அழகான மஞ்சள் நிறப் பூக்கள், கறுப்பான நிறத்தில் நீண்ட பெரிய காய்கள், வெளிர்நிறத்தில் ரம்மியமான இலைகள் என்று பார்ப்பதற்கு மிக அழகான சரக்கொன்றை மரங்கள் என் அலுவலகத்தின் வெளிப்பகுதிகளை பிறர் நின்று பார்த்து ரசிக்கும்படி உள்ளன. இம்மரத்தின் மருத்துவக் குணத்தின் என்ன?
ரம்யா, சென்னை.
நீங்கள் குறிப்பிடுவதுபோல, மிகவும் ரம்மியமான மரம்தான் சரக்கொன்றை! கிராமப்புறங்களில் இதன் இலையைத் துவையல் செய்து அன்னத்துடன் சேர்த்து சாப்பிடுவர். வேக வைத்துக் கடைந்து கீரைபோல உண்ணலாம். மலத்தை இளக்கி வெளியேற்றும் குடலிலுள்ள குருமிகள் நீங்கும்.
முருங்கைக் காயைவிட பெரிய அளவில் வளரும் இதன் காய் கருப்பான நிறத்தில் இருக்கும். அதை உடைத்தால் உள்ளே இருக்கும் பழச்சதை புளிபோல் பயன்படக் கூடியது. இதை வாயில்போட்டு சப்பிச் சாப்பிட்டால், குடலைச் சுத்தம் செய்து மலத்தை வெளியாக்கும். இதனைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கெட்டியாகும் வரை காய்ச்சி வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும், மெலிந்தவர்களுக்கும், மென்மையான உடல்வாகு உள்ளவர்களுக்கும் மலமிளக்கி பேதியாவதற்குக் கொடுக்கலாம். அதிக அளவில் தெரியாமல் கொடுத்துவிட்டால் வயிற்றுக் கடுப்புடன் வாய்க் குமட்டலும் அதிக நீர்ப் பேதியும் ஏற்படக் கூடும்.
இதன் புளியை புளி, உப்பு, மிளகாய், இஞ்சி ஆகியவற்றுடன் துவையல் அரைத்துச் சாப்பிட எளிதில் மலம் கழியும். வேறு வேதனைகள் எதுவும் இருக்காது. சிறு குழந்தைகளுக்கு இதனைத் தண்ணீரில் கரைத்துப் பற்றிட வயிற்று உப்புசம், கீழ்வாயுவால் வலி, வீக்கம் தணியும். இதன்புளியுடன் சம எடையுள்ள திராட்சை, சோம்புத் தூள், ரோஜா குல்கந்து, கொத்தமல்லி விதைத்தூள் சேர்த்து வைத்துக் கொண்டு வென்னீரில் கரைத்துச் சாப்பிட வயிற்று வலியோ, குமட்டலோ, கடுப்போ, களைப்போ இன்றி மலம் வெளியாகும்.
ரோஜாப் பூவைப் போல, சரக்கொன்றைப் பூவையும் குல்கந்து செய்யலாம். கல்கண்டுத் தூளுடன் இதன் பூவைக் கலந்து வைத்திருந்தால், குல்கந்தாகிவிடும். இதனை இரவு வேளையில் சாப்பிட மலமிளகும். குழந்தைகள், வயதானவர்கள், மென்மையான குடல் உள்ளவர்கள்கூட இதனைத் தொடர்ந்து சாப்பிடலாம். அபாயமற்றது.
சரக்கொன்றை கரப்பான் முதலிய தோல் நோய் உள்ளவர்களுக்குக் கரப்பான் நீரை அகற்ற சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
சிறுநீரில் அதிகம் புரதம் இருந்தால், சிறுநீர் கழிக்கும் இடத்தில் நுரையுடன் காணும். சிவப்பணுக்கள் ரத்தத்தில் குறைந்து சிறுநீரை வடிகட்டும் உட்புறக் குழாய்களின் மந்தத் தன்மையால ஏற்படும் சிறுநீரகச் செயல்பாடுகளின் கோளாறுகளில், சரக்கொன்றைப் பட்டையுடன் உலர்திராட்சை, திரிபலையை இரவு வென்னீரில் ஊற வைக்க வேண்டும். இதனை மறுநாள் காலை வடிக்கட்டிக் குடிப்பதால் சிறுநீரகச் செயல்பாடுகள் சீராகும் என்று ஸþஸ்ருதர் எனும் ஆயுர்வேத முனிவர் குறிப்பிடுகிறார்.
தோல் உபாதைகளைக் குணப்படுத்தும் விதமாக, சரக்கொன்றைப் பட்டையை முக்கிய உள்பொருளாகக் கொண்டு பல ஆயுர்வேதக் கஷாய மருந்துகள், அரிஷ்டம் போன்றவை விற்பனையில் உள்ளன.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.