கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் என்ற சிறப்பை பிரேசிலின் பீலேவுக்கு ஃபிஃபா வழங்கியது.
அதேநேரத்தில் அர்ஜென்டைனாவின் மரோடோனாவுக்கு கால்பந்து ரசிகர்களின் வாயிலாக ஓட்டெடுப்பு நடத்தி, 'ஃபிஃபாவின் இணைய விருது' வழங்கப்பட்டது.
காதலர் தினத்துக்கான சின்னங்களில் முதன்மையானது இதயம். மற்றொன்று லத்தீன் கடவுளின் புகைப்படம். வில்லும், அம்பும் வைத்திருக்கும் அந்தக் குட்டிக் கடவுளின் பெயர் 'கியூபூட்' என்பதாகும்.
அமெரிக்க எழுத்தாளரும் கல்வியாளருமான ஜான் ஹோல்ட் வழக்கமான கற்பித்தலுக்குப் புதிய கற்பித்தல் முறைகளை வலியுறுத்தியவர். இளையோர் உரிமைகளை வலியுறுத்திய முன்னோடி. கல்வி சார்ந்து புகழ் பெற்ற பல நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில், 'எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?', 'குழந்தைகள் ஏன் தோற்கின்றனர்' என்ற இரு நூல்கள் முக்கியமானவையாகும்.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
1947-இல் முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தபோது, பாவேந்தர் பாரதிதாசனுக்கு 'அரசவை கவிஞர்' பதவியைத் தர விரும்பினார். ஆனால் பாரதிதாசனோ, 'உங்களை எதிர்த்து பாடிக் கொண்டிருக்கிறேன். இந்த நியமனத்தை ஏற்க என்னால் இயலாது' என்று மறுத்துவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட கடற்கரை கிராமமான இடையன்குடியை 1847-ல் கால்டுவெல் நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்தபோது, ஆசிரியை எலிசாவோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரையே வாழ்க்கை துணையாகக் கொண்டார். நாஞ்சில் நாட்டு பெண்ணான எலிசா தனது கணவர் கால்டுவெலுக்கு துணையாக ஆசிரியைப் பணியை தேர்ந்தெடுத்துகொண்டார்.
-அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து, சொந்தப் படம் தயாரிக்க அவருக்கேற்ற கதையோடு சேலத்திலிருந்து சென்னைக்கு வந்தார், அவர்.
எம்.ஜி.ஆர். சிரித்துகொண்டே, 'உங்களுக்கும் பட முதலாளியாக ஆசை வந்து விட்டதா? அரசியலில் எல்லோருக்கும் நீங்கள் நண்பர். மாற்றுக் கட்சியினரையும் மதித்து நட்புடன் பழகும் உள்ளம் படைத்தவர். அப்படிப்பட்ட நீங்கள் திரைத்துறைக்கு வருவதை நான் விரும்பவில்லை. நேராகக் கிளம்பி, பனைமரத்துப்பட்டி எம்.எல்.ஏ. தொகுதியில் அதிமுக வேட்பாளராக நில்லுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்களை அமைச்சராக்குவது என் பொறுப்பு' என்றார்.
அதன்படி, அவர் போட்டியிட்டு ஜெயித்தார். தொழில், உணவுத் துறைகளில் அமைச்சராகி, பின்னர் சட்டப் பேரவைத் தலைவருமானார். அவர் க.ராஜாராம்.
கிருபானந்த வாரியார் தனது 23- ஆம் வயதில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தங்கியிருந்தார். அப்போது அவர் தினமும் யானை கவுனிக்கு வீணையை சுமந்தபடி நடந்தே சென்று, பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் முறையாக மூன்று ஆண்டுகள் வீணை வாசிக்க கற்றுக் கொண்டவர்.
-அ. யாழினிபர்வதம், சென்னை- 78.
ஒருமுறை பாரதியார், 'அன்பர்களே என் அனுபவத்தின் வெளிப்பாடாக இதைச் சொல்கிறேன். பரிபூரண விருப்பத்துடன் தியானம் செய்யுங்கள். உங்கள் சோர்வு, கோழைத்தனம், பிடிப்பற்ற நிலை எல்லாம் அகன்று உங்களுக்குத் துணிச்சலும், நம்பிக்கையும், இறையருளும், தெளிந்த அறிவும் மேன்மேலும்
வருவதை நீங்கள் உணரலாம்' என்றார்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
ஹெர்மன் ஓநீல் என்பவர் அல்ஸ்டர் என்று அழைக்கப்படும் வடக்கு அயர்லாந்தின் முதல் மன்னர். அவர் இந்தப் பதவியை அடைய தனது கரத்தையே காவு கொடுத்தார்.
அல்ஸ்டரைக் கைப்பற்ற ஒநீல் கப்பலில் புறப்பட்டபோது, போட்டியாக மற்றொருவரும் புறப்பட்டார். அயர்லாந்து மண்ணை யாருடைய கை முதலில் தொடுகிறதோ, அவரே அந்த நாட்டு மன்னர் என்று பேசி முடிவு செய்தனர்.
இருவருடைய கப்பல்களும் போட்டிப் போட்டு கொண்டு சென்றன. போட்டியிட்டவரின் கப்பல் முதலில் செல்ல, ஓநீலோ தனது கரத்தை வெட்டித் தரையில் வீசினார். நிபந்தனையின்படி, அவர் மன்னர் ஆனார். தொடர்ச்சியாக, அவருடைய சந்ததியினர் பல நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்தனர். வலது கரமே அரசாங்கத்தின் சின்னமாக இன்றும் நிலைத்திருக்கிறது.
-முக்கிமலை நஞ்சன்
போர்க்கப்பலுக்குத் தலைமை வகிக்கும் கமாண்டர் பொறுப்பு பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதை மும்பையைச் சேர்ந்த பிரேர்னா தியோஸ்தலி என்ற பெண் முறியடித்தார்.
2009-இல் இந்தியக் கடற்படையில் பணியமர்தப்பட்ட அவர், ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பலின் முதல் லெப்டினென்டாகவும் இருந்தவர். ஐ.என்.எஸ். டிரிங்கட் போர்க்கப்பலின் முதல் பெண் கமாண்டராகவும் இவர் நியமிக்கப்பட்டார். கனரக இயந்திரத் துப்பாக்கிகள் நிறைந்த இந்தக் கப்பல் நிலப்பரப்பில் நடக்கும் தாக்குதல்களை எதிர்க்கும் திறன் கொண்டதாகும். இவரது சகோதரர் இஷான் தியோஸ் தலியும் கடற்படை அலுவலர்.
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்க பண்டாரத்தார்- மீனாட்சியம்மை தம்பதியின் மகனாக 1892 ஆகஸ்ட் 15-இல் பிறந்தவர் சதாசிவ பண்டாரத்தார்.
இவர் பள்ளிப்படிப்பை முடித்து, பின்னத்தூர் நாராயண அய்யர், வலம்புரி பாலசுப்பிரணிய பிள்ளை உள்ளிட்டோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக்கற்றார்.
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய இவர், பின்னர் கும்பகோணம் மாமாதுறை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். '
செந்தமிழ்' என்ற மாத இதழில் தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளையும், எழுதினார். வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு, 'முதலாம் குலோத்துங்க சோழன்' என்ற நூலை எழுதினார். அண்ணாமலை பல்கலை. தமிழாராய்ச்சி துறை விரிவுரையாளராகச் சேர்ந்து, கல்வெட்டு, செப்பேடுகளை ஆய்வு செய்தவுடன் 'பிற்கால சோழர் சரித்திரம்' என்ற ஆய்வு நூலை எழுதினார்.
1960 பிப்ரவரி 1-இல் மறைவுற்றார். சோழர்களின் வரலாற்றை தமிழில் எழுதிய முதல் தமிழ் சரித்திர ஆய்வாளர் இவர்தான்.
-கோட்டாறு ஆ.கோலப்பன்.
அன்று மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் கச்சேரியில் மிருதங்க வித்வான் அனுசரித்து வாசிக்கவில்லை. அதனால் மகராஜபுரம் அவருக்கு தனி ஆவர்த்தனம் வாசிக்க, சந்தர்ப்பம் தரவில்லை. இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது மகராஜபுரம், 'கச்சேரி ஆரம்பித்திலேயிருந்து அவர் தனியாகத்தானே வாசித்துகொண்டிருந்தார். நான் வேறு அவருக்குத் தனியாக ஒன்று தர வேண்டுமா என்ன?' என்று கூறினார்.
'சொற்பொழிவு' என்னும் அழகான தமிழ்சொல்லை உருவாக்கியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழறிஞர் பால்வண்ண முதலியார். எப்படி மேடையில் பேசுவது என்பது பற்றி, 'சொற்பொழிவாற்றும் படை' என்னும் சிறந்த நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.
முதல் கவிதை இதழை நடத்தியவர் பாவேந்தர் பாரதிதாசன். 1935-இல் வெளியான அந்த இதழின் பெயர் 'கவிதா மண்டலம்'.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.