முகப்பு
தினமணி கதிர்

கோலிவுட் ஸ்டூடியோ!

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. கல்கியின் வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 6:30 PM
பகிர்:

'எல்லாப் புகழும் இறைவனுக்கே'

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. கல்கியின் வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் களமிறக்கிருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இரண்டு பாகங்களாக வெளியான இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பட அனுபவங்களை அண்மையில் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டிருந்த பதிவில், 'பொன்னியின் செல்வன்' படத்தின் இசையமைப்புக்கான பணிகள் வெகுமுன்னதாகவே தொடங்கிவிட்டன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன், என்னையும், எனது குழுவினரையும் ஆராய்ச்சிக்காகவும், சில இசைக்கருவிகளை வாங்குவதற்காகவும் மணிரத்னம் பாலிக்கு அழைத்து சென்றார்.

அந்த இசைக்கருவிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்தோம். அவை பல டியூன்களை உருவாக்க எங்களுக்கு வழிவகுத்தது. மிகவும் சுவாரசியமான விஷயங்களைத் தேர்ந்தெடுக்கும் திறமை மணிரத்னத்திடம் இயல்பாகவே இருக்கிறது. அவரது தேர்வுகள் எப்போதும் தனித்துவமாகவும், முன்னோக்கிச் சிந்திக்கக் கூடியதாகவும் இருக்கும். மணிரத்னத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. படத்தில் என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

அனைவருக்கும் நன்றி...

ஹிந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கான பிரசாந்தின் 'அந்தகன்'. தியாகராஜன் இயக்கியுள்ள படத்தில் கே.எஸ். ரவிக்குமார், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், நடிகர் விஜய் பாடலை வெளியிடும் காணொலி ஒளிபரப்பப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். இரண்டு இடத்தில் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருக்கிறார்.

விழாவில் பிரசாந்த் பேசுகையில், 'இந்த 'அந்தகன்' படத்தோட ப்ரோமோ பாடலை வெளியிட்ட விஜய்க்கு நன்றி. பாடலை இயக்கிக் கொடுத்த பிரபுதேவா மாஸ்டருக்கும், சாண்டி மாஸ்டருக்கும் நன்றி. பாடலைப் பாடிய அனிருத்துக்கும், விஜய் சேதுபதிக்கும் நன்றி. ஒரு ப்ரோமோ பாடலை இவ்வளவு பெரிதாகப் பண்ண முடியும் என்று காட்டியுள்ளனர். இதற்காகப் பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக, ஒரு

ஃபோன் கால்தான் பண்ணேன் கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், யோகி பாபு என எல்லோரும் வந்துவிட்டனர். என் மீதும், என் அப்பா மீதும்

இவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள். படக்குழு அனைவரும் அழைத்ததும் வந்துவிட்டனர். அதற்காக அனைவருக்கும் எனது நன்றி. பிரபுதேவா, சாண்டி மாஸ்டர், கலா மாஸ்டர் மூவரும் பாடலுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியிருக்கின்றனர். எல்லோரது உழைப்பிலும் 'அந்தகன்' படம் நன்றாக வந்திருக்கிறது. என் மீதும் அன்பு வைத்து என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

5 மணி நேர மேக்கப்..!

விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்'. கே.ஜி.எஃப். எனும் கோலார் தங்கவயல் சுரங்கங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வையும், அவர்களின் போராட்டங்களையும் மையப்படுத்திய கதை எனக் கூறப்படுகிறது.

இதற்காக கே.ஜி.எஃப். சுரங்கங்கள் இருந்த பகுதிகளுக்கே நேராகச் சென்று படப்பிடிப்பு நடந்தது. இப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பட அனுபவம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில், 'கோலார் பகுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நிறைய நாள்கள் நடைபெற்றன. படப்பிடிப்பு முடிவதற்குள் 5 முறை மருத்துவரை பார்த்திருப்பேன். கண்களுக்கு, தோலுக்கு எனப் பல முறை மருத்துவரைப் பார்க்க வேண்டியிருந்தது.

தினமும் 5 மணி நேரம் உட்கார்ந்து மேக் அப் போட வேண்டியிருக்கும். அதே மேக் அப்பில் 10 மணி நேரம் வரை இருக்க வேண்டும். எல்லாவற்றையும் மறந்து படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றுவோம். எல்லாம் முடித்துவிட்டு அறைக்குத் திரும்பும்போதுதான் எங்கெங்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. தோலில் என்னென்ன பிரச்னைகள் வந்திருக்கிறது என்பது தெரியும். படப்பிடிப்பு தளத்தில் மேக் அப் போட்டு உட்கார்ந்து இருக்கும்போது எருமை ஒன்று இங்கும் அங்கும் அலைவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதைப் பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித், 'உங்களுக்கு எருமையைப் பிடிக்குமா?' என்று கேட்டார்.

'நான் பிடிக்கும்' என்று சொல்லிவிட்டேன். உடனே, 'எருமையின் மீது உட்கார வேண்டும்' என்று சொல்லிவிட்டார். 'விளையாட்டுக்குச் சொல்கிறார்' என்று நினைத்தேன். பிறகு உண்மையிலேயே எருமையின் மீது உட்கார வைத்துப் படப்பிடிப்பு நடைபெற்றது. முன்பே இதுபற்றி எனக்கு ஏதும் சொல்லப்படாததால் பயந்து போய் உட்கார்ந்திருந்தேன். இப்படிப் பல சுவாரசியமான சம்பவங்கள் இப்படத்தில் நடந்திருக்கிறது. அனைவரும் இப்படத்துக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறோம்'' என்று பேசியிருக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →