முகப்பு
தினமணி கதிர்

திரைக்கதிர்

அஜித் - லைகா இணையும் "ஏகே 62' படத்தின் இயக்குநராக பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மகிழ்திருமேனி ஒப்பந்தமாகிவிட்டார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பகிர்:

அஜித் - லைகா இணையும் "ஏகே 62' படத்தின் இயக்குநராக பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மகிழ்திருமேனி ஒப்பந்தமாகிவிட்டார். அஜித்திடம் அவர் இரண்டு ஒன்லைன் கதைகள் சொன்னதில், இரண்டுமே அஜித்திற்குப் பிடித்திருக்கிறது. லைகா தரப்பில் மகிழ் திருமேனிக்குத் தனி அலுவலகம் அமைத்துக் கொடுத்துவிட்டார்கள். அந்த அலுவலக பூஜைதான் "படத்திற்கான பூஜை' எனச் செய்திகளாக உலா வந்தது. முழுக்கதை ரெடியானதும்... அதாவது, அடுத்த மாதம் முதல் வாரத்தில் "ஏகே 62' குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

---------------------------------------------------------------------

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், ஒரே சமயத்தில் பல படங்களைத் தயாரித்து வருகிறது. தினேஷ், கலையரசன் நடிப்பில் "தண்டகாரண்யம்', தினேஷ், மாறன் நடிப்பில் "ஜே.பேபி', குருசோமசுந்தரம் நடிப்பில் "பாட்டில் ராதா', அசோக்செல்வன், சாந்தனு நடிப்பில் "ப்ளூ ஸ்டார்', இவை தவிர "தங்கலான்' படத்தையும் ஞானவேல்ராஜாவுடன் இணைந்து தயாரித்து வருகிறது. இந்நிலையில்தான் "சார்பட்டா 2' அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.  

Advertisement

---------------------------------------------------------------------

ரஜினியின் பாபா, பிதாமகன், கஜேந்திரா, என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, ராட்டினம் போன்ற படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ஆரம்பத்தில் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக, எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களைத் தயாரித்திருக்கிறார். ரஜினி, விஜயகாந்த், விக்ரம், சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்துப் படம் தயாரித்த இவர் திரைப்படத்  தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில் தற்போது சர்க்கரை நோயால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்று அவரின் நண்பர் மூலம்  பேஸ்புக்கில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். சூர்யா, வெற்றிமாறன் உள்ளிட்டோர் அவருக்கு உதவிகள் செய்துள்ளனர். 

---------------------------------------------------------------------

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த "புஷ்பா', 2021-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இதில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, இப்போது நடந்து வருகிறது. முதல் பாகத்தில் நடித்த அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா உட்பட பல நடித்து வருகின்றனர். இந்நிலையில் இதில் சாய் பல்லவி இணைந்துள்ளதாகவும் இதற்காக அவர் பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

---------------------------------------------------------------------

கடந்த 2009-ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் "அவதார்'. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான  இத்திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து,  இப்படத்தை நான்கு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில் அதன் இரண்டாம் பாகமான அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' 3டி தொழில்நுட்பத்துடன் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது.

---------------------------------------------------------------------

இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜேம்ஸ் கேமரூன் மூன்றாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில்  ஈடுபட்டு வருகிறார். இந்தப் பாகம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காம் பாகத்துக்கு முன் ஹீரோசிமா சம்பவத்தை படமாக்க முடிவெடுத்துள்ளார் கேமரூன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments