(கோவில்பட்டியில் ஒரு பள்ளி அருகேயுள்ள ஸ்டேஷனரி பொருள்கள் விற்கும் கடையின் பெயர்)
தாத்தா-பாட்டி கடை
-எஸ்.மோகன்,
கோவில்பட்டி.
(கரூர் மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள்)
வெடிக்காரன்பட்டி, தலையாரிபட்டி, சாலரப்பட்டி, கழுமேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி, இலிங்கமநாயக்கன்பட்டி, கணக்குவேலம்பட்டி, ஊத்துப்பட்டி, பாப்பநாயக்கன்பட்டி, குரும்பப்பட்டி, கோட்டப்பட்டி, எல்லம்பட்டி, நவமரத்துப்பட்டி, கரடிப்பட்டி, சீத்தப்பட்டி.
-சௌ.தமிழரசன்,
கரூர்.
(கோவா தலைநகர் பஞ்ச்மில் உள்ள இரு நெடுஞ்சாலைகளின் பெயர்கள்)
ஜூன் பதினெட்டாம் சாலை, ஜனவரி முப்பத்து ஒன்றாம் சாலை
-ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.
(பாளையங்கோட்டை பேரூந்து நிலையத்தில் மனைவியும், கணவனும் )
""என்னங்க ஹோட்டல்ல போய் இரண்டே இரண்டு இட்லி சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போவோமா?''
"" இப்ப இப்படிதான் சொல்லுவ! போன பிறகு இட்லி, தோசை, இடியாப்பம், புரோட்டா, பிரியாணி கேட்ப. உன்னை பற்றி எனக்கு தெரியாதா?''
- க.சரவணகுமார்,
திருநெல்வேலி.
(சென்னை துரைப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இரு இளைஞர்கள்)
""பத்தாம்பசலி'ன்னா என்னடா?''
""பூமர் அங்கிள்!"'
""பதினொன்றாம் பசலின்னா?''
-வி.சி. கிருஷ்ணரத்னம்,
கேளம்பாக்கம்.
(பெங்களூரு புதிதாக கட்டப் பட்ட விஸ்வேஸரய்யா ரயில் நிலையம் அருகே தந்தையும் சிறுவனும்)
"" அப்பா ! ஏன் இந்த ரயில்கள் நின்று கொண்டிருக்கின்றன .''
"" ரொம்ப தூரம் ஓடிவந்ததால், டயர்ட் ஆகி ரெஸ்ட் எடுக்கின்றன மகனே!''
-மஞ்சுதேவன்,
பெங்களூரு.
தடுமாற்றம் இல்லாமல் செய்யும் தவறுகள் எல்லாம்
தவறு என்ற கணக்கில் சேராது, அதன் பெயர் - சாமர்த்தியம்!
-ஜி. மஞ்சரி,
புதுப்பேட்டை.
மனைவி இறந்தும் மகன்கள் இருவருக்காக மறுமணம் செய்து கொள்ளாமல் நிலம், வீடு என அனைத்தையும் விற்று இருவரையும் டாக்டருக்கு படிக்க வைத்த மாணிக்கத்தை தனிமையில் தவிக்க விட்டுவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர் இருவரும்.
விரக்தியின் விளிம்பிலிருந்து மாணிக்கம், தன் மகன்களின் மேல் இருந்த வெறுப்பால் தான் வளர்த்த இரண்டு நாய்க்குட்டிகளுக்கு மகன்களின் பெயரை வைத்து வளர்த்து வந்தார். மாணிக்கத்தைப் பார்க்க வந்த அவரின் குடும்ப நண்பர் ராஜாமணி , "" என்ன இருந்தாலும், நாய்க்குட்டிகளுக்கு நீ உன் பிள்ளைகள் பெயரை வைத்தது இருப்பது என்னமோ போலிருக்கிறது! வேறு பெயர்கள் வை'' என்று கூறி புறப்பட்டுச் சென்றார்.
ஒரு மாதம் கழித்து மீண்டும் தன் நண்பர் மாணிக்கத்தைப் பார்க்க வந்த ராஜாமணிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் நாய்க்குட்டிகளுக்கு வைத்திருந்த தன் மகன்களின் பெயர்களை மாற்றி டாமி', "டைகர்' என்று பெயர் வைத்திருந்தார் மாணிக்கம்.
""அட ஆச்சரியமா இருக்கே! உன் மகன்களின் பெயர்களை மாற்றி டாமி, டைகர் என்று நாய்க்குட்டிகளின் பெயரை மாற்றி விட்டிருக்கிறாயே'' என்றார் ராஜாமணி .
""ஆமாம் நண்பரே! நன்றி உள்ளே இந்த நாய்க்குட்டிகளுக்கு நன்றி இல்லா அந்த பசங்க பெயரை வைத்தது தப்புதான். அதனால்தான் நாய்க்குட்டிகளின் பெயரை மாற்றி விட்டேன்'' என்றாரே பார்க்கலாம்.
- இரா.சாந்தகுமார்,
கூடுவாஞ்சேரி.
எல்லா தானங்களும் பிறரை வாழ வைக்கும் !
நிதானம் மட்டுமே தன்னையும் வாழ வைத்து பிறரையும் வாழ வைக்கும்.
-ஜி.அர்ஜுனன்,
செங்கல்பட்டு.
சமூக வலைதள ஊடகமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பரபரப்புக்கு பஞ்சமில்லை. கருத்து சுதந்திரத்துக்கு பெயர்போன ட்விட்டரில் பொய் பதிவுகளை அடையாளம் காண்பதில் சிக்கில் ஏற்பட்டது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த ட்விட்டரை மீட்கவும், உண்மையான நபர்களை அடையாளம் கண்டு அதிகாரபூர்வ தகவல்கள் பகிரப்படுவதை உறுதி செய்யவும் ப்ளு டிக் சேவையை ட்விட்டர் அறிமுகம் செய்தது.
பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்படும் பதிவுகளை அதிகாரபூர்வமாக்க இந்த ப்ளு டிக் சேவையை நாடுகிறார்கள்.
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளில் ப்ளு டிக் சேவையை ட்விட்டர் ஏற்கெனவே அறிமுகம் செய்துவிட்டது. தற்போது இந்தியா, இந்தோனேசியா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த சேவையை ட்விட்டர் அறிமுகம் செய்துள்ளது.
கைப்பேசி ட்விட்டர் கணக்குக்கு ப்ளு டிக் பெற மாதம் ரூ.900, இணையதளத்தில் பெற மாதம் ரூ.650, ஆண்டு கட்டணமாக ரூ.6,800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கைப்பேசி எண்ணை பதிவு செய்து கட்டணம் செலுத்தி இந்த ப்ளு டிக் அங்கீகாரத்தை பெற்று கொள்ளலாம்.
இதைப் பெற்றவர்களுக்கு 4000 எழுத்துகளைக் கொண்ட ட்விட்களையும், கருத்துகளையும் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுவாக, 280 எழுத்துகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சாதாரண பயன்பாட்டாளர்கள் நீண்ட பதிவு ட்விட்டை காணலாம்.
பதிவிட்ட ட்விட்டை மீண்டும் திருத்துவது, 50 நிமிஷ விடியோவை பதிவிடுவது உள்ளிட்ட சேவைகளை ப்ளு டிக் வாடிக்கையாளர்களுக்கு ட்விட்டர் வழங்குகிறது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.