'ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு எப்போதோ கிடைக்க வேண்டிய பதக்கம், இப்போதுதான் கிடைத்துள்ளது. அதற்கு நான் ஒரு கருவியாக அமைந்துள்ளேன். பதக்கம் கிடைக்க ராணா தந்த பயிற்சியே காரணம். முழு ஆற்றலுடன் போராடினேன். இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வெல்ல முடிந்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அடுத்த முறை வெள்ளி அல்லது தங்கப் பதக்கத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர்விட்டுள்ளது. இந்த ஒலிம்பிக்ஸில் அதிகமான பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது' என்கிறார் மனு பாக்கர்.
ஒலிம்பிக்ஸில் போட்டியில், 'முதல் பதக்கம் பெற்ற இந்தியர்; முதல் பெண் வீராங்கனை' என்ற பெருமையை மனு பாக்கர் பதிவு செய்திருப்பதோடு, ஒரு ஒலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர்/வீராங்கனை என்ற சாதனையையும் பெற்றிருக்கிறார்.
2023இல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலிருந்து விலக நினைத்தவருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புதான்.
ஹரியாணா மாநிலத்துக்கு உள்பட்ட ஜஜ்ஜரில் பிறந்தவர் மனு பாக்கர். பள்ளியிலேயே டென்னிஸ், ஸ்கேட்டிங், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் பயிற்சி பெற்றார். 'தாங் தா' எனப்படும் தற்காப்புக் கலையில் தேசிய அளவில் பதக்கங்களை வென்றார்.
துப்பாக்கிச் சுடுவதில் தனது அதிர்ஷ்டத்தை பரீட்சிக்க பயிற்சியைத் தொடங்கினார். 2017 தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மனு பாக்கர் ஒலிம்பிக்ஸ் வீராங்கனையும் முன்னாள் உலகின் 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான ஹீனா சித்துவை வென்றார். அந்தப் போட்டியில் மனு 9 தங்கப் பதக்கங்களைப் பெற்றிருந்தார்.
10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் சித்துவின் சாதனையை உடைத்து மனு 242.3 புள்ளிகளை ஈட்டினார். பதினாறு வயதில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்ற மனுவுக்கு திருப்புமுனை ஆண்டாக 2018 அமைந்தது.
2018 இல் பெண்களுக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் மனு பாக்கர் 'யூத் ஒலிம்பிக்ஸ்' போட்டியில் தங்கம் வென்றார். மெக்ஸிகோவின் குவாடலஜாராவில் நடைபெற்ற 2018 சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பையில், பெண்களுக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் இரண்டு முறை சாம்பியனான மெக்சிகோவின் அலெஜான்ட்ரா ஜவாலாவை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். மனு பாக்கர் 2019 முனிச் ஐ.எஸ்.எஸ்.எப். உலகக் கோப்பைக்கான போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்ததன் மூலம் ஒலிம்பிக் ஒதுக்கீட்டு இடத்தையும் பிடித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ்ஸில் பங்கேற்ற மனு போட்டியாளர்களின் திறமையை பின்தள்ள முடியவில்லை. வெறுங்கையுடன் கண்களில் கண்ணீருடன் மனு இந்தியா திரும்பினார். இருந்தாலும், மனு 'லிமா'வில் நடந்த பெண்களுக்கான 10 மீ, ஏர் பிஸ்டல் போட்டியில் ஜூனியர் உலக சாம்பியனாகவே தேர்தெடுக்கப்பட்டார். 2022 கெய்ரோ உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 2023இல் மனு பாக்கர் தொடர் பயிற்சியில் ஈடுபட்டதால் சலிப்பும் அலுப்பும் அவரைத் தொத்திக் கொண்டன.
பதினான்கு வயதில் கைத்துப்பாக்கியை ஏந்தத் தூண்டிய ஆர்வத் தீப்பொறி தன்னுள் அணைந்து போனதை மனு உணர்ந்தார்.
'ஒலிம்பிக்ஸ்ஸில் பதக்கம் பெறுவது அத்தனை எளிதல்ல' என்று தெரிந்ததும், துப்பாக்கியில் குறி நோக்கி சுடுவதிலிருந்து விலகி வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க விரும்பினார். ஆனால் தனது முன்னாள் பயிற்சியாளரான ஜஸ்பால் ராணாவை மனு தொடர்பு கொண்டு 'உங்களிடம் பயிற்சி பெற விரும்புகிறேன்' என்று கேட்டார். ராணாவும் மனுவுடன் இருந்த கசப்பான அனுபவங்களை மறந்து, பயிற்சியை அளித்தார். 2023இல் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார் மனு.
2024 ஒலிம்பிக்ஸ்ஸில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 221.7 என்ற புள்ளிகளை ஈட்டச் செய்து வெண்கலப் பதக்கத்தை மனுவுக்கு பெற்றுத் தந்தார்.
ஜூலை 28இல் இந்திய தேசியக் கோடி ஒலிம்பிக்ஸ் அரங்கில் உயர, பின்னணியில் தேசிய கீதம் ஒலிக்க, கழுத்தில் வெண்கலப் பதக்கத்துடன் கைகளில் தேசியக் கொடியை ஏந்தி நின்றார் சாதனை மகள் மனு பாக்கர். இதுஒருபுறமிருக்க, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர்' பிரிவில், ஜூலை 30இல் நடைபெற்ற போட்டியில் மனு பாக்கர் சரப்ஜோத் சிங் ஜோடி கொரிய அணியை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது. மனு பாக்கர் பயிற்சிச் செலவுக்கு மத்திய அரசு 2 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.