பேல்பூரி
போதிக்கும்போது நீ கற்கவில்லை என்றால், பாதிக்கும்போது நீ கற்க நேரிடும்!
தினமணி கதிர்பேல்பூரி
போதிக்கும்போது நீ கற்கவில்லை என்றால், பாதிக்கும்போது நீ கற்க நேரிடும்!
கண்டது
(திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
''அண்ணே சாப்பிட வாங்க!''
-பி. கோபி,
கிருஷ்ணகிரி.
(திருச்சி திருவெறும்பூரில் உள்ள ஒரு தேநீர் விடுதியில் எழுதியிருந்தது)
வாழ்க்கைங்கிறது டீ போடுற மாதிரி
உங்க ஈகோவை கொதிக்க விடுங்க!
உங்க கவலையை ஆவியாக்குங்க!
உங்க துக்கங்களை கரைச்சிடுங்க!
உங்க தவறுகளை வடிகட்டுங்க!
அன்புங்கற பாலை கலந்துடுங்க! மகிழ்ச்சியாக ருசிங்க!
-மு.மதிவாணன்,
அரூர்.
(கடலூர் லாரன்ஸ் ரோடு ஜவுளிக்கடை லிப்ட் முன்புள்ள வாசகம்)
''மேலே ஏறும்போது சந்திப்பவர்களிடம் இனிமையாகப் பழகுங்கள்.
ஏனெனில், கீழே இறங்கும்போதும் அவர்களைத் தான் நீங்கள் சந்திப்பீர்கள்.
அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.
கேட்டது
(பட்டுக்கோட்டை திருமண மண்டபம் ஒன்றில் மணமகளும் தாயும்)
''எல்லார் காலுலையும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க?''
'' எல்லார் காலுலையம் விழுந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்க முடியாதும்மா? ஒரே இடத்தில விழுந்து அப்படியே கிடக்கிறேன் எல்லோரும் வந்து நின்னு ஆசிர்வாதம் பண்னிட்டு போகச் சொல்லு!''
- ஜி. அழகிரிவேல்,
ஒதியடிக்காடு.
(வேதாரண்யத்தில் ஓர் டீக்கடையில் அதன் உரிமையாளரும் வாடிக்கையாளரும்..)
'என்ன தம்பி டீயும்,வடையும் 24 ரூபாய்.
இருபது ரூபாய் மட்டும் தர்றீங்களே?''
''அதான்! வணிக சிலிண்டர் விலை 84 ரூபாய் குறைஞ்சிருக்கே அப்புறமென்ன!''
''முதல்ல நியூஸை பப்ளிக்கா அறிவிக்கிறதை நிறுத்த சொல்லணும்!''
சு.மூன்சுதாகரன்,
னவன்மகாதேவி.
( ஊத்தங்கரையில் ஒரு வீட்டில் தம்பதி பேசியது)
'' ஏங்க...யாரோ காலிங் பெல்லை அடிக்கிறாங்க! சீக்கிரம் போய் கதவைத் திறங்க?''
'' யாராவது வந்தாவே ஏதாவது கேட்கத்தான் வந்திருப்பாங்க? அதனால மெதுவாவே போய்
கதவைத் திறக்கலாம். நீ பதற்றப்படாம அமைதியா இரு?''
-இரா.வசந்தராசன்,
கிருஷ்ணகிரி.
யோசிக்கிறாங்கப்பா!
நல்லவனுக்கு மழையாக இரு!
கெட்டவனுக்கு மலையாக இரு!!
அ.செந்தில்குமார்,
சூலூர்.
மைக்ரோ கதை
மாமல்லபுரம் அருகேயுள்ள பனைபட்டினம் கிராமத்தில் ராம் என்ற எட்டு வயது சிறுவன் இருந்தான். அவனது நண்பனின் பெயர் மித்ரன்.
ஒருநாள் ராமோட அம்மா மித்ரனோட அம்மாகிட்ட, '' எப்படி உங்க பையன் ரொம்ப வலிமையா இருக்கான் ?'' என்று கேட்டார். அதற்கு மித்ரனின் அம்மா, ''எனது பையனுக்கு பச்ச முட்டை தினமும் காலையில் கொடுப்பேன்'' என்றார்.
வீட்டுக்கு வந்த ராமிடம் அவனுடைய அம்மா, ''டேய் ராம் , போய் பச்ச முட்டை வாங்கிட்டு வாடா!'' என்று சொன்னார். ராம் காசு வாங்கிட்டு. கிட்டு மாமாவின் மளிகைக் கடைக்கு போய், ''எனக்கு பச்ச முட்டை வேணும்' என்று கேட்டான். உடனே கிட்டு மாமா, ''அது இங்க இல்ல தம்பி'' என்றார்.
அடுத்து ராமும் வசந்தி அக்கா கடை, ரஹீம் மாமா .. என்று பல கடைகளில் சுற்றியும் பச்ச முட்டை கிடைக்கவில்லை.
கசையில் கிராமத்து ஓரமா இருக்கிற ஒரு பாட்டி கடைக்குச் சென்று கேட்டபோதும், இல்லை. ராமும் தனது வீட்டுக்கு வந்து சொன்னான்.
இதற்கு ராமிடம் அவனது அம்மா, '' மித்ரன் அம்மாக்கு மட்டும் எப்படி கிடைச்சுது'' என்று கேட்டார்.
உடனே ராம், ''எல்லா கடையிலும் வெள்ளை கலர் முட்டைதான் இருந்திச்சு. பச்சை கலர் முட்டை எங்கேயுமே இல்லை.'' என்றான்.
இதை கேட்ட ராமின் அம்மா சிரித்து கொண்டே, ''டேய் , சமத்து குட்டி . நான் சொன்னது பச்சை கலர் முட்டை இல்லை. நாட்டு கோழி போடற மூல முட்டை, அதை பாலில் கலந்து தினமும் குடிக்கணும்!'' என்றாள்.
பின்னர் ராமுக்குப் புரிந்தது. அப்புறம்அவன் தினமும் முட்டையைச் சாப்பிட்டு, வலிமை ஆனான்.
மு.பா . சங்கமித்ரா,
திருவேற்காடு.
எஸ்.எம்.எஸ்.
போதிக்கும்போது நீ கற்கவில்லை என்றால்,
பாதிக்கும்போது நீ கற்க நேரிடும்!
ஜி. அழகிரிவேல்
ஒதியடிக்காடு.
அப்படீங்களா!
தகவல் பரிமற்றத்தில் உலகின் முன்னணி செயலியாக வாட்ஸ் ஆப் உள்ளது. இதில், சாட் செய்து ஆலோசிப்பதில் இருந்து அடுத்த கட்டமாக தகவல்களைத் தேடும் தளமாக மாற்ற 'வாட்ஸ் ஆப் சேனல்ஸ் சேவை' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, வாட்ஸ் ஆப்பில் பிறர் பகிரும் குறிப்பிட்ட துறைத் தொடர்பான தகவல்களைப் பெறும் வகையில், குழுக்களை இணைக்கும் கம்யூனிட்டிஸ் என்ற சேவையை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது ஒருதுறை தொடர்புடைய தகவல்களை மொத்தமாக பிறருக்கு பகிர்ந்து கொள்ளும் வகையில் சேனல்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர், நண்பர்கள், அலுவலகத்தினர் குழுக்களில் பகிரப்படும் வழக்கமான தகவல்களுக்கு மாற்றாக இருக்கும். விளையாட்டில் ஆர்முள்ளவர்கள் அதுதொடர்பான சேனல்களை வாட்ஸ் ஆப் சேனல்ஸில் தேடி அதில் இணைத்து கொண்டு தகவல்களைக் காணலாம்.
இதில், அட்மின்களின் விவரங்களும், சேனல்ஸில் இணைந்துள்ளவர்களின் விவரங்களும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேனல்ஸை பின்தொடர்பவர்களின் தொலைபேசி எண்களையோ, விவரங்களையோ அட்மினாலேயே தெரிந்து கொள்ள முடியாது. யாருக்கும் காண்பிக்கப்படாது. யாரை பின்தொடர வேண்டும் என்பது பயனர்களின் விருப்பம்.
இந்த சேனல்ஸின் அட்மின்கள் எழுத்து, போட்டோ, விடியோ, ஸ்டிக்கர்ஸ், போல்ஸ் போன்றவை மூலம் பின்தொடரும் பயனாளிகளுக்கு தகவல்களை வழங்கலாம். சேனல்ஸ் சேவை தற்போது சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் உலகம் முழுவதும் இந்தச் சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
அ.சர்ப்ராஸ்