இணையும் இறக்கைகள்
சமீபத்தில்தான் நடந்தது போல் மனதில் பசுமையா இருக்கு. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன் ஒருநாள் காலை.
தினமணி கதிர்இணையும் இறக்கைகள்
சமீபத்தில்தான் நடந்தது போல் மனதில் பசுமையா இருக்கு. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன் ஒருநாள் காலை.
சமீபத்தில்தான் நடந்தது போல் மனதில் பசுமையா இருக்கு. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன் ஒருநாள் காலை. நண்பன் நடேசனும் நானும் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி நடை போய்க் கொண்டிருந்தோம் . நடேசன் வருத்தத்தோடு சொன்னான்.
'நேத்து மதியம், நாங்க ஆசைப்பட்டதுபோல பெண் குழந்தை பிறந்திருக்கு. அச்சு அசலா எங்கம்மா மாதிரி பிறந்திருக்கு. ஆனா கை ரெண்டும் விரலுங்க இல்லாம சூம்பி இருக்கு . காலுக ரெண்டும் விரல்களோட நல்லா இருக்கு . பிறந்தக் குழந்தையை நினைச்சு சந்தோஷப்படவும் முடியலை. சங்கடப்படவும் முடியலை' என்றான் நடேசன்.
என் உள்ளங்கைகளைப் பற்றிய அவனது கண்களில் நீர் ததும்பியது. அவனை அணைத்து அழைத்துச் சென்று மலைக்கோயிலுக்குச் செல்லும் படிகளுக்கு எதிரே மரத்தடி கல் பலகையில் உட்கார்த்தினேன் .
அவனது உள்ளங்கைகளைப் பற்றி இதம் சேர்த்தபடி , 'இயற்கை விநோதமானது. ஒரு உறுப்பு முடங்கினால், பிற உறுப்புகள் பலமடங்கு பலமாயிருந்து குறையை சரி செய்யும். சவலை பாய்ந்த நோஞ்சான் பிள்ளையை தாய் தனிக்கவனம் எடுத்து கவனிக்கிற மாதிரிதான் இயற்கையும் செயல்படுது. உதாரணமாக எனக்குத் தெரிந்த பேச இயலாதவர், கண் பார்வைக் குறைந்தவர் அசாதாரணத் திறமைகளோடு இருக்கின்றனர்' என்று கூறி வாழ்க்கையை ஜெயித்த நிகழ்வுகளைச் சொன்னேன்.
'ஆறுதலுக்காகச் சொல்கிறேனோ?' என்று அவன் என் கண்களை ஊடுருவினான். அப்போது நாங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி ரோட்டுக்குக் கீழே ஒரு நாய், உடைபடாத தேங்காய் ஒன்றின் குடுமியை வாயால் கவ்வி சாலையைக் கடந்து மலைக் கோயிலுக்குச் செல்லும் படிகளில் தேங்காயை இழுத்தபடி ஏறியது .
'ஏய் அங்க பார்றா. யாரோ சிதறுகாய் போட்டப்ப உடையாத தேங்காயை நாய் இழுத்துக்கிட்டு படியில் ஏறுது' என்று”
கிசுகிசுத்தேன். நாங்கள் இருவரும் நாயைக் கவனித்தோம் . நாய் இடது முன்னங்காலை ஊன்றி ,வாயில் கவ்விய தேங்காய்க் குடுமி நழுவி விழுந்திறாமல் வலது முன்னங்காலால் அணைத்து மெல்ல மெல்ல படியேறியது .
நாங்க ரெண்டு பேரும் வாய் பிளந்து பார்த்துகொண்டிருந்தோம். மேலே கடைசிப்படி ஏறியதும் நாய் இரு முன்னங்கால்களால் தேங்காயை அணைத்துப் பிடித்தபடி, நாக்கைத் தொங்கவிட்டு இளைப்பாறியது . நாங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து பார்க்கும்போது நாய் உயர்ந்தும், நாங்கள் சிறுத்தும் உணர்ந்தோம்.
பத்து நிமிடங்கள் கடந்து இருக்கும். நாய் கீழே பார்த்தது. ஆள் நடமாட்டம் இல்லை என்று உணர்ந்து கால்களில் பிடித்திருந்த தேங்காயைக் கீழே படியில் உருட்டியது. உருளும் தேங்காய் படிகளின் விளிம்புகளில் பட்டுப் பட்டு தெறித்து குதித்து குதித்து ஓடி வந்தது. நாயும் பின் தொடர்ந்தது. கீழே கடைசிப் படியில் தேங்காய் விழுந்ததும் தேங்காய் இரண்டாக உடைந்திருந்தது . நாய் கடைசிப் படியில் குதித்து ஒரு மூடியைக் கவ்வி அருகே ஒரு கல் சந்துக்கு இடையில் ஒளித்து வைத்தது. இன்னொரு மூடியைக் கால்களால் கவ்வி ,தேங்காயை பல்லால் கரம்பிக் கரம்பித் தின்னத் தொடங்கியது . நாங்கள் அரவமில்லாமல் எழுந்து நடந்தோம் .
' நடேசா. அந்த நாயைக் கவனிச்சியா,
நாய்க்கு கிடைச்ச தெங்கம்பழங்கிற பழமொழியையே மாத்தியிருச்சு. மனுஷன் நாம முயற்சி பண்ணி வளர்க்குற முறையில் குழந்தையை வளர்த்தோமுன்னா கையில்லா குறையை வெல்லலாமே!' என்றவுடன் அவன் என்னைக் கட்டித் தழுவிக்
கண்ணீர் பெருக்கினான் .
எனது மற்றொரு நண்பன் ஓவியர் வெண்புறாவிடம் இந்த நாயைப் பற்றிக் கூறி, இதை ஓவியமாக வரைந்து தரச் சொன்னேன். தேங்காய்க் குடுமியை நாய் வாயில் கவ்வி இடது முன்னங்கால் ஊன்றி, வலது முன்னங்கால் அணைப்பில் படிகளில் ஏறுவது, மேல் படியில் முன்னங்கால்களால் தேங்காயைப் பிடித்து நின்றபடி, நாக்கைத் தொங்கவிட்டு இளைப்பாறுவது, உருட்டி விடப்பட்டத் தேங்காய் படிக்கட்டு விளிம்புகளில் தெறித்து உருண்டு கீழ்நோக்கி வருவதை நாய் பின்தொடருவது, கீழ்ப்படியில் உடைந்து விழுந்த தேங்காய் மூடியை நாய்க் கவ்வி கரம்பித் தின்பது என்று நான்கு படங்களை தத்ரூபமாக வரைந்திருந்தார்.
இந்த நான்கு படங்களை இணைத்து ஒரே சட்டகத்தில் வருமாறு கண்ணாடி பிரேமிட்டு , குழந்தைக்கு வேண்டிய பேபி செட்ஆடை பரிசோடு நானும் எனது மனைவியும் சென்று குழந்தையைப் பார்த்து கொஞ்சிப் பரிசாகக் கொடுத்தோம். நடேசனும், மனைவியும் இந்தப் படம் சொல்லும் கருத்தை உணர்ந்து நெகிழ்ந்தனர்.
அருள்மொழி என்று பெயரிட்ட அந்தக் குழந்தை மூன்று வயதிலிருந்தே தனித் திறமைகளைக் காட்டியது. காதால் கேட்பதை அப்படியே ஏற்ற இறக்கங்களோடுத் திருப்பிச் சொல்லும். கண்ணில் கண்டதை இடது காலால் சிலேட்டை நகர விடாமல் வாகாகப் பற்றிக் கொண்டு , வலது கால் கட்டை விரல் அடுத்த விரலுக்கு இடையில் சிலேட்டுக் குச்சியை பற்றிக் கொண்டு வரைந்து காட்டும். அந்தக் குழந்தையை முதலில் இளக்காரமாகப் பார்த்தவர்கள் , 'அதிசயக் குழந்தை' என்று அண்ணம் பாரித்தனர். இரண்டு ஆண்டுகள் வீட்டிலே தனி ஆசிரியையை அமர்த்தி தமிழிலும் ஆங்கிலத்திலும் எண்ணும்,எழுத்தும் கற்றுக் கொடுத்தனர். கால் விரலால் எழுதினாலும் ஒவ்வொரு எழுத்தும் பிசிறில்லாமல் , அச்சு கோர்த்தது கணக்கா இருக்கும். குளித்தல், கழித்தல், அணிதல்.. என எல்லாம் தானாகச் செய்யக் கற்றுத் தந்தனர். உண்ணும்போது ஸ்பூனை இரு கரங்களில் பற்றித் தின்றாள்.
ஐந்து வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தனர். ஒவ்வொரு நாளும் பாராட்டுகளோடு வந்தாள். சக சிறுமிகளும் கூட அருள்மொழியோடு அசூயை இல்லாமல் பழகத் தொடங்கினர். இவள் பிறந்தவுடன் நடேசனது சிறிய ரெடிமேட்துணிக்கடை, பெரிய ஷோரூம் கடையாக வளர்ந்தது . நடேசனுக்கு பொருளாதார நெருக்கடி இல்லை. இவள் பேச்சு, பாட்டு, கவிதைப் போட்டிகளில் முதன்மையாக வந்தாள்.
நகரில் உள்ள பல சங்கங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு விருதுகளையும், கல்வி உதவித் தொகைகளையும் வழங்கின. உலக அறிவு தெரிய தொடங்கிய தருணத்திலிருந்து , அந்த நாய் ஓவியம் அருள்மொழியை வெகுவாக ஈர்த்து. உத்வேகமூட்டியது. உற்சாகப்படுத்தியது. ஒருவகையில் வழிகாட்டி இவளுக்கு தன்னம்பிக்கையைத் தூண்டியது. இதன் விளைவுதான்தான் பங்கேற்பதில் எல்லாம் முதன்மையைக் கனிவித்தது.
அருள்மொழி வளர வளர , அவரது பெற்றோருக்குள் ஒரு கவலையும் வளர்ந்தது. பூப்பெய்திய நாளிலிருந்து பெண்களுக்கான இயற்கை வாதையை எதிர்கொள்ள அம்மா, தோழியாக இருந்து பயிற்றுவித்தாள். 'இவளுக்கு வேலை, கல்யாண வாழ்க்கை எப்படி அமையுமோ?' என்ற கவலை பெற்றோரைக் குடைந்து கொண்டிருந்தது. கல்லூரியில் பி.காம். படிக்கும் வரை கால்களால் எழுதினாள். வேலைக்குப் போக வேண்டிய சூழலில் அலுவலகத்தில் காலால் எழுதுவதற்கான சூழல் அமையாமல் வேலைவாய்ப்பு நழுவிப் போகலாம் . இவர்களது குடும்ப மருத்துவர் யோசனையில் சூம்பிய கைகளில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ரப்பர் கையுறைகளைப் பொருத்தி , அதன் மூலம் செயற்கை விரல் உதவியால் வீட்டிலே எழுதப் பயிற்சி செய்து
வந்தாள்.
பி.காம். முடித்தவுடன் அரசின் குடிமைத் தேர்வுப் பயிற்சி வகிப்பில் சேர்ந்து பயின்றாள். அந்த ஆண்டு அரசு அறிவித்த 'குரூப் ஒன்று' தேர்வு முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள் எழுதித் தேர்ச்சி பெற்றாள். தேர்வு முடிவு வெளிவந்தநாளில் அருள்மொழியின் நேர்காணல் அனைத்து ஊடகங்களிலும் வந்தது. முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தினர். இவர்கள் குடியிருக்கும் தெருவே கொண்டாடின. நகரிலுள்ள அனைத்து சேவை நிறுவனங்களும் பாராட்டி விருதுகளை அளித்தன. நண்பன் நடேசன் ஒவ்வொரு விழாவுக்கும் என்னை அழைத்துச் சென்று என்னையும் கெளரவித்தான் .
குறுகிய கால பயிற்சிக்குப் பின்னர் , வருவாய்க் கோட்டாட்சியராக அருள்மொழி பணி நியமனம் பெற்றாள். 'பணியில் சேர்வதற்கு முன் வாழ்த்து பெற வேண்டும்' என்று அருள்மொழி தன் பெற்றோருடன் எனது வீட்டுக்கு வந்திருந்தாள். எனது பிள்ளைகள் இந்த உயரத்தை எட்டாவிட்டாலும் , வீடு தேடி வந்த அருள்மொழியை நானும் எனது மனைவியும் வாழ்த்துவது பெருமிதம் தந்தது.
'மாமா, நீங்களும் அத்தையும் வீட்டுக்கு வாங்க? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!' என்று அருள்மொழி கேட்கவும் அவர்களோடு , நாங்களும் அவளது வீட்டுக்கு காரில் புறப்பட்டோம் .
அருள்மொழியிடம், ' என்னம்மா அவ்வளவு முக்கியமான விஷயம்' என்று கேட்டேன்.
'மாமா , நான் ட்ரெய்னிங் போயிருந்தபோது , அதியமான் என்பவர் ஓய்வு கிடைக்கும்போது பேசுவார். அளவாகப் பேசுவேன். பயிற்சி முடிவதற்கு முதல்நாள் என்னிடம் கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாகச் சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது . சக பயிற்சியாளர் என்ற முறையில்தான் பேசினேன். கண்டதும் காதல் கொள்வதற்கு சர்வ லட்சணங்களும் பொருந்திய பேரழகி இல்லை. எனது உடல் குறைபாடுகளை ஏற்று சகித்து ,வாழ்க்கை நடத்தும் பக்குவம் உங்களுக்கு இருக்கா? நான், திருமண வாழ்க்கை பற்றி எந்த சிந்தனையுமில்லா நிலையில் உங்களது விருப்பத்தை எப்படி ஏற்கமுடியும் என்று மறுத்தேன். அவர் உடனே தனது இடது கால் பூட்ஸை கழட்டி , இடது கால் பேன்ட்டை முழங்கால் வரை உயர்த்தினார். அவரது முழங்காலுக்குக் கீழே கால் பகுதி சூம்பி, விரியாத வாழைப்பூ போலத் தொங்கியது. 'ஆணாகப் பட்ட துயரத்தைவிட , ஒரு பெண்ணாக நீ பட்டிருக்கும் சொல்லவியலா துயரத்தை டாக்டருக்கு படித்தவன் என்னால் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடியும். எனது துன்பங்களை, உணர்வுகளை உன்னாலும் புரிந்துகொள்ள முடியும். ஒருத்தருக்கொருத்தர் புரிதலோடும், பரிவோடும் வாழ்க்கையை நடத்தமுடியும் என்ற எண்ணத்தில்தான் உன்னை கைப்பிடிக்க விரும்புறேன். இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களை டாக்டராக உதவுவதைவிட மருத்துவ அறிவுள்ள அதிகாரியாக இருந்தால் அதிகாரத்தைக் கொண்டு கூடுதலாக உதவமுடியும் என்றுதான்
'குரூப் ஒன்று தேர்வு' எழுதினேன். இதே முயற்சியைக் கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வாகி இருக்கலாம். அதில் தமிழ்நாட்டில் வேலைபார்க்கும் வாய்ப்பு குறைவு. அதனால்தான் 'குரூப் ஒன்றுதேர்வு' எழுதினேன் . உன்னையும் கண்டேன் . நாம் இருவரும் மணந்து கொண்டால் நாளைக்கு நீயும் என்னைப்போல கலெக்டராகி பலருக்கு உதவலாம் என்ற ஆசையாலும் ,என் விருப்பத்தை தெரிவிக்கிறேன்' என்று
கண்ணீர்ப் பொங்கப் பேசினார். அதியமான் முகத்தை ஊடுருவியதில் அவரது பேச்சில் உண்மை தெரிந்தது. எனக்கு திருமணம் பற்றிய எந்த யோசனையும் இல்லை. உங்க பெற்றோரோடு வந்து ,எங்க அம்மா அப்பாவிடம் பேசுங்கள் என்றேன். அவரது அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாம் . அவர்கள் இன்று மாலை நான்கு மணிக்கு நம் வீட்டுக்கு வருகிறார்கள் .
அவர்களிடம் கலந்து பேசவும் முடிவெடுக்கத்தான் உங்களை அழைச்சுட்டுப் போறோம் மாமா' என்றாள் அருள்மொழி இடைவெளிவிடாமல்!
வீடு நெருங்கியது . ஜன்னல் கதவைத் திறந்தேன். மாலை நேர இயற்கைக் காற்று இதமாக வீசியது .