தினமணி கதிர்

கிராம மக்கள் காட்டும் பயாஸ்கோப்!

'போலி சாமியார்களும், பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கும் ஜோதிடர்களும் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி எப்படி ஏமாற்றுகிறார்கள்?'

டெல்டா அசோக்

'போலி சாமியார்களும், பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கும் ஜோதிடர்களும் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி எப்படி ஏமாற்றுகிறார்கள்?' என்பதை நெகிழ்ச்சியான காட்சிகள், நேர்த்தியான திரைக்கதை, சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் இயல்பான நகைச்சுவை வசனங்கள் என 'வெங்காயம்' படத்தின் மூலம் யதார்த்தமாகச் சித்திரித்திருந்த சங்ககிரி ராச்குமாரின் அடுத்த முயற்சி 'பயாஸ்கோப்'.

'கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் 'வெங்காயம்' படத்தை எப்படி எடுத்தேன், அதில் சந்தித்த சவால்கள் என்ன?, அந்த படம் ஏற்படுத்திய தாக்கங்கள் எத்தகையவை என்பதை வெளிப்படுத்தும் படம்தான் 'பயாஸ்கோப்'. 'வெங்காயம்' படம் உருவான கதையை ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் தெரிவித்திருந்தனர். அதன் விளைவாக 'பயாஸ்கோப்' படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

பயாஸ்கோப் படம் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. சினிமாவை பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் கிராமத்து மக்கள் எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்கள் என்பதை கலகலப்பாகவும் படம் முழுக்க நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம்'' என்கிறார் சங்ககிரி ராச்குமார்.

' இந்த சினிமா சாத்தியமா?'' என திகில் கேள்வியை எழுப்ப, படத்தின் சில காட்சிகளைத் திரையிட்டுக் காட்டினார். கேமிராவை ஓட விட்டு, அதன் வேகம் பரவத் தொடங்குவதற்குள் போய் நின்று நடிக்கிறார்.

அடுத்த காட்சிக்கான ஆர்ட் டைரக்ஷன் தொடங்கி, முந்தைய காட்சிக்கான மானிட்டர் சரி பார்த்து, தானே மேக்கப் போட்டுக் கொள்ள தயாராகிறார். சுற்றிலும் வேலை பார்க்கின்றனர் அவரது கிராமத்து மக்கள். காட்சிகளின் நகர்தலை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த என் வியப்பை ஓரக் கண்ணால் ரசித்தப்படியே பேசத் தொடங்குகிறார் இயக்குநர் ராச்குமார்.

எவ்வளவோ எளிமையாகிவிட்ட சினிமாவில், இப்படியொரு முயற்சி ஏன் தேவையாக இருந்தது?

இப்படியொரு சினிமா உருவாக்க வேண்டும் என்பது என் ஆசையாகவே இருந்தது. அதற்காக ஒரு திரைக்கதையை வடிவமைத்து வைத்திருந்தேன். இதற்காக எல்லா வேலைகளையும் நாம்தான் செய்ய வேண்டும் என்று நினைத்து, ஒவ்வொரு கலையாக கற்றேன்.

கிராமத்தில் இருந்து சென்னையை நோக்கி வந்த எனக்கு கலைதான் உத்வேகம். என் முதல் படைப்பு 'வெங்காயம்' படம், பல விதமான அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் படத்தின் லாப, நஷ்ட கணக்குகள் என்னை கொஞ்சம் முடக்கிவிட்டது. கொஞ்சம் நாள்கள் கடந்ததும், பொருளாதார ரீதியாக என்னை நானே தயார் செய்து கொண்டு இந்த ஓட்டத்துக்கு தயாராகி வந்தேன். கதைக் களத்தில் தொடங்கி, மேக்கிங் விடியோ வரைக்கும் எல்லாமே என் உழைப்பில் உருவானது.

கேமிரா, கிரேன் தொடங்கி ஒவ்வொரு பொருளாக வாங்கி, தேவை முடிந்ததும் அதை விற்று வேறு பொருள்களை வாங்கி படப்பிடிப்பை நடத்தினேன். ஒரு கார் வாங்கினேன். அதில் பொருள்களை ஏற்றிக் கொண்டு படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று விடுவேன். கேமிராவை செட் செய்து விட்டு நான் நடிக்க ஆரம்பித்து விடுவேன்.

கையில் பணம், படப்பிடிப்புக்கு ஏற்ற பருவநிலை இருந்தால், அடுத்த நிமிடமே படப்பிடிப்புக்குச் சென்று விடுவேன். இப்படித்தான் இந்தப் படத்தை முடித்திருக்கிறேன். என் ஊர் மக்கள், உறவினர்கள் கொடுத்த ஆதரவு பெரியது.

எல்லாம் சரி... இவ்வளவு மெனக்கெடல்கள் ஒரு சினிமாவுக்கு தேவைதானா?

முழுக்க முழுக்க நவீனம் என வந்து விட்ட இந்த மனித வாழ்க்கையை உரசி பார்க்கும் ஒரு கதைக் களம் இது. அதனால் இந்தக் கதைக்கு தொழில்நுட்பம், வரையறை தேவையானதாக இல்லை. யார் பார்த்தாலும் புரியும். இதை உலகம் முழுக்க கொண்டு சேர்க்கும் பொருளாதார பலம் என்னிடம் இல்லை.

வித்தியாசமாக ஏதாவது செய்தால், திரும்பி பார்க்க வைக்கலாம் என்ற யோசனை இருந்தது. அதற்காகத்தான் இந்த வித்தியாசமான முயற்சியில் இறங்கினேன். சினிமா எடுத்த காட்சிகளை படத்தின் முடிவில் ஓட விடுவார்கள்.

அப்படிப் பார்த்தால் முழு படமுமே அதுதான். சின்ன பட்ஜெட்டில் மிகக் குறைந்த நபர்களால் எடுக்கப்பட்ட படம். ஒரு படத்தின் மேக்கிங்தான் பலம். கதை சொல்லப்படுகிற விதத்தில் வித்தியாசம் காட்ட நினைத்தோம். அப்படித்தான் நானும் வித்தியாசம் காட்ட விரும்பினேன். அதனால் இதை பெரும் சிரத்தையோடு செய்து முடித்திருக்கிறேன்.

எந்தளவுக்கு சுவாரசியம் சேர்ந்திருக்கும்?

ஏதோ ஒரு வித்தியாசத்துக்காக மட்டுமே என்னால் படம் எடுக்க முடியாது. அதையும் தாண்டி நான் செலவு செய்த பணம் கைக்கு வந்து சேர வேண்டும். அதுவும் இதில் முக்கியமாக இருக்கும். இது ஒரு பரபரப்பான படம். விறுவிறுப்பான படம். கமர்ஷியல் படத்துக்கான எல்லா அம்சங்களும் ஒருங்கே அமைந்த படமாகவும் இது வந்திருக்கிறது. பெரிய மெனக்கெடல்கள், நிறைய உழைப்பு போட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்?

-டெல்டா அசோக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கைது: தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

SCROLL FOR NEXT