவர்களும் அவருக்கு அறிமுகமானவர்கள். அவரது அரசியல் விமர்சனத்தில் இடம் பெற்றவர்கள்.
தில்லியின் அதிகார மையத்தில் கோலோச்சுபவர்கள், நம்பிக்கைக்குரியவர்களாக ஏதாவது ஒரு பத்திரிகையாளரைத் தங்களுக்கு நெருக்கமாக வைத்திருப்பார்கள். அவர்கள் அந்தத் தலைவர்களின் கண்ணும், காதுமாக மட்டுமல்லாமல், ஆலோசனைகளை வழங்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். அந்த வரிசையில் இடம்பெறும் பத்திரிகை ஆளுமைகளில் கல்யாணி சங்கருக்கும் இடமுண்டு.
பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்வுகளில், நாற்பது ஆண்டுகாலமாகப் பல சந்தர்ப்பங்களில் கல்யாணி சங்கரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், யாரும் அறிமுகப்படுத்தாததால் அவரை சந்தித்து பேசவோ, நெருங்கிப் பழகவோ எனக்கு வாய்ப்பு அமையவில்லை. நான் கலந்து கொண்ட பல குடியரசுத் தலைவர் மாளிகை விருந்துகளில்கூட அவர் இருந்ததுண்டு. வலியப்போய் அறிமுகப்படுத்திக் கொள்ள நான் விழையாவிட்டாலும், சற்று எட்ட இருந்து அவரது ஆளுமைத் தனத்தை வியத்ததுண்டு.
இப்போதும் தொடர்ந்து எழுதிவரும் முக்கியமான அரசியல் விமர்சகர்களில் அவரும் ஒருவர். இந்தப் பதிவுடன் அடுத்த முறை தில்லி செல்லும்போது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்.
சோனியா காந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா ஆகிய சுதந்திர இந்திய அரசியல் பெண் ஆளுமைகள் குறித்த அவரது 'பாண்டோராஸ் டாட்டர்ஸ்' என்கிற புத்தகம் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டிருக்கும் அற்புதமான பதிவு. ஜெயலலிதா பற்றிய 'தி எம்பரஸ்', 'மாநிலக் கட்சித் தலைவர்களும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும்' உள்ளிட்ட அவரது புத்தகங்கள் சமகால இந்திய வரலாற்றுப் பதிவுகள்.
இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் வாஷிங்டன் சிறப்பு நிருபராக இருந்த கல்யாணி சங்கர் மட்டுமல்ல, வாஷிங்டன், லண்டன், டோக்கியோ, மாஸ்கோ, பெய்ஜிங் உள்ளிட்ட முக்கியமான உலக நாடுகளின் தலைநகரங்களில் சிறப்பு நிருபர்களாகப் பணியாற்றும் மூத்த பத்திரிகையாளர்கள், அந்தந்த நாட்டு இந்தியத் தூதரகங்களுடனும், வெளியுறவுத் துறை அமைச்சகத்துடனும் நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருப்பார்கள்.
சொல்லப்போனால், அவர்களில் பலர் நாட்டு நலன் கருதி, அதிகாரபூர்வமற்ற தூதர்களாகவேகூட செயல்படுவதுண்டு.
தினேஷ் சிங், பிரணாப் முகர்ஜி, நட்வர் சிங் உள்ளிட்ட வெளியுறவு அமைச்சர்களாக இருந்தவர்களின் நட்புவட்டத்தில் வெளிநாட்டுத் தலைநகர சிறப்பு நிருபர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். இந்திரா காந்தி அமைச்சரவையில் 1980 முதல் அவரது இறுதிக்காலம் வரை வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பி.வி. நரசிம்ம ராவுக்கும் அதுபோல் மூத்த நிருபர்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களில் கல்யாணி சங்கரும் ஒருவர்.
நரசிம்ம ராவின் நம்பிக்கையைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. தனக்கு நெருக்கமாக அவர் தேர்ந்தெடுத்து வைத்திருந்த ஒவ்வொருவரும், அவரது அரசியல் வீழ்ச்சிக்குப் பிறகும்கூட அவரைவிட்டு அகலவில்லை. அவர்களில் முக்கியமானவர் கல்யாணி சங்கர். சொல்லப்போனால், நரசிம்மராவின் மனசாட்சியாகவும், பல பிரச்னைகளில் ஆலோசகராகவும், உதவியாளராகவும் இருந்தவர் அவர்.
பிரதமராக இருந்தபோதும் சரி, அவர் பதவியிலிருந்து அகன்ற பிறகும் சரி நரசிம்ம ராவின் இல்லத்தில் எப்போது வேண்டுமானாலும் நுழையும் அனுமதி பெற்றிருந்த விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரில் கல்யாணி சங்கரும் ஒருவராக இருந்தார். பத்திரிகையாளர்களும், சில முக்கியமான அரசியல் பிரமுகர்களும் நரசிம்ம ராவை கல்யாணி சங்கர் மூலம்தான் அணுகினார்கள்.
நரசிம்ம ராவின் இல்லத்தில் பிரணாப் முகர்ஜி, கல்யாணி சங்கர் உள்ளிட்ட சிலர் மட்டும் அவருடன் ஆலோசனையில் இருந்தனர்.
ஜிச்கருடன் சென்ற நான், 9, மோதிலால் நேரு மார்க் இல்லத்தின் ஒரு பகுதியில் தனியாகச் செயல்பட்ட அலுவலக வரவேற்பறையில் அவருடன் சென்று அமர்ந்தேன். மணீந்தர் சிங் பிட்டா மட்டுமல்லாமல், வேறு சில ராவ் ஆதரவாளர்கள் அங்கே ஏற்கெனவே குழுமி இருந்தனர்.
எந்தக் காரணம் கொண்டும் நரசிம்ம ராவ் பதவி விலகக் கூடாது என்பது அவர்களது கருத்து. நரசிம்ம ராவின் பிடிவாதத்தை தளர்த்தும் முயற்சியில் பிரணாப் முகர்ஜி ஈடுபட்டிருப்பதாக அவர்களில் ஒருவர் தெரிவித்தார். அங்கே இருந்த அலுவலக அறையில் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த செயலாளர் ராம் காண்டேகர், இந்த விவாதத்தில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறார் என்பது அவரது முகபாவத்தில் இருந்து தெரிந்தது.
நரசிம்ம ராவை சந்தித்துவிட்டு வந்தார்களா இல்லை நேராக அப்போதுதான் வருகிறார்களா என்று தெரியவில்லை, அந்த அலுவலக வரவேற்பறைக்கு வி.என். காட்கிலும், புவனேஷ் சதுர்வேதியும் வந்தார்கள். அவர்கள் ஏதாவது தகவல் தரப்போகிறார்கள் என்கிற ஆர்வத்தில், நாங்கள் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றோம். 'நமஸ்கார்... நமஸ்கார்...' என்று பதில் வணக்கம் தெரிவித்தபடி அவர்கள் ராம் காண்டேகரின் அறைக்குள் நுழைந்தனர்.
அந்த அறையுடன் ஒட்டியிருந்த இன்னோர் அறைக்குள் அவர்களுடன் ராம் காண்டேகரும் சென்று கதவை மூடிக் கொண்டார். ஒரு கார் கிளம்பிப் போனது.
விசாரித்தபோது பிரணாப் முகர்ஜி கிளம்பிப் போய்விட்டார் என்று கடைநிலை ஊழியர் ஒருவர் தெரிவித்தார். வெளியில் போகவும் முடியாமல், உள்ளே இருக்கவும் பிடிக்காமல் நான் தவித்தேன். ஜிச்கர் அங்கிருந்து கிளம்புவதாக இல்லை என்பது தெரிந்துவிட்டது.
வி.என். காட்கில் வெளியே வந்தார். அவர் நரசிம்ம ராவை சந்திக்காமலே கிளம்ப இருக்கிறார் என்பது பேசியதிலிருந்து தெரிந்தது. என்னைப்பார்த்து சிரித்துக் கொண்டே, 'நீயும் வருகிறாயா?'' என்றபோது, ஏதோ விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் தலையாட்டினேன். அம்பாசிடர் காரின் முன் சீட்டில் அமர்ந்தபடி அவரது ஷாஜஹான் சாலை வீட்டுக்கு வந்தோம். அதுவரை காரில் எதுவும் பேசவில்லை.
'நீங்கள் ஏன் நரசிம்ம ராவை சந்திக்காமல் கிளம்பி விட்டீர்கள்?''
'சந்தித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. பிரணாப் முகர்ஜி சொல்லியும் கேட்காதபோது நான் சொல்லியா கேட்டுவிடப் போகிறார்?
அவர் ஏதாவது முடிவெடுத்துவிட்டால் அவ்வளவு சீக்கிரம் அந்த முடிவை மாற்றுவது கஷ்டம். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தாலும்கூடப் பரவாயில்லை, கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யாதீர்கள் என்று எத்தனையோ முறை நான் மட்டுமல்ல, நாங்கள் எல்லோருமே வற்புறுத்தி விட்டோம். நரசிம்ம ராவ் பிடிவாதமாக இருக்கிறார்...''
'அது இரண்டுக்கும் என்ன வித்தியாசம், எனக்குப் புரியவில்லை?''
'கட்சித் தலைவர் பதவிதான் அவரது பலம். அது பிரதமர் பதவியோ, எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ, நாடாளுமன்ற கட்சித் தலைவர் பதவியோ எதுவாக இருந்தாலும் கட்சித் தலைவர் பதவி கைவிட்டுப் போன பிறகு எந்த பயனும் இல்லை. நரசிம்ம ராவின் இப்போதைய பலமே, இந்த ஐக்கிய முன்னணி அரசின் பெரும்பான்மைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சித் தலைவர் என்பதுதான். அதைத் துறக்கிறேன் என்கிறார் அவர்.''
'அதற்கு என்ன காரணம் கூறுகிறார்?''
'காந்திஜி, நேதாஜி, நேருஜி, இந்திராஜி உள்ளிட்ட பெரிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் வகித்த பதவி அது. அந்தப் பதவிக்கு ஒரு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பது நரசிம்ம ராவ்ஜியின் வாதம்.''
'வழக்குகளைச் சொல்கிறாரா?''
'ஆமாம். அவர் கைது செய்யப்படலாம், அல்லது பிணையில் விடப்படலாம். எதுவாக இருந்தாலும் நீதிமன்ற சாட்சிக் கூண்டில் ஏறியாக வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நீதிமன்ற சாட்சிக் கூண்டில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டார் என்கிற அவப்பெயர் தன்னால் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதுகிறார் அவர். நீங்கள் எல்லாம் பத்திரிகைகளில், 'காங்கிரஸ் தலைவர் கைது' அல்லது 'காங்கிரஸ் தலைவருக்கு ஜாமீன்' என்றுதானே தலைப்புச் செய்தி போடுவீர்கள். அப்படி வருவதை அவர் விரும்பவில்லை.''
நான் எதுவும் பேசவில்லை. நரசிம்ம ராவ் மீதான எனது மரியாதை பல நூறு மடங்கு உயர்ந்தது. காங்கிரஸ் கட்சிக்குப் பழி நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தனது பதவியைத் துறக்க அவர் முடிவெடுத்ததை இப்போதும் நான் நினைத்துப் பார்த்து வியக்கிறேன். இத்தனைக்கும் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் லக்குபாய் பாதக் வழக்குக்குப் போதுமான அடிப்படை ஆதாரமே கிடையாது என்பதை தொடர் நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன.
நரசிம்ம ராவ் பதவி விலகுவதில் தீர்மானமாக இருக்கிறார் என்கிற செய்திக் கட்டுரையை எனது அலுவலகத்துக்கு வந்து எழுதி, 'நியூஸ்கிரைப்' கட்டுரையாக தினசரிகளுக்கு அனுப்புவதில் மும்முரமாக இருந்தேன். அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்துக்கு ஆர்.கே. தாவன் வந்திருப்பதாக, அங்கிருந்து பத்திரிகை நண்பர் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார். என்னுடன் தாவனை சந்தித்தால் அவர் மனம்விட்டுப் பேசக்கூடும் என்பதால் கிளம்பி வரும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்.
நான் காங்கிரஸ் தலைமையகத்துக்குச் சென்றபோது, வெளியே ஒரிரு கார்கள் மட்டுமே நின்று கொண்டிருந்தன. கேட்டுக்கு உள்ளேயும், வெறிச்சோடி இருந்தது. கட்டடத்தின் இடதுபுறமாக இருந்த 'சாகர் ரத்னா' உணவகத்தில் ஃபில்டர் காஃபி குடித்துவிட்டு, ஆர்.கே. தாவனை சந்திக்கலாம் என்று நினைத்து அதை நோக்கி நடந்தேன்.
பிரதான கட்டடத்துக்குப் பின்னால் சிறிதும் பெரிதுமாகப் பல தலைவர்களின் தனி அறைகள் இருக்கும். கட்சியில் பல்வேறு பதவி வகிப்பவர்கள் தங்களது ஆதரவாளர்களை அங்கே சந்திப்பார்கள். அந்த அறைகளை நோட்டமிட்டபடி 'சாகர் ரத்னா' நோக்கி நகர்ந்தேன். என்னை அழைத்திருந்த நண்பர் அங்கே இருந்தார்.
'அலுவலகமே வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆர்.கே. தாவன் எதற்கு வந்திருக்கிறார்?''
'அது தெரியவில்லை. அவர் மட்டுமல்ல, மாதவ்சிங் சோலங்கி, ஜனார்தன பூஜாரி, பி.பி. மெளரியா ஆகியோரும் வந்திருக்கிறார்கள். எல்லோரும் ஆர்.கே. தாவனின் அறையில்தான் இருக்கிறார்கள்.''
'அவர்கள் அங்கே இருக்கும்போது நாம் எப்படிப் பேச முடியும்?''
'வெளியில் காத்திருப்போம். இன்றைக்கு நிச்சயமாக ஏதாவது செய்தி வரும் என்று பலரும் என்னிடம் அடித்துச் சொல்கிறார்கள்...''
'பலரும் என்றால்?''
'பலரும் என்றால் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும்...''
'அவர்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? அவர்கள் எப்படி காங்கிரஸில் என்ன நடக்கப்போகிறது என்று சொல்ல முடியும்?''
'காங்கிரஸில் மட்டுமல்ல, நீதிமன்றத்தில் என்ன நடக்கும் என்பதுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. நரசிம்ம ராவ் ராஜிநாமா செய்ய வேண்டும்; அல்லது காங்கிரஸ் கட்சி பிளவுபட வேண்டும்; அல்லது தேவே கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு கவிழ வேண்டும். இதில் ஏதாவது ஒன்று நடக்கும். அதற்கு நீதிமன்றம் துணை புரியும்...''
'என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?''
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.