முகப்பு
தினமணி கதிர்

தியாக உள்ளங்கள்

'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று கைப்பேசியில் அலாரம் இசைத்தது.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 6:30 PM
சித்தரிக்கப்பட்டது
பகிர்:

- விஜி சம்பத்

'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று கைப்பேசியில் அலாரம் இசைத்தது. படுக்கையிலிருந்து எழுந்த அமிர்தமோ, அருகே படுத்து உறங்கும் ஆனந்தியின் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்தாள். அவள் முகத்தில்தான் எத்தனை செளந்தர்யம்!

'அழகு இருந்தென்ன? பெயரில் இருந்த ஆனந்தம் அவள் வாழ்க்கையில் இல்லையே! இன்றைக்காவது அவள் வாழ்க்கைக்கு ஒரு விடிவுகாலம் வருமா?' என்று அமிர்தத்தின் மனம் ஏங்கியது.

'ம்ம்..பிள்ளையாரப்பா.. இன்னைக்காவது நீ மனசு வெச்சு ஆனந்திக்கு நல்ல ஒரு வழியைக் காட்டணும். உனக்கு நூறு ஈடுதேங்காய் போடறேன்' என்று மனசுக்குள் பிள்ளையாருக்கு வேண்டுதல் வைத்தவள், அவளுக்கென்று வரிசை கட்டி காத்திருக்கும் வேலைகள் நினைவுக்கு வரப் பரபரவென்று படுக்கையை விட்டு எழுந்தாள்.

அவசரமாகக் குளித்து முடித்து, அவர்கள் தெருவில் அமைந்திருந்த பிள்ளையார் கோயிலுக்கு வந்தவள் பிரார்த்தனை செய்தபடியே தோப்புக்கரணம் போட பிள்ளையாரின் சிரசில் இருந்து விழுந்தது ஒரு செம்பருத்திப் பூ . பயபக்தியுடன் அந்தப் பூவை எடுத்து வந்து பூஜை அலமாரியில் வைத்தவளின் மனசு பாரம் குறைந்து லேசானது போலிருந்தது.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஆனந்தியை அலங்கரிக்க ஆரம்பித்தாள். ஆனந்தியைப் பெண் பார்க்க வருகிறார்கள். இந்த இடம் நான்காவது. இதற்கு முன் வந்த மூன்று வரன்களிடமும் ஆனந்தியைத் தனியாகப் பேசவிட்டதுதான் தவறு. அழகுச் சிலையாக வந்து நிற்கும் ஆனந்தியைப் பார்த்ததுமே சொக்கிப் போகும் மாப்பிள்ளைகள், அவளிடம் தனியாகப் பேசி விட்டு வந்ததும், தலையைத் தொங்க போட்டபடி போய் விடுகிறார்கள். இந்த முறை இவளை மாப்பிள்ளையுடன் தனியாகப் பேச அனுமதிக்கக் கூடாது உறுதியுடன் இருந்தாள் அமிர்தம். அவள் 'மைண்ட் வாய்ஸ்' புரிந்தது போல ஆனந்தியும் உம்மென்றே இருந்தாள்.

'எப்படியாவது இந்த வரனை முடித்தேயாக வேண்டும்' என அமிர்தமும், 'தன்னுடைய நிபந்தனைக்கு மாப்பிள்ளை தலையாட்ட வேண்டும்' என ஆனந்தியும் பிள்ளையாருக்கு தேங்காய்,மோதகம் என்று ஆசை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

பதுமை போல வந்து வணக்கம் சொன்ன ஆனந்தியை எல்லோருக்கும் மிகவும் பிடித்து விட, மாப்பிள்ளை இனியவன், தன் தந்தையிடம் ஏதோ கிசுகிசுத்தான்.

அமிர்தத்துக்கு வயிற்றுக்குள் புளியைக் கரைத்தது. 'மாப்பிள்ளை என்ன நிபந்தனையைப் போடப் போறாரோ தெரியலையே. பேருக்கேத்தபடி இன்

முகத்தோட இருக்காருன்னு சந்தோஷப்பட்டோமே! நம்ப சந்தோஷத்துக்குத்தான் எப்பவுமே அல்பாயுசு ஆச்சே..! இப்ப மட்டும் என்ன புதுசா அற்புதமா நடந்துரப் போகுது? ஒருவேளை ஆனந்தியைப் பத்தி இந்த ஊர்க்காரங்க இல்லாததும் பொல்லாததும் பேசறது இவங்க காதுக்கும் போயிருக்குமோ? இல்லை. வரதட்சிணை எதிர்பாக்கிறாங்களோ? இந்த ஓட்டுவில்லை வீட்டையும் தொழுவத்துல கட்டியிருக்கற மாட்டையும் தவிர நம்மகிட்ட வேறென்ன இருக்கு இவங்களுக்குத் தர? பத்தரைமாத்துத் தங்கமாட்டம் ஆனந்திதான் இருக்கா?' என்று அமிர்தத்தின் மனத்திரையில் பலமாகச் சிந்தனை ஓடியது.

'உங்களைப் பத்தியும், ஆனந்தியை பத்தியும் தரகர் விலாவாரியா சொன்னாரு!' என்று இனியவனின் தந்தை சொன்னதும், கடந்த கால நினைவுகள் அவள் மனதில் திரைப்படம் போல ஓடியது.

தீவிர தேச பக்தரான அமிர்தத்தின் அப்பா, தன்னுடைய மகளையும் நாட்டுப்பற்று மிக்கவளாக வளர்த்தார். 'அவளை ஒரு ராணுவ வீரனுக்கே மணம் முடித்து வைக்க வேண்டும்' என்ற லட்சியம் கொண்டிருந்தார். அவர் நம்பிக்கை வீண் போகாது அமிர்தத்தை தற்செயலாக கோயிலில் பார்த்த ராணுவ வீரன் அருணாசலமும் பெண் கேட்டு வர அகமகிழ்ந்து போனார். 'இனி வரும் காலங்களிலும் தன்னுடைய வாரிசுகளும் ராணுவத்தில் சேர வேண்டும்' என்று மகளிடமும்,மருமகனிடமும் உறுதிமொழி வாங்கிக் கொண்ட பின்னரே தன் இறுதி யாத்திரையைத் தொடங்கினார்.

ஆண்டுகள் இரண்டு ஓடியும் அமிர்தத்தின் மணிவயிறு திறக்கவில்லை. பிள்ளை வரம் வேண்டி ஏறாத கோயில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. பேரக் குழந்தையைப் பார்க்க முடியாத சோகத்தில் அமிர்தத்தின் அம்மாவும் கண்ணை மூடினாள்.

அருணாசலத்தின் அக்கா வள்ளியம்மை, உள்ளூரில் வாழ்க்கைப்பட்டவள். தன் நாத்தனாரை தம்பிக்கு கட்டி வைத்து புகுந்த வீட்டிலும், பிறந்த வீட்டிலும் தன் ஆளுமையை செலுத்த நினைத்தவள். அருணாச்சலம் அமிர்தத்தை கல்யாணம் பண்ணிக் கொண்டதில் தன் திட்டம் தவிடுபொடியானதால் மனசுக்குள் அமிர்தத்தின் மீது தீராத வன்மம் வளர்த்துக் கொண்டிருந்தாள்.

நாள் தவறாமல் பிறந்த வீட்டுக்கு வந்து விடுவதோடு பிள்ளையில்லாக் குறையைச் சுட்டிக் காட்டி அமிர்தத்தை வாய்க்கு வந்தபடியெல்லாம் ஏசியும் பேசியும் வந்தாள். அதைக் கண்டும் காணாமலும் வீட்டுப் பெரியவர்களும் இருந்து கொண்டனர். இங்கு நடப்பதையெல்லாம் கணவனுக்குத் தெரிவித்தால் தேசத்தைச் காக்க சென்றிருப்பவனின் மனநிம்மதியும் பறிபோய் விடுமே என்று அமிர்தம் நினைத்ததுதான் தவறாகி விட்டது.

அந்த வருட விடுமுறையில் அருணாசலம் ஊருக்கு வந்து விட்டுத் திரும்ப பணியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் கடந்திருக்கும்.

ஒரு நாள்! எல்லைப் பாதுகாப்புக்காக சென்ற வீரர்கள் சிலர் எதிரிகளின் தாக்குதலில் இறந்து விட்டதாகவும் அதில் அருணாசலமும் ஒருவன் என்ற இடி போன்ற ஒரு செய்தியைத் தாங்கிக் கொண்டு கடிதம் வந்திறங்கியது.

'அமிர்தத்தின் ஜாதகத் தோஷம்தான் அருணாசலத்தை பலி கொண்டு விட்டது. இதற்கு மேலும் அவளை வீட்டில் வைத்திருந்தால் வீட்டிலிருக்கும் மற்றவர்கள் கதி என்ன ஆகுமோ?' என்ற உயிர்ப்பயத்தை எல்லோர் மனதிலும் விதைத்தாள் வள்ளியம்மை. அக்கம்பக்கத்தாரின் அறிவுரைகளைப் புறந்தள்ளி அமிர்தத்தை வீட்டை விட்டே விரட்டினாள்.

உள்ளூரில் இருக்கப் பிடிக்காமல் பக்கத்து கிராமத்தில் இருக்கும் தோழி மரகதத்தைத் தேடி வந்த அமிர்தம், குடிசை வாசலிலேயே மயங்கி விழுந்தாள். பதறிப்போன மரகதமும் அவள் கணவனும் கிராமத்து வைத்தியரை அழைத்து வந்து காட்ட, அவர் அமிர்தம் கருவுற்றிருப்பதாக சொன்னார். சந்தோஷப்படுவதா?, துக்கப்படுவதா? என்று தெரியாமல் சிலை போல் அமர்ந்து விட்டாள் அமிர்தம்.

'என்ன அமிர்தம்.. இப்படி இடிஞ்சு உட்கார்ந்துட்டே.! உம்புருஷனே உனக்கு புள்ளையா பொறப்பாரு பாரேன். உன்னை வீட்டை விட்டுத் துரத்துன உன் நாத்தனார்கிட்ட போய் விஷயத்தை சொல்லி, உன்னை மறுபடியும் வீட்டில சேர்த்துக்க சொல்லி கேட்டுகிட்டு வாரோம்..'

' வேண்டாம் மரகதம். நான் ஒரு தேசபக்தரோட மகள். என் கணவரும் ஒரு ராணுவ வீரர். அவங்களோட மன உறுதியும், தைரியமும் எங்கிட்டயும் இருக்கு. என்னையும், எனக்குப் பொறக்கப் போற குழந்தையயும் காப்பாத்திக்க எனக்குத் தெரியும் யாருடைய உதவியும் தேவையில்லை' என்று திடமாகச் சொல்லி விட்டாள் அமிர்தம்.

அமிர்தத்தின் தைரியத்தையும், மன திடத்தையும் பார்த்துப் பாராட்ட சில நல்ல மனங்கள் இருந்தாலும், 'ஒரு பொம்பள..ஆம்பளை துணையில்லாம என்ன சாதிக்கப் போறா?' என்று அவளுக்குப் பின்னால் புழுதி வாரித் தூற்றவும், இளம் வயதில் விதவையானவளை மடக்கிப் போடவும் ஒரு கூட்டம் காத்திருந்தது.

நடக்குமா அமிர்தத்திடம்? தீவிழிப் பார்வையில் பொசுக்கி விடமாட்டாளா?

அருணாசலமே மறுபிறப்பு எடுத்து வந்தார்போல் பிறந்தான் குமரன். வளர, வளர தாத்தாவைப் போல, தந்தையைப் போல தாய் நாட்டுக்கு சேவை செய்வதே தன் பிறவிப்பயன் என்று இந்திய ராணுவத்துக்குத் தன்னைத் தத்து கொடுத்து விட்டான்.

கடந்த வருடம், விடுமுறையில் ஊருக்கு வந்தவன் பின்னால், பால் வெள்ளையில், மிரண்டு போன மான்குட்டி போல பதுங்கியபடி வந்த அழகிய இளம்பெண்ணைக் கண்டதும் திக்கென்றிருந்தது அமிர்தத்துக்கு! இருந்தாலும் தன் மகன் மீது இருந்த அதீத நம்பிக்கை காரணமாக புன்னகை மாறாத முகத்துடன் அவர்களை வரவேற்றாள்.

'அம்மா இது ஆனந்தி..'

'அப்படியாப்பா..! உள்ள வாம்மா ஆனந்தி..'

'அம்மா..ஆனந்தி!' என்று குமரன் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, 'குமரா ! மொதல்ல குளிச்சிட்டு பலகாரம் சாப்பிடுங்க. அப்புறம் பேசிக்கலாம்' என்றாள் அமிர்தம்.

ஆனந்தியை உள்ளே அழைத்துச் சென்றாள்.

காலைப் பலகாரம் சாப்பிட்டு முடித்து, ஆனந்தியை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு, தாய் அமர்தத்திடம் வந்தான் குமரன்.

'அம்மா..'

'சொல்லுப்பா..?'

'ஆர்மில, என்னோட ரெஜிமென்ட்ல ரகுபதின்னு ஒரு சினேகிதன் இருந்தான்னு சொல்லி இருக்கேன்ல. அவனோட சம்சாரம்தான் இந்த ஆனந்தி. அம்மா, அப்பா இல்லாத பொண்ணு. காஷ்மீருக்கு எங்க ரெஜிமென்ட் போயிருந்தப்ப ஆனந்தியை சில ரௌடிங்ககிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிகிட்டு வந்தவன்,அவளுக்கு பாதுகாப்பு வேணும்கிறதுக்காக எங்க எல்லோர் முன்னாடியும் அவளுக்குத் தாலி கட்டி மனைவியா ஏத்துகிட்டான்.'

'அது சரிப்பா..ஊருக்கு வர்றப்ப ரகுபதியையும் கூட்டிகிட்டு வர்றதுக்கென்ன?'

'என்னம்மா..! நான் சொன்னத நீங்க சரியா கவனிக்கலையா? ரகுபதி இருந்தான்னு சொன்னேனே..! இப்போ அவன் இல்லை.'

'குழப்பாம, தெளிவாச் சொல்லுடா?'

'ஆனந்தியை ரகு கல்யாணம் பண்ணிகிட்டது அவனைப் பெத்தவங்களுக்குப் பிடிக்கலை. இனி நாங்க செத்தாலும் சரி, எங்க மூஞ்சிலயே முழிக்காதேன்னு ரொம்பக் கடுமையா பேசிட்டாங்களாம். ரொம்பவே மனசு தடுமாறிப் போய் என்கிட்ட புலம்பிகிட்டே இருப்பான். நானும் கொஞ்ச நாள் போனா மனசு மாறிடுவாங்கடா? மனசப் போட்டு அலட்டிக்காதனு ஆறுதல் சொல்வேன். ஆனா ரொம்ப மன அழுத்ததிலயே இருந்திருப்பான் போல. போன மாசம் திடீர்னு மாரடைப்பு வந்து இறந்துட்டான்மா?'

'ஐய்யய்யோ ! அப்பறம்..?'

'திரும்பவும் யாரும் இல்லாதவளா ஆகிட்டேன்னு ஆனந்தி கதறி அழுதா. சினேகிதனுக்காக நான் ஏதாச்சும் செஞ்சாகணுமில்லம்மா. நான் இருக்கேன்னு அவளை சமாதானப் படுத்தினேன். இப்போ லீவுல நான் ஊருக்கு வர்றது தெரிஞ்சதும், 'என்னையும் கூட்டிகிட்டுப் போ'ன்னு கையெடுத்துக் கும்பிட்டு அழுதா? எனக்கும் அவளை அப்படியே அங்கயே விட்டு வர்றதுக்கு மனசு ஒப்பலைமா. அதான் இங்க கூட்டிகிட்டு வந்துட்டேன்.'

குமரன் பேசப்பேச மனசு படபடத்தது அமிர்தத்துக்கு.. ? 'அடுத்து என்ன சொல்லப் போகிறானோ?' என்று குமரனின் கண்களையே உற்றுநோக்கினாள்.

'என்னம்மா அப்படிப் பார்க்கறீங்க..? சின்ன வயசுல எனக்கு ஒரு தங்கச்சிப் பாப்பா வேணும்னு நான் அழுது அடம் பிடிச்சப்பல்லாம் நீங்க 'பிள்ளையார்கிட்ட வேண்டிக்கோடா? உனக்கொரு தங்கச்சிப் பாப்பாவை கொண்டு வந்து குடுப்பாருன்னு சொல்லுவீங்க. நானும் பிள்ளையார்ட்ட வேண்டிக்குவேன். கொஞ்சம் பெரியவனா ஆனப்புறம் நீங்க என்னை சமாதானப்படுத்த அப்படி சொல்றீங்கன்னு தெரிஞ்சு வேண்டுறதை நிறுத்திட்டேன். ஆனா பிள்ளையார் என்னைக் கைவிடலைம்மா?'

'என்னடா சொல்றே..எனக்கொண்ணும் வெளங்கலையே..'

சிறுபிள்ளை போலத் தாயின் மடியில் படுத்துக் கொண்டு அவள் விரல்களைப் பிடித்துச் சொடக்கெடுத்தவன், 'ஆமாம்மா..வருஷம் பல கடந்தாலும் எனக்குத் தங்கச்சியா ஆனந்திய அனுப்பி வெச்சிருக்காரே அதைத்தான் சொல்றேன். என்னைப் பார்த்து ஆனந்தி சொன்ன முதல் வார்த்தையே 'பையா'(ன்)னுதான். இந்தில பையான்னா அண்ணனு அர்த்தம்' என்று என்றவனின் கண்கள் மகிழ்ச்சியில் மலர்ந்ததைக் கண்ட அமிர்தத்தின் மனமும் பனி போல குளிர்ந்தது.

'இன்னைலருந்து ஆனந்தி நான் பெறாத மக. அவ இங்க எங்கூடவே இருக்கட்டும்.'

'அம்மா! ஆனந்திகிட்ட பேசி அவளை மறுகல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும். '

கணவனை இழந்து கையறு நிலையில் தவித்த தன்னுடைய கடந்த காலம் நினைவுக்கு வரவே, கலங்கினாள் அமிர்தம்.

'ஆனந்தி சம்மதிப்பாளா?'

'சொல்லும் விதத்துல சொன்னா புரிஞ்சுக்குவாம்மா..? அவளுக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுத்துடணும்.'

'மாப்பிள்ளை அமைஞ்சதும் நான் லீவு

எடுத்துக்கிட்டு வர்றேன். கல்யாணத்தை முடிச்சிரலாம்.'

'என்னப்பா இது.. இந்த ஊர்ல ஆனந்தியோட கலருக்கும் அழகுக்கும் அமைதிக்கும் தக்கன மாப்பிள்ளைக்கு நான் எங்க போவேன்? பேசாம நீ வடநாட்டு மாப்பிள்ளையா பார்த்து அவளுக்கு கட்டி வெச்சிரு..'

'இல்லம்மா! அவளுக்கு நம்மளத் தவிர உறவுன்னு சொல்லிக்க யாருமில்லை. இவள நம்ம கண்பார்வையில் வெச்சுக்கறதுதான் நல்லது. நீங்க நம்ம ஊரு பழக்க வழக்கங்கள், சமையல் எல்லாம் அவளுக்கு சொல்லிக் குடுத்திருங்க. இந்த ஒரு வருஷத்துல ரகு அவளுக்குக் கொஞ்சம் தமிழ் பேச சொல்லிக் குடுத்திருக்கான். நாம பேசறதை புரிஞ்சுக்கிறா?'

குமரன் விடுமுறை முடிந்து கிளம்பி விட்டான்.

ஆனந்தி, குமரனின் புனிதமான அன்பைப் பற்றிப் புரிந்து கொள்ளாத கிராமத்து ஜனங்கள் அவர்களைப் பார்த்து சிரித்தார்கள் கேலியாக? புறம் பேசினார்கள் கிண்டலாக. கதை கட்டி விட்டார்கள். அவதூறாக?

எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கண்டுகொள்ளாத அமிர்தமோ, ஆனந்திக்கு தமிழ் படிக்க, எழுத சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள். பிறர் பேசுவதைப் புரிந்துகொள்ளவும், பதில் சொல்லவும் மொழி அவளுக்குப் பிடிபட்டதும் மறுகல்யாணத்தைப் பற்றி அவளிடம் பேசினாள். ஆனந்தி மறு கல்யாணத்துக்குச் சம்மதித்தால்தான் குமரன் ஊருக்கு வருவான். 'ஆனந்தியின் கல்யாணத்துக்குப் பிறகுதான் குமரனுக்குப் பெண் பார்க்க வேண்டும்' என்று பலவாறாகப் பேசி ஆனந்தியை சம்மதிக்க வைத்தவுடன் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாள்.

ஆனந்தி நம் ஊர் பெண்ணில்லை என்பது தெரிந்ததும் யாரும் பெண் பார்க்கக் கூட வரவில்லை. அப்படியே வந்தாலும் கிராமத்து எல்லையிலேயே அவர்

களைத் திருப்பி அனுப்பியது ஆனந்தியின் மீது காமக்கண் வைத்திருந்த கயவர்கள் கூட்டம்.

வாரம்தோறும் குமரனிடமிருந்து வரும் கடிதத்தில் எல்லாம், 'மாப்பிள்ளை அமைந்ததா?' என்ற கேள்விதான் முதலில் இருக்கும். அவனுக்கு என்ன பதில் எழுதுவது என்பதே அமிர்தத்துக்குப் பெரும்பாடாக இருந்தது. தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தவனிடமிருந்து கடிதம் வருவது நின்று போக, திக்கென்றிருந்தது அமிர்தத்துக்கு..!

ஒரு மாதம் கழித்து வந்த கடிதத்தில், 'எதிரிநாட்டுப் படைகள் பிணைக்கைதிகளாக குமரனோடு சேர்த்து நான்கு வீரர்

களைப் பிடித்துக் கொண்டு போயிருப்பதாகவும் அவர்களைப் பத்திரமாக மீட்கும் பணியில் நம் நாட்டு ராணுவம் ஈடுபட்டிருப்பதாகவும்..பயப்படத் தேவையில்லை' என்று தெரிவித்தது.

விஷயம் தெரிந்து ஆனந்தி கலங்கிப் போனாள். தன்னுடைய துரதிர்ஷ்டம் தான் எல்லோரையும் பாடாய்ப் படுத்துகிறது என்று கதறினாள். தன்னையும் தைரியப்படுத்திக் கொண்டு, ஆனந்தியையும் ஆற்றுப்படுத்தினாள் அமிர்தம்.

வழக்கம்போல தன் மகனுக்காகவும், அவனோடு சேர்த்து , பிணைக்கைதிகளான மற்ற வீரர்களுக்காகவும் தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரிடம் நம்பிக்கையுடன் வேண்டுதல் வைத்து விட்டுத் தன்னுடைய கடமைகளில் கவனத்தைச் செலுத்தினாள்.

ஆனந்திக்கு அக்கம்பக்கத்து கிராமங்களில் மாப்பிள்ளை அமையாமல் போக டவுன் மாப்பிள்ளைகளைக் கூட்டி வந்தார் தரகர். 'இத்தனைக்கும் ஆனந்தியைப் பற்றிய முழு விவரங்களையும் மாப்பிள்ளை வீட்டுக்கு சொல்லி விட வேண்டும்' என்ற குமரனின் பேச்சை மீறாமல், தரகரிடமும் சொல்லி வைத்திருந்தாள் அமிர்தம். அப்படி இருந்தும் வந்த மூன்று சம்மந்தமும் தட்டிப் போக இப்போது வந்திருக்கும் இனியவனாவது சம்மதம் சொல்ல மாட்டானா என்று ஏங்கிப் போன அமிர்தம், நம்பிக்கை இழந்தபடி மாப்பிள்ளையின் அப்பா என்ன சொல்லப் போகிறாரோ எனத் தவிப்பாய் அவர் முகத்தையே பார்த்தாள்.

அவர் தன் தொண்டையைச் செருமியபடி, 'எங்க பையனுக்கு கல்யாணம் பண்ணிக்கறதுல சில கொள்கைகள் இருக்கு! கல்யாணம்னு பண்ணிகிட்டா கணவரை இழந்த ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அதுமட்டுமல்ல வரதட்சிணைனு ஒரு பைசா கூட வாங்கக் கூடாதுன்னு உறுதியோட இருந்தான். அதுல எங்களுக்கும் சம்மதம்தான்.. ! அதுக்கு உங்க சம்பந்தம் ஒத்து வருதுன்னுதான் பொண்ணு பார்க்கவே வந்தோம். உங்க அப்பா ஒரு தேசபக்தர், உங்க கணவரும் ராணுவ வீரரா நம்ம நாட்டு எல்லைப் பாதுகாப்புப் பணியில் இருக்கறப்ப எதிரிப்படைகளால சுடப்பட்டு இறந்துட்டார்ங்கற விஷயத்தை எல்லாம் புரோக்கர் சொன்னாரு. கணவரை இழந்தும் கலங்காம ஒரே மகனை ராணுவத்துக்கு அனுப்பின உங்க மனவுறுதியும், அந்த மகனும் இப்போ எதிரிநாட்டுல சிறை இருக்காருங்கற சோகத்தை வெளியில் காமிச்சுக்காம யார் பெத்த பொண்ணையோ உங்க மகளா ஏத்துகிட்டு, அந்தப் பொண்ணுக்கு மறுமணம் செய்யத் துணிஞ்ச உங்க பாசமான மனசும் எங்களுக்குக் கண்ணீரை வரவழைச்சிருச்சு. ஆனந்தியோட கணவரும் ராணுவ வீரராமே. ? இப்பிடி நாட்டுக்காக உங்க குடும்பத்தையே அர்ப்பணிச்சிருக்கற உங்க தியாக உள்ளத்துக்கு நாங்க தலை வணங்கறோம். உங்க குடும்பத்தோட சம்பந்தம் வெச்சுக்க நாங்க குடுத்து வெச்சிருக்கணும். ஆனா ஒரு நிபந்தனை. ஆனந்திக்கு இனியவனைப் பிடிச்சிருந்தா மட்டும் போதாது. கல்யாணத்துக்கப்புறம் நீங்களும் எங்களோடவே வந்திருங்க? இல்லைன்னா உங்க மகன் திரும்பி வர்ற வரை என் மகன் உங்களோட இதே வீட்ல இருக்கட்டும். நாட்டைக் காக்கும் சேவையில் உங்க மகன் சிறைப்பட்டு இருக்கறப்ப .. அவரோட தாயை கவனிச்சுக்கற ஒரு சின்ன பொறுப்பையாவது எங்களுக்குத் தரலாமே! இதுக்கு உங்களுக்கு சம்மதம்னா அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தை நடத்திடலாம். இது எங்க மகனோட நிபந்தனை' என்றதும் இனியவனின் தாயும் அதையே வழிமொழிந்தார் .

அதுவரை எப்போது மாப்பிள்ளையிடம் தனியாகப் பேசும் தருணம் வாய்க்கும். அவரிடம் நம்ம நிபந்தனையைச் சொல்லலாம்கிற யோசனையிலேயே இருந்த ஆனந்தி மெல்ல வாய் திறந்தாள்.

'இதுக்கு முன்னால வந்த மாப்பிள்ளைங்ககிட்ட கல்யாணத்துக்கு அப்புறம் நாம அம்மா கூடத்தான் இருக்கணும்னு நான் சொன்னதும் தெறிச்சு ஓடிட்டாங்க. ஆனா நீங்க, நான் கேக்காமயே என் மனசைப் புரிஞ்சிகிட்டீங்க. நான் நிராதரவா நின்னப்ப குமரன் அண்ணா எனக்கு ஆதரவா இருந்தார். அண்ணன் திரும்பி வர்றவரை அம்மாவை அண்ணன் ஸ்தானத்துலருந்து பாத்துக்கறது இந்த வீட்டுக்கும், நம்ம நாட்டுக்கும் நான் செய்ய வேண்டிய கடமையில்லையா?' என்று திக்கித் திக்கி கிள்ளைத் தமிழில் பேசிக் கொண்டே குமரனின் அப்பா ஃபோட்டோ முன்னால் போய் நின்று 'ஜெய் ஹிந்த்' என்று சல்யூட் வைத்த ஆனந்தியைப் பெருமிதத்துடன் அணைத்துக் கொண்டாள் அமிர்தம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.