சிவகார்த்திகேயனின் "மாவீரன்' இசை வெளியீட்டு விழாவை இன்னும் சில நாள்களில் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் கோலாகலமாக நடத்தவிருக்கிறார்கள். விஜய்யின் "பிகில்' படத்தின் இசை வெளியீடும் அங்கேதான் நடந்தது. இதைப் போல சிவாவின் "அயலான்' இசை வெளியீட்டை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்கள். "அயலான்' படத்துக்குப் பிறகு தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம் என நினைக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
---------------------------------------------
சமூக வலைதளங்கள் முழுக்க தமன்னா தரிசனம்தான். கவர்ச்சி உடைகளில் தமன்னா சகட்டுமேனிக்குப் புகைப்படங்களை இறக்க, அம்மணியின் மவுசு எகிறத் தொடங்கியிருக்கிறது. "ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் ஜோடி போடுவதால் அவர் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார். ஹீரோயின் மைய கதைகளை இப்போதைக்குத் தவிர்க்க நினைக்கும் தமன்னா, முன்னணி நாயகர்களுடன் ஜோடி போடவே விரும்புகிறாராம். "ஜெயிலர்' படத்தில் இணைந்த போது பேசப்பட்ட சம்பளம் பட ரிலீஸ் நேரத்தில் இரு மடங்காக உயர்ந்திருக்கிறதாம்.
---------------------------------------------
"முண்டாசுப்பட்டி' படத்தை அடுத்து, "ராட்சசன்' என்கிற பக்கா த்ரில்லர் படத்தைக் கொடுத்து தமிழ்த் திரையுலகை நம்பிக்கையாக நிமிரவைத்த இயக்குநர் ராம்குமார். தனுஷை நம்பிப் பல வருடங்களை வீணடித்துவிட்ட விரக்தியில், இப்போது மறுபடியும் விஷ்ணு விஷாலிடமே திரும்பச் சென்றிருக்கிறாராம். "முண்டாசுப்பட்டி 2' எடுக்கலாம் என இருவருமே முதலில் நினைத்தார்களாம். ஆனால், கதை அவ்வளவு திருப்தியாக அமையாததால், தனுஷுக்கு ரெடி செய்த கதையில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம் விஷ்ணு விஷால். அட்டகாசமான ஆக்ஷன் கதையாம்.
---------------------------------------------
தம்பி ராமையாவின் மகன் உமாபதி, சில படங்களில் நாயகனாக நடித்திருப்பவர். விரைவில் திரைக்கு வரவிருக்கும் "ராஜா கிளி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். விஷாலின் ஜோடியாக "பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா அர்ஜுன். நடிகர் அர்ஜுனின் மகள் இவர். உமாபதி, ஐஸ்வர்யா இருவரும் பல மாதங்களாகக் காதலித்து வருவதாகவும், இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில், இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
---------------------------------------------
பிரித்விராஜ் "விலாயத் புத்தா' என்ற படத்தில் நடித்த போது, சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து பிரித்விராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், "" படத்தின் சண்டைக் காட்சியைப் படமாக்கும் போது எனக்கு விபத்து ஏற்பட்டது. இனி இரண்டு மாதங்களுக்கு ஓய்வு மற்றும் பிசியோதெரபிதான் மேற்கொள்ள வேண்டும். விரைவில் மீண்டு வருவேன். இந்த நிமிடங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.