எனக்கு சிறு வயது முதலே உடல் எரிச்சல், தண்ணீர் தாகம், காய்ச்சல் வந்ததுபோல் தகிப்பு, கண் எரிச்சல், குமட்டல், பால் சாப்பிட்டால் கூட பேதி, உடலில் ஊசி குத்துவது போன்ற வேதனை போன்றவற்றால் அவதியுறுகிறேன். இது எதனால்? என்ன மருந்து சாப்பிட்டால் குணமாகும்?
ஜனா, காஞ்சிபுரம்.
இயற்கையாகவே கார்த்திகை மாதத்தில் பிறப்பவர்களுக்கு, பித்தத் தோஷத்தின் சீற்றம் உடலில் அதிகமாகக் காணக் கூடும். மழைக்காலத்தில் சீற்றமடைந்த வாயுத் தோஷம், கார்த்திகை மாதத்தில் குறைந்து போனாலும், உங்களுக்கு உடலில் ஊசி குத்துவது போன்ற வேதனையின் மூலமாக, வாயுவின் சீற்றமும் குறையவில்லை என்றே தெரிகிறது.
சிறிது நெய்ப்பு, ஊடுருவும் தன்மை, சூடு, லேசான தன்மை, துர்நாற்றம், நீர்க்கசிவு, நீர்த்த நிலை ஆகிய குணங்களைக் கொண்ட பித்தத் தோஷத்தை கசப்பான மூலிகை நெய், பேதி மருந்து, காரி ரத்தக் குழாய்களைக் கீறி ரத்தத்தை வெளிப்படுத்தி நம் முன்னோர்கள் பித்தம் தன் சமநிலையில் தக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதைச் செய்யாமல் விட்டுவிட்டால், நாற்பது வகையான பித்தத் தோஷ நோய்கள் மனிதனைத் தாக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவைகளைச் செய்து தம்மை பாதுகாத்துக் கொண்டனர்.
கருவேப்பிலை ஆறு பங்கு, கடுக்காய்த் தோல் 4 பங்கு, சுக்கு 2 பங்கு என்ற விகிதத்தில் சேர்த்து, கஷாயம் காய்ச்சி காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட நீங்கள் குறிப்பிடும் பல உடல் உபாதைகளும் நீங்கிவிடும்.
'காலசாகாதி கஷாயம்' என்ற பெயரில் முன்குறிப்பிட்ட கருவேப்பிலை, கடுக்காய், சுக்கு சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது.
கசப்பான நெய் மருந்துகளாகிய 'திக்தகம்க்ருதம்' , 'மஹாதிக்தகம் க்ருதம்' போன்றவற்றில் ஒன்றை நீங்கள் தினமும் மதிய உணவுக்கு ஒரு மணி நேரம் முன் சாப்பிட்டு வர உடல் உபாதைகள் பெருமளவில் குறைந்துவிடும்.
உணவில் குளிர்ச்சியான, செரிமானத்தில் எளிதான நீர்க்காய்களாகிய புடலை, வெள்ளரி, பூசணி, பீர்க்கை போன்றவையும் வெட்டிவேர், விளாமிச்சை வேர் சேர்த்து ஊற வைத்த மண்பானைத் தண்ணீர், துவர்ப்பு, இனிப்பு, கசப்புச் சுவை கொண்ட கறிகாய்கள், பச்சரிசி, கோதுமை, பார்லி, பச்சைப்பயிறு, கல்கண்டு, தேன், நெல்லிக்காய், உலர்திராட்சை, மாமிசசூப்பு, பால், பால் பொருட்கள் ஆகியவை நீங்கள் அதிகம் பயன்படுத்த வேண்டியவையாகும்.
தயிர், வெயில், நல்லெண்ணெய், எதிர்காற்று, மதுபானம், பகல் தூக்கம் போன்ற தவிர்க்கப்பட வேண்டும். சந்தனாதி தைலம், ஹிமஸாகர தைலம், பிருங்காமலக தைலம் போன்றவை தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டிய தைலங்கள் ஆகும்.
விற்பனையிலுள்ள வாஸாகுரூச்யாதி கஷாயம், திராக்ஷாதிகஷாயம், விதார்யாதிலேஹியம், வருஷகிருதம், சங்கபஸ்மம், பிரவாளபஸ்மம், திராக்ஷாதி லேஹியம் போன்றவை பித்தத் தோஷத்தை நன்கு கண்டிக்கத்தக்கவை.
ரோஜா இதழ்களை சூடான தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலை சிறிது சிறிதாகப் பருகி வந்தால் உடல்சூடு தணிந்து உடல் உபாதைகள் அனைத்தும் மறைந்துவிடும்.
பணிநிறைவு பெற்று வீட்டில் இருக்கும் நிலையில், எல்லோரிடத்திலும் அன்புடன் பழகுவது, பித்தத் தூண்டுதலை குறைக்க உதவும். கோப தாபங்கள் ஏற்படும் குடும்பச் சூழ்நிலையில் இதுவும் கடந்து போகும் என்ற மன நிலையே நல்லது.
தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.