முகப்பு
தினமணி கதிர்

ஓவியர் 'மணியம்'  100

அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'  கதாபாத்திரங்கள்,  முக்கியமாக ஐந்தடுக்குக் கொண்டைக்காரி குந்தவை,  ஓடக்காரி பூங்குழலியை அறிந்தவர்கள் இவற்றை உருவாக்கி 'உயிரோடு' உலவவிட்ட கல்கி  ஓவியர்

Updated On : 22 அக்டோபர், 2023 at 4:33 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:42 AM


அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்கள், முக்கியமாக ஐந்தடுக்குக் கொண்டைக்காரி குந்தவை, ஓடக்காரி பூங்குழலியை அறிந்தவர்கள் இவற்றை உருவாக்கி 'உயிரோடு' உலவவிட்ட கல்கி ஓவியர் மணியம் இருவரையும் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள். இது 'மணியம்' நூற்றாண்டு (19242024).
அன்றைய 'சென்னை ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்' மாணவர் தண்டரை உமாபதி சுப்பிரமணியனைப் பார்த்த மாத்திரத்திலேயே எடை போட்டுத் தாம் புதிதாகத் தொடங்கியிருந்த 'கல்கி' வார இதழில் உடனடியாக வேலைக்குச் சேர்த்துகொண்டார் கல்கி.
1941இல் ஓவிய 'டிப்ளமோ' படிப்பு அப்படியே பாதியில் நிற்க வேண்டி வந்தது. படிப்பு பாதி இருக்கிறதே என்கிற தயக்கம் அவருக்கு.
'என்ன பெரிய கோர்ஸ்.. அங்கே சொல்லித் தர்றதைவிட இங்கே இன்னும் நீ நிறையக் கத்துக்கலாம்!' என்றார் கல்கி.
'அந்தக் கணமே மணியம் தம்மைக் கல்கியிடம் முழுசாக ஒப்படைத்துக் கொண்டார்' என்று பதிவு செய்திருக்கிறார் 'கல்கி' ராஜேந்திரன்.
சிவகாமியின் சபதம் தொடரை எழுதிய சமயம் கல்கி'அஜந்தா எல்லோரா' என்று கலைப்பயணம் சென்றபோது ஓவியர் மணியத்தையும் உடன் அழைத்துச் சென்றார்.
அந்தப் பயண அனுபவம் இளைஞர் மணியம் வாழ்வில் ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. அவருடைய முழு ஆற்றலும் மெருகேற அந்தப் பயணம் உதவியது.
தொடர்ந்து அன்றைய இலங்கையின் ஸிகிரியா குகை ஓவியங்கள், பொலனருவா, அனுராதபுரம், மாமல்லபுரம், ஹம்பி, தஞ்சைப் பெரிய கோயில், மதுரை, குற்றாலம் என்று வரிசைகட்டி நின்று மணியம் அவர்களின் தூரிகை நகலெடுப்பதற்காகத் தவமிருந்தன எனலாம்.
கல்கியின் மகத்தான காவியமான பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களை உருவாக்கியபோது, அவருடைய முழு ஆற்றலும் வெளிப்பட்டது. கல்கியின் மறைவுக்குப் பிறகு பத்திரிகையில் இருந்து விலகிக் கொண்டு சுதந்திரமான ஓவியராக நேரம் காலம் பார்க்காமல் உழைத்தார்.
கல்கியின் முதல் வரலாற்று நாவலான 'பார்த்திபன் கனவு' திரைப்படமானபோது அதற்கான கலைவடிவங்களை உருவாக்கும் பணியிலும் பூரணமாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
தம்முடைய பணியில் கடைசி விநாடி வரை கூடத் திருப்தி அடைய மாட்டார். பத்திரிகை அலுவலகத்திலிருந்து வரும் உதவி ஆசிரியர்கள் 'போதும்பா..' என்று சொல்லி ஏறக்குறையப் பறித்துப் செல்கிறவரை வரைந்து முடித்த படத்தை வைத்து
கொண்டு யோசிப்பாராம் மணியம். முழுமையில் அத்தனை நம்பிக்கை அவருக்கு.
இந்த நூற்றாண்டு விழாவை ஒட்டி மணியத்தின் கலைவாழ்க்கை அனுபவங்களை நினைவுகூர்ந்து அவருடைய ஒரு குமாரர் மணியம் செல்வன் உருவாக்கியுள்ள வாழ்க்கை வரலாற்று நூலான 'மணியம் 100.. சரித்திரம் படைத்த சித்திரங்கள்' சிறப்பான முறையில் தயாராகி வெளியாகவிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.