செல்போன் ஒலிக்கும் சப்தம் கேட்டவுடன், தன்னுடைய மகள் கண்மணிக்குத் தலை வாரி விட்டுக் கொண்டிருந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டு போனை எடுத்தாள் மைதிலி.
' வக்கீல் மேடமா?' என்ற ஆணின் குரலுக்கு, 'ஆம்' ' என்று பதிலளித்தாள்.
'மேடம். என் பெயர் குமரேசன். ஒரு கேஸ் விஷயமா இன்று காலை எட்டு மணிக்கு உங்களை ஆபீஸில் வந்து பார்க்கலாங்களா?'
'காலை எட்டு மணிக்கா? சாயங்காலம் வர முடியாதுங்களா?' என்றாள் மைதிலி.
பரபரப்பான காலை வேளையில் மகளைப் பள்ளிக்குத் தயார் செய்து அனுப்ப, வங்கி வேலைக்குச் செல்லும் கணவனுக்கு மதிய உணவு கட்டிக் கொடுத்து அனுப்ப, பின்னர் தான் தயாராகி, கோர்ட்டுக்குப் போக என்று நேரம் சரியாக இருக்கும் என்பதால் காலையில் கட்சிக்காரர்கள் யாரையும் சந்திக்க விரும்புவதில்லை அவள்.
'நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறவங்க மேடம். காலையில் என்றால் சௌகரியமாய் இருக்கும்.'
குடும்ப நல வழக்குகளை மட்டும் நடத்தும் மைதிலிக்கு, எப்போதும் பெரும்பாலும் கணவன்- மனைவி என்றே ஜோடியாக கட்சிக்காரர்கள் வருவார்கள்.
'சரி.. சரியா எட்டு மணிக்கு வந்திருங்க' என்று போனை ஆஃப் செய்து விட்டு மகளின் தலையில் மீண்டும் கை வைத்துப் பின்னத் தொடங்கினாள் மைதிலி.
குளித்துவிட்டு, தலை துவட்டிக் கொண்டு வந்த கணவன் கணேசனிடம், 'ஏங்க காலைல எட்டு மணிக்கே ஒரு கட்சிக்காரர் ஆபீஸிக்கு வர்றதா போன் பண்ணினார். கண்மணியை ஸ்கூலுக்கு ரெடியாக்கிவிட்டு, நீங்களும் ரெடியாகிப் போக முடியுமா? ப்ளீஸ்' என்றாள்.
'அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லை. நான் பார்த்துக்கிறேன். நீ ரெடியாகு' என்று கணேசன் கூறியவுடன் நிம்மதியடைந்தாள் மைதிலி.
கணேசன் எப்போழுதும் நிலைமை அறிந்து செயல்படுபவன். ஒரு பொறுப்பை ஏற்றால், அதை முழுமையாகவும், கச்சிதமாகவும் செய்து முடிப்பான். முக்கியமாக எதற்கும் சலித்துக் கொள்ள மாட்டான்.
அலுவலக அறைக்குள் நுழைந்து, உள்புறம் பூட்டப்பட்டிருந்த சிறிய நுழைவாயிலைத் திறந்து வைத்துவிட்டு, மின் விசிறியை ஓட விட்டு விட்டு இருக்கையில் மைதிலி அமர்ந்தபோது எட்டு மணிக்கு ஐந்து நிமிடங்கள் பாக்கி இருந்தன. அவளின் ஜூனியர் மாலதி உட்காருவதற்கு அந்த அறையின் மூலையில் சிறிய மேஜையும், நாற்காலியும் போடப்பட்டிருந்தன. பக்கத்தில் உள்ள மற்றொரு சிறிய மேஜையில் ஒரு கம்ப்யூட்டரும், பிரிண்டரும் வைக்கப்பட்டிருந்தன. மைதிலி அமரும் நாற்காலியைச் சுற்றி 'ப' வடிவில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி அலமாரியில் சட்டப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தலைக்கு மேல் காந்தி, அம்பேத்கர், காமராஜரின் படங்கள் சந்தன மாலைகள் அணிவிக்கப்பட்டு சுவரில் மாட்டப்பட்டிருந்தன. வலது பக்கச் சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஹேங்கரில் கருப்புக் கோட்டும், வெள்ளை நிற டையும் மாட்டப்பட்டிருந்தது. வீட்டின் முன்புறத்தில் இருந்த அறையையே வக்கீல் அலுவலகமாக மாற்றியிருந்தாள் மைதிலி.
வீட்டுக்கு என்று தனிக் கதவும், அலுவலகத்துக்கு என்று தனிக் கதவும் இருந்ததால், கட்சிக்காரர்கள் வந்து போக எளிதாக இருந்தது. வீட்டின் உள்ளிருந்து, ஆபீஸின் பின்புறக் கதவு வழியாக அவளின் அலுவலக அறைக்குள் யாரும் அறியாமல் நுழைந்துவிடலாம்.
சரியாக எட்டு மணிக்கு வெளிக்கதவு திறக்கப்படும் ஒலி கேட்டது. மைதிலியின் அறைக் கதவு மெதுவாகத் தட்டப்பட அவள் எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
'குட்மார்னிங் மேடம் . நான்தான் குமரேசன், காலையில் போன் செய்திருந்தேன்' என்றவாறே முப்பது வயது மதிக்கத்தகுந்த இளைஞன் உள்ளே நுழைந்தான். அவனோடு உள்ளே நுழையாமல், வெளியே தயங்கி நின்று கொண்டிருந்த அந்த இளம்பெண்தான் அவனது மனைவியாக இருக்க வேண்டும் என்று யூகித்தாள் மைதிலி.
'உள்ளே வாங்க' என்று இருவருக்கும் பொதுவாகச் சொன்னவுடன் இருவரும் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தனர். அந்த அறையின் சூழ்நிலை அந்தப் பெண்ணுக்குப் புதிதாக இருந்திருக்க வேண்டும். நான்கு பேர் அமரும் வகையில் அவள் முன் போடப்பட்டிருந்த நான்கு நாற்காலிகளில், இடையில் இரண்டு நாற்காலிகளை காலியாக விட்டுவிட்டு, இடது கோடியில் ஒருவரும் வலது கோடியில் ஒருவர் அமர்ந்ததும், மைதிலி மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.
இருவரின் முகத்திலும் வெறுப்பும், கோபமும் மண்டிக் கிடந்தது பார்க்கும்போதே வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணின் படபடப்பைப் போக்குவதற்காக மென்மையான குரலில் கேட்டாள் மைதிலி,
'உங்க பெயர் என்னம்மா?'
'யாழினி மேடம்.'
உருவத்தைப் போலவே அந்தப் பெண்ணின் குரலும் வசீகரமாகவே இருந்தது. 'இனியும் காலம் தாழ்த்தக் கூடாது' என்று நினைத்த மைதிலி கேட்டாள்,
'சொல்லுங்க யாழினி. எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறீங்க?' என்று முந்திக்கொண்டு ஏதோ சொல்ல முயன்ற குமரேசனை சைகையால் அடக்கிவிட்டு மீண்டும் கேட்டாள், 'தயங்காம சொல்லுங்க.. பயப்படவேண்டாம்.'
'எனக்கு விவாகரத்து வேண்டும்' என்ற யாழினியின் குரலில் உறுதியும், மிதமிஞ்சிய கசப்பும் தெறித்தது.
குமரேசனிடம் தன் பார்வையைத் திருப்பிக் கேட்டாள் மைதிலி,
'இப்ப சொல்லுங்க மிஸ்டர் குமரேசன், என்ன சொல்ல வந்தீங்க?'
'எனக்கும் விவாகரத்து வேணுங்க மேடம்.'
'இரண்டு பேரும் முழு மனதோடு சம்மதித்து மனுவைச் செய்தால் விவாகரத்து எளிது. ஒரு வருடம் பிரிந்திருந்தால் போதும். ஆனா அதுக்கு முன்னாடி உங்க கல்யாணம் நடந்தது எப்படி? காதல் கல்யாணமா அல்லது பெற்றோர்கள் பார்த்துச் செய்த வைத்த கல்யாணமா? எப்போது நடந்தது என்ற விவரங்களைச் சொல்ல முடியுமா?' என்று குமரேசனிடம் கேட்டாள் மைதிலி.
'பெற்றோர்களால் ஜாதகப் பொருத்தம் பார்த்து, முறையாகச் செய்து வைக்கப்பட்ட கல்யாணம்தான் மேடம். கல்யாணமாகி ஐந்து வருடங்கள் ஆயிற்று. குழந்தை இல்லை' என்ற அவன் குரலில் பெரும் குறை இருந்தது.
'டாக்டரிடம் காண்பித்தீர்களா?' என்றாள் மைதிலி.
' இரண்டு முறை கருத்தறித்து அபார்ஷன் ஆகிவிட்டது மேடம். இப்ப எங்க பிரச்னையே என் மாமியார்தான். குழந்தை இல்லாததற்குக் காரணம் நான்தான் என்பதுபோல வார்த்தைகளால் தினமும் சுட்டு எடுக்கறாங்க? இவரும் அம்மாவுக்கு ஜால்ரா போட்டு, ஏதாவது காரணங்களை உருவாக்கி, வார்த்தைகளால் என்னை டார்ச்சர் பண்றார் மேடம். எனக்கு பேங்க் வேலை இருக்குது. எப்படியும் பிழைத்துக் கொள்வேன். இப்படி தினம் மன வேதனையுடன் வாழ்வதைவிட விவாகரத்து பெற்றுக் கொண்டு, மீதி இருக்கும் காலத்தையாவது நிம்மதியாகக் கழிக்கலாம் என்று இருக்கிறேன் மேடம்' என்றாள் யாழினி வேதனையுடன்.
அவள் கண்களின் ஓரத்தில் ஈரம் கசிந்திருந்தது. 'மூன்றாவது மனிதரிடம் தன் குடும்பக் கதையைச் சொல்கிறோமே' என்ற அவமான உணர்வும் அவளிடம் தெரிந்தது.
' அம்மா' என்றவாறே வீட்டின் உள்ளேயிருந்து அலுவலகத்தின் பின்புறக் கதவைத் திறந்து கொண்டு ஆறு அல்லது ஏழு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பள்ளிச் சீருடையில் உள்ளே வந்தாள்.
'கண்மணி ஸ்கூல் கிளம்பியாச்சா?' என்றவாறே அந்தப் பெண்ணை இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் மைதிலி. பெண்ணின் நிறம் கருப்பாக இருந்தாலும், முகம் களையாக இருந்தது. அந்தப் பெண்ணின் கண்ணில் இருந்த ஒளி எல்லோரையும் ஒரு விநாடி சுண்டி இழுப்பதாக இருந்தது.
'சாயங்காலும் ஸ்கூல் விட்டு வந்து, பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு ஹோம்வொர்க் செய்து முடித்துவிடு. அம்மா ஆறு மணிக்கு வந்தவுடன் மாலுக்கு ஷாப்பிங் போகலாம்' என்று கூறியவள், எதிரில் இருந்த இருவரையும் பார்த்து, ' என் மகள் கண்மணி' என்று அறிமுகப் படுத்தினாள்.
'பை அம்மா, பை அங்கிள், பை ஆண்ட்டி' என்று விடை பெற்றுச் சென்ற கண்மணி, 'வெளியே போய் விட்டாள்' என்று உறுதி செய்து கொண்டு மைதிலி சொன்னாள்,
'கண்மணி நான் பெற்ற மகள் அல்ல. நான் தத்து எடுத்து வளர்க்கும் மகள்.'
அதிர்ச்சியுடன் பார்த்த அவர்களிடம் சொன்னாள்,
'கல்யாணம் ஆகி நான்கு வருடங்கள் குழந்தை இல்லை. இருவரும் மருத்துவரிடம் சென்று உடல் பரிசோதனை செய்ததில், குறை என்னிடத்தில்தான் என்று தெரிந்தது.
நான் எவ்வளவோ வற்புறுத்தியும் மறுமணம் செய்து கொள்ள என் கணவர் மறுத்துவிட்டார். இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் தத்துக் குழந்தை. இதுவரை கண்மணிக்கு, தான் ஒரு தத்துக் குழந்தை என்பது தெரியாது. இந்த விஷயத்தில் அவரின் பெற்றோர்களின் பேச்சையோ, என் பெற்றோர்களின் பேச்சையோ, ஊரார், அக்கம் பக்கத்தோரின் பேச்சையோ பெரிது
படுத்தக்கூடாது என்று! அதன்படியே எங்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது' என்று முடித்தாள் மைதிலி.
'அது சரி. இப்ப உங்க பிரச்னைக்கு வருவோம். குழந்தை இல்லை என்பது ஒன்றுதான் உங்க பிரச்னையா? அதுக்காகவா விவாகரத்து கேக்கறீங்க?' என்றாள் மைதிலி.
'அது மட்டும் இல்லைங்க மேடம். தான் சோகமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு எல்லா விதமான கெட்ட பழக்கமும் பழகிக் கொண்டார் இவர். புகை பிடித்தல், மது அருந்துதல் என்று பழகி, இரவு வீட்டுக்கு தள்ளாட்டத்துடன்தான் வருகிறார். அதற்கும் கூட மாமியார் 'துக்கம் தாளாம குடிக்கிறான் எம் பையன்' என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறார்' என்றாள் யாழினி.
' குடிப்பதற்கு இவளும் ஒரு காரணம் மேடம். எப்போதும் வீட்டில் அம்மாவிடம் சண்டை. வாரத்தில் ஐந்து நாள்கள் என்னிடம் பேச மாட்டாள். அவங்க அம்மா வீட்டுக்குப் போனால் வாரக் கணக்கில் தங்கிவிடுவாள். எந்த நேரமும் முகம் கடுகடுப்பாகவே இருந்தால் எப்படி வாழ்வது மேடம்?' என்றான் குமரேசன் தன் பங்குக்கு.
வீட்டு வேலை செய்ய வரும் பொன்னம்மா வீட்டிலிருந்து பின்புறக் கதவு வழியாக அலுவலகத்துக்குள் எட்டிப் பார்த்தார்.
'என்ன பொன்னம்மா?' என்றவுடன்,
'அம்மா, ஊர்ல, நம்ம தோட்டம் குத்தகைக்கு ஓட்டிக்கிட்டு இருக்கற கருப்பசாமியும், அவரு சம்சாரமும் வந்திருக்கிறாங்க. உங்களைப் பார்க்கணுமாம். பாத்துட்டு ஒன்பதரை பஸ்சில உடனே திரும்பணுமாம்' என்றார்.
'அப்படியா? சரி உடனே வரச் சொல்லு' என்ற மைதிலி, 'ஒரு பத்து நிமிடம் அந்த ஸ்க்ரீன் மறைவுக்குப் பின்னால் உட்கார முடியுமா? நீங்க இருப்பது வர்றவங்களுக்குத் தெரிய வேண்டாம். சரியா?' என்றவள் குழப்பத்துடன் பார்த்த இருவரையும் நாற்காலியைப் போட்டு உட்கார வைத்துவிட்டு, தன் இருக்கைக்குத் திரும்பினாள்.
கருப்பசாமியும் அவர் மனைவி ராசாயி அம்மாவும் வீட்டின் உள்ளே இருந்து வந்து பின்புற வழியாக அலுவலகத்துக்குள் நுழைந்தனர். கருப்பசாமி அறுபது வயதை நெருங்கியிருக்கக் கூடும். இன்னும் உழைத்துக் கொண்டிருப்பதால் உடல் முறுக்கேறியிருந்தது. வயதால் கொஞ்சம் தளர்வும் தெரிந்தது. ராசாயி அம்மாவுக்கு அவரைவிட ஒரு ஐந்து வயது குறைவிருக்கலாம்.
அவர்களின் பணிவான வணக்கத்தை ஏற்றுக்கொண்டு உட்காரச் சொன்னாள்.
'காபி குடிச்சீங்களா?'
'அதெல்லாம் ஆச்சுங்க. வந்த உடனே பொன்னம்மா கொடுத்துட்டாங்க. ஐயாவைப் பார்த்தோம். குத்தகைக் காசைக் கொடுத்திட்டோம். உங்களையும் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்' என்றார் கருப்பசாமி.
'சரி.. உட்காருங்க?'
'கருப்பசாமியண்ணா உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருசம் இருக்கும்?'
'அது இருக்கும்மா... ஒரு முப்பது வருசத்துக்கு மேல.. ஏம்மா?'
'இல்லண்ணா.. கல்யாணம் ஆகி இரண்டு வருசம் மூணு வருசத்துக்குள்ள எங்கிட்ட நிறைய பேர் விவாகரத்து கேட்டு வராங்க. முப்பது வருசம் ஒண்ணா வாழ்ந்திருக்கீங்க சண்டையில்லாம.. அதுதான் கேட்டேன்' என்றாள் மைதிலி.
பகபகவென்று சிரித்து விட்டார் ராசாயி அம்மாள்.
'என்ன சண்டையில்லாமலா? நீங்க வேற அம்மா. நாங்க சண்டை போடாத நாளே கிடையாது. இந்த மனுஷன் சின்ன வயசுல எத்தனை குசும்பு பண்ணும் தெரியுமா?' என்றவுடன், ஆவலுடன் 'சொல்லுங்க.. சொல்லுங்க' என்றாள் மைதிலி.
'எங்களுக்குக் கல்யாணம் ஆகி நா இவரு வீட்டுக்குப் போனப்ப ஒரே குடிசை வீட்டுக்குள்தான் நான், இவர், இவர் தம்பி, இவரின் அம்மா, அப்பா எல்லோரும் படுக்க வேண்டும். ஒரு வருஷம் ஆனவுடன் கிழவி. அதுதான் என் மாமியார். குழந்தை இல்லைன்னு பாட்டுப் பாட ஆரம்பிச்சிட்டா. ஒரு நாள் புடுச்சு வாங்கிவிட்டேன் இவரை. ஒரே வீட்டுக்குள் இத்தனை பேர் படுத்திருந்தா எப்படிய்யா குழந்தை பிறக்கும்? உங்கம்மாவுக்கு அறிவே இல்லையான்னு? அடுத்த நாளே மனுஷன் பயந்து போய் தனிக்குடித்தனம் வெச்சுட்டார்' என்று சிரித்தார் ராசாயி அம்மாள்.
மைதிலிக்கும் கூட சிரிப்பு வந்துவிட்டது.
'அப்புறம்?'
'அப்புறம் என்னம்மா? அடுத்த ஐந்து வருஷத்துக்குள்ள மூணு குழந்தைங்க?' என்றாள் ராசாயி.
'குழந்தைங்க பொறந்த பிறகு இந்த மனுஷன் கெட்ட பழக்கம் நிறைய பழகிட்டாரு. என்னேரமும் வெற்றிலை பாக்கு, பீடி, வாரத்தில ரெண்டு மூணு நாளு தண்ணிண்னு ஆரம்பிச்சிட்டார். அதையெல்லாம் நிறுத்த எத்தனை சண்டை போட்டோம் தெரியுமா?' என்றார் ராசாயி அம்மாள்.
'அப்போ மாத்திரம் மாமியார், மருமகள் ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துக்குவாங்க' என்றார் கருப்பசாமி.
'ராசாயியின் மூன்று பிரசவத்துக்கும் அம்மாதான் கிட்ட இருந்து பார்த்துக்கிட்டாங்க. மூன்று புள்ளைங்களையும் நல்லா வளர்த்திக் கொடுத்தாங்க. பதிலுக்கு ஒருமுறை அம்மாவுக்கு அம்மை போட்டு படுத்திருந்தப்ப, இவதான் பத்து நாள் கூட இருந்து பார்த்துக்கிட்டா? வெளியேதான் மாமியா, மருமக சண்டை. உள்ள ரெண்டு பேரும் கொஞ்சிக்குவாங்க?' என்று கிண்டலடித்தார் கருப்பசாமி.
'அம்மாவின் கடைசி காலத்தில் முகம் சுளிக்காமல் கவனித்துக் கரையேற்றி விட்டாள் ராசாயி' என்று கூறி நன்றியுடன் தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தார் கருப்பசாமி.
'ஏம்மா, கெட்ட பழக்கம் நிறைய வெச்சிருந்தார்னு சொன்னீங்ளே, அப்பெல்லாம் இவரை விட்டுட்டுப் போயிடலாம்னு தோணலயா உங்களுக்கு?' என்று ராசாயியை நோக்கிக் கேட்டாள் மைதிலி.
'இல்லைம்மா.. காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து, குடும்பத்தை நடத்தி, குழந்தைகளைப் படிக்க வைக்க இந்த மனுஷன் பட்ட கஷ்டத்தைக் கிட்ட இருந்து பார்த்தவள் நான். என்னையும் விட்டுக் கொடுக்காமல், அம்மாவின் மனசும் நோகாமல், இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரி தவித்தவர். உங்கள மாதிரி டவுனில் இருக்கறவங்க சினிமா, ஹோட்டல், ஜவுளிக்கடை என்று அனுபவிப்பீங்க? இவரோ காடு, தோட்டம், குடும்பம், ஆடு, மாடு என்று சாகும்வரை உழல்பவர். இவருக்கென்று இருக்கும் சுகங்கள் வெற்றிலை பாக்கு, பீடி, தண்ணிதான். உடம்பு கெட்டுப் போகக் கூடாது என்றுதான் கண்டிப்பேன். இப்பக்கூட பாருங்க வீட்ல எப்பவும் ஒரு பாட்டில் வெச்சிருப்பார். அதிக வேலை இருக்கும் நாள்களில் கொஞ்சம் குடிப்பார். நான் ஒண்ணும் சொல்றதில்ல. பிள்ளைகள் மூணும் எங்கெங்கோ தூரத்தில் வேலையில் இருக்கறாங்க? அவங்களை நாங்க நம்பறதில்ல. நாங்க உழைச்சு, அந்த உழைப்பில் நாங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். ஒரே ஒரு வேண்டுதல்தான். எனக்கு முன்னாடி இவரு போயிடணும். ஏன்னா மற்றவங்க கிட்ட சோறு வாங்கித் தின்னும் நிலைமைக்கு இவரை விட்டுட்டு நான் முந்திக்கக் கூடாது' என்று முடிக்கும்போது கருப்புசாமியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
'அப்புறம்மா.. நீங்க கேட்டீங்கள்ள 'இவரை விட்டுட்டு போகத் தோணலியா' அப்படின்னு? ஒண்ணு பிடிக்கலேன்னா வேறொண்ணு எடுக்கற துணிக்கடையோ இல்லை; காய்கறிக் கடையோ இல்லம்மா வாழ்க்கை. நல்லது, கெட்டது, மேடு, பள்ளம் எல்லாமும் கலந்திருக்கும். அதுக்காக எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டு அடிமை வாழ்வு வாழ வேணும்ணு நா சொல்லலை. சின்ன சின்னக் குறைகளைப் பொறுத்துக் கொள்ளலாம். குறட்டை விட்டா விவாகரத்துக்கு எதுக்குப் போகணும்? வேற ரூம்ல போய் படுத்துக்க வேண்டியதுதானே? வாழ்க்கைன்னா ஆயிரம் இருக்கும்மா. விட்டுக் கொடுத்துப் பிடிக்கும் குணம் ரெண்டு பேருக்கும் வேணும். இப்ப நீங்க இங்க இருக்கும்போது உங்க வீட்டு ஐயா வீட்டு வேலை செய்யலயா? அப்படி' என்றார் ராசாயி அம்மாள்.
ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு மௌனமாக எழுந்து நின்றனர் இருவரும். கை கூப்பி வணங்கி விட்டு விடை பெற்றனர். அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர் என்பதை உறுதி செய்து கொண்டு ஸ்க்ரீன் மறைவிலிருந்து வெளியே வந்தனர் குமரேசனும், யாழினியும்!
இப்போது அடுத்தடுத்த நாற்காலிகளில் அருகருகில் அமர்ந்தனர் இருவரும். அவர்களின் முகங்களில் முன்பிருந்த கோபமும், எரிச்சலும் மாறி இப்போது தீவிர சிந்தனை குடிகொண்டிருந்தது. மைதிலி ஒரு காகிதத்தில் முகவரி எழுதி அவர்களிடம் நீட்டிக் கொண்டே, ' குட். தேவைப்பட்ட அட்வைஸ் கிடைச்சுட்டது. என் மகள் அறைக்குள் வந்தது தற்செயல். எங்க வீட்டுத் தோட்டத்தைக் குத்தகை எடுத்த ராசாயி அம்மாளும், அவரோட வீட்டுக்காரரும் வந்தது தற்செயல். அவர்களது பிரச்னைகள் அவர்களுடையது. வாழ்க்கைன்னா ஆயிரம் பிரச்னைகள் இருக்கும். இதைச் சொல்லாமலே சொல்லி சென்றுவிட்டனர். இந்த முகவரியில் சென்று பாருங்கள். என் நெருங்கிய தோழி. கைனகாலஜிஸ்ட்.. கை ராசிக்காரி.. இவளிடம் சென்றவர்கள் குழந்தையுடன்தான் திரும்புவார்கள். நான் போனில் சொல்லிவிடுகிறேன். உடனே போய்ப் பாருங்கள்' என்றாள்.
'ஃபீஸ்..' என்று பாக்கெட்டில் கை விடப் போன குமரேசனைத் தடுத்தாள் மைதிலி.
'அடுத்த முறை வரும்போது கையில் குழந்தையுடன் வாருங்கள். அதுதான் ஃபீஸ்' என்றாள்.
வணங்கிவிட்டு வெளியே செல்லும் அந்த இருவரின் கைகளும் இணைந்திருப்பதைக் கவனித்தாள் மைதிலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.