வரும்... ஆனா வராது!
இருபது ஆண்டுகளுக்கு முன்பாக தாய்லாந்தின் ராஜமாதா இலங்கைக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டபோது, அவர் அன்பளிப்பாகக் கொடுத்த யானையை தாய்லாந்து அரசு அண்மையில் திரும்பப் பெற்றது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பாக தாய்லாந்தின் ராஜமாதா இலங்கைக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டபோது, அவர் அன்பளிப்பாகக் கொடுத்த யானையை தாய்லாந்து அரசு அண்மையில் திரும்பப் பெற்றது. இலங்கையைச் சேர்ந்த விலங்குகள் ஆர்வலர்களின் இடைவிடாதப் போராட்டமே இதற்கு காரணம்.
நாடுகள் நட்புடன் விலங்குகளை மற்ற நாடுகளுக்கு அன்பளிப்பாக அளிப்பது இயல்பான நிகழ்வுதான். இதன்படி, தாய்லாந்து அரசால் பரிசளிக்கப்பட்ட "சக்சுரின்' என்ற அந்த யானைக் குட்டிக்கு இலங்கையில் "முதுராஜா' என்று புதிய பெயர் சூட்டப்பட்டது. அந்த யானைக் குட்டி கந்தே புத்த விஹாரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யானையின் பத்து வயதில் அன்பளிப்பாகக் கொடுத்ததை அதன் முப்பத்து இரண்டு வயதில் திருப்பிக் கேட்கும் அளவுக்கு என்ன நடந்தது?
புத்த விஹாரத்தில் முதுராஜாவை சரியாகக் கவனித்துகொள்ளவில்லை. தினமும் சுற்றுலாப் பயணிகளைச் சுமந்துகொண்டு சுற்றி வர வேண்டும். கனமான பொருள்களை ஏற்றி இறக்க வேண்டும். பெளத்த மத விசேஷங்களின் போது நடக்கும் ஊர்வலங்களில் பங்கேற்க வேண்டும். இதுதவிர அருகேயுள்ள பெளத்த விஹார்களில் நடக்கும் திருவிழாக்களின்போது, முதுராஜாவை வாடகைக்கும் விட்டுள்ளனர்.
எப்போதும் உழைத்துகொண்டிருக்கும் முதுராஜாவுக்கு உணவும் சரிவர அளிப்பதில்லை என்ற புகாரும் இருந்தது. இதனால், மிகவும் நோய்வாய்ப்பட்டு பலகீனமாகிப் போனது.
முதுராஜாவின் பரிதாபமான நிலையைக் கண்ட இலங்கை விலங்குகள் நல ஆர்வலர்கள் அமைப்பு இதுதொடர்பாக இலங்கை தேசிய வன விலங்கு பாதுகாப்பு அமைப்பு, தேசிய மிருகக் காட்சி சாலை அமைப்பினரிடம் முறையிட்டது. ஆனாலும், உரிய நடவடிக்கை இல்லை.
சங்கிலிப் பிணைப்பு காரணமாக, கடுமையான புண்களுக்குத் தக்கச் சிகிச்சை அளிக்காததால் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. இதற்கு சிகிச்சை அளிப்பது சிரமம் என இலங்கை மிருகக் காட்சி சாலை மருத்துவ நிபுணர்கள் கூறினர். இந்த நேரத்தில் யானையை கவனிக்க பாகனைக்கூட நியமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் சேர்ந்துகொண்டது.
இதையடுத்து, முதுராஜாவின் பரிதாபமான நிலைமையை தாய்லாந்து அரசிடம் விலங்குகள் நலஆர்வலர்கள் அமைப்பினர் விளக்கினர்.
அன்பளிப்பாகக் கொடுத்ததைத் திரும்பக் கேட்டால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பு வந்து விடுமோ? என்ற தயக்கம். விஷயம் தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கும் போனது. ஒருவழியாக யானையின் நலன் கருதி, அதனைத் திரும்பஅழைத்து கொள்ள தாய்லாந்து அரசு முடிவு செய்தது. பின்னர், முறைப்படி இலங்கை அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது.
புத்த விஹார் நிர்வாகம், யானையை தாய்லாந்துக்குத் திரும்பக் கொடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனாலும், இலங்கை அரசோ முதுராஜாவை தாய்லாந்துக்கே திருப்பி அனுப்ப சம்மதம் தெரிவித்தது.
ஒன்பது அடி உயரமும், நாலு டன் எடையும் கொண்ட முதுராஜா தனி விமானத்தில் ஆறு மணி நேரம் பயணித்து தாய்லாந்துக்கு அண்மையில் போய் சேர்ந்தது. உடன், கால்நடை மருத்துவ நிபுணர்களும் பயணித்தனர்.
கால்களில் பிணைக்கப்பட்டிருந்த கனமான சங்கிலிகள் அகற்றப்பட்டு, மருந்து வைத்துகட்டப்பட்ட முதுராஜா தாய்லாந்தில் ஒரு பூங்காவில் சேர்க்கப்பட்டது.
"யானைக்கு உரிய சிகிச்சையை அளித்து, உடல்நலம் தேறியதும் மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைப்பதாக தாய்லாந்து அரசு உறுதி அளித்துள்ளது'' என்று இலங்கை பெளத்த குருமார்கள் கூறுகின்றனர். ஆனால், முதுராஜா இனி இலங்கைக்கு மீண்டும் வர சாத்தியமில்லை என்றே கூறுகின்றனர். இது எப்படி என்றால் "வரும் ...ஆனா வராது' என்ற நிலைதான்!